வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர்!

டிசம்பர் 15, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திருவாளர் கே.ரவி அவர்கள் 

ravi

 

கடந்த இருபதாண்டுகளாக வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21-ஆவது பாரதி திருவிழா டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. பாரதிவிழாவினை தொடர்ந்து சிறப்புற நடத்திவரும் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி அவர்களை கவிஞர் ரவி  என்றழைப்பதே அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதை வல்லமை வாசகர்கள் அறிவார்கள். வல்லமையில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகளை ரவி எழுதியுள்ளார். அவற்றில் 50 பதிவுகளுக்கும் மேற்பட்ட “காற்று வாங்கப் போனேன்” என்ற தன்வரலாற்றுப் பகுதியும், சற்றொப்ப முப்பது கவிதைகளும் அடங்கும். ரவி அவரது சுயசரிதையை பொதுவான கோணத்தில் வழங்காமல் இந்தப் பிரபஞ்சத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாக அமைத்ததை, “சம்பவங்களாக இல்லாவிட்டாலும், மற்ற சுயசரிதைகளைப் போல வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாகக் கொஞ்சமேனும் அமைந்திருக்கக் கூடுமானால் அதுவே இதை ஓரளவு பயனுடைய முயற்சியாக உயர்த்த வல்லது” என்று விளக்குகிறார். “கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை; என் ஆயுதமோ, கருவியோ, சாதனமோ இல்லை. நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்!” என்றும், “என் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை,” என்று தன்னைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவ்வாறு கவிதைகள் மீதும், மகாகவி பாரதியிடம் இவர் கொண்ட ஈடுபாட்டை பாரதி பற்றி அவர் எழுதிய கவிதை மூலமாகவே அறியலாம்.

கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே
காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே
தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே
தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே
அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது
காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது
தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது
தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது
நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா

இந்த ஆண்டின் பாரதி திருவிழா ஜதிபல்லக்கு அழைப்பையும் ரவி கவிதையாக வடித்தே வல்லமை வாசகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

மான்தாங்கிக் கையில் மழுதாங்கி நிற்கும் மஹேஸ்வரனும்
தேன்தாங்கு செந்தா மரைதாங்கு நாபனும் மாகாளியும்
வான்தாங்கு தேவரும் வாழ்த்தவே யாவரும் பாரதிசீ
மான்தாங்கி யாய்ஜதி பல்லக்கை ஏந்த வருவீர்களே
— கே.ரவி

இவரது பேரார்வத்தின் காரணமாக வானவில் பண்பாட்டு மையம் 1994-ல் பிறந்து, ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளை விமரிசையாக, திருவாரூர் தியாகைய்யர் உத்சவம் போல் இசை விழாவாகக் கொண்டாடி வரப்படுகிறது. முதலாமாண்டு விழாவில், திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், திருமதி டி.கே.பட்டம்மாளும் கலந்து கொண்டு பாடியதும், அதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் சிறப்புரையும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிக்கூறுகள்.  ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவில் பாரதி கண்ட கனவு மெய்ப்படத் தொண்டாற்றியவர்களுக்கு பாரதி விருது வழங்கப்பட்டு வருகிறது.

007008

0090010

குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானியாக அனைவராலும் பாராட்டப்பட்ட காலத்திலேயே அவருக்கும் பாரதி விருது வழங்கப்பட்டது. பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி அம்மையார் 2008 க்கான பாரதி விருதை வாலிபக் கவிஞர் மறைந்த கவிஞர் வாலி அவர்களுக்கு வழங்கியதும் நினைவுகூரத்தக்க நிகழ்ச்சியாகும். பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியின் நிறுவனர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் ஆகியோர் பாரதி விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

வானவில் பண்பாட்டு மையம் 1994 தொடங்கி ஆண்டுதோறும் நடத்தி வரும் பாரதி திருவிழா பற்றியும் அதில் இடம்பெறும் சிறப்புமிகு ஜதிபல்லக்கு நிகழ்ச்சி பற்றியும் ரவி கீழ்வருமாறு கூறுகிறார்:

முதல் ஆறு வருடங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும், நாரத கான சபாவிலும், ம்யூஸிக் அகாடமியிலும் பாரதி விழா நடத்திக் கொண்டிருந்த வானவில் பண்பாட்டு மையம் 2000-ஆம் ஆண்டிலிருந்து திருவல்லிக்கேணியில், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி தன் இறுதி மூச்சை விட்ட பாரதி நினைவு இல்லத்தில் அதைக் கொண்டாட முன்வந்தது.

எட்டையபுர ஜமீந்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், “சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை” தந்த தன்னை ஜமீந்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சாலுவை, பொற்பை, வயப்பரிவாரங்கள் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருந்தான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி, அன்று அவனுடைய உருவச் சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.

