-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

          மாந்தோப்பில் அவளிருந்தாள்
          மரம்வெட்ட இவன்சென்றான்
          தேன் தொட்டுச் சுவைப்பதற்காய்
          தினமுமங்கே அவன்சென்றான்!

          கறுப்புநிற மென்றாலும்
          கட்டழகு நிறைந்தவளாய்
          காண்போரைக் கவரும்படிக்
          கண்ணம்மா இருந்தாளே!

          மரம்வெட்ட வந்த அவன்
          மாந்தோப்பில் நின்றவளை
          மனதிலே கொண்டதனால்
          மாலயிட ஆசைகொண்டான்!

          ஆசையினை அவளிடத்தில்
          அவன்சொன்ன போதுஅவள்
          பேசாமல் ஒருபார்வை
          பிரமிப்பாய் பார்த்தனளே!

          சாதியேதும் பார்க்காமல்
          சடங்கேதும் செய்யாமல்
          சந்தோஷத் தோடவர்கள்
          தம்பாட்டில் சேர்ந்தனரே!

          இனிமையாய் அவர்வாழ்வு
          இருந்தவொரு காரணத்தால்
          இருவரும் மகிழ்ந்திடவே
          இனியகுரல் ஒலித்ததங்கே!

         ஆண்குழந்தை பிறந்ததனால்
         அகமகிழ்ந்து நின்றார்கள்
         ஆனந்தம் மேலிடவே
         அதைக் கொஞ்சிநின்றார்கள்!

         குழந்தையின் குரல்கேட்டு
         குதூகலத்தில் மிதந்தார்கள்
         குறையொன்றும் இன்றியே
         குடும்பமும் ஓடியதே!

         ஆண்குழந்தை என்றதுமே
         அந்தரத்தில் அவன்நின்றான்
         அதனாலே அவன்போக்கில்
         ஆணவமே தோன்றியதே!

          மரம்வெட்டி நின்றவனோ
          மரக்காலை உரிமைபெற்று
          உரம்பெற்ற முதலுடயை
          உயர்முத லாளியானான்!

         பணம்வந்து விட்டதனால்
         பண்புஎலாம் தடம்மாறி
         குணமற்ற கூட்டமுடன்
         குலவியவன் நின்றிட்டான்!

         மனைவியிடம் இருந்த அன்பு
         மாறியது மதுவிடத்தில்
         மதுவோடு நில்லாமல்
         மங்கைகளும் வந்தணைந்தார்!

         வெறியோடு வீடுவரும்
         விருந்தாளி போலஅவன்
         நெறியின்றி இருந்ததனால்
         நெடுந்துயரம் அவள்கொண்டாள்!

         கண்ணிலே நீர்கொடுத்த
         கடவுளையே நொந்துஅவள்
         எண்ணியெண்ணி யேங்கியே
         இருப்பதையே மறந்துவிட்டாள்!

         அருமையாய்ச் சமைத்துவிட்டு
         அவள்வாசல் வந்துநின்றாள்
         அரையிலே ஆடையின்றி
         அவனாடி  வந்துநின்றான்!

         வாசலிலே நின்றவளின்
         வயிற்றில் அவனுதைத்தானே
         கைக்குழந்தை யோடுஅங்கே
         கதறியவள் வீழ்ந்தாளே!

         வெறியோடு அவன்கிடந்தான்
         வேதனையால் அவள்துடித்தாள்
         விடிந்ததும் அவன்பார்த்தான்
         வேரற்ற மரமானான்!

         பிஞ்சுக் குழந்தையுடன்
         பிணமாக அவள்கிடந்தாள்
         பித்துப் பிடித்தவனாய்
         பேதலித்து அவன்நின்றான்!

         காவல்துறை கைதுசெய்து
         காட்டியது தன்பணியை
         நீதிமன்ற தண்டனையால்
         நீண்டகாலம் உள்ளிருந்தான்!

        சிறைச்சாலை சென்றஅவன்
        செய்தபிழை தானுணர்ந்தான்
        மடத்தனமாய் மனைவிபிள்ளை
        மாண்டுவிடச் செய்தேனே!

        நெறிதவறி வெறிபோட்டு
        நிட்டூரம் பலசெய்து
        நீசனாய் நிற்கின்றேன்
        எனவெண்ணி அழுதனனே!

        காவலர்கள் வந்தவனை
        காரணத்தைக் கேட்டார்கள்
        கதைகூறி அங்கவனும்
        கதறியே அழுதிட்டான்!

        குடித்துவிட்டுக் கூத்தடித்தல்
        கூடாது என்றான்
        குடிப்பதனால் குடிமுழுக்க
        அழிந்துவிடும் என்றான்!

        குடிஒழிந்தால் நாட்டினிலே
        கொலைஒழியும் என்றான்
        குப்புறவே விழுந்த அவன்
        குப்புறவே கிடந்தான்!

        குடித்துவிடும் ஆண்களால்
        குடிமுழுகிப் போகும்
        குடியொழித்து விட்டாலே
        குடும்பம் அதுதழைக்கும்!

         குடும்பமெலாம் வாழ்வதற்குக்
         குடியொழிக்க வாரீர்
         குடிக்காத சமூகமதைக்
         குவலயத்தில் சமைப்போம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குடியொழிக்க வாரீர் !

  1. நல்லதோர் நீதி சொல்ல நாடிய நின் கவிதைவளம்.. நாளும்பெருகி வந்து கவிதை வழி கதைசொல்லும் விந்தைதனைக் காண்கிறேன்! அருமையாய் ஒரு கருத்தை ஆழமாய் பதியவைக்க.. உரியநல் வார்த்தைகளை உணர்வோடு கோர்த்தெடுத்து பதியம்போடுதல் போல் பக்குவமாய் பயிரிட்டு.. பாசத்துடன் நேசத்துடன் நெஞ்சத்தைக் கட்டுண்ணச்செய்யும் கோலமே உந்தன் படைப்பு! வல்லதோர் வடிவம்தன்னில் வடிக்கின்ற கவிகள் இவையும் படைப்பினில் புதிய பாதை வகுப்பதை நானும் அறிவேன்! உள்ளதை உணர்ந்ததை உரைக்கின்ற வித்தைகள் எத்தனை என்பதற்கு உலகத்தில் மற்றுமொரு சாட்சியாய் விளங்குகின்றீர்! பெருமைக்குப் பெருமை சேர்க்கும் பேரின்ப முயற்சியாய் கவிதையும் கதையும் இங்கே கைகோர்த்து வருவதாலே இரண்டுக்கும் பாலமிட்டு தொடரட்டும் உங்கள் பயணம்!

    வாழ்த்துக்களுடன்..
    காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.