கோவில் கதைகள் – 1

3

ரீச்’ சந்திரா’ என்கிற  ‘மரபூர்’  ஜெய.சந்திரசேகரன்,  ப்ளாஸ்டிக் மற்றும் தொழிலகள் உற்பத்தி ஆலோசகர் பணியில் இருப்பவர்.இவரின் தற்போதைய தீவிர முழக்கம்: எல்லோர்க்கும் தூய குடிநீர்.

 

இதற்கும் அப்பாற்பட்டு புராதனக் கோவில்களில் உழவாரப்பணியைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவர். புராதனச் சின்னங்களின் புனரமைப்பு இவரின் விருப்பப் பணிகள். தன் பணியின் சுவையான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கீழேயுள்ள உரலிகளில் அவற்றைப் பற்றிக் காணலாம்.
இவர் எப்போதும் செய்யும், செய்ய விரும்பும் சேவை:
மக்கள் தொடர்பாளர்:  REACH FOUNDATION.

To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com

 

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

கருவறைக்குள் சமயோகம்…!

மே மாதக் கடைசியில், எங்களுக்கு ஒரு போன் கால்.

“Sand Blasting வேண்டாம் என்று சொல்கிறீர்கள். வேறு எப்படி கற்களை சுத்தம் செய்வதாம்? எங்கள் கோவில் கும்பாபிஷேகம் இன்னும் ஓரிரு வாரத்தில். வந்து கருவறையையும், அர்த்த மண்டபம் மட்டுமேனும் சுத்தம் செய்து தர முடியுமா?”.

அந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி சொல்லி, உடனே சுற்றுச் சூழலை மாசு அடையச் செய்யாத ரசாயனங்களை வரவழைத்து, எங்களுக்கு அழைப்பு விடுத்த திருப்பயற்றங்குடி (திருப்பயத்தங்குடி என்று ஆகிவிட்டது!) கோவில் புனரமைப்பாளர்கள் திரு. ஜி.ராமநாதன், திரு.டி.எம். சந்திரசேகரன், திருமதி. ஜெ.கீதா குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு உடனடியாகப் பயணப்பட்டோம். தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் தொல்லியல் முதுகலை பயின்று ரீச்சில் பல பணிகளில் அமர்த்தப்பட்ட இளைஞர் பரந்தாமனும், அவரது சக மாணவர் சங்கரும் என்னுடன் வந்தார்கள்.

திருப்பயற்றங்குடியின் சிறப்புப் பற்றி இங்கே.

கோவில் புனரமைப்பு, சொல்ல முடியாத அளவில் பல நவீனத்துவ முறைகள் கையாளப்பட்டிருந்தது. பளீர் என அடிக்கும் அக்ரிலிக் வர்ணங்களும், மகா உன்னத (!) சிமெண்ட் பூச்சுகளும், கம்பி கிராதிகளும். புராதனத்தை அதி நவீனமாக்கியிருந்தன. வாழ்க வளமுடன்! () நல்ல வேளை, கற்றளிகளில் கை வைக்காமல் இருந்தனர். கோவில் நிர்வாகத்தினர், “ரீச் அமைப்பு பற்றி முன்பே தெரியாமல் போயிற்று. இனி, எந்த புனரமைப்பானாலும், உங்களை சந்திக்காமல் செய்ய மாட்டோம்,” என்று உறுதியளித்தனர்.

சுத்தம் செய்யப்பட வேண்டிய கருவறையும், அர்த்த மண்டபமும், பல நாள் எண்ணெய் மற்றும் கற்பூரப் புகையால், கறுப்பு அறையாகியிருந்தது! முதலில் அதற்கான ரசாயனத்தை அதன் மேல் தடவ வேண்டும். பின்னர் பிரஷ் கொண்டு வட்டமாக தேய்த்து, ஊறிய பின்னர் நீர் பீய்ச்சி அடித்துக் கழுவ வேண்டும். நீர் பீய்ச்சி அடிக்கக் கம்ப்ரெஸர் முதலிலேயே கேட்டிருந்தோம். கிடைக்கவில்லை.

29ம் தேதி விடியற் காலையில் ரசாயனப் பூச்சு ஆரம்பித்தோம். பொழுது நன்கு புலர்ந்ததும், ஆஸ்தான குருக்கள் வந்தார். “என்னது? நீங்களா உள்ள நுழைஞ்சுட்டேள்? பாலாலயம் செய்திருக்கோம் சரி. இருந்தாலும் ஸ்வாமியைத் தொடப்படாது. அவாள்லாம் யாரு,” என்றார், என்னிடம்.
வேலை செய்யும் சங்கரும், பரந்தாமனும் செய்வதறியாது நிற்க, நான் அந்த பெரியவரை மெதுவாக அர்த்த மண்டபத்துக்கு அழைத்துச் சென்றேன்.

`”ஸ்வாமி, நமஸ்காரம். நீங்கள் செய்த புண்ணியம், பூஜைகள், இந்த கோவில் கும்பாபிஷேகத்தைக் காணப்போகிறது! ஹரிஹர ஐக்கியம் இப்போ நடக்கறது!”

ஆம், இளைஞர்கள் பரந்தாமன் மற்றும் சங்கர் ஆகியோர் தானே கருவறையை சுத்தம் செய்தனர்?

குருக்கள் புரியாமல் முழித்தார். ஸ்வாமி இந்த பையன் பரந்தாமன், அவன் சங்கர். நன்னா படிச்ச புள்ளைகள். கோயில் சுத்தம் செய்யணும்னதும், உடனே வந்துட்டா!” என்றேன்.

”எல்லாரும் இப்படி உள்ள நுழையப்படாது.”

“சரி,ஸ்வாமி,. நீங்களா கல்ல தேய்ச்சுக் கழுவறதுன்னா நான் சொல்லித் தரேன். செய்யுங்கோ!, என்றேன்.

”சரி, என்னமோ பண்ணுங்க. பழிபாவத்துக்குப் பயந்து செய்யுங்கோ! பாடல் பெற்ற தலமாக்கும் இது!” என்றார்.

”பழி பாவம் ஏதும் இருந்தா அது எனக்கு வரட்டும். புண்ணியம் உங்களுக்குப் போய் சேரட்டும்!”

சரி, சாயங்காலம் திருப்பனந்தாள் ஆதீனம் வர்றார். அதுக்குள்ள செஞ்சுடுங்கோ!” என்றார் அதிரடியாக!

அன்றாட வழக்கமான பூஜைகளைச் செய்து விட்டு அவர் போய் விட்டார்.
மூவரும் கலந்தாலோசித்தோம். சரி, ஆளுக்கு ஒரு பக்க சுவர் என்று பிரித்துக் கொண்டு, நாங்கள்  மூவரும் கிடுகிடுவென  செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கினோம்.

முதலில் ரசாயனத் தடவல்,பின், மறு பக்கம் தடவுதல். பின்னர் முதலில் தடவிய இடத்தில் ப்ளாஸ்டிக் நார் பிரஷ்ஷால் வட்ட வடிவில் தேய்த்தல். மீண்டும் அடுத்த இடம