உவமைக் கவிஞர் சுரதா உயிருடன் இருந்த வரைக்கும் ஆண்டுதோறும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜதிபல்லக்கைத் தம் தோளில் சுமந்து வந்திருக்கிறார். ஜதிபல்லக்கு முடிந்ததும் பாரதி இல்லத்தில் முழுநாள் கவிப்பொழிவு நிகழ்ச்சி இடம் பெறும். அதில் சுமார் 200 கவிஞர்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல், உணவு இடைவேளை கூட இல்லாமல், கவிதை சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்த ஆண்டு விழாவில் பாரதியாருக்கு சால்வை, பொற்பை ஆகியவற்றை சமர்ப்பித்து ஜதிபல்லக்கை காவல்துறை முன்னாள் தலைவர் ஆர். நடராஜ் தொடங்கி வைக்க, திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் “வருவாய் கண்ணா’ ஓவியக் கண்காட்சியை நடிகர் சிவகுமார் தொடங்கி வைக்க, மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திறந்து வைத்தார். பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ’சேக்கிழார் அடிப்பொடி’ என்றழைக்கப்படும் தமிழறிஞர் முதுமுனைவர் டி.என். ராமச்சந்திரனுக்கு பாரதி விருதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். தொடர்ந்து வந்த மூன்று நாட்களிலும் கலந்துரையாடல், சிறப்புரை, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பாரதியாரைப் போற்றும் வகையில் அமைந்தன.

ravi1
கவிதை இலக்கியத்திலும், சட்டத்திலும் சிறந்து விளங்கும் ரவி ஒரு பல்துறை வித்தகராகப் பன்முகம் கொண்டவர். இவரது கல்லூரி மாணவப் பருவத்தில் இதழியளாராகாவும் உருவெடுத்து, 1972-ஆம் ஆண்டு ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகையை நடத்திஇருக்கிறார்.

திரைத்துறையிலிம் நுழைந்து ‘ஸ்பரிசம்’ என்ற படம் தயாரித்துள்ளார். இசைமைப்பாளராகவும் உருமாறி திரைப்படங்களுக்கும், இசைப்பேழைகளுக்கும் இசையமைத்துள்ளார். இவரது இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது இனிய குரலில் பாடி ‘தெய்வ கானாம்ருதம்’ என்ற இசைப்பேழை 1994 இல் வெளியானது. ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையை 1980-களில் வெளியிட்டுள்ளார்.

பார்வைக்கு என்ன பொருள்” என்ற மேடை நாடகத்தை எழுதி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இயல்பியல்” என்னும் தலைப்பில் பல புதிய தனித்தமிழ்க் கலைச் சொற்களோடு ஓர் முன்னோடி வழிகாட்டிப் பாட நூலையும், “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற அறிவியில் நூலையும் எழுதி வெளியிட்ட ரவி, ஆங்கிலத்தில் இரு சட்டநூல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “Law, Logic and Liberty ” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, சமீபத்தில் மறைந்த நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் அது ஒரு சிறந்த குறிப்புதவி நூலாக அவருக்கு உதவும் எனப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும் ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையும் எழுதி, ‘வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ (Verses of Wisdom) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

பிரும்ம சூத்திரத்துக்கான ஆங்கில விரிவுரையை தற்பொழுது “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற நூலாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கவிஞராக தான்னை முன்னிறுத்திக்கொள்ள விழையும் ரவி, “நமக்குத் தொழில் கவிதை” “உன்னோடு நான் என்ற கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது ‘உன்னோடு நான்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற …

அந்தத்தை எண்ணிநான் அஞ்ச வில்லை
அந்தாதிப் பாட்டொன்றும் புதிய தில்லை
வந்தவரைக் கடைசிவரை வாழ வைக்கும்
வையகமாய் சத்யயுகம் மலர வேண்டும்

என்ற கவிதையை அமரரான அருட்செல்வர், தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் பாராட்டி இவரை வாழ்த்தியுள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர் கல்யாணராமன் அவர்களின் மகன் என்பதும், தொலைகாட்சி புகழ் ஷோபனாரவியின் வாழ்க்கைத் துணைவர் என்பதும் இவரது மற்ற வியக்கவைக்கும் சிறப்புகள். வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவி அவர்கள் தமிழுக்கு ஆற்றி வரும் பங்கினைப் பாராட்டி வல்லமையாளராக சிறப்பு செய்து வல்லமைக் குழுவினர் மகிழ்கின்றோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
படம் உதவி: http://www.dinamani.com/

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (11)

 1. Avatar

  by conferring the VALLAMAIYAALAR VIRUTHU to my POET FRIEND KA.RAVI, Vallamai min I thazh Perumal the edit koNdathu..

  Ithil ennai vida makizhbavar evarum irupparo?

  NaNaba, nenjam niraintha, nenjam nekizhntha vAzhththukaL!

  Su.Ravi

 2. Avatar

  வழக்கறிஞர் திரு. கே. ரவி பல தமிழ் / ஆங்கில இலக்கிய நூல்கள் எழுதியவர். குறிப்பாக அவர் எழுதிய பௌதிக விஞ்ஞான நூல் “இயல்பியல்” என்னும் தலைப்பில் பல புதிய தனித்தமிழ்க் கலைச் சொற்களோடு ஓர் முன்னோடி வழிகாட்டிப் பாட நூலாகப் படைக்கப் பட்டுள்ளது என்பதையும் தேமொழி தேர்வுத் தொகுப்போடு சேர்க்க விழைகிறேன். 

  திரு கே. ரவியை வல்லாளராகத் தேர்ந்தெடுத்துக் காட்டிய தேமொழிக்கு என் முதல் பாராட்டும், திரு கே. ரவிக்கு அடுத்த பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  சி. ஜெயபாரதன் 

 3. Avatar

  மலைக்க வைக்கும் மகத்தான பணிகளைச் செய்துவரும் இந்தவார வல்லமையாளர் திரு.கே.ரவி அவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

 4. Avatar

  இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே, பராசக்தி அருள்புரிக. நன்றி அனைவர்க்கும். –கே.ரவி.

 5. Avatar

  நண்பர் திரு ரவிக்கு வாழ்த்துகள். அருமையான மனிதர். பரந்த உள்ளம் கொண்டவர். கவிதையிடத்திலும், கவிஞர்களிடத்திலும் போலியற்ற நேசம் கொண்டவர்.

 6. Avatar

  இவ்வார வல்லமையாளர் வழக்கறிஞர் உயர்திரு ரவி அவர்கள் இந்த பாராட்டுக்கு மிகவும் தகுதியானவர் என்பதற்கு, அவர் திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் நடத்திவரும் விழாவே சான்று! பாரதிக்கு ஜதிபல்லக்கு கொடுத்து வரவேற்கும் பாங்கும், விழாவை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தும் விதமும், தரமான நிகழ்ச்சிகளைத் தகுதியானவர்களைக் கொண்டு நடத்தும் திறமையும் பாரதிக்கு அவர் சேர்க்கும் பெருமைகளாகும். அவருக்கு உறுதுணையாக நின்று பணியாற்றும் திரு வ.வெ.சு., திரு சுப்பு உள்ளிட்ட ஏராளமான நண்பர்களும் பாராட்டுகளுக்கு உரியவர்களே! வானவில் பண்பாட்டு மையம் நடத்திய இந்த அருமையான விழாவில் பங்குபெறும் பாக்கியம் எனக்கு இவ்வாண்டும் கிடைத்தது எண்ணி மகிழ்கிறேன்.
  V.Gopalan, Director, Bharathi Ilakkiya Payilagam, Thanjavur.
  President, Ayyarappar Natyanjali Trust, Tiruvaiyaru.

 7. Avatar

  வாழ்கின்ற வாழ்க்கையிது வந்துபோகும் கணக்கே அல்ல..
  வாழ்ந்து காட்டும் கணக்கே என்று வழிகாட்டும் ரவி இவர்!
  வழக்கறிஞர்.. எழுத்தாளர்.. வானவில்லின் நிறுவனர்.. என்று
  வண்ணங்கள் போலவே வடிவங்கள் பல கொண்டவர்!!
  பாரதியை உள்வாங்கி பைந்தமிழில் பற்றுவைத்து
  தேன்மதுரக் கவிபடைத்து தெள்ளுத்தமிழ் உரையெடுத்து
  நாளும்வலம் வருகின்ற இரவியும் இவரென்றால்.. ஆம்..
  என்றே பலமாக ஒலி எழும்பும் இலக்கியவட்டமெல்லாம்!
  தன்வரையில் வாழ்வதுவே தாளாத பிரச்சினையென்று
  தாமாக சலித்துக் கொள்ளும் பல்வேறு மனிதர்களுக்கு..
  கண்ணெதிரே சரித்திரமாய்.. நாளும் உழைப்பை ஈந்து
  பல்வேறு பணிகளிலும் பகலவனாய் உலாவரும் பாசத்திற்குரியவர்!
  வ.வே.சு. அவர்களின் நேசத்திற்குரியவர்.. தர்மத்தின்பக்கம்நின்று
  நீதிக்குப் போராடுபவர்! அன்றைக்கு ஒருநாள் எங்கள்..
  அமைப்பிற்கு வந்த துன்பம்தன்னை அடிச்சுவடு தெரியாமல்
  துடைத்தவர் என்பதனை என் அடிமனதில் நன்றியோடு
  கொண்டிருக்கிறேன்! இடையிலே தொடர்பது இல்லாமலிருந்தாலும்
  இதயத்தில் இவரைநான் என்றைக்கும் வைத்திருக்கிறேன்!
  வல்லமை வாயிலாய் மீண்டும் எங்கள் தொடர்பு கிடைத்தபோது
  வலிமைபெற்ற வாசகனாய் அவரை நான் காண்கிறேன்!
  வல்லமையாளர் விருது பெறுவதற்கு தகுதிகளோ மிகுந்திருக்கும்
  ஒருவருக்கு.. பாரதியின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும்
  வசந்த வைபவமாய் நடத்திவரும் திறமைக்கு.. உள்ளமெல்லாம்
  உணர்ந்தெழுதும் கவிதைமொழி அறிந்தவர்க்கு.. காலமெல்லாம்
  உயிர்ப்போடு கன்னல்தமிழ் தருபவர்க்கு.. இன்னுமின்னும்
  எத்தனையோ விருதுகளும் வழங்கிடலாம்!! அன்புடனே..
  அனைவரையும் அனுசரிக்கும் ஆர்வலர்க்கு.. நன்றிபல
  இன்றுசொல்லி.. வல்லமையாளர். கே.ரவி அவர்களை
  மனதார வாழ்த்துகளும்.. . தேர்வுக்குழுவுக்குப் பாராட்டும்
  சமர்ப்பிக்கிறேன்..
  அன்புடன்
  காவிரிமைந்தன் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்., பம்மல், சென்னை 600 075.. தற்போது அபுதாபி.. 00971 50 2519693

