தாய்ப்பூத் தாமரைப்பூ தங்கத்து வீட்டுச் செண்பகப்பூ
தி. சுபாஷிணி
சென்னையின் நடுவினின்று நழுவி, அடையாறு வழியாக திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தரிசனம் கண்டு, கொட்டிவாக்கம் கடந்து, நீலாங்கரையையும் கடந்தது எங்கள் பயணம். விஜிபி தங்கக் கடற்கரை தாண்டி ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் வலப் புறம் திரும்பியது. ‘டெல்லி தாபா’ எனப் பெயர்ப் பலகையினை யொட்டிய தெருவில் ‘இஸ்கான் டெம்பிள்’ என்றொரு சிறிய அலங்கார வளைவு தெரிந்தது. அதனுள் பயணிக்கத் தொடங்கினோம். ‘இஸ்கான் டெம்பிள்’ என்று வழிகாட்டும் திசையெல்லாம் சென்று, வளைந்து திரும்பி, அப்பாடா. 2.கி.மீ. கடந்த பின் கட்டுமானத்தில் இருக்கும் ‘இஸ்கான் டெம்பிளை’ப் பார்த்தோம். பக்கத்திலிருந்து ஒரு குரல், “அம்மா! அதோ, பெரிய கேட் இருக்கு. அதனுள் தான்” என்று சொன்னார்கள். “டிரைவர்! அதற்குள் வண்டியை கொண்டு செல்லுங்கள்’’
வாவ்! என்ன அழகு. நேர்த்தியாய் அளவாய் வெட்டிவிட்ட புல்வெளிகள். அதன் நீளமே அரைக் கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ஆஹா!.. கேரளத்தில் அமைக்கப்பட்டது போல் வீடு. பிரம்மாண்டமாக இருக்கிறது. சாய்வான கேரளத்து ஓடுகள். அதற்கு அழகு சேர்த்தன. அதன் முன் கார் நிற்க, நாங்கள் மிகவும் ஆவலுடன் இறங்கினோம்.
வாசல் போர்டிகோவில், எங்களை மலர்களால் மலர்ந்த கோலம், மணமாய் வரவேற்றன. வண்ண வரவேற்பை ஏற்றபடி, வீட்டினுள் நுழைந்தோம்.
என்ன அமைதியான அழகு! பழமையின் கட்டிட அழகு பொங்கி வழிந்தது. அது ஒரு பெரிய ஹால். ஏறக்குறைய 100 பேர்களுக்கு மேல் அமரலாம். நடுவில் முற்றம். முற்றத்தில் சூரியன் தன் வெளிச்சத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தான். முற்றத்தைச் சுற்றி அறைகள், அவற்றின் பக்கத்தில் ‘ப’ வடிவில் அமரும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதன்கீழ் முற்றம் வரையில் ஜமுக்காளங்கள், அமர்ந்து கொள்ள விரிக்கப்பட்டிருந்தன. முற்றத்தின் கிழக்குப் பக்கத்தில் பூஜை அறை அமைக்கப்பட்டு இருந்தது. பழமையான ஓவியங்களில் பெருமாளும் அலர்மேல் வள்ளித்தாயாரும், அழகாய் வீற்றிருக்க, இராமர், சீதை, லக்ஷ்மணர் பட்டாபிஷேகப் படத்துடன் அனுமனும், லக்ஷ்மியுடன் சரஸ்வதியும் வீற்றிருக்க பிள்ளையார் நடு நாயகமாகத் திகழ்கிறார். இரு பக்கத்திலும் குத்து விளக்குகள் விளக்கேற்றும் நிலையில் தயாராய்ப் பள பள வென்று மின்னிக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் இந்த ரம்மியத்தை, கண்கள் மூடி மனத்தினில் இருத்திக் கொண்டேன். கண்களை விழித்தவுடன், அலர்மேல் வள்ளித் தாயார் புன்முறுவல் காணப் பெற்றேன். ‘‘வா! வந்துட்டியா! உனக்காகத்தான் இந்தக் காத்திருப்பே’’ என்பது போல் முறுவல் தொடர்ந்தது. அது என் மேல் படர்ந்து என்னை எங்கேயோ அழைத்துச் சென்றது.
‘‘அம்மா, நம் ஜனனியின் நிச்சயதார்த்தத்தை ஜாம் ஜாம் என்று, நம் கலாச்சாரத்தின் அழகாய் மெருகூட்டி நடத்தப் போகிறேன். திருமண மண்டபங்கள் வேணடாம். எந்தவொரு ஹோட்டலிலும் நடத்த எனக்கு விருப்பமில்லை.
ஹரிக்கும் இதே எண்ணம்தான். (ஹரி எனது மூத்தமகளின் கணவர்) இதைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கையில், “ஏன் நாம் ஒரு வீடு எடுத்து, நிச்சயதார்த்தத்தை நடத்தக் கூடாது என்று தோன்றியது. எனவே அதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். உன்னுடைய கருத்து என்ன?”என வினவினாள் என் மூத்தமகள்.
‘‘கரும்பு தின்னக் கசக்குமா என்ன!’’ என்று பதில் அளித்து விட்டேன் நான்.
பெண்ணும் மாப்பிள்ளையும் சிறந்த படைப்பாளிகள். அவர்களது ரசனை மிகச் சிறந்ததாகத்தான் இருக்கும். இளங்கன்றுகள். எடுத்து செய்தால், அதில் ஒரு நேர்த்தியும் தனித்துவமும் இருக்கத்தானே செய்யும்.
என் பெண்ணின் பரபரப்பையும் துடிப்பையும் ஆசையையும் பார்க்கும் போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தன் தங்கையை தன் மகளாகப் பாவித்து, அத்தனை செயல்களையும் செய்யத் தொடங்கினாள். எப்போதும் அவளது மன நிலை அது தான். அக்கா தங்கை இருவரிடமும் அப்படியொரு உறவு நிலை இருந்து கொண்டு இருக்கின்றது. கடந்த ஒரு பத்து வருடங்களாக அவள் தான் தன் தங்கைக்கு எல்லாம் செய்து கொண்டு இருக்கிறாள். நான் எல்லாவற்றிற்கும் ஒரு சாட்சி தான். இப்படித்தான் நிகழும் என்பதை, என் இரண்டாவது மகளைப் பெற்று எடுக்கும் போதே எனக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று இப்போது புரிகிறது.
ஏனெனில்,
என் இரண்டாவது மகளைப் பெறுவதற்காக, பிரசவ வலி எடுத்து இஸபெல் மருத்துவமனைக்குச் சென்று, பிரசவித்த அந்த சம்பவம் என் மனதினில் சிந்தையில் அழியாது அப்படியே நிற்கின்றது.
முதல் பிரசவத்தின் முன் ஜாக்கிரதை இரண்டாவது பிரசவத்திற்கு இருக்காது. ‘பழகிப்போன ஒன்று தானே’ என்று பதட்டமில்லாது இருக்கும். (நான் முதல் பிரசவத்திற்கே எந்தவிதப் பதட்டமும், எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருந்தேன். பெரிய விஷயம் இல்லை. எதற்கு கூனியூர் போகும் முன் கூனுவானேன் என்கின்ற கருத்துதான்) அவர்கள் தீர்மானித்த தேதியின் முன்னிரவு வரை அலுவலக வேலை, செய்யாதுவிட்ட வேலைகள் என்று செய்து முடித்தேன். அவர்கள் சொன்ன தேதியில் வலி பிறந்தது. இஸபெல் ஆஸ்பத்திரிக்கு அதிகாலையில் சென்று அங்கு அட்மிட் ஆனேன். முதல் பிரசவத்திற்கு மருத்துவர் டாக்டர்.ப்ரேமா கிருஷ்ணசாமி. இதே ஆஸ்பத்திரி தான். இரண்டாவதும் இதே ஆஸ்பத்திரிதான். ஆனால் ஆஸ்பத்திரியின் மெடிக்கல் ஆபீஸர் (ஸி.வி.ளி.) வேறு. நேரம் செல்லச் செல்ல வலி அதிகமாக “பிரசவ அறைக்கு” அழைத்துச் செல்லப்பட்டேன். குழந்தையின் தலை தெரிந்து விட்டது. என்னால் என் சக்தி கொண்டு பிரஷர் கொடுக்க இயலவில்லை. ‘வேக்குவம்’ கருவி கொண்டு எடுக்கலாம் என்றால் ரப்பர் குழாயில் ஓட்டை இருக்கின்றது. அவர்களால் அதில் ப்ரஷர் கொடுக்க இயலவில்லை. என்னடா! டாக்டர்! மாற்றியிருக்க கூடாதோ என்று கூட தோன்றியது. ஏதோ உணர்வு. என்மேல் படர்ந்தது. தலையை வலப்பக்கமாகத் திருப்பினேன். அப்போது என் மூத்த மகளுக்கு 5 வயது. அவள் சாயலில் என் அருகே நிற்கிறாள் ஒரு சிறுமி. அதே! தலைமுடி வெட்டி விடப்பட்டு, பாவாடை சட்டை அணிந்து, அப்படியே அவளேதான்! எனக்கு வியப்புதான். உடனே நர்ஸ் ஓடி வருகிறார்கள். ஒரு ஸ்டூல் போட்டு என் மேசை உயரத்திற்கு வந்து, தன் முழங்காலால் என் வயிற்றில் ஒரே அழுத்து… அவ்வளவு தான் மகள் வெளிக்காற்றை சுவாசிக்கவும் வெளிச்சத்தின் ஸ்பரிசத்தை அனுபவிக்கவும் வெளிவந்தாள். அவள் வெளிவந்த உணர்வும், என் பக்கத்தில் அதுவரை என்னுடன் இருந்த மூத்தமகளின் இருப்பின் இல்லாமை உணர்வும் ஒரே சமயத்தில் நான் உணர்ந்தேன். இந்த அனுபவம் எனக்கு அதிசயமாய் புதிராய் அன்று இருந்தது. ஆனால் அந்தப் புதிர் விடுபட்டது. எல்லாம் இறைவன் செயல் என்பதா? அன்பின் பாதுகாப்பு, பரிமாணம், ஆற்றல் என்று கொள்ளலாம் தானே! உறவுகளின் உன்னதம். அதன் பண்பும் பயனும் என்று பாராட்டி ஆனந்திக்கலாம் தானே!
இதை அங்கீகரிப்பது போல்தான், அலர்மேல்வள்ளித் தாயாரின் முறுவலிப்பு இருக்கின்றது. அவளது குமுத வாயினின்று புறப்பட்ட நறுமுகை அந்த அறை முழுவதும் நிரப்பப்பட்ட, ஒரு பரவச நிலையை அங்கு நிறுத்தியது.
நிச்சயதார்த்த வேலைகள் மளமளவென நடக்கத் தொடங்கின. கேரள வீட்டின் நடு முற்றத்தில் பூசையறையின் பக்கமாய் ஒரு புதிய ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அதில் பெண்ணும் பையனும் அமர்வதற்காகத்தான் எனப்புரிந்தது. அவர்கள் எதிரே, இருபக்கமும் எதிரும் புதிருமாய் முன்னின்று நடத்தும் ‘வாத்தியார்’ க்குத் தனியாக அமர, புதிய பாய் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. முற்றம் சுற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முற்றத்தின் மேல், வெய்யிலின் வரவிற்கு மதிப்புக் கொடுத்து, மன்னிப்புக் கோரி, திரையால் தடுத்து, முற்றம் நிழலின் கீழ் அமையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஹாலில் இடப்பக்கம் சென்றால், அமர்வதற்கு இரு திண்ணைகள் அமைக்கப் பட்டிருந்தன. அவைகளின் நடுவில் ஒரு அழகான ஊஞ்சல், மெத்தென்ற இருக்கையுடன், மேலிருந்து தொங்கி, ஆடிக் கொண்டிருந்தது. ஹாலின் வலப்பக்கம் இரு அறைகள் இருக்கின்றன. ஒன்றில் விழாவிற்குரிய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு அறை மிகவும் பெரியதாக இருந்தது. அதில் அமர, சோபாக்களும் நாற்காலிகளும் போடப் பட்டிருந்தன. மாப்பிள்ளையாக வரும் பையனின் வீட்டார் வந்ததும் அமர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். ஹாலில் உள்ள பூசையறையிலிருந்து ஒரு மாடிப்படி செல்கிறது. அதன் வழியே சென்றேன். வாவ்! என்ன அழகு! எத்தனை அழகு! சிறிய ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருக்க, அழகு ஓவியங்கள் சுவரில் அலங்கரிக்க, அதைத் தாண்டிச் சென்றேன். அது குளிரூட்டப்பட்ட அறை. பெண்ணின் அலங்கார அறை. புடவைகள் கட்டுவதற்கு பிரித்துத் தயாராய் இருந்தன. பெண்ணிற்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. என் வரவின் உணர்வறிந்து சட்டென்று திரும்பினாள். அவளைச் சுற்றி அலங்காரப் பொருட்கள், அழகு நகைகள். தலையலங்காரம் முடிந்திருந்தது. என் பெண்ணா இவள்! சீராக வெட்டிய குட்டைத் தலை முடியுடன், ஜீன்ஸ் பேண்ட்டும், ஷர்ட்டும் இருக்கும் சிறு பெண்….. எப்படி நீண்ட முடியுடன் எளிய தலையலங்காரத்துடன்… மிகவும் அழகாக இருந்தது. அவளைச் சுற்றி அவளது தோழிகள்.. அனைவரும் புடவையில் அழகுத் தேவதைகளாக மிளிர்ந்திருந்தனர். அறை முழுவதும் தேவதைகளின் கூட்டமாய் புனிதமானது போல் தோற்றமளித்தது. இடையில் என் சித்தி பெண். மகப்பேறு மருத்துவர். அவள் பரோடாவிலிருந்து வந்து இருந்தாள். நம் சேமிப்பையே அவர்கள் சேமிப்பாக மாற்றிக் கொள்ளும் மருத்துவ உலகில் ஒரு பண்பாட்டுத் தேவதையவள். அவளுடைய கணவரும் இதேத் துறை மருத்துவர் தாம். இருவரும் எந்தக் ‘கட்’ டும் வாங்க மாட்டார்கள். எந்தவிதமான ‘கட்’ டும் கொடுக்கமாட்டார்கள். காந்தி பிறந்த மாநில நேர்மையான மருத்துவர்கள். நான் கூறியது சரிதானே! அவள் ஒரு மருத்துவ உலகின் தேவதைதான். அவள், அடர்நிற மஞ்சள் நிறத்தில் சிவப்பு பார்டருடன் கூடிய 9 கஜப்புடவையில், ஐய்யங்கார் கட்டு கட்டியிருந்தாள். அவளது வெண்மை நிறத்திற்கு இப்புடவையும் இக்கட்டும் அவளுக்கு மிகவும் அழகூட்டியது. அதற்குள் நானும் 9 கஜ மடிசார் (கூரைப்புடவை நிறம் என்னுடைய புடவை நிறம்) புடவைக்கு மாறி விட்டேன். புடவை கட்ட உதவியது என்னுடைய ‘‘ஒரு நாள் சினேகிதி பாமா’’ தான். மிகவும் அருமையாய் எல்லோர்க்கும் கட்டிவிட்டிருந்தாள். எனது அத்தை பேரனின் திருமணத்தில் பார்த்த பாமாவை, ஒரே நாளில் நாங்கள் தோழிகளாகி விட்டோம். அதனால் எங்களிடையே அவளுடைய பெயரே ‘ஒரு நாள் சினேகிதி’ ஆகி விட்டது. பாமாவின் உதவியை மறக்கமுடியாது. நானும் மடிசார் மாமியாகி கீழே வந்தால், என் மூத்த பெண்ணும் மடிசாரில் வளைய வந்து கொண்டிருந்தாள். மாப்பிள்ளை வேஷ்டி சட்டையில் இருந்தார்.
ஆம்! அன்றைய விழாவின் ‘‘விசேட ஆடை’’ பெண்கள் புடவையும் ஆண்கள் வேட்டி சட்டையும் என்று எல்லோரிடமும் குறிப்பிட்டு சொல்லப் பட்டிருந்தது. சிறிது நேரத்தில், ‘கொல்’ லென்று மடிசார்களும், புடவைகளும் அணிந்த அழகு தேவதைகளாய் அலங்காரமாய் விளங்கியது அவ்வீடு. இடையிடையே கோர்த்து அணியாய் நிற்கும் வேஷ்டி சட்டைகளுடன் ஆண்கள் இருந்தனர். நிச்சயம் செய்யப்படும் பெண்ணும் பையனும் ஒரே துறை ஒரு சாலை மாணாக்கர் என்பதால், நண்பர்களும் ஒன்றாகி விட்டனர். அவர்கள் தோழர்கள் யாவரும், வேறு மாநிலமாய் இருப்பினும் வேட்டி சட்டை அணிந்து நம் தமிழ்ப் பாரம்பரியச் சின்னமாய் விளங்கினர்.
பையனின் வீட்டார் வித விதமான பழத் தட்டுக்களுடனும், உலர் பருப்பு வகைகள், பூக்கள் எனப் பற்பல அழகாய் அலங்கரித்த வரிசைத் தட்டுக்களுடன் வாசலில் அணி வகுத்து நின்றனர். அவர்களும் மடிசார் புடவைகளிலும், வேட்டி சட்டை என்றும் அணிந்து வந்து நின்றது மிகவும் மனதிற்கு ரம்மியமாக இருந்தது. எனது மூத்த சகோதரியும் எனது கணவரின் மூத்த மன்னியும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இக்காட்சியை வீட்டினுள் இருந்து காணும் போது அழகோ அழகு. இவ்வழகு அங்கு புல் வெளியில் மரங்களில் பூக்களில் என எல்லா இடங்களிலும் வியாபித்துப் பரவி, விழாவினை மங்கலமாய்த் தொடங்கி வைத்தது.
வீட்டினுள் நுழையும் போதே, பையனின் தந்தை, ‘‘இதோ நானும் மருதாணி இட்டுக் கொண்டிருக்கின்றேன்! என தன் உள்ளங்கைகளை விரித்துக் காண்பித்தது அவரது எளிய அன்பை வெளிப்படுத்தியது ஆம். மருதாணியும் பழைய முறை தான். உள்ளங்கை நடுவில் ஒரு பெரிய வட்டம். அதைச் சற்றி 4 மூலைகளிலும் ஒவ்வொரு சிறிய வட்டமாக கை விரல்கள் நுனியில் குப்பி போல் வைக்கும் முறை தான்.
ஆம். விழாவிற்கு முதல் நாள் மாலையில் வீட்டில் நண்பர்கள் வந்து விட்டனர். ஒவ்வொருவருக்கும் மேலே சொன்னவகையில் மருதாணி இடப்பட்டது. பின் அனைவரும் கலந்து உரையாடி, பாட்டுப் பாடி, நடனம் ஆடி என ஒரே குதுகலமாய் இருந்தது. வீடு இந்த கும்மாளத்தில் குலுங்கிப் போனது. ஒரு பக்கம் மறு நாள் கொண்டு செல்ல வேண்டிய மங்கலப் பொருட்கள், பூஜையறையை நிறைத்தது, மறு பக்கம் இரவிற்கான விருந்து சாப்பிடும் மேசையில். கலகலவென ஒரு கல்யாணக் களை கட்டிவிட்டது. எல்லாவற்றையும் மனத்தில் இறுத்திக் கொண்டேன். கூட்டமாய் பார்த்தேன். சப்தத்தை கலகலப்பை ரசித்தேன். அதிர்வுகளால் பரவசப்பட்டேன். ஒவ்வொன்றாய், ஒவ்வொருவராய் உற்று நோக்கினேன். ஒரு தியானம் போல் அனுபவித்தேன்.
‘‘ஒரு ஸ்டில் லைஃப் ஓவியத்தில் பழக் கிண்ணத்தில் நிறையத் திராட்சைத் தொங்குவது போல, சில சமயம் நெரிசல் அழகு. நெரிசல் ஜீவன். யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறார்களோ அந்தச் சுடர் கடவுளின் மேலான ஒளியை நாம் தியானிப்போமாக! எப்போதுமே சற்று முந்தையைப் பருவங்கள் அழகானவை. அப்பழுக்கற்றவை. உண்மையை ஏந்தி நிற்பவை. காலைக்கு முன் விடியற்காலை, வெயிலுக்கு முன் இளவேனில், பூப்பதற்கு முந்தைய பூ, பேறுக்கு முந்தைய இளம் தாய், கல்யாணத்துக்கு முந்தைய நாள்…. இப்படி ….” என்று கூறிய வண்ணதாசனின் வார்த்தைகள் என்மேல் மெதுவாய் படர்ந்து அர்த்தமாக்குகின்றன.
அடடா! அவர்கள் வீட்டிற்குள் வந்து விட்டார்கள். நாமும் செல்வோம். ஆஹா! அனைவரையும் என் பெரிய பெண்ணும், மருமகனும் வரவேற்று அமரச் செய்து கொண்டிருக்கின்றனர். தினந்தோறும் ஜீன்ஸிலும் பனியனிலும் வளைய வரும் பெண்ணா இவள்! மடிசார் கட்டி, ஜப்பான் பொம்மைபோல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து அனைத்தையும் அமைதியாய் கவனிக்கிறாள்! இக்காலத்து இளைஞர்கள் எதைச் செய்தாலும் சீரியதாய் நேர்த்தியாய் முழுக் கவனிப்புடன் செய்து விடுகிறார்கள். அவர்களிடம் விட்டு விடுவது தான் நம் வேலை.
ஹாலில் உள்ள பூஜையறையில் இரு வீட்டாரின் பெற்றோர்கள் இறைவனை வணங்கி விட்டு முற்றத்தில் அமர்ந்தனர். ஒரு பக்கம் பையனின் அம்மா, அப்பா, பாட்டி, அத்தைமார்கள் என அவர்களது குடும்பமாய் அமர்ந்தனர். பெண்ணின் தாயார் (நான்) தந்தை, தந்தையின் மூத்த சகோதரர், அவரது மனைவி, எனது சகோதரி, அவரது கணவர், எங்கள் சம்பந்தி என அமர்ந்து கொண்டோம். முற்றத்தில் நான்கு பக்கத்திலும் மூன்று படிக்கட்டுகள் இருந்தன.
பையன் வீட்டிலிருந்து கொணர்ந்த சீர் தட்டுக்கள் விழா முற்றத்தின் நடுவே அணியாய் வைக்கப்பட்டன. தனியாய் ஒரு தட்டில் அழகாய் வட்டமாய் அடுக்கப்பட்ட வெற்றிலைப் பாக்குத் தாம்பூலத் தட்டுகள் பூத்து, மஞ்சள் குங்குமத்துடன் மங்கலப்படுத்தி அங்கு வைக்கப்பட்டது. தேங்காய்களுக்கு, மஞ்சள் தடவி, அரிசியை அட்சதையாக்கி வைத்ததும், மங்கல மஞ்சள் அழகு அழகுக்கு அழகு சேர்த்தது. இவைகளின் நடுவில் விழாவினை முன்னின்று நடத்தும் ‘‘வாத்தியார்’’ அமர்ந்ததும், கல்யாணக்களை கட்டி விட்டது.
கிழக்குப் பக்கத்துப் படிக்கட்டுகளில், எனக்குத் தாயாய், தோழியாய், உறவுகளின் உன்னதத்தினை உரைத்து இல்லற வாழ்வின் வழிகாட்டியான திருமதி. சரஸ்வதி, மகள், மருமகள், தங்கை, அவள் பெண், இவர்களுடன் பையனின் தாயார், எனது முதல் மகள் என மடிசார் மாமிகளாய் அமர்ந்து அலங்கரித்தனர். இவர்களுக்கு கீழ், முற்றத்தில் பெண்ணும் பையனும் அமர்வர். கிழக்கு மூலையில் எங்கள் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் காந்தி கல்வி நிறவன இயக்குநர் அண்ணாமலை, அவரது மனைவி முனைவர். பிரேமா, மோகன், அவரது மனைவி வாகிணி, சந்திரசேகர், சரவணன் ஆகியோரும், செம்மொழி நிறுவன ஆய்வறிஞர் பேராசிரியர்.அன்னிதாமசு, இணை ஆய்வறிஞர், தோழி முனைவர். ந.தேவி, அவர்களது பெரியப்பா, ஆய்வு வள மைய தோழி முனைவர், அருணா சரவணன், முனைவர் பட்ட மேலாய்வாளர் முத்துச் செல்வன், அவரது மனைவி தோழி.காயத்திரி, எனது குடும்ப நண்பர் சீனிவாசன், அவரது மனைவி என நிறைந்து காணப் பட்டது.
மேற்குப் பக்கத்தில் பிள்ளை வீட்டார்கள் அவர்களது பெரிய பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, அத்திம்பேர்கள், மாமாக்கள் என குடும்பத்தின் பெரியவர்கள் அமர்ந்து இருந்தனர். வடக்கில், இலக்கிய உலகத்தில் ஒளி வீசும் படைப்பாளிகளின் அணி அமர்ந்திருந்தது மிகவும் சிறப்பாய் அமைந்தது. என் அழைப்பை ஏற்று, இவ்விழாவிற்காக கோட்டயத்திலிருந்து வந்திருக்கும் திரு.இராமன் (மலையாள மனோரமாவின் தலைமை சப் எடிட்டர்) அமர்ந்திருந்தார். உலகக் கவிக்கு இணையாகப் பேசப்படும் கவிஞரும், உயிர்மைப் பதிப்பகத்தின் உரிமையாளருமான திரு. மனுஷ்ய புத்ரன், தன் குடும்பத்துடன் வந்திருந்து பெருமை சேர்த்திருக்கிறார். இவர்களுக்குப் பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் திரு. ஞானி, எழுத்தாளர், சமூக ஆர்வலர், பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவரான என் தோழி பத்மா, எங்களது நண்பர் திரு.விஜூ, அவரின் மனைவி அன்புமிகு திலகவதி, திரைப்பட எழுத்தாளரும் கவிஞருமான நண்பர் திரு. பாஸ்கர் சக்தி, ஐ.டி. பொறியாளர் நண்பர் திரு.அண்ணாமலை என படைப்புலகமாக அது திகழ்ந்தது. அவர்கள் பக்கத்தில் இன்னும் இரு இடங்கள் காலியாய் இருந்தன. என் ஆத்ம நண்பர்களுக்குரிய இடமாக இருந்திருக்கும், அவர்கள் வந்திருந்தால். அவர்கள் வர முடியாத சூழலில் சிக்கிக் கொண்டு விட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக என் அண்ணனும், மன்னியும் இல்லாததை உணரத் தொடங்கி விட்டோம். ஏனெனில் அவர்கள் இருவரும் எல்லார் இடத்திலும் வளைய வந்த உபசரித்து, வரவேற்கும் விதம் அழகாக இருக்கும். அதிலும் முனைப்பாக, என் மன்னி, மலர்ந்த முகமும் விரிந்த சிரிப்புமாய் அனைவரையும் வரவேற்று, விழாவினை அலங்கரிப்பார்கள். எங்களது அபிஷியல் ஃபோட்டோ கிராபரும் அவர்தாம். எந்த நிகழ்ச்சியும் அவர் புகைப்படத்துக்குள் தப்பாது இருக்க இயலாது.
வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் திருமண விழாவிற்கு முன்னோடி தான் இந் நிச்சயதார்த்த விழா. இரு வீட்டாரும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளும் விழா தான் அது.
விழாவின் நாயகியை அவள் தோழிகள் அழைத்து வர, பெண்ணின் பெரியப்பாவும் பெரியம்மாவும் அவளுக்கு மாலை அணிவித்து, மனையில் அமரச் செய்தனர். ஈண்டு நான் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பல காலங்கள் கழித்து, கால தேச வர்த்தமான காரணங்களால் சந்திக்க வாய்ப்பில்லாத என் கணவர் வழி உறவுகளை மீண்டும் சந்திக்கக் கூடிய விழாவாகும் என்பதால் இவ்விழா மிகவும் சிறப்புறு தருணங்களை அளித்திருக்கிறது. அந்தப் பருவங்களில், அந்தந்த தருணத்திற்குரிய அழகு பெண்களிடம் தானே வந்து அமர்ந்து விடுகிறது. அவள் வந்து அமரிக்கையாய் அமர்ந்த அழகு மிகவும் உன்னதமாய் எழிலாய் நிறைந்து இருந்தது.
விழாவின் தலைமையான ‘வாத்தியார்’ (அய்யங்கார் சமூகத்தில் சாஸ்திரிகளை அவ்வாறு தான் அழைப்பார்கள்) பெண்ணிற்கு புடவையும், பொன் நகை யொன்றையும், பிள்ளைவீட்டு நிச்சயதார்த்தப் பரிசாக அளித்தனர். வேஷ்டி, சட்டை, மோதிரம் ஆகியவை பெண்வீட்டுப் பரிசாக பிள்ளைக்கு அளிக்கப்பட்டது. இருவரும் புதிய ஆடையை அணிந்து வரச் சென்றனர். அப்போது கூடியிருந்தவர்கள் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டும், நலங்கள் விசாரித்துக் கொண்டும் இருந்தனர். புத்தாடையில் பெண்ணும் பிள்ளையும் வந்தவுடன் ‘‘நிச்சயதார்த்த ஒப்புதல்’ பத்திரிகை எழுதப்பட்டதை வாத்தியார் படித்தார். பிள்ளை வீட்டுப் பத்திரிகை அழகு தமிழில் எழுதப்பட்டு இருந்தது. அவர்கள் அதை பெண்ணின் பெரியப்பா பெரியம்மாவிடம் அளித்தனர். நாங்கள் பதிலுக்கு, வரும் ஆண்டில் ஒரு சுப தினத்தில் அவர்களது பையனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக எழுதிய ஒப்புதல் பத்திரிகையை பிள்ளை வீட்டாரிடம் அளித்தோம்.
இதில் நான் கவனித்த விஷயம் ஒன்று இருக்கிறது. இரு அப்பர்களின் ஒப்புதல் பத்திரிகையாக இருந்தது. இருவரின் தாயார்களின் பெயர்கள் அதில் இல்லை.
இரண்டாவது, மிகவும் சிறப்பும் வாய்ந்ததும், பதிவும் செய்யக்கூடிய செய்தி என்னவெனில், இந்த விழா சந்தோசப் பகிர்தலின் நிமித்தம் தான் நடத்தப்பட்டது. எங்கள் குழந்தைகள் இருவரும் தங்கள் மண வாழ்க்கையினைத் தெரிந்தெடுத்து இருப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என்பதைப் பகிர்ந்து கொண்டதாய் அமைந்தது. அதில் நம் பாரம்பரிய கலாச்சார விசயங்களுடன் கூடிய விழாவாக சிறப்பு செய்யப்பட்டது. ஏற்கனவே இரு வீட்டாராகிய எங்களிடையே இருக்கும் நல் நட்பு கூடுதலாய் சிறப்புற நடத்தப்பட்ட வைபவம் தான் இது. இதில் இரு வீட்டாரின் ஆளுமை ஒருவர் மேல் ஒருவர் செலுத்தப்படவில்லை. அன்புதான் ஆட்சி செய்தது. உறவுகளின் விரிவாக்கம் என்பதை இருவருமே உணர்ந்து இருந்தோம். அது அழகாக வெளிப்படையாகவே தெரிந்தது. எனவே எந்தவிதப் படபடப்பும் பதட்டமும் இல்லாது விழா சிறப்புற்றது. பெண்ணும் பிள்ளையும் மோதிரத்தை ஒரு அடையாளமாக மாற்றி அணிந்து கொண்டார்கள்.
விழாவின் இனிமை முற்றுப் பெறுதலே விருந்தில் தான். இந்தப்பகுதியை எனது சம்பந்தி திரு.இராமநாதன் அவர்கள், (ஹரியின் அப்பா) தன் மனைவி காது ஆப்ரேசனாகிய நெருக்கடியான சமயத்திலும் மிகவும் நேர்த்தியாக கவனித்துக் கொண்டார். சமையலுக்கு ஆள் தேடுவதிலிருந்து, தாம்பூலப்பை தெரிவு செய்வது வரை அவர் தான் முன்னின்று செய்தார். அனைவரும் ‘நல்விருந்து’ எனப் பாராட்டினர். அவரது உழைப்பின் பயன் அது. அவர் என் பெண்ணைத் தன் பெண் போல் பாவித்த பயன் அது. என் சம்மந்தியும் சரி, மருமகனும், மகளும் மற்றும் அனைவரும் சிறப்பாக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் தான் இத்தனை அழகு இந்த விழாவில் சேர்ந்து கொண்டது.
சில நாட்களே பழகிய கவிஞர் ரவி சுப்ரமணியம் எங்களுக்கு முதலில் விழாவிற்கு வந்து விட்டார். என் கணவரின் அண்ணா பெண் திருமதி.சாந்தி அன்று முழுவதும் உடனிருந்து வேலைகளைப் பகிர்ந்து கொண்டாள். அவளது கணவர் திரு.முரளி எங்கள் வீட்டு மூத்த மாப்பிள்ளை. எது வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறி உதவியாய் நின்று, வந்து இருந்து பொறுமையாய் விழாவில் கலந்து கொண்டார். என் மூத்த சகோதரியும் அவர் கணவரும் எங்கு வைத்தாலும் தாங்கள் வரத்தயார் என்று கூறி வந்திருந்து சிறப்பித்தார்கள். ‘ஜஸ்டின்’ என்னும் இளவயது நண்பன், ஞானியின் மகன்கள் நண்பன். அவன் எங்களுக்கு உறுதுணையாய், விழா நடக்கும் இடத்திற்கு முன்தினம் வந்து பார்த்துவிட்டு, அனைவருக்கும் வழிகாட்டியாய் இருந்தான். எனது சித்தி பெண் பரோடாவிலிருந்து வந்தது விசேசம். எனது கணவரின் மூத்த சகோதரரின் மகன் தன் குடும்ப, அலுவலகப் பணிகளிடையே காரைக்காலிலிருந்து வந்தது கூடுதல் சிறப்பு ஆகும்.
கவிஞர் மனுஷ்ய புத்ரன், திரு. ஞானி, திரு. பாஸ்கரன் சக்தி ஆகிய அனைவரும் எளிமையான, அருமையான, அன்புமிகு நண்பர்கள். ஆனால் மிகவும் வேலைப்பளு மிக்கவர்கள். இது வெறும் நிச்சயதார்த்த விழாதானே என அலட்சியமாய் இராது, தம் வீட்டு விழாபோல் பாவித்து வந்தது மிகவும் சந்தோஷமாயும், பெருமிதமாயும் இருக்கின்றது. வெறும் கட்டுரையின் அலங்காரத்திற்காக எழுதவில்லை. ‘‘விழா எடுப்பது’’ என்பதன் நோக்கம், பொருள், கூடியிருந்து மகிழத்தான் என்பதை தெளிவாய்க் கூறத்தான் இவ்வளவு விரிவாக எழுதுகின்றேன்.
மனிதர்கள் இவ்லையெனில் விழா எப்படி இருக்கும்? விழா இல்லாமல் மனித வாழ்வு எவ்வாறு இருக்கும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே! நட்பு கூட எளிதில் கிடைத்து விடலாம். அதை பரிபாலனம் பண்ணுவதில் சிரமங்கள் மேற் கொண்டு தான் ஆக வேண்டும். உணர்வுகளும், அதில் பிறக்கும் உறவுகளும் உன்னதங்கள். அவற்றை சேகரம் பண்ணுவது நம்மிடம் தான் இருக்கின்றது நண்பர்களே!
இவ்விழாவின் அடித்தளமே அன்பாய், நட்பாய் அமைந்தது. நான் இதற்கு சாட்சியாய் வெளியிலிருந்து நோக்குகின்றேன். இரு வீட்டாரிடமும் சந்தோசத்தின் பெருமிதம் இருந்தது. நண்பர்களிடம் மகிழ்ச்சியின் துள்ளல்கள் இருந்தன. விழாவில் கலந்து கொண்ட உறவும் நட்பும், தூரத்தை, வார நடுவில் அமைந்த காலத்தை, தங்கள் வேலையின் பளுவை, எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, ‘அன்பு’ எனும் உன்னதத்தை மதித்தது உணர முடிந்தது. அன்பு ஆக்கம் தரும் தானே நண்பர்களே! அது எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். எனது அப்பா கற்றுக் கொடுத்த பாடம். அதை மேலும், அவ்வப்போது வண்ணதாசனின் வார்த்தைகள் எனக்கு பலத்தைத் தருகின்றன.
இதைக் கூறும்போது, இதற்குப் பக்க வாத்தியமாக சமீபத்தில் நடந்த காலச் சுவடு கருத்தரங்கில் கி.ரா. அவர்கள் கூறியது அமைகின்றது. கி.ரா. அவர்கள் டி.கே.சியுடன் பழகியவர்கள். எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும் டி.கே.சி யிடமிருந்துதான் துவங்குவார்.
‘‘தாய்ப்பூத் தாமரைப்பூ
தங்கத்துத் தோட்டத்து செண்பகப்பூ”
இது இருவரிப் பாடல் தான். இத்துடன்தான் அன்றையப் பேச்சைத் தொடங்கினார். இப்பாடலை, ஜஸ்டிஸ் மகராசன் பிள்ளை எனது அப்பா டி.டி.திருமலை, வித்வான் சண்முக சுந்தரம் ஆகியோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்த இரண்டு வரிப்பாடலுக்கு திரு.டி.கே.சி. அவர்கள் நிறைய விளக்கங்கள் சொல்லிச் சொல்லி அவ்வரிகளிடையே காணப்படும் அன்பை ஆனந்தமாய் ரசிப்பீர் என்று சொல்வார்கள். இப்பாடல் என் தந்தையார் வாழ்வையே புரட்டிப் போட்ட பாட்டு என்பார்கள்.
தன் தாய்தந்த பூவாய், தாமரைப் பூப்பாதங்களின் நிறமாய், மென்மையாய், மலர்ச்சியாய் தங்கத்துத் தோட்டத்தில் பூத்த உறவுப் பூவாய் மலர்ந்த தங்கையைக் கொஞ்சி, சீராட்டி மகிழ்கிறாள். அம்மகிழ்ச்சி எவ்வாறெல்லாம் விரிவடையும் என டி.கே.சி. அவர்கள் விளக்கி, தானும் ஆனந்தித்து, தன்னுடன் இருப்பவர்களிடம் அதைப் பரிமாறி மகிழ்வார் எனக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இப்படித்தான் தன் தங்கையின் அன்பை உறவை ஆனந்தித்து, என் மூத்த பெண் எடுத்த விழாவாக உணர்கின்றேன். அவள் உறவு தோட்டத்தில் மலர்ந்த பூவிற்கு தமக்கை செய்த அன்பின் ஆராதனை இவ்விழா என்பது கூறலும் வேண்டுமா?
உயிர்மைப் பதிப்பகம் உவந்தளித்த ‘‘சுஜாதா விருதைப்’’ பெற வந்த திரு.வண்ணதாசன் அவர்கள் தன் நிலையை தன் ஏற்புரையில் கூறியது என் நினைவில் வருகின்றது. அரிசியைப் புடைக்கும் போது, அரிசி மேலெழும். அப்போது அந்த உயரத்தின் நிலையைப் பற்றிக் கூறினார். ‘அந்த ஒரு கணம்’ எண்ணுவதற்கே ஆனந்தமாய் இருக்கிறதல்லவா அதுபோல், என் மகள்களும், மருமகனும், சுற்றமும் நட்பும் அனைவரும் என்னை ஆனந்தத்தின் அந்த கணத்திற்குத் தூக்கிப் போட்டு விட்டார்கள். இக்கணம் மறக்க முடியாத உயரத்தின் உன்னதம் ஆகும்.
நம் சடங்குகளும் விழாக்களும் திருவிழாக்களும் நாம் சந்தோஷமாக இருந்து, அதைப் பகிரக் கற்றுக் கொடுப்பதற்குத்தான் வகுக்கப்பட்டன. வெறும் சடங்குகளுக்காக மக்களும் உறவுகளும் இல்லை. இந்த எளிய உண்மை நமக்குப் புலப்பட்டால், (உறவுகளுக்குள் உரசல்கள் இல்லை. நட்புக்குள் பகையில்லை. என்றும் ஆனந்தம் ஆனந்தமே!
—————————————-
இந்த சுவையான அனுபவக்கட்டுரையின் நுட்பம் தேடினேன்.
=> இதோ! ‘…இதில் இரு வீட்டாரின் ஆளுமை ஒருவர் மேல் ஒருவர் செலுத்தப்படவில்லை…’
தங்கள் இளைய மகள் ஜனனியின் திருமண நிச்சயதார்த்தத்தில் நேரடியாகப் பங்கேற்ற உணர்வைத் தந்துள்ளீர்கள். நெகிழ்ச்சியான தருணங்கள், நினைவில் சுகந்தம் பரப்பும் பொற்கணங்கள்.
மணமக்கள் நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.
ஜனனியின் திருமண நிச்சயதார்த்த விழா அன்புப் பெருக்கான விழாவாக
அமைந்ததில் சந்தோஷம். கல்கியின் மகள் ஆனந்தியின் தலைப் பிரசவத்தின்
போது குழந்தை பிறந்தவுடன் ரசிகமணி டி கே சி பாடியது இந்தத்
“தாய்ப்பூ தாமரைப்பூ” பாடல் தான்.” சடங்குகள் நமக்குச் சந்தோஷத்தை
உண்டுபண்ணுவதாய் இருக்கவேண்டும். சந்தோஷத்துக்கு இடைஞ்சலாக
இருக்கும் சடங்குகளைப் புறந்தள்ள வேண்டும்” என்பது ரசிகமணியின்
வாக்கு.” நம் ஆனந்தத்துக்கு இடையுறாக இருப்பவைகளை நாம் ஏன்
விலை கொடுத்து வாங்கவேண்டும்?” என்பதே அவர்களின் கேள்வி.
அந்த வகையில் ஒரு குதூகல விழாவாக அன்பு உள்ளங்களின்
துணையோடு நடந்த இந்த நிச்சயதார்த்த விழா சிறப்புப் பெறுகிறது.
எங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள்.
இரா, தீத்தாரப்பன், இராஜபாளையம்.
ஆன்டி, நான் ஆரபியுடன் children’s gardenல் 1ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தேன். அதன் பின் இலங்கைக்கு திரும்ப வேண்டிய நிலை. என்க்கு இன்றும் நீங்களும் uncleம் எங்கள் விளையாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கியது தெளிவாக ஞாபகம் உள்ளது. சில மாதங்களுக்கு முன் ஆரபியை orkutல் சந்திதுப் பேசினேன். தற்செயலாகத் தான் இந்த வலைப் பூவை நான் பார்த்தேன். ஒரு தங்கையின் திருமண நிச்சயத்தை நேரில் பார்த்த மகிழ்வைத் தந்தது. அதே நேரம் ஆரபியையும் அவள் கணவரையும் கண்டு உங்கள் தாய் உள்ளம் அடையும் பெருமிதத்தையும் பார்க்க முடிகிறது. எங்கள் வல்வை முத்து மாரி அம்மன் உங்கள் குடும்பத்தை என்றும் ஆசீர்வதிப்பாளாக.