-செண்பக ஜெகதீசன்

எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (திருக்குறள்:896 – பெரியாரைப் பிழையாமை)

புதுக் கவிதையில்…

தீப்புண் பட்டாலும்
தப்பித்துக்கொள்ளலாம்
பிழைத்து…
பிழைசெய்தால் பெரியவர்களிடம்,
பிழைப்பது அரிது…!

குறும்பாவில்…

தீயில் கருகிடினும் பிழைத்துக்கொள்ளலாம்,
தப்பிக்க வழியேயில்லை
தவறாய் நடந்தால் பெரியோர்களிடம்…!

மரபுக் கவிதையில்…

பற்றி யெரியும் தீபட்டுப்
   புண்ணா யான உடலுடனே
குற்றுயி ராகக் கிடந்தாலும்
   காண்பாய் சிலரும் பிழைப்பதையே,
குற்ற மில்லாப் பெரியோர்மனம்
   குமுறிடப் பிழையது செய்திட்டால்,
பெற்ற வாழ்வும் பயனில்லை
   பிழைப்ப தென்பது முயற்கொம்பே…!

லிமரைக்கூ…

பிழைத்திடலாம் பட்டாலும் உடலெல்லாம் தீ,
பிழைப்ப தென்பதே இல்லை
பிழைத்திட்டால் உண்மைப் பெரியோரிடம் நீ…!

கிராமிய பாணியில்…

சுட்டுப்புடும் சுட்டுப்புடும்
பட்டதீயும் சுட்டுப்புடும்,
சுட்டாலும் பௌச்சிக்கலாம்
சுட்டபுண்ணும் ஆறிப்போவும்
பட்டவடுவு மாறிப்போவும்…

ஆனா,
போவாதய்யா போவாது
பாவமது போவாது,
பெருசுகளுக்குக் கெடுதல்செஞ்சா
பெரும்பாவம் போவாது
பொளப்பெல்லாம் மண்ணாப்போவும்,
நிக்காதய்யா நிக்காது
ஒன்
உசிரதுவும் நிக்காது…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *