வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-3
என்.கணேசன்
சரியானதைப் படியுங்கள்
மகாத்மா காந்தி சிறு வயதில் பார்த்த அரிச்சந்திரன் நாடகம் அவர் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் பல முறை சொல்லி இருக்கிறார். மன்னனாக இருந்த ஹரிச்சந்திரன் அப்பழுக்கற்ற சத்தியவானாக இருந்ததால் சத்ய அரிச்சந்திரன் என்றழைக்கப்பட்டவன். அவனைப் பொய் சொல்ல வைக்கிறேன் என்று சூளுரைத்து விட்டு வந்த விசுவாமித்திர முனிவர் செய்த சூழ்ச்சியால் அவன் நாட்டை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து இடுகாட்டில் வெட்டியானாக மாறி மகன் பிணத்தையே மனைவி புதைக்க எடுத்து வந்த போதும் சத்தியத்திலிருந்து மாறாமல் இருந்ததை விவரிக்கும் நாடகம் அது. கடைசியில் விசுவாமித்திர முனிவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அனைத்தையும் அவனுக்குத் திருப்பிக் கொடுத்ததில் முடியும் அந்த நாடகம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற சிறுவன் மனதில் விதைத்த விதை அந்த சிறுவனை மகாத்மா காந்தியாக பிற்காலத்தில் வளர்த்து விட்டது. அதே நாடகத்தைப் பார்த்து விட்டு இத்தனை கஷ்டங்கள் பட வேண்டிய அவசியம் என்ன, ஒரு பொய் சொல்லி விட்டுப் போயிருக்கலாமே, எதையும் இழக்க வேண்டியிருந்திருக்காதே என்ற ஒரு சராசரி மனிதனின் மன ஓட்டம் காந்தி மனதில் ஓடியிருக்குமானால் மகாத்மா காந்தியாக அவர் உருவெடுத்து இருக்க முடியாது.
எனவே ஒரு பாடத்தில் இருந்து சரியான படிப்பினை பெறுவது மிக முக்கியம். அரிச்சந்திரன் கதையைப் படித்து விட்டு உண்மை சொன்னால் இத்தனை பிரச்னைகள் வரும் என்று படிப்பினையைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சத்தியத்தை கைவிடலாகாது என்ற படிப்பினையைப் பெறவும் முடியும். சரியான படிப்பினையைப் பெறுகிறோமா தவறான படிப்பினையைப் பெறுகிறோமா என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் வெற்றி தோல்விகளும், உயர்வு தாழ்வுகளும் அமைகின்றன.
வாழ்க்கைப் பள்ளிக் கூடத்தில் நடத்துகிற ஒரே பாடத்தில் பலரும் பல தரப்பட்ட பாடங்களைப் பெறுகிறார்கள் என்பதற்கு நம் தினசரி வாழ்க்கையிலேயே நாம் ஏராளமான உதாரணங்களைப் பார்க்கலாம். ஒரு குடிகாரத் தந்தையின் இரண்டு மகன்கள் பற்றிய செய்தி ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்தக் குடிகாரத் தகப்பன் பொறுப்பில்லாதவன். எப்போதும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியையும், இரண்டு மகன்களையும் அடித்து உதைத்து துன்புறுத்துவான். வீட்டு செலவுக்குச் சரியாகப் பணமும் தர மாட்டான். ஒரு கால கட்டத்தில் ஒரு மதுக் கடை கேஷியரைக் கொன்று விட்டு ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறான். இந்த சூழ்நிலையில் வளர்ந்த இரண்டு மகன்களும் பெரியவர்களானார்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் தான். ஒருவன் தந்தையைப் போலவே குடிகாரனாகி, பொறுப்பில்லாமல் இருந்தான். திருடியும், மற்றவர்களை மிரட்டியும் வாழ்ந்தான். ஒருவரைக் கொலை செய்ய முயன்றதற்காக தற்போது சிறையில் இருக்கிறான். இன்னொருவனோ அவனுக்கு நேர் எதிர்மாறாக இருந்தான். நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருந்த அவனுக்கு எந்த தீய பழக்கங்களும் இருக்கவில்லை. திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். இருவரையும் அவர்களுடைய இன்றைய நிலைக்குக் காரணம் கேட்ட போது இருவரும் ஒரே பதில் சொன்னார்கள்-அவர்களுடைய தந்தை தான் காரணம் என்றார்கள்.
குடிகார மகன் சொன்னான். “அவரைப் பார்த்து வளர்ந்த சூழல் என்னை இப்படி ஆக்கி விட்டது”. நல்ல நிலையில் இருந்த மகன் சொன்னான். “சிறு வயதில் இருந்தே அவர் நடவடிக்கைகளால் எத்தனை வேதனை, பிரச்சனை என்று பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று அன்றே நான் கற்றுக் கொண்டேன்”. ஒரே குடும்பம், ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவர் கற்று கொண்ட பாடங்களைப் பாருங்கள்.
ஒரு அழகான ஆங்கிலக் கவிதையில் வரும் இந்த வரிகள் எனக்குப் பிடித்தமானவை-
Two men looked out from prison bars,
One saw mud, the other saw stars.
(சிறைக்கம்பிகள் வழியே இருவர் வெளியே பார்த்தார்கள். ஒருவன் சகதியைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான்)
இருக்கின்ற இடம் ஒன்றே ஆனாலும் பார்க்கின்ற பார்வைகள் வேறாகின்றன. பார்வைகள் மாறும் போது வாழ்க்கையே மாறுகின்றன. இது மிகப் பெரிய உண்மை.
நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சூழலும், மனிதர்களும் நமக்கு ஒவ்வொரு பாடங்களே.சரியான பாடம் கற்பதற்கு நாம் தயாராக இருந்தால் மட்டுமே, நம்மால் நிறைய நல்ல விசயங்களைக் கற்க முடியும். மனிதர்களில் சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறார்கள். வேறு சிலரோ எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கிறார்கள். அதைத் தெரிவு செய்வது நம் கையில் தான் இருக்கிறது.அதை மாற்றிப் படித்துக் கொண்டு விடக் கூடாது. அதே போல ஒரே மனிதன் சில விசயங்களில் இப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தையும், சில விசயங்களில் இப்படி இருக்கக் கூடாது என்ற பாடத்தையும் கற்பிக்கக் கூடும். ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் பலம் மற்றும் பலவீனம் என்ற இரண்டும் கொண்டவர்கள் தானே. சரியானதை மட்டும் கற்க நாம் கற்றுக் கொண்டால் நம்மைச் சுற்றி உள்ள அனைத்துமே நமக்கு ஆசானாக இருக்க முடியும்.
ஒருவர் சிறந்த கலைஞராகவோ, விளையாட்டு வீரராகவோ இருக்கலாம். அதே நபர் தனிப்பட்ட முறையில் நம்பத் தகாத நபராகவும், மோசக்காரராகவும் கூட இருக்கலாம். அந்த நபரை ஒட்டு மொத்தமாகப் பின் பற்ற முடியுமா? கலையையும், விளையாட்டையும் பொறுத்த வரை அவரை முழுமையாக பின்பற்றலாம். மற்ற விசயங்களில் எப்படி இருக்கக் கூடாது என்ற பாடத்தையே அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். இந்த அறிவு குறைபாடே இன்றைய காலத்தின் பெரிய சாபக்கேடு. ஒரு துறையில் திறமை படைத்தவன் எல்லா விசயத்திலும் திறமை உள்ளவனாக இருப்பான் என்று நம்பும் முட்டாள் தனமான “ஹீரோ வர்ஷிப்” நம்மிடையே நிறைய இருக்கிறது.
இருக்கும் கட்சித் தலைமையானாலும் சரி, மனம் கவர்ந்த கதாநாயகனானாலும் சரி, பிடித்த விளையாட்டு வீரனானாலும் சரி அவர்கள் செயல்கள் அனைத்தும் சரியானதே என்று கண் மூடித்தனமாகப் பின்பற்றுவதே நம் வழி என்று இருக்காமல் எது நல்லதோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு நல்லது அல்லாதவற்றை விலக்குவதே சரியான பாடங்களைப் படிக்கும் முறை. அன்னப் பறவை தண்ணீரிலிருந்து பாலைப் பிரித்து எடுத்து அருந்தும் திறன் கொண்டது என்று கூறுவார்கள். அது போல நாமும் அனைத்திலிருந்தும் சரியானதை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியுமானால் நம்மால் அடைய முடியாத சிகரங்களின் எல்லையே இல்லை!
மேலும் படிப்போம்….
N.Ganeshan
http://enganeshan.blogspot.com/
http://n-ganeshan.blogspot.com/
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் அருமை. உண்மையை விட
உயர்ந்தது வேறேதுமில்லை என்று அழுத்தமான
நம்பிக்கையை காந்தி வைத்திருந்தார். அது அவரை
மகாத்மா ஆக்கியது. வள்ளுவரும் தம் குறளில்
” யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” என்று அழுத்தம் திருத்தமாகக்
கூறுகிறார். அதே போல் அறநெறியில் நம்பிக்கை வைத்தால்
வாழ்வு சிறக்கும். அறத்திற்கு மாறான வழியை மேற்கொண்டால்
வாழ்வைச் சீரழிக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.
நல்லதொரு கட்டுரை. எளிதில் புரியவைக்கும் கட்டுரை.