இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . 130

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

இதோ அடுத்தொரு மடல், அடுத்தொரு வாரம், அடுத்தொரு உறவாடல்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 9ம் திகதி இங்கிலாந்தில் போர்களில் மடிந்த வீரர்களை நினைவு கூறும் “நினைவு கூறும் ஞாயிறு” (Remembrance Sunday).

கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே எனது மனைவி இலண்டன் டவர் ஹில் எனும் இடத்தில் முதலாவது உலக மகாயுத்தத்தின் ஆரம்பத்தின் நூறாவது ஆண்டையொட்டி அமைத்திருந்த “பொப்பி” என்றழைக்கப்படும் செந்நிறத்திலமைந்த செயற்கை மலர்களால் அமைக்கப்பட்ட ஒரு அலங்காரத்தைப் பார்வையிட வேண்டுமென்ற தன் விருப்பத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரி! 9ம் திகது ஞாயிற்றுக்கிழமை செல்வோமே என்று ஒரு திட்டம் மனதிலிருந்தது. ஆனாலும் லண்டன் காலநிலை தான் நம் எண்ணப்படி நடப்பதில்லையே! எனவே ஒருவேளை அன்று இயற்கை அவ்வீரர்களை எண்ணித் தாரை தாரையாக கண்ணீர் வடிக்க எண்ணி மழையாகப் பொழியாரம்பித்தால் எமது திட்டம் தவிடு பொடி என்றே நினைத்திருந்தோம்.

லண்டனில் எங்கு செல்வதானாலும் வசதியின் நிமித்தம் காரில் ஏறி உட்கார்ந்து சென்று விடுவதே வழக்கம். எனவே ஞாயிற்றுக்கிழமை லண்டனுக்கு செல்வதானால் பேரூந்திலேயே செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தோம்.

சரி ஒருபடியாக ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. என்னே ஆச்சரியம் இயற்கை எம்மேல் கருணை கூர்ந்தது போலும்! மழை வருவதற்கான அறிகுறி இல்லை.

அவசரம் அவசரமாக கிளம்பினோம் சரியாக 8.25 க்கு பேரூந்தில் ஏறி குறிய்டன் நோக்கிச் சென்றோம். அங்கு சென்ற பின்னர் தான் அங்கிருந்து எந்த எண் பேரூந்தைப் பிடித்து எப்படி ” டவர் ஹில் ” செல்வது என்று திட்டம் தீட்ட வேண்டும்.

பேரூந்தின் வருகை நேரத்தை இணையத்தில் அறிந்து கொண்டதால் அதனைத் தவற விட்டு விடக்கூடாது என்று ஓட்டமும் நடையுமாகச் சென்றதில் பேருந்தில் ஏறி உட்கார்ந்து சில நிமிடங்கள் வரை பேசக்கூட முடியாத வகையில் மூச்சிறைத்தது.

ஓ! ஜம்பதின் கடைசிப் படியிலல்லவா நிற்கிறோம்! மறந்து விட்டேனே! அட! ஞாபகமறதி வேறா?

ஒருவாரு குறோய்டன் ஷாப்பிங் செண்டரில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்க எண்ணும் போது மனைவியின் கையிலிருந்த முன் அனுமதிச் சீட்டில் மேலதிக பணம் போட்டால் தானடுத்த பேரூந்தில் ஏறலாம் எனும் நிலை.மேலதிகப் பணம் போடுவதற்கான இயந்திரத்தை தேடி நடக்க ஆரம்பித்தோம்.

நீண்ட நாட்களாக பேரூந்தில் பயணம் செய்யாததினால் மேற்கு குறொய்டன் பஸ் தரிப்பு நிலையம் அடைக்கப்பட்டு அதனுள் வேலை நடைபெற்று வருவது எமக்குத் தெரியவில்லை.

அதனைக் கடப்பதற்கான சிறிய ஓடை போன்ற பாதையில் கால் வைத்ததும் நாற்றம் வயிற்றைக் குமட்டியது. அப்பாதை வழிப்பறி செய்பவர்களுக்காக ஏற்படுத்தப் பட்டதோ !

poppy1ஒருவாறு அப்பிரச்சனையை முடித்துக் கொண்டு எமது பயணத்தின் அடுத்த அலகாக அடுத்தொரு பேரூந்தில் ஏறினோம். அது இரட்டைத்தட்டு பேரூந்தாகையால் மிகவும் மகிழ்ச்சியாக மேல்தட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டோம்.

அடுத்தொரு தரிப்பில் ஒரு நடுத்தர வயதான ஆபிரிக்க பெண்மணி அம்மேல்தட்டில் ஏறி நாமிருந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வரும்போது ஏதோ பேசிக் கொண்டே வந்தாள் சரி காதில் கருவியைப் பொருத்தி மொபைல் தொலைபேசியில் தான் பேசுகிறாள் என்று எண்ணினால் .. . . .

இல்லையே! தனக்குத் தானே அல்லவா பேசிக் கொண்டு வருகிறாள் என்றாள் என் மனைவி.

போச்சுடா! ஒரு லூசுப் பெண்மணியிடம் போய் மாட்டிக் கொள்ளப் போகிறோமா ?

