’அழகு மகன்’ – திரைப்படத் தொடக்க விழா – செய்திகள்
இந்தியாவில் முதன் முதலில், சேலத்தில் 1935ல் அதிபர் டி. ஆர். சுந்தரம் அவர்களால் துவங்கப்பட்ட ஸ்டூடியோ தான் மாடர்ன் தியேட்டர்ஸ். ‘சதி அகல்யா’ எனும் பேசும் படம் முதல் தொடங்கி 1984ல் வெளியான ‘வெற்றி நமதே’ உட்பட 118 படங்களைத் தயாரித்து சாதனை படைத்தது.
ஆனால் அந்த ஸ்டூடியோ தற்போது இடிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாற்றப்பட்டு, அதற்கு சுந்தரம் கார்டன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் முகப்பு சுவரான கேட்டின் முன் பகுதி இடியும் நிலையில் இருந்தது.
சேலத்தைச் சேர்ந்த ஜீவானந்த் மற்றும் தயாரிப்பாளர் விவேகானந்த், திரைப்பட எடிட்டர் டி. எஸ். ஆர். சுபாஷ் ஆகியோர் ‘அழகு மகன்’ படத்துவக்க விழாவை மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலில் போடலாம் என்றும், அதற்கு பழம் பெரும் கலைஞர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து, அதை நினைவுச்சின்னமாக அமைக்கலாம் என்றும் முடிவு செய்தனர். முன்னதாக, 10.07.2011 ஞாயிறு காலை 11 மணிக்கு ‘அழகு மகன்’ படத்தின் துவக்க விழா, மாடர்ன் தியேட்டர்ஸ் கார்டனில் நடை பெற்றது.
பிரபல மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர் ராஜனும், திரைப்பட எடிட்டர் டி. எஸ். ஆர். சுபாஷும் இணைந்து பழம் பெரும் கலைஞர்களைச் சந்தித்தனர்.
இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க எல்லா முண்ணனிக் கலைஞர்களும் ஆர்வம் காட்டினர். ஆனால் அவர்களின் உடல் நிலையையும், வயதையும் மனதில் கொண்டு, அவர்களின் ஆதரவுடன், நாங்கள் மட்டும் சேலம் செல்ல ஏற்பாடு செய்தோம்.
இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர்., திருமதி. ராஜ சுலோச்சனா, திருமதி. ராஜஸ்ரீ, குமாரி. சச்சு, திருமதி எம். சரோஜா, தங்கவேலு மற்றும் பலர் ஆதரவு அளித்தனர். இதில் நிச்சயம் கலந்து கொண்டே ஆக வேண்டுமென்று எங்களுடன் சேலம் வந்தனர் சிலர்.
பி. எஸ். சரோஜா
பாகவதர் டி. ஆர். மகாலிங்கம், டி. எம். சவுந்தர்ராஜன், எம். ஜி. ஆர்., சிவாஜி, ஆர். எஸ். மனோகர் என பலருடன் ஜோடியாக நடித்த பழம் பெரும் நடிகை திருமதி பி. எஸ். சரோஜா ராமண்ணா இதில் கலந்து கொண்டார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ‘வண்ணக்கிளி’, ‘குமுதம்’ உட்பட்ட பல படங்களில் நடித்தவர். மேலும் மாடர்ன் தியேட்டர்ஸ் அறிமுகம் செய்த சி. ஐ. டி. சகுந்தலா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பிரபல பின்னணிப் பாடகி எல். ஆர். ஈஸ்வரி, தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். ஜெயந்தி கண்ணப்பன், நடிகை என். என். பார்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜீவானந்தம் வரவேற்புரை வழங்க, முதலில் மறைந்த கலைஞர்களுக்கு அந்த மண்ணில் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின் பழம் பெரும் தொழில் நுட்பக் கருவிகளை மலர் தூவி கவுரவித்தனர்.
இந் நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர், நடிகர் இளவரசு பேசுகையில் : “எங்கள் குல தெய்வத்தை கண்டபோது எப்படி மெய் சிலிர்த்துப் போனேனோ, அப்படி ஒரு உணர்வு இந்த மண்ணில் எனக்கு ஏற்பட்டுள்ளது.” என்று பேசி நெகிழ்ந்தார். நடிகர் சிங்கம் புலி, இயக்குநர்கள் ஓ.ஆசைத்தம்பி, என். விஜய் ஆனந்த், ஒளிப்பதிவாளர் அஜ்மல், இசையமைப்பாளர் கணேஷ் ராமண்ணா, கலைமாமணி எஸ். சவுண்டப்பன், கே. சேகர், ஜே. ராஜேந்திர பிரசாத், கே. எம். ரவிச்சந்திரன், இரத்தின மூர்த்தி, ஓ. நரசிம்மராஜி, அழகு மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
இது எங்கள் தாய் வீடு. இந்த முகப்பை இடிக்காமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களுடைய பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு பேசினார்கள் மூத்த கலைஞகள்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திரைப்பட எடிட்டர் டி. எஸ். ஆர். சுபாஷ் பேசுகையில் : “சங்கர் கணேஷ், எல். ஆர். ஈஸ்வரி போன்றவர்கள் சேலத்தில் டி.ஆர். சுந்தரம் அவர்களுக்கு முழு உருவச் சிலையை அமைக்க, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும், அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பெரும் உதவியாய் இருந்த பி. ஆர். ஓ. நெல்லை சுந்தர்ராஜன் மற்றும் ‘அழகு மகன்’ படத்தின் மக்கள் தொடர்பாளர் எஸ். செல்வரகு ஆகியோரை பாராட்டிப் பேசிய தயாரிப்பாளர் விவேகானந்தன், இயக்குநர்கள் அழகன், செல்வா இருவரும் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தொலைக்காட்சி நண்பர்களும், பத்திரிகையாளர்களும், சேலத்தைச் சுற்றியுள்ள ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்ட இந்த உணர்வுப் பூர்வமான நிகழ்ச்சி, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக பேசப்படுகிறது.
‘அழகு மகன்’ படப் பிடிப்பு மாடர்ன் தியேட்டரில் துவங்கி, சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.
அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, ஜீவானந்த், விவேகானந்தம், திரைப்பட எடிட்டர் டி. எஸ். ஆர். சுபாஷ் ஆகியோர் அனைத்து பழம் பெரும் கலைஞர்களைத் திரட்டி, மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பை நினைவு இடமாக அமைக்க முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப் போவதாகத் தெரிகிறது.