மனதில் நிறைந்தவர் எம். ஜி. ராமசந்திரன்…
–திருக்குவளை மீ.லதா.
அள்ளி தந்த கைகள் எங்கே ,
அரவணைத்த நெஞ்சம் எங்கே,
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தமிழரின் நல்வாழ்விற்காய் பிறந்தாரோ நல் மாணிக்கமாக எம் ஜி ஆர். அவர் சிம்ம குரல் எடுத்து கர்ஜனை செய்ய வேண்டாம். ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் கொடுத்தால் போதும் என் இரத்தத்தின் இரத்தங்களே… என் இனிய உடன் பிறப்புகளே என்று சொன்னாலே போதும்… ஒடி வரும் மக்கள் வெள்ளத்தில் அவர் திணறிய நாட்கள் எத்தனையோ! பொன்மன செம்மலாய் பூமிதனில் இன்றும் ஒளிரும் தீபங்களாய் இருப்பவரை பற்றி எழுதுகிறேன். அவர் மீது அன்பு கொண்ட நான்.
இலங்கையில் உருவாகி தமிழகத்தில் நிலைக்கொண்ட புயலாக வந்தார். அன்பு என்ற மந்திரத்தில் அடங்கிப் போனோம் நாம்.
ஏழையின் பங்காளனாக அவர் இருந்தார். ஏட்டுக் கல்வியை ஏழைக்கும் அளித்த காமராசரின் வாரிசாக வந்து கொடுத்தார் இலவசமாய்.
தாய் சத்தியபாமாவின் கண்டிப்பான வளர்ப்பும், நேசமான உறவும், பாசமான பரிவும் உலகை ஆள வைத்தவையோ??
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.
1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற வழிவகுத்தது. 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்”
இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.
இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.
எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.
மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.
“உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.
திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல புரிந்தவர்.
திருக்குவளை மீ.லதா
நாகை மாவட்டம்