வந்தவள் எமக்குப் பினால் இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்து கொண்டாள். அது மட்டுமல்ல தனக்குத்தானெ சம்பாஷணை வேறு!

ஆஸ்கார் விருது கொடுப்பவர்கள் கண்டிருந்தால் சிறந்த நடிகைக்கான பரிசு அவளுக்குத்தான் போங்கள் . . . .

இடையிடையே அவளின் குரல் உயரவும் அட எமக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் இருக்கைகளில் யாராவது அமர மாட்டார்களா ? எனும் ஒரு நப்பாசை.

ஏதோ தெரியவில்லை அனைவருமே அதனைத் தவிர்த்து விட்டார்கள். அப்பெண்ணின் சம்பாஷணையை வி.ஐ.பிகள் போல நாம் தான் ரசித்துக் கொண்டோம்.

poppy2ஒருவாறு அப்பயண முடிவில் லண்டனில் உள்ள “எலிபண்ட் அண்ட் காசில் (Elephant and Castle)” எனும் இடத்தை அடைந்தோம். இனி அங்கிருந்து மற்றொரு பேருந்தில் நாம் செல்ல வேண்டிய “டவர் ஹில்” எனும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

அதற்கு முன்னால் அங்குள்ள ஷாப்பிங் செண்டரினுள் சென்றோம், கழிவறைகள் இருக்கின்றனவா என்று தேடியவாறு.

இருந்தது ஆனால் அது கட்டணக் கழிவறை. உள்ளெ சென்றால் அப்பப்பா! தாங்க முடியவில்லை. மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் பிரசித்தி பெற்ற லண்டன் நகரிலா இப்படி ?

அது முடிந்து வெளியே வந்தால் அங்கிருந்த படிகளில் உட்கார்ந்தபடி கையில் போதை மருந்து ஏற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டோம்.

போதுமடா சாமி ! ஆளை விட்டால் காணும் என்று விழுந்தடித்து வந்த ஒரு பேரூந்தில் ஏறிக் கொண்டோம், அதிர்ஷ்டவசமாக அப்பேரூந்தின் சாரதி ஒரு ஆசிரியர்.

அவரிடம் நாம் செல்ல வேண்டிய இடத்தைக் கூறியதும் அவர் நீங்கள் சரியான பேரூந்தில் தான் இருக்கிறீர்கள் என்று கூறி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகாமையில் இறக்கி விட்டார்.

அது லண்டனில் பிரசித்தி பெற்ற “டவர் பிரிட்ஜ்” க்கு அருகாமையில். அட்ஹன் வழியாகச் சென்றால் நாம் பார்க்க வேண்டிய அந்த செயற்கை மலர்களின் அலங்காரத்தை உள்ளடக்கிய “டவர் ஹில்” சென்று விடலாம்,

அப்பப்பா! தேர்த்திருவிழா போன்ற கூட்டம். வரிசை வரிசையாக மக்கள் தம் வாழ்வை மேன்மையாக்க உயிரை நீத்த தம் முன்னோர்களை நினைவுகூறும் வகையில் அமைந்திருந்த செயற்கை மலர்களை பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்தார்கள்.

poppy3அவ்வரிசையோடு நாமும் இணைந்து கொண்டு சென்றோம். அங்கு நிலவிய ஒருவிதமான சகோதர உணர்வை உணரக்கூடியதாக இருந்தது..

இங்கிலாந்து நாட்டின் பலபாகங்களில் ஒருந்து வந்தவர்களை விட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் நிறைந்து காணப்பட்டார்கள். அங்கு கண்ட ஒரு ஒற்றுமையான் உணர்வு உலகில் இன்னும் மனிதத்துவம் சாதி,மத, இன, மொழி , நிற எல்லைகளைக் கடந்து ஒளிர்ந்து கொண்டுதானிருக்கிறது எனும் எண்ணத்தை மேலோங்கச் செய்தது.

ஆங்காங்கே கிடைத்த இடைவெளிக்குள் நுழைந்து கொண்டு அம்மலர்களின் அலங்காரத்தைப் பார்வையிட்டோம்.

ஒவ்வொரு மலரும் முதலாவது உலக மகாயுத்தத்தில் உயிரிழந்த ஒரு வீரரைக் குறிப்பதாகவிருந்தது. இங்கிலாந்து நாட்டு வீரர்கள், மட்டுமல்ல பொதுநல்வாய நாடுகளின் வீரர்களையும் அது உள்ளடக்கியிருந்தது.

மொத்தம் 888,246 கைகளினால் வெய்யப்பட்ட போர்சலின் மலர்கள் அங்கே அலங்கார ரூபத்தில் நாட்டப்பட்டிருந்தன.

அன்றைய வீரர்கள் தம் உயிரைக் கொடுத்து நாட்டிய விதையின் விருட்சத்தில் நிழல் காய்ந்து கொண்டிருக்கும் நாம் அவ்வழகிய நாளின் நினைவுகள் மீட்டுத்தந்த உயருய நினைவுகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு மீண்டும் எமது இல்லம் ஏகினோம்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி

  

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *