திருவாசகக் கருத்துப் புலப்பாட்டில் உணவுப் பொருட்கள்

0

முனைவர் ஜ.பிரேமலதா,

தமிழ் இணைப் பேராசிரியர்,

அரசுகலைக் கல்லூரி,

சேலம்-7

திருவாசகம் சைவர்களின் வேதம் என்று போற்றப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அனுபவப் பழமொழி. அதன் சிறப்பிற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மொழியமைப்பும் கருத்துப் புலப்பாட்டுத் திறனும் முக்கியப் பங்காற்றுகின்றன. உணவுப் பொருட்சொற்களைக் கருத்துப் புலப்பாட்டுத் திறனுக்குப் பயன்படுத்தி மாணிக்கவாசகர் நம் மனதை பக்குவப்படுத்தும் முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார்.

images (1)

கருத்துப் புலப்பாடு

கருத்துப் புலப்பாடு என்பது, ‘ஒரு செய்தியை மற்றவர் அறிய நன்றாகத் தெரிவித்தல்‘ என்பதாகும். இரெ.குமரன் அவர்கள்,காலம்,.இடம், பொருள், கேட்குநர் திறம் ஆகிய அனைத்தையும் அறிந்து மொழியினை ஆள வேண்டும் என்பதே கருத்துப்புலப்பாட்டிற்கு அடிப்படை என்கிறார்….என்பது ஒரு கருத்தைக் கூறுபவர், தான் சொல்ல வந்த கருத்தைக் கேட்பவர் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற முறையில்    அவரது சூழ்நிலைக்கேற்ப அவர் அறிந்துள்ள பொருட்களின் வழி எளிமையாகக் கூறும்  முறையாகும். இலக்கியத்தின் பாடுபொருளை விளக்குவதற்கு ஏற்ற வகையில் உள்ள எந்த ஒரு செய்தியையும்  கூறுபவர் பயன்படுத்தலாம்.அந்தச் செய்திக் கூறுபவரின் ஆற்றலால் பயன் நல்கிக் கருத்தாகிறது.அவரவர் மனநிலைக்கேற்பக் கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.
உணவுப்பொருட்கள்

உணவுப் பொருட்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உணவு உடல் வளர்ச்சிக்கும்,நம் இயக்கத்திற்கும் காரணமானது.

உணவில்லையேல் உயிர்களில்லை. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.மானம் அழிந்து மதி கெட்டு மனிதன் உயரிய குணங்கள் அத்தனையையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.அந்நிலையில் உணவு கொடுப்போர் உயிர் கொடுத்தோராகக் (மணிமேகலை.11.95)கருதப்படுகிறார்.உயிர் மற்றும் உடல் வளர்ச்சிக்குக் காரணமான உணவுப்பொருட்களை உயர் நிலையாம் சன்மார்க்க நெறி விளக்கத்திற்குப் பயன்படுத்துகிறார்.

தேன் , பால்,கரும்பு  

தாய் தன் குழந்தையைத் தேனே அமுதே கரும்பே எனப் பலப்படப் பாராட்டிக் கொஞ்சுகிறாள்.தேன் பால் கரும்பு இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடையவை.எனவே,தாய் ஒன்றன் சுவையை மட்டும் குழந்தையின்பத்தை ஒப்பிடப் பயன்படுத்தாமல் பலசுவையுடன் குழந்தையின்பத்தை ஒப்பிடுகிறாள்.இவ்வாறு ஒப்பிடுவது குழந்தையின்பம் ஒப்பிட முடியாத அளவு இன்பம் பயக்கக்கூடியது என்பதைக் காட்டுகிறது. தேனை விடப் பால் இனிமையானது. பாலைவிடக் கரும்பு இனிமையானது. எனவேதான், தாய் ஒன்றைவிட உயர்ந்த ஒன்றைக் குழந்தைக்கு உவமை காட்டி மகிழ்கிறாள்.

மாணிக்கவாசகரும் இதே நிலையிலிருந்தே, சிவன் அருளை,அருமையைச் சிவனை நினைக்கும் போது ஏற்படும் இன்பத்தை இவ்வகை உயர்ந்த பொருட்களோடு ஒப்பிட்டு உவக்கிறார். முதலில் இறைவனைத் தேனமுது (5.58)என்கிறார். பின்னர்த் தேனோடு பால் கலந்து பருகுவது இனிமையானது, மேலும், சுவையுடையது என்பதால் இறைவனைத் தேனைப்பாலை (5.58), தேனோடுபால்(5.36) என்கிறார். தேனோடு பால் கலந்த இக்கலவை உடலுக்கு ஆக்கம் தருவதுபோல், சிவன் அருள் உயிருக்கு ஆக்கம்  தரக்கூடியது.இது மாணிக்கவாசகருக்கு  இன்னமுதாகத்  தோன்றுவதால் தேனைப்பாலை நிறையின்அமுதை அமுதின்சுவையை(27.4) என்றெல்லாம் இதைப் போற்றுவதோடு இறைவனின் திருவடியை இன்னமுது(8.9), ‘ஆராமுதின் அருள்தாளினைப்பாடி‘(16.1)என்று  உவக்கிறார்.

 தனித்தனிச் சுவைகளோடு ஒப்பிடுவதைவிட ஒரு பொருளின் பல சுவைகளை எடுத்துக்காட்டி  ஒப்பிடுவது, சிவனின் அருமையை உணர்த்தும் என்பதால், இறைவனைக் கரும்போடு ஒப்பிடும்பொழுது கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.‘கரும்பு தரு சுவையே’ (38-1) ‘கரும்பின் தெளிவே’(5-55),‘தீக்கரும்பின் கட்டியே’(8-10) எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார். இரும்பு தரு மனத்தேனை ஈர்த்தென் என்புருக்கிக்கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை’(38-1) என்றும் கரும்பின் தெளிவே(9-90),கன்னலின் தெளிவே’(6-58),தெளிவந்த தேறல்(8-118),தீக்கரும்பின் கட்டியுமாய்’(8-18)எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.

இறையருள் இச்சுவைகளையெல்லாம் விட உயர்ந்தது,இவை ஒவ்வொன்றும் தனித்தனி சுவையுடையவை. இறையருளோ இவ்வெல்லாச் சுவைகளையும் விட மிக உயர்ந்தது. இதை உணர்த்த,‘தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்தினிய கோன்’(8-14) என அனைத்துப் பொருட்களையும் இணைத்து இறைவனின் சிறப்பை மேலும் மேலும் ஒப்பிட்டு உவக்கிறார்.

இதன்மூலம் இறையருள் அனைத்து சுவையுடைய பொருட்களையும் விட உயர்ந்தது மதிப்பிடமுடியாத இனிமை தருவது. என உணர்த்துகிறார். தேன்,பால்,கரும்பு என வரிசைப்படுத்தியிருக்கும் முறையைப் பண்டிதமணி  அவர்கள், “இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்….தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்துக் இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (1985.285-286)என்று வியக்கிறார்.மாணிக்கவாசகர் பொருட்களின் தன்மையை நுட்பமாக உணர்ந்த காரணத்தினாலே தான் தேன்,பால்,கரும்பின் வரிசையை முறைப்பட அமைத்து இறையருளோடு பொருத்தமுற ஒப்பிடுகிறார்.

பழங்களோடு ஒப்பிடல்

உடல்,உள நல ஆரோக்கியத்திற்கு உகந்தவை கனி வகைகளே. தூய இனிப்புச்சுவை கனி வகைககளில்தான் உள்ளது.உடலுக்கு உயிர்சக்தியைக் கொடுக்கக்கூடியது ஆதலால் தான் நோயுற்றவர்களுக்குக் கனி வகைகளைக் கொடுக்கின்றனர். உலகப் பற்றுகள் என்னும் நோய் பீடித்தவர்கள் உயிர் நலம் பெற, முக்தி நலம் பெற இறையருள்தான் கனிச்சாறாகும். ஆனால், இங்குச் சிவனோ கனிச்சாறாகவே இருக்கிறான் என்கிறார். இறைவனை,

பழச்சுவை(20-7,9-15) 
  செங்கனி(9-14), 
  மதுரக்கனி(32-10)
  கன்னற்கனி(3-17)
என்றெல்லாம் பலப்படப் போற்றுகிறார்.

பலா-வாழை

பெண்ணாசை,மண்ணாசை,பொன்னாசை இம்மூன்று ஆசைகளும் தான் உலகப்பற்றுக்குக் காரணம். இப்பற்றுக்களில் ஈடுபாடுகொண்டவர்களின் மனம் கல்லைப்போல இறுகி விடும். அத்தகையவர்களின் மனதை கனிவிக்கும் அருட்திறம் உடையவன் இறைவன் ஒருவனே. உலகப்பற்றுக்களில் ‘பலாப்பலத்து ஈ’ போலப் பற்றிக் கிடந்த தன்னை, தன் மனதை இறைவன் தன் கருணைத்திறத்தால் ஆட் கொண்டு உண்மைப்பொருளை உணரவைத்துவிட்டான். தில்லைக்கூத்தனை என்னுள் ஏற்றுக்கொண்ட பிறகு என்கூடும்,உயிரும் கனிந்து மகிழ்வால் கும்மாளமிடத் தொடங்கிவிட்டன என்கிறார். உலகப்பற்றுக்களில் மூழ்கி பலாப்பலத்து ஈ போல இறுகிக்கிடந்த தன்னை இறைவன் தன் அருட்திறத்தால் கனிவித்து ஆட்கொண்ட தன்மையை வியக்கும் நிலையில் இறைவனையே கனியாக்கி ‘கல்நார்உரித்த கனியே’(14-97)என்கிறார்.

 மனம் ஆணவம் நீங்கி கனிந்த தன்மை பெற்றதை  வாழைப்பழத்தோடு ஒப்பிடுகிறார். இறைவன் என் மனதை வாழைப்பழம் போல கனியவைத்துவிட்டான் என்கிறார். வாழைப்பழத்தின் மனம் கனிவித்து’(96-34)என்ற தொடரில் இதை உணர்த்துகிறார். தானே கனியாக இருக்கும் இறைவன், தன் அன்பர்களின் மனதைக் கனிவிக்கும் திறமுடையவனாகவும் விளங்குகிறான்.

நெல்லிக்கனி 

நெல்லிக்கனி மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடியது .அதுபோல இறைவன் எளிதாக மாணிக்கவாசகருக்குக் கிடைத்துவிட்டான். இறைவன் மிக எளியவன். அன்பருக்கு அன்பனாய்,தொண்டருக்குத் தொண்டராய்த் தானே வந்து அருள் செய்பவன். இக்கருணை வள்ளல்,மாணிக்கவாசகருக்காகப் பிட்டு சுமந்தும், குதிரைச்சேவககனாய் வந்தும் அருள் செய்தவர். சமயக் குரவர்களில் மாணிக்கவாசகர் ஒருவரே இவ்வாறு இறைவனைத் தொண்டராய் அடையும் பேறு பெற்றவர்.தனக்கு எளியனாய் வந்து அருட்செய்ததை எளிய பழமொழி மூலம் விளக்குகிறார்.
தடக்கையின் நெல்லிக்கனியாயினான் (3-162)
எளியன் என்று தான் கூறிய சொல்,தன் வாழ்க்கையில்  நடந்த நிகழ்வுகளின் வழி ஊரறிந்த இரகசியமாகவும் உள்ளது என்பதை இவ்வடிகளின் மூலம் புலப்படுத்துகிறார். மக்கள் அன்றாடம் பேச்சு வழக்கில் பயனபடுத்தும் தொடர்களை இலக்கியத்தில் கையாள்வது ஒருவகை உத்தியாகும். பலாப்பலத்து ஈ, உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற பழமொழிகளை இடம் நோக்கி கருத்துப் புலப்பாட்டின் எளிமைக்காகத் திறம்படக் கையாண்டுள்ளார்.

புளியம்பழம்

   தமிழர்கள் இனிப்புச்சுவைக்கு அடுத்து புளிப்புச் சுவையையே பெரிதும் விரும்புகின்றனர். புளிப்புச் சுவையுடைய இயற்கைப் பொருட்களில் புளியங்காய் முதலிடம் பெறும். இது முற்றும்போது இனிப்புச்சுவையுடைய புளியம்பழம் ஆகிறது. காயாக இருக்கும் போது தோலும் உள்சதையும் இணைந்து பிரிக்க முடியாத நிலையில் இருக்கும். ஆனால், பழமாகும்போது தோல் முற்றி விடும்.சதைப்பகுதிப் பழமாகி தோலிலிருந்து விடுபட்டுக் காணப்படும். எளிதாக ஓட்டுப் பகுதியை பிரித்து விடலாம்.

மாணிக்கவாசகர் இவ்விரு நிலைகளையும் தன் வாழ்க்கை அனுபவத்தோடு ஒப்பிடுகிறார். திருப்பெருந்துறையில் இறைவனாகிய குருநாதரைச் சந்திக்கின்ற வரையில் அவர் உலக இன்பத்தில் மூழ்கியிருந்தார். பல பற்றுக்களால் பற்றப்பட்டிருந்தார். அவற்றிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வுகூட அவரிடம் இல்லை.  ஆனால், குதிரை வாங்கச் சென்ற வழியில் இறைவன் அவரை ஆட்கொண்டார். மாணிக்க வாசகர் குதிரை வாங்கவே பெருந்துறை சென்றார். இறைவனைத் தரிசிக்கும் நோக்கத்துடன் செல்லவில்லை.ஆனால் இறைவனாகிய குருநாதரைக் கண்டவுடன் மிக இயல்பாக வசப்பட்டு விட்டார்.இந்நிலையில் அவரைப் பற்றியிருந்த அவர் பற்றியிருந்த பற்றுக்களெல்லாம் தீயிலிட்ட பங்சினைப் போல மறைந்து போய்விட்டன.பற்றற்ற நிலையில் பற்றுக்களாகிய புளியம் ஓட்டினை விட்டு, இறைமை உணர்வுடன் இனிப்புச் சுவையுடைய பயன்பாட்டிற்குரிய புளியம்பழம் நிலைக்கு அவரது உயிர் கனிந்து விட்டது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், தானிருந்த நிலையைப் புளியம் பழமொத்திருந்தேன் என்கிறார்.தன் பற்றுக்களுக்கும், இவ்வுலக வாழ்விற்கும் காரணமான உடலைப் புளியந்தோடு என்கிறார்.

 ”அளி புண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடைய
யாக்கை புளியம் பழமொத்திருந்தேன்”(25-5) இறைவனின் திருவடியை அடையும் வேட்கையினால், இப்பரு உடலைவிட்டு நீங்கி இறைவனடியை சேர விரும்பும் உயிரின் ஆசையை, இப்பாடல் வரிகளில் புலப்படுத்துகிறார்.

திருமந்திரப்பாலொன்றும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
“அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கி”(திருமந்திரப் பாடல்.2920)என்ற பாடல் பற்றறுத்து பக்குவப்பட்ட உயிர்கள் ஓட்டிலிருந்து நீக்கிய புளியம்பழம் போன்றவை. கனிந்த நிலையிலுள்ள அவ்வுயிர்களையே பராசக்தி பற்றுவாள் என்கிறது.

 இதே நிலையினைக் குலாப்பத்தில்,இறைவனாகிய குருநாதரைச் சந்திக்குமுன் அமைச்சராக இருந்தபோது பட்டாடையும் பொற்கலமுமே உறவு என நினைத்து வாழ்ந்திருந்தேன. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின் ஓடும் கவுந்தியுமே உறவாகிவிட்டது. பட்டாடையும் பொற்கலமும்  அமைச்சர் பதவியும் தராத   மகிழ்வை ஓடும் கவந்தியும் தந்து விட்டன.ஆனந்தக் கூத்தனைச் சிவனை  என்னுள் ஏற்றுக் கொண்டபிறகு என் கூடாகிய உடலும், உயிரும் மகிழ்வால் கும்மாளமிடத்தொடங்கிவிட்டன.

குலாப்பத்திலும்,

“தேடும்பொருளும் சிவன்கழலே எனத்தெளிந்து
 நாடும் உயிரும் குமண்டையிடக் குனிந்து அடியேன்
 ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.(4-1)
என்று தன் உயிரின் நிலையை உணர்த்துகிறார்.

இறை ஒன்றே நிலையானது. மற்ற அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர்த்த விரும்பிய மாணிக்கவாசகர், மேற்கண்டவாறு பழங்களின் தன்மையோடு வாழ்க்கையை ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.பூவாகி பின் பழமாகி அதுவும் மாறி அழுகி மண்ணில் வீழும் பழங்களின் வாழ்க்கையோடு மனித வாழ்க்கையை ஒப்பிடுகிறார்.   ”அரும்பாய்க் கவிமலராய்க் காயாகி வம்பு பழுத்து உடலம் மாண்டு” (40-6)என்று அரும்பாகி, மலராகி, காயாகி, பழுத்து, பின் பழம் வீழ்ந்து அழிவது போல நம் உடலும் அழிந்துவிடும் என்கிறார்.   ‘பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்‘ எனத் தொடங்கும் குண்டலகேசிப் பாடலும் இதே உண்மையை உணர்த்துகிறது.

தயிர்

மாணிக்கவாசகர் உள்ளம்,முதலில்  இறைக் கருணையைப் பற்றாமல் புலன்களால் அலைப்புண்டு அவரையும் அலைக்கழிக்கிறது. தன் உள்ளம் தன்னைப் படுத்தும் பாட்டை  மத்திடு தயிராகி (5-10) என்ற உவமை மூலம் விளக்குகிறார். “மத்துறு  தண் தயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி” (6-30) என்றும் ”மத்திட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன்” என்றும்  கூறுகிறார்.ஐம்புலன்களைப் பலமுகம் கொண்ட மத்தாகவும், உள்ளத்தைத் தயிராகவும் உவமிக்கிறார். திருநாவுக்கரசரும் “மத்துறு தயிர் போல் மறுகும் உன் சிந்தை” (4-96-3) என்று புலன்களின் வழி சென்ற  தன் உள்ளம் படும் பாட்டை எடுத்துரைக்கிறார்.

நெய்

இறைவனை ஆவின் பால் என்றழைக்கிறார். ஆன்நெய்(5-38).பசுவின் நெய் தூயது.பக்கவிளைவுகளற்றது.ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தக்கூடியது. நெய் பாலில் மறைந்திருகக்கூடியது. அதுபோல இறைவனும் உயிர்களின் ஆன்மாதோறும் மறைந்துள்ளான். பாலில் மறைந்துள்ள நெய் பின் வெளிப்படுவது போல வாய்ப்பு நேரும்பொழுது, இறைவனும் வெளிப்படுவான். சிவவாக்கியர் இந்நிலையை, ‘ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே‘ என்கிறார். மாணிக்கவாசகர் இந்நிலையை, ‘பாலில் நெய் போலப் பேசாதிருந்தாய்‘(21-5) என்கிறார்.இதே கருத்தை,”சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்ப பாயமு தாகிநின் றண்ணிக் கின்றானே”(திருமந்திரப் பாடல்.2365)”காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்      பாலினுள் நாற்றமும் போலுளன்”(பாடல் எண்.2639)முதலான இத்திருமந்திரப்பாடல்களும் இறைவன் கருப்பங்கட்டியுமாய்,பாலில் மறைந்த நெருப்பாய்,பழரசமாய்,பூவினுள் விரவிய மணமாய் விளங்குகிறான் என்கின்றன.
பாலில் மறைந்துள்ள  நெய் பின் வெளிப்படுவது போல, வாய்ப்பு நேரும்பொழுது இறைவனும் வெளிப்படுவான். சிவவாக்கியர் அந்நிலையை ‘ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே‘ என்கிறார். மாணிக்கவாசகர் இந்நிலையைப் பாலில் நெய் போலப் பேசாதிருந்தாய்(21-5) என்கிறார்

எள்ளும் எண்ணெயும்

‘எள் என்றால் எண்ணெயாக இருக்கவேண்டும்‘ என்பது தமிழில்  ஒரு பழமொழி. இப்பழமொழி வேகத்தையும்,செயல்திறனையும் குறிக்கிறது. சிவனை நினைத்தளவிலேயே அவனுடைய  அருள் அவனை நினைத்தவர்களுக்குக் கிடைத்துவிடும். சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனை, ‘எள்ளும் எண்ணெய் போல் நின்ற எந்தையெ (5-46) என்கிறார். அன்பர்கள் இறைவனை நினைத்தளவிலேயே வேண்டியதைக் கொடுக்கும் அருட்பேராற்றல் கொண்ட வள்ளல் என்பதை இதன் மூலம் புலப்படுத்துகிறார்.

சிவனே ஓர்அமுதம் 

உயிர்களுக்கெல்லாம் அமுது என விளங்கக் கூடியவன் சிவன் ஒருவனே. உயிர்களைக் காக்க வேண்டி ஆலாலவிடத்தையே அருந்தியவன். சிற்றுயிர்களுக்காக இவ்வுலகின் முதல்வனான சிவன் தாயாகிக் கருணையினால் தன் உயிரையும் பொருட்படுத்தாது விடம் அருந்திய திறத்தை, சிற்றுயிர்க்கிரங்கிக் காய்ச்சின ஆலமுண்டாய்(6-50) என்கிறார். சிற்றுயிர்களுக்காக மட்டுமின்றி,மிருமாலையும்,பிரமனையும்,தேவர்களையும் காக்கும் பொருட்டு ஆலமுண்டதை,“ஆலாலம் உண்டலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட மேலாயத் தேவரெல்லாம் வீடுவர் காண் சாழலோ “ என்கிறார்.

பிறர் நலனுக்காக  ஆலாலத்தை அமுதாக உண்ட சிவனை ,

வானோர்க்கு அமுதம்(5-69) 
ஆலாலம் அமுது(13-12) 
 ஆலாலம் ஆரமுது(12-19)
 நஞ்சமுதாக்குங்கண்டன்(6-82) போன்ற தொடர்களால் குறிப்பிடுகிறார்.

முடிவுரை

சிவனின் பெருமை, அருட்தன்மை,தூய தன்மை,எளிமை, இருப்புநிலை முதலியவற்றோடு தன்நிலையையும் விளக்குவதற்கு எளிய மக்களும் புரிந்து கொள்வததற்கேற்ற வகையில் எளிய வகை உணவுப் பொருட்களின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்.உணர்ந்து உணர்ந்து, நினைந்து நினைந்து படித்து இன்புறத் தக்கவகையில் திருவாசகம் இருப்பதற்குக் காரணம் இதுபோன்ற எளிய உத்திகளே காரணம்.. இக்காரணம் பற்றியே திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. திருவாசகம் உணவுப் பொருட்களை வைத்து தன் கருத்தை எளிய மக்களும் புரிந்து கொள்ள உதவுவது அதன் சிறப்பு. அத்திருவாசகத்தையே வள்ளலார், நற்கருப்பஞ்சாற்றில் ,தேன்கலந்து ,பால்கலந்து,செழுங்கனி தீஞ்சுவை கலந்து செய்யப்பட்ட இனிப்புப் பதார்த்தமாகச்  சித்திரிக்கிறார்.ஆனால், உயிரில் கரைந்துவிடும் இத்தன்மையுடைய இந்த இனிப்பு உவட்டாமல் இனிக்கக்கூடியது என்று மேலும் இதனைச் சிறப்பிக்கிறார்.

துணை நின்ற நூல்கள்

1.குமரன்,இரெ., சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள்,அனன்யா பதிப்பகம்,தஞ்சாவூர்-மு.ப.-2001
2.வரதராஜன்.ஜி,(உ.ஆ.,),திருமந்திரம் மணிவாசகர் பதிப்பகம்,சென்னை
3.வெள்ளைவாரணம்.ம.திருவாசகம், காசித்திருமடம்,12ம. பதிப்பு -2003.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.