வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்
பவள சங்கரி
பேதை நெஞ்சே!
சில நேரங்களில் நடக்கக் கூடிய சில விசயங்கள் நன்மைக்கா அல்லது தீமைக்கா என்றே கணிக்க முடியாத ஒரு குழப்பத்திற்கு இட்டுச் செல்லும். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லக் கூடிய அதே வேளையில் முக்கியமான அம்சங்களில் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பும் உருவாகி விடுகிறது.அப்படித்தான் நம் தொட்டில் குழந்தைத் திட்டமும்…
ஒரு புறம் பெண் சிசுக் கொலைக்கும் , வறுமையினால் பெற்ற குழந்தையையே விற்க வேண்டிய சூழலில் பிச்சை எடுப்பதற்கும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் சிக்காமல் இருப்பதற்கும் ஒரு முற்றுப் புள்ளி என்று எடுத்துக் கொண்டாலும், இது போன்று தொட்டில் குழந்தைகள் அதிகரிப்ப்து நல்ல அறிகுறியாக நினைக்கத் தோன்றவில்லை. என்னதான் அரசாங்கமோ, மற்ற தொண்டு நிறுவனங்களோ இக்குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தாலும் அவர்களுடைய மன நிலையின் பாதிப்புகள் எதிர் காலத்தில் பலவிதமான சிக்கல்களை உருவாக்கக் கூடியதாக இருக்கலாம் என்பதும் நிதர்சனம்.
கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தொட்டில் குழந்தை திட்டம் விரிவு படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ள இடங்கள். இதன் பின்னணி ஆய்விற்குரிய விசயமாகும்.இதனைக் கண்டறிந்து களைய வேண்டியதும் அரசின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். அப்போது தான் அது ஒரு சிறந்த சேவையாக மலர முடியும்.
“தொட்டில் குழந்தைத் திட்டம்” உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளது என்று மார்தட்டிக் கொள்வதில் பெருமை அடைவதற்கில்லை. காரணம் இது மனித இனத்திற்கே கேவலம் அல்லவா? மிருகங்களும், புள்ளினங்களும் கூட தான் பெற்ற குட்டிகளுக்கும், குஞ்சுகளுக்கும் உணவூட்ட மறுப்பதில்லை! அந்த வகையில் தான் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு பதிலாக எங்கள் தொட்டிலில் போடுங்கள் என்று சொல்வது அபத்தமாகத்தான் உள்ளது. இருப்பினும் அக் குழந்தைகளுக்கு ஆதரவு கிடைக்கிறதே என்று மன நிறைவு அடைய முடிகிறது.
இதுவரை 3200க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதோடு, 582 ஆண் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர் என்கிறது அரசாங்க அறிக்கை. 2088 பெண் குழந்தைகள் மற்றும் 372 ஆண் குழந்தைகள் என மொத்தம் 2460 குழந்தைகள் உள்நாட்டில் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் தத்து கொடுக்கப் பட்டுள்ளன. 170 பெண் குழந்தைகள் மற்றும் 27 ஆண் குழந்தைகள் என மொத்தம் 197 குழந்தைகள் வெளிநாட்டில் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எதிர்காலம் நல்லபடியாக அமையும் என்று நம்பித்தான் ஆக வேண்டும்.
இத்திட்டத்தால் மீட்கப்பட்ட குழந்தைகளில் 160 குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கூடினால் கூட ஒரு விதத்தில் நன்மை கூடலாம்.
2011ம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை விகிதம் மிகவும் குறைந்திருப்பது கவலையளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது மற்றும் பெண் சிசுக் கொலை எனக் கருதப்படுகிறது.இந்த மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கு இதில் இன்றியமையாததாகும்.
இன்னுமொரு முறைசொல்வேன்.பேதை நெஞ்சே!
எதற்குமினி உலைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே………என்றான் பாரதி!
தொட்டில் குழந்தைகள் நல்லபடியாக உணவும், உறைவிடமும் கிடைத்து வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் பெற்றோரின் அரவணைப்பின்றி வளரும் இத்தகையக் குழந்தைகளின் மன நிலைகளில் பெரிய பாதிப்பு ஏற்படலாம். அவர்கள் தீவிரவாதிகளாகவோ, மாவோயிஸ்டுகளாகவோ அல்லது நக்சலைட்டுகளாகவோ உருவாகும் அபாயம் உள்ளது. ஆகவே தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவடைவதை விட இது போன்று குழந்தைகள் பிறப்பைத் தவிர்க்கும் முயற்சியும் அதிகப்படுத்த வேண்டும். அதற்கான சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண்டும்.
“தொட்டில் குழந்தைத் திட்டம்” உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளது என்று மார்தட்டிக் கொள்வதில் பெருமை அடைவதற்கில்லை. காரணம் இது மனித இனத்திற்கே கேவலம் அல்லவா? மிருகங்களும், புள்ளினங்களும் கூட தான் பெற்ற குட்டிகளுக்கும், குஞ்சுகளுக்கும் உணவூட்ட மறுப்பதில்லை! அந்த வகையில் தான் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு பதிலாக எங்கள் தொட்டிலில் போடுங்கள் என்று சொல்வது அபத்தமாகத்தான் உள்ளது. இருப்பினும் அக் குழந்தைகளுக்கு ஆதரவு கிடைக்கிறதே என்று மன நிறைவு அடைய முடிகிறது.”
~ மூஞ்சியில் அடிக்கும் உண்மை