 8. Avatar

  பன்முகத்திறமையும், தமிழ்பற்றும் கொண்ட கவிஞர் ரவி அவர்களுக்கு  வாழ்த்துக்கள். பாரதியை விரும்பும் யாருக்கும் கவிதை சரளமாகவரும் .ஆனால் நெஞ்சுரம் என்பது பாரதி மீது பித்தாக உள்ளவர்க்கு மட்டுமேவரும்.அந்த நெஞ்சுரம் வைராக்கியம் கொண்டததால் தான் இவர் இத்தனை படைத்துள்ளார்.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  இவரின் அத்தனை ஆற்றலையும் அலசி நமக்கும் அறிய தந்த தேமொழி அவர்களுக்கு அவரின் தேடலுக்கும் அதை தரும்விதத்திற்கும் பாராட்டுக்கள்.

 9. Avatar

  பன்முகத்திறமையாளராய், பல்துறை வித்தகராய் மகத்தான பணிகள் ஆற்றிவரும் வல்லமையாளர் திரு கே. ரவி அவர்களுக்குப் பாராட்டுடன் கூடிய வாழ்த்துக்கள்!

 10. Avatar

  அனைவர்க்கும் நன்றி. பாராட்டு வார்த்தைகள் என்னைக் கூச்சப் பட வைக்கின்றன.
  35 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இரண்டு வரிகளுடன் இந்தப் பாராட்டு உற்சவத்தை நிறைவு செய்கிறேன்:
  “பாராட்டுக் காகப் பாடவில்லை நான்
  பாதை தவறிய குழந்தை போலப்
  பரிவு தேடி அழுகிறேன் – பல
  பள்ளங்களில் நான் விழுகிறேன்.”
  கே.ரவி.

 11. Avatar

  நண்பர், கவிஞர், வழக்கறிஞர் ரவி அவர்கள், பன்முகத் திறனாளர். அவரது வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி விழாக் கவியரங்கில் நானும் கலந்துகொண்டுள்ளேன். பின்னர் 2009 டிசம்பர் 11 அன்று நடைபெற்ற கவியரங்கிற்கு, பார்வையாளராகச் சென்றேன். ஆனால், கவியரங்க அமைப்பாளர்களும் நண்பர்களும் என்னைக் கண்டதும் நானும் கவிபாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். சரியென்று, அங்கேயே உட்கார்ந்து ஒரு கவிதையை எழுதி வாசித்தேன். அது இங்கே – http://annakannan-kavithaigal.blogspot.in/2009_12_01_archive.html

  இவ்வாறு என்னை எழுதத் தூண்டியது வானவில் பண்பாட்டு மையம். இவற்றை வரவேற்று, பாராட்டி, ஊக்குவித்தவர் வழக்கறிஞர் ரவி. எனக்குச் சட்ட உதவி தேவைப்பட்ட போதும், பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உதவியவர். வல்லமையில் துடிப்பான படைப்புகளையும் பாடல்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

  வல்லமையாளர் வழக்கறி்ஞர் ரவி அவர்களைப் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறேன்.

  /“பாராட்டுக் காகப் பாடவில்லை நான்
  பாதை தவறிய குழந்தை போலப்
  பரிவு தேடி அழுகிறேன் – பல
  பள்ளங்களில் நான் விழுகிறேன்.”/

  அவருடைய இந்த வரிகளும் என்னே உருக்கமாக அமைந்துள்ளன!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க