தேடலின் எல்லைகள்

 

குமரி எஸ். நீலகண்டன்

வலை வீசி
தேடிக் கொண்டே இருக்கிறோம்

தேடுவதைத் தவிர்த்து
வேறெதுவெல்லாமோ
அகப்படுகின்றன

அகப்படுபவையின் அசுரக்கரங்களில்
அகப்படும் நாம்
அங்கிருந்து புதிதாய்
இன்னொன்றைத்
தேடிக் கொண்டே இருக்கிறோம்

புதிய சுரங்கங்களின்
புதையல்களில்
முகம் புதைத்து
புதை முகங்களின்
புதிய நகல்களைத்
தேடிக் கொண்டிருக்கிறோம்

தேடலின் பாதையில்
தெரியாத இடங்களை அடைகிறோம்

வழியில் திடீரென பாயும்
வெள்ளத்தின் வீச்சில்
எட்ட முடியாத
எல்லைகளில் சிக்கிய பின்

அதிலிருந்து மீள
தேடலின் ஆரம்பத்தையும்
தேடிக் கொண்டிருக்கிறோம்..

இறுதியில்
எதைத் தேடினோம்
எதற்காகத் தேடினோமென
எல்லாவற்றையும் மறந்து

தேடித் தேடி தேடித்
தன்னையே தேடிக்
கொண்டிருக்கிறோம்.

 

படத்திற்கு நன்றி

2 thoughts on “தேடலின் எல்லைகள்

  1. ‘திக்குத்தெரியாதக் காட்டில் தேடி…’

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க