நான் படித்த புத்தகம்- “ யாதுமாகி நின்றாய் “
உமாஸ்ரீ
சமீபத்தில் எழுத்தாளர் பவள சங்கரி எழுதிய “யாதுமாகி நின்றாய் ” என்ற புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் படித்து சுவைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
”யாதுமாகி நின்றாய்” பதினெட்டு அழகான சிறுகதைகள் அடங்கிய திரட்டு. எழுத்தாளர் சிவசங்கரி வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
முதல் கதை “மோட்டூர்க்காரி “ கடைசி கதை “காக்காய் பொன்”. புத்தகத்தில் உள்ள சித்திரங்கள் கண்ணைக் கவருகின்றன. சிறுகதை திரட்டில் சித்திரங்களை இப்போதுதான் நான் முதல் முதலாகப் பார்க்கிறேன். ஆசிரியரின் சொல்லோவியங்களுக்கு அழகு சித்திரங்கள் மெருகூட்டுகின்றன. “யாதுமாகி நின்றாய்” கதையின் இறுதியில் பாரதியாரின் பாடல் அமைவது கதைக்கு இசையூட்டுவது போலிருக்கிறது.
கதையின் எல்லா தலைப்புகளும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஒரு கதைக்குத் தலைப்பு தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமில்லை. கதையின் தலைப்பு நன்றாகயிருந்தாலே கதையைப் படிக்கத் தோன்றும். “பசுமையின் நிறம் சிவப்பு” பார்த்தவுடனே படிக்க மனத்தில் ஆர்வம் உண்டாகிறது. “மெய் கண்டார்” என்பதைப் படித்ததும் எனக்கு “தோள் கண்டார் தோளே கணடார்” என்ற பாடல் ஞாபகம் வந்தது. எல்லா தலைப்புகளும் அருமை.
ஆசிரியரின் நடை யதார்த்த நடை. நல்ல நடை . மறைந்த பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கதைகள் வித்தியாசமான நடையிலிருக்கும். ஒரு கதை மீனவர்கள் மற்றும் கடல் சம்பந்தப்பட்டதாகயிருக்கும். இன்னொரு கதை குடியானவர்களைப் பற்றி இருக்கும். ஒரு கதை விவசாயிகளைப் பற்றி இருக்கும். அது போல் ஆசிரியரின் கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான மொழியுடன் படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
கதைக்கரு எல்லா கதைகளிலும் சிறப்பாக இருந்தது. “ கனிகரம்” என்ற கதையில் தாய் தன் மகன் என்ன தீங்கு செய்தாலும் அவள் அவனுக்கு நல்லதையே நினைப்பாள் என்ற உயர்ந்த கருத்தை சொல்கிறது..
சிறுகதை இலக்கணத்தில் கட்டுக்கோப்பு மிகவும் முக்கியம். பதினெட்டு கதைகளும் கட்டுக்கோப்புடன் இருந்தது. அளவுக்கு அதிகமான வர்ணனை எந்த கதையிலுமில்லை.
முடிவைப் பொருத்தவரை எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். சில கதைகளில் முடிவு எதிர்பாராத விதமாக இருந்தது. ”பாசச் சுமைகள்” என்ற கதையில் கதாநாயகன் தியாகராசன் இறந்து விடுவான். அதுபோல் மெய் கண்டார், காக்கை பொன் என்ற கதைகளும் எதிர்பாராத முடிவை உடையன. “சுமைதாங்கி சாய்ந்தால் ?” என்ற கதை, கடிதங்கள் பரிமாற்றம் என்ற உத்தியை உபயோகப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. மனைவி ரகசியத்தை சொல்லிவிட்டு கணவனை உலுக்குவாள். அதற்கு முன்பேயே கணவனின் தலை சாய்ந்து விட்டிருக்கும்.
எல்லா கதைகளையும் படித்து முடித்த பிறகு மன நிறைவு ஏற்படுகிறது. மொத்தத்தில் சிறப்பாக இருக்கிறது, குறை ஒன்றுமில்லை என்று சொன்னால் மட்டும் போதாது . ஒரு நல்ல சமையலை சாப்பிடும்போது திருப்தியுடன் “யார் இவ்வளவு நன்றாக சமையல் செய்தது, அவங்க கைக்கு ஒரு மோதிரம் போடணும் என்று சொல்வதைப் போல் இவ்வளவு நல்லா கதை எழுதிய ஆசிரியரின் விரலுக்கு தங்க மோதிரம் போடணும் என்றும் சொல்ல தோன்றுகிறது.
**************