அவளுக்கு யாரும் இணையில்லை

4

அருண் காந்தி

நாள்:நவம்பர் 5 2010,இடம்:கொலன் நகரம்,ஜெர்மனி.

அன்று காலை அலுவலகம் வந்ததும் காலண்டரில் தேதியை நகர்த்தினேன். முன்தினம் இரவு லீவுக்கு வருவது பற்றி அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது.அதன்படி வரும் டிசம்பர் இறுதியில் முப்பது நாட்கள் விடுப்பில் அப்படியே பொங்கலையும் சேர்த்துக் கொண்டாடும் நோக்கில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன்.

“என்ன சார் காலைலயே பிஸியா? வாங்க கோப்பிக்கு போகலாம்”என்று நாற்காலியின் பின்புறம் தட்டினாள் நந்தினி. “ஹாய்! குட் மார்னிங்! ஒன்னும் இல்ல லீவ் அப்ளைப் பண்ணப் போறேன்” என்றேன். “வாவ்! இந்தியா போறீங்களா?”  என்றவளிடம் “ம்… ஆமா” என்றேன். “கிரேட்! நல்லா என்ஜாய் பண்ணுங்க” என்று கூறிவிட்டு  “நானும் வரலாமா?” என்று கூறிச் சிரித்தாள். ” ம்ம்ம்…தாராளமா வா போகலாம்”  என்று கூறிக் கொண்டே கோப்பையை எடுத்துக் கொண்டு அவளுடன் சென்றேன்.

நந்தினி என்னைப் போல பணி நிமித்தமாக இங்கு வந்தவள் அல்ல. இலங்கையின் மட்டக்களப்பைத் தனது பூர்வீகமாகக் கொண்டவள் சிறு வயதிலேயே தன் பெற்றோருடன் இங்கு குடியேறி வளர்ந்து பயின்று என்னுடன் பணி புரியும் ஒரு தமிழ்க் குடும்பத்துப் பெண்.

காபியை உறிஞ்சியவள் “எத்தனை கிழமை போறீங்க?” என்றாள். ‘தேர்ட்டி டேஸ்’ என்றேன். ” அம்மா அப்பா மற்ற சொந்தம் எல்லோரையும் பார்க்கறது சந்தோசம் தானே’ என்றாள். “நீயும் வா போகலாம்” என்றேன். “சும்மா பகடி பண்ணாதிங்கோ ராம்” என்றாள். ” நோ நந்து ஐ ஆம் சீரியஸ்” என்றேன் . சிரித்தவள்  “சரி வாரன் ஆனால் டிக்கெட் காசு நீங்கள் தான் கட்டோணும்” என்று சிரித்தாள். சரி என்று நான் ஆமோதிக்க சிறிது நேர உரையாடலுக்குப் பின் மீண்டும் பணியில் சென்று அமர்ந்தோம்.

அன்று மாலை அம்மாவிடம் பயணம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டு கழிந்து ஊருக்குப் போகும் மகிழ்ச்சி இரண்டு மாதத்திற்கு முன்பே தொற்றிக் கொண்டது. அம்மாவிடம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்த போது தான் நந்தினியின் நினைவு வந்தது. நந்தினிக்கு போன் செய்து மீண்டும் அது பற்றி நினைவூட்ட அவள் தன் பெற்றோரிடம் ஆலோசித்து விட்டுச் சொல்வதாகச் சொன்னாள். நந்தினியை நான் வற்புறுத்தி அழைக்கக் காரணம் உண்டு. இந்தியா செல்ல வேண்டும் என்பது அவளது நீண்ட நாள் கனவு.  என்னிடம் பலமுறை அதை வெளிப் படுத்தியிருக்கிறாள். வெளி நாட்டில் வளர்ந்தவள் என்றாலும் தமிழ் மீதும் தமிழ்க் காவியங்கள் மீதும் அவள் கொண்ட பற்று அளப்பரியது. அவளிடம் பொங்கி வழியும் தமிழ் மற்றும் சைவத்தின் மீதான பற்றில் நான் பல முறை நனைந்திருக்கிறேன். அப்பரையும் சுந்தரரையும் அவள் மிகவும் நேசிக்கிறாள். அவளைச் சுற்றி எப்பொழுதும் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அலை அவளால் என்னையும் ஆக்கிரமித்தது.  இக்காலத்துப் பெண்களுள் நந்தினி குறிஞ்சிப் பூ போன்று  அரியவள்.

வார இறுதி ஆதலால் பின் காலை வரை தூங்கிக் கொண்டிருந்த என்னை நந்தினியின் அழைப்பு எழுப்பியது. பாதி கண்களை மூடியபடி போனை எடுத்து “ஹலோ” என்றேன். “ஹலோ ராம் குட் மார்னிங்! அப்பாட்ட சொன்னன்…அவர் அனுமதிக்க இல்ல…” என்று சொல்லி  “சாரி ராம்” என்றாள்.  நான் சற்று  யோசித்து  “ஓகே ஈவ்னிங் நா வரேன்” என்று சொல்லி துண்டித்தேன். புத்தாண்டு, பொங்கல் தினம் என சில முறை நந்தினி வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். மாலை 5 மணி அளவில் ஒரு மணி நேரப் பயணத்தில் நந்தினியின் வீட்டை அடைந்தேன். காலிங் பெல்லை அழுத்திய போது நந்தினி கதவைத் திறந்து ஹாலில் அமரச் செய்தாள்.

சமையற்கட்டிலிருந்து வெளிவந்த நந்தினியின் அம்மா “வா ராம்! எப்படி சுகம்?” என நலம் விசாரித்தார். நந்தினி டீ எடுக்க உள்ளே சென்ற வேளை “நேத்து நந்தினி சொன்னா, ஆனா அவட அப்பா கொஞ்சம் யோசிக்கிறார். கொஞ்சம் நேரம் இரு அவர் இப்ப வந்திடுவார்” என்றார். டிவியின் இசைப் பாடலில் சற்று நேரம் மூழ்கினேன். வெளியிலிருந்து வந்த நந்தினி “ராம் ராம் அப்பா வந்திட்டார்” என்று சற்று பதட்டத்துடன் என்னிடம் வந்து கூறினாள். ஹாலில் வந்து அமர்ந்தவர் என்னை நலம் விசாரித்து விட்டு “ராம் உன்கூட அனுப்புறது எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இருந்தாலும் காலம் கெடக்குற கெடையில வயசுக்கு வந்த பொண்ண எப்படி அவ்ளோ தூரம் அனுப்புறது. அவள நாங்க ஒரு நாள் கூட விட்டுப் பிரிஞ்சது இல்ல”  என்றார். நந்தினி ஒரு படபடப்புடன் கைகளைப் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

“அப்பா நா பத்திரமா கூட்டிட்டு  போயிட்டு வரேன் நீங்க ஒன்னும் கவலைப் படாதிங்க” என்றேன். “அப்பா தினமும் நான் உங்கட்ட Skype ல கதைப்பன் , ப்ளீஸ்பா முப்பதே நாட்கள் தான்” என்றாள் நந்தினி. சிறிது நேரம் பதிலேதும் கூறாமல் இருந்துவிட்டு “ராம் எங்கட எதிர் காலத்தோட ஒற்றை  நம்பிக்கை நந்தினி மட்டும் தான். அவளுக்கு ஒன்டுன்னா பிறகு நாங்கள் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. உன் மீது உள்ள நம்பிக்கையில் அனுப்புறன் எங்கள ஏமாத்திடாத” என்றார். ஓடிச் சென்று தன் அப்பாவைக் கட்டிக் கொண்ட நந்தினிக்கு கண்கள் கலங்கிற்று. “அப்பா எங்கள் வீட்டில் நானும் நந்தினியைப் போல ஒரே பிள்ளை தான். ஒற்றைப் பிள்ளை பெற்றவர்களின் மனதை நான் நன்கு அறிவேன். நந்தினியைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வருவேன் நீங்கள் கவலைப் படவேண்டாம்” என்று கூறி விடை பெற்றேன்.

சிறிது நாட்களில் விசாவுக்கு விண்ணப்பித்துக் கிடைக்கப் பெற்றாள் நந்தினி. நந்தினியை அழைத்துச் செல்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வீட்டில் நான் இதைப் பற்றி கூறியபோது அவர்கள் பதிலேதும் கூறாமல் இருந்த நிலை நான் எதிர்பார்த்த ஒன்றுதான். இருவரும் நாட்களை எண்ணிக் கொண்டே நகர்த்த பயணிக்கும் தேதியை விரைவாக எட்டினோம். அன்று காலை புறப்பட்ட நான் நந்தினி வீட்டிற்குச் சென்று டாக்ஸியில் நந்தினியையும் அவள் பெற்றோரையும் பிக்கப் செய்துகொண்டு விமான நிலையம் சென்றோம். செக்இன் முடிந்த பிறகு காத்திருந்த நேரத்தில் நந்தினியின் அம்மா அவளை தனியே அழைத்து எதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவள் அப்பாவிடம் தொலைபேசி எண்,முகவரி என எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டி கொடுத்தேன். நேரம் ஆக இருவரும் செக்யூரிட்டி செக் செய்ய கிளம்பினோம். போர்டிங் பாசுடன் சிறிதுநேரக் காத்திருப்புக்குப் பின் ஒருவழியே விமானத்தில் சென்று அமர்ந்தோம்.

விமானம் உருண்டோடி பூமிப் பந்துக்கு விடை கொடுத்த நொடியில் “நன்றி ராம் நீங்க மட்டும் இல்லை எண்டால் நான் இந்தியா பக்கம் போயிருக்கவே இயலாது” என்றாள். நான் சிரித்துவிட்டு வெளியே பார்த்துக் கொண்டு வந்தேன். படம், சிறிது நேர உரையாடல், சிற்றுண்டி, தூக்கம் என பத்து மணி நேரப் பொழுதை நடு வானில் கழித்தோம். சென்னை விமான நிலையத்தைத் தொட இன்னும் முப்பதே நிமிடங்கள் உள்ளதாக வந்த அறிவிப்பைக் கேட்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள் நந்தினி. விமானம் தரையைத் தொடும் வேளையில் அவளது உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பை நான் கவனிக்கத் தவறவில்லை. சிறு குழந்தையைப் போல வெளியே எட்டி பார்ததுக் கொண்டே இருந்தாள். விமானத்தை விட்டு கீழே இறங்கும் வேளையில் “நந்தினி வலது காலை எடுத்து வை” என்றதைக் கேட்டு சிரித்துக் கொண்டே எடுத்து வைத்தாள். அங்கிருந்து ஏழு மணிநேர பேருந்துப் பயணத்தில் வழியில் கண்ட எல்லாவற்றையும் பற்றி நந்தினியிடம் சொல்லிக்கொண்டே பயணித்தேன்.நீண்ட பயணத்தில் வெகுவாக களைத்திருந்தாள் நந்தினி. மீதமிருந்த தொலைவை தூக்கம் ஆக்கிரமித்தது. தஞ்சையைத் தொடும் வேளையில் தூக்கம் களைந்து இறங்கத் தயாரானோம். பேருந்தை விட்டு இறங்கிய நொடியில் எதிர் புறமாக என் பெற்றோர் நின்றிருந்தனர்.

கட்டித் தழுவி அன்பு பாராட்டினாள் அம்மா. தலையைத் தொட்டு வருடிக் கொடுத்தார் அப்பா. சற்று சுதாரித்த நான் நந்தினியை அறிமுகம் செய்து வைத்தேன். அங்கிருந்து இரண்டு மணி நேரக் கார் பயணத்தில் நந்தினியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தாள் அம்மா. ஒரு வழியே வீட்டை அடைந்தோம். நந்தினிக்கு தயார் செய்யப்பட தனி அறையை அம்மா கூட்டிச் சென்று காட்டினாள். நந்தினியிடம் வீட்டிற்கு வந்தது முதல் ஒரு கூச்சமும் அமைதியும் தொற்றிக் கொண்டது. குளித்து உடை மாற்றி வரச் சொல்லி தேவையானதை நந்தினியிடம் கொடுத்தாள் அம்மா. குளித்து விட்டு வர நான் அப்பா நந்தினி மூவரும் உணவருந்தச் சென்றோம். மிகவும் வெட்கத்துடன் மெதுவாக சாதத்தை பிசைந்து கொண்டிருந்த நந்தினியை அம்மா “சும்மா கூச்சப்படாம நல்லா சாப்பிடுமா” என்று அறிவுறுத்தினாள். அப்பா அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடிந்ததும் நான் அம்மா நந்தினி மூவரும் சிறிது நேரம் காற்றோட்டமாய் வெளியே அமர்ந்திருந்தோம். பக்கத்து வீட்டு அக்காவின் குழந்தைகள் மாமா என ஓடிவந்து கட்டிக் கொண்டன. அவர்களிடம் நந்தினியை அறிமுகம் செய்த வேளை அம்மா அவர்களுக்கு சாக்லேட் கொடுத்தாள். நந்தினியை உறங்கச் செல்லுமாறு அம்மா அறிவுறுத்த அவளும் ஆமோதிப்பதாக எழுந்து சென்றாள்.

“ஏண்டா இந்தப் பொண்ணோட அப்பா அம்மா ஒன்னும் சொல்லலையா?”

“இல்லை”

“மனசார எப்படி தான் அனுப்பி வச்சாங்களோ?”

“அம்மா… கொஞ்சம் சும்மா இரேன், நா எப்படி உங்களுக்கோ அப்படித் தான் நந்தினி அவங்க அப்பா அம்மாக்கு”  என்றேன். மீண்டும் “நல்ல புள்ளையாத்தான் இருக்கு”  என்றாள். அம்மா  “நானும் போய் தூங்குறேன்”   என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். ஹாலில் சென்று படுத்து கண்களை மூடிய எனக்கு நடந்ததெல்லாம் நனவா கனவா என்ற குழப்பமே வந்தது. நந்தினி என் வீட்டில் தான் இருக்கிறாள் என்பதை எண்ணுகையில் மனம் குதூகலித்ததோடு அவளை அழைத்து வந்தது எதோ பெரும் சாதனையாகவும் எனக்குப் பட்டது.

மறுநாள் காலை சற்று தாமதமாகவே எழுந்தேன். அதற்குள் நந்தினி எழுந்திருக்கிறாள். அம்மாவுடன் அடுப்படியில் எதோ பேசிக் கொண்டிருந்தாள். நான் சென்று காலைக் கடன்களை முடித்து விட்டு வந்த பொழுது அம்மா தோசை சுட்டுக் கொண்டிருந்த மணம் ஹால் வரை பரவி இருந்தது. நேரே அடுப்படிக்குச் சென்று சாப்பிட ஆரம்பித்தேன். நந்தினியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நீண்ட நாளுக்குப் பின் அம்மா கையால் தோசை. நந்தினியைக் கூட நான் அப்பொழுது கண்டு கொள்ளவில்லை. 5 தோசைகளை உள்ளே தள்ளிய பின்னரே நிமிர்ந்து பார்த்தேன். சாப்பிட்டு இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தோம். எங்கெல்லாம் நந்தினியை அழைத்துக் கொண்டு செல்வது என திட்டமிட ஆரம்பித்தேன். இடையில் பொங்கல் மற்றும் சில உறவினர் வீட்டிற்கு நான் செல்லவேண்டி இருந்ததால் அவற்றை ஒதுக்கிய தினங்களில் திட்டமிட்டோம். அப்படி அவளின் விருப்பத்தின் அடிப்படையில் முதலில் தஞ்சைப் பெருவுடையார், சிதம்பரம் நடராஜர், மதுரை மீனாக்ஷி, திருவையாறு, திருநாகேஸ்வரம், பழனி ஆகியவற்றைக் குறித்துக் கொண்டோம்.

காரிலேயே செல்வதாக முடிவு செய்தபோது ,பக்கத்து வீட்டு கணேசன் மாமா டிரைவிங் நன்கு தெரிந்தவர் என்பதால் அவரை அழைத்துக் கொண்டு போகுமாறு அப்பா அறிவுறுத்தினார். இரண்டு தினங்கள் கழித்து ஓர் இளங்காலையில் பெரியாவுடையாரைத் தரிசிக்கப் புறப்பட்டோம். உண்மையில் இந்த 26 வருடத்தில் 50 km தொலைவில் உள்ள பெரியாவுடையாரை இப்பொழுதுதான் நான் முதலில் தரிசிக்கப் போகிறேன் என்பது நந்தினியிடம் நான் சொல்லாத உண்மை. காலைப் பத்து மணி அளவில் கோவிலுக்கு முன் காரை நிறுத்தினோம். அதன் பிரம்மாண்டத்தில் சொற்களற்றுப் போய் ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அதன் படிகளில் கால் வைத்து ஏறும்போது அவளுக்கும் சரி எனக்கும் சரி ஏற்பட்ட அதிர்வு முற்றிலும் புதுமையானது. நந்தினி ஓடிப்போய் அதன் தூண்களைக் கட்டிப் பிடித்தாள்,வருடிக் கொடுத்தாள். மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அவளைக் கண்டேன். உள்ளே செல்லச் செல்ல என்னையும் மறந்தாள் பின் தன்னையும் மறந்தாள்.உள்ளே சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தரிசித்து விட்டு சுற்றினாள்.

வெளியே வரும்போது “ராம்! ராஜராஜ சோழன் ஈழத்தை ஆண்டபோது தான் அவருக்கு இப்படி ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்ததாம் தெரியுமா உங்களுக்கு?” என்றாள். நந்தியையே பலமுறை சுற்றிச் சுற்றி வந்தாள். “இந்த இடத்தில் தான் அப்பொழுது 400 நடன மங்கைகளும் நடனம் ஆடி இருப்பார்கள் போலும்” என்று அந்த வெளியை நோக்கி ஓடினாள் நந்தினி. நான் கோவிலை ரசித்ததை விட அவளது கண்களில் தெரிந்த ஆர்வத்தையும் துடிப்பையும் பெரிதும் ரசித்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கோவிலில் இருந்து விட்டுத் திரும்பினோம். மதிய உணவிற்கு மூன்று மணி அளவில் வீடு திரும்பினோம். அடுத்து சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம்.

தொடரும்…

 

படத்திற்கு நன்றி.

 

ஜெர்மனி.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அவளுக்கு யாரும் இணையில்லை

 1. இந்தக் கதை, எனக்குப் பிடித்திருக்கிறது. இயல்பான நடை. வலுவான களம். வாழ்த்துகள் அருண்.

 2. உள்ளே செல்லச் செல்ல என்னையும் மறந்தாள் பின் தன்னையும் மறந்தாள்.
  =>
  ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
  மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
  பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
  பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
  அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
  அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
  தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
  தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே’
  -திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம்

 3. மிக்க நன்றி திரு அண்ணா கண்ணன் அவர்களுக்கு…

  @இன்னம்பூரன் – மெய்சிலிர்கிறது அய்யா திருநாவுக்கரசரின் திர்த்தாண்டகமும் அதை நீங்கள் எடுத்தியம்பிய விதமும்.அதில் வரும் ‘தன்னை மறந்தாள்’ என்ற அதே வாக்கியத்தை நானும் பயன்படுத்தியிருப்பது நான் செய்த புண்ணியமோ???
  மிக்க நன்றி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *