விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே – கவிஞர் ஆத்மநாதன்
காவிரி மைந்தன்
காற்றினிலே மிதக்கும் கானங்கள் ஆயிரம்.. அந்தக் காற்றே காதலிக்கும் கானங்களும் அதில் உண்டு! இந்தப் பாடல் அந்த ரகம்! இன்ப லயம்! இயற்கையின் வடிவில் இன்பத்தை எடுத்துச்சொல்லும் அற்புதக் கவிதைவளம்.. ஆத்மநாதன் அவர்களுக்கு!
கற்பனைக் கடிவாளமில்லாமல் வானிலே பறக்க.. சொற்களும் அதற்கேற்ப வந்து கவிதை படிக்க.. காதலுக்கு வேறேது வேண்டும்! அன்பின்கரம் இணையும் நேரம் ஆகிவிடும் அந்தப்புரம் சொந்தமதே சொர்க்கமென்று சுவைதேடும் காதலர்க்கு.. அவர்தம் மனம் சொல்ல விரும்புவதை கவிஞர் தன் பாடலில் சொல்லிவிடுவதுதானே வழக்கம்! சிலநேரங்களில் சராசரி பாடலாய் அமைந்துவிடாமல் சரித்திரப் பாடலாய் அமைந்துவிடும்! ஆம்.. இன்னிசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் குரலில் இந்தப் பாடல் பெற்றுவிடும் உன்னதத்தால் – உலகக் காதலர்களுக்கான ஒட்டுமொத்த காணிக்கையாக்கலாம் இப்பாடலை!
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பில் புதையல் திரைப்படத்திற்காக இசைச் சித்தருடன் இணைசேர்கிறார் இன்னிசைக்குயில் பி.சுசீலா!
58 ஆண்டுகளுக்குப் பின்னும் இப்பாடல் ஒலிக்கப்படும் போதெல்லாம் காதுகள் கேட்கப்பிரியப்படும் பாடலாய் பவனி வருவதன் ரகசியம் என்ன? இசையா? கவிதையா? குரலா? வாசகர்களே இப்பாடலை இன்னொரு முறை கேட்டுச் சொல்லுங்கள்!!
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ
விளையாடி.. இசை பாடி….
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
விளையாடி.. இசை பாடி..
சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
விளையாடி…… இசைபாடி……
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
திரைப்படம்: புதையல் (1957)
பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : ஆத்மநாதன்
பாடல் : விண்ணோடும் முகிலோடும்