அண்ணாகண்ணன்
ராபின் ராஜ் எடுத்த படம், பலரின் மன வயலில் கவிதைப் பயிர்களை வளர்த்துள்ளது. நாற்று நடும் உழவரின் கண்கள் என்ன சொல்கின்றன எனப் பலரும் எழுத்தால் படம் பிடித்தது, நல்ல முயற்சி. இது, மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்றதாலோ என்னவோ, சிலர் பயிர் சுமந்த நிலத்தையும் பெண்ணையும் ஒப்பிட்டு எழுதியிருந்தனர். நிலமென்னும் நல்லாள் நகும் என்ற வள்ளுவரின் வழியில் இவர்கள் நடை பயில்கின்றனர்.

நிலம் – பெண் என்ற வகைப் படைப்புகள் ஒரு புறம் இருக்க, விளைநிலங்கள் விலை நிலங்களாய் ஆகிவரும் நிலையும் பல கவிதைகளில் கவலையாகவும் ஆதங்கமாகவும் கோபமாகவும் வேண்டுகோளாகவும் பதிவாகியுள்ளன. அதே போல், நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழைய வசனத்தையும் பலரும் எதிரொலித்துள்ளனர்.
இது, ஒரு வகையில் ஒரே வகையான எண்ணங்கள், பலரிடமிருந்தும் எழுவதற்கு ஒரு சான்றாகும். மேலும், படைப்புகளில் முந்தைய பின்னூட்டங்களின் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இது, படக் கவிதைப் போட்டியின் சவால்களில் ஒன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதாகவும் வலிமை மிகுந்ததாகவும் கூர்மை உடையதாகவும் அமையுமாறு எழுதுவது, ஒவ்வொருவரின் தனித் தன்மையை வெளிப்படுத்த உதவும்.
இந்த வாரப் படைப்புகளை ஆராய்ந்ததில், ஜெயபாரதனின் முதல் பின்னூட்டம், நன்கு அமைந்துள்ளது.
வானம் பார்த்த பூமி
வானம் பார்த்த பூமி, எங்கள்
மானம் காக்க வேண்டும் !
வயலில் வேலைக்(கு) ஆளில்லை, இந்த
வருடம் போதிய மழை யில்லை !
நீரின்றி நடுவதா மாரி யாத்தா ?
ஊரில் உதவிட யாரு மில்லை
பச்சை நாற்றெல் லாம் காய்ந்திடுமோ ?
அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை !
பிச்சை எடுக்கவும் இச்சை யில்லை !
நஞ்செய்ப் பயிரெல்லாம் வஞ்சனை யாளர்
தஞ்சமாய்ப் போச்சு ! பஞ்சமாய் ஆச்சு !
உழுதுண்டு வாழும் நாங்கள் தினம்தினம்
அழுதுண்டு சாவோம் ! அரசு உதவுமா ?
சி. ஜெயபாரதன்.
வயலில் வேலைக்கு ஆளில்லை என்ற நிலையிலும், தளராது உழைக்கும் ஒருவரின் மன ஓட்டங்களை இந்தப் படைப்பு, சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. மாரியாத்தா என்ற விளி, உயிரோட்டத்தைக் கூட்டுகிறது. அதே நேரம், இரு பொருளையும் தருகிறது.
ஆயினும், கடைசி நான்கு வரிகளும் எனக்கு உடன்பாடானது இல்லை. நிலத்தை விற்பது என்பது பல இடங்களில் நில உரிமையாளரின் உடன்பாட்டோடும் அவரின் பேராசையின் காரணமாகவும் நிகழ்கின்றது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கருத்தை நாம் சரியாக உள்வாங்கினால், அடுத்தவரின் மீது முழுப் பழியையும் சுமத்த மாட்டோம். அதே போன்று அரசு உதவுமா? என்ற கேள்வியும் கூட, இந்தச் சிக்கலுக்குச் சரியான தீர்வு இல்லை. நம்பிக்கையை இந்தக் கவிதை இன்னும் சிறப்பாக முன்னிறுத்தி இருக்கலாம். ஆயினும், அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை ! என்ற வரி, இந்தக் கவிதைக்கு வலுச் சேர்க்கிறது. எனவே, இதன் பொருட்டு, கவிஞர் சி.ஜெயபாரதன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறோம்.
கல் விதைத்து
மனை பிரித்து
கட்டிடம் எழுப்பி
கோடிகள் பார்க்கும் காலத்தில்
நெல் விதைத்து
நீர் வார்த்து
நாற்று வளர்த்து
நலிந்து போகிறான்
என்னுடைய விவசாயி!
எனச் சிறப்பாக ஒப்பிட்ட அமீரை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அடையாளம் காண்கிறோம் (அமீர், கட்டடம் என்பதே சரி).
இவர்கள் இருவருக்கும் சிறப்புப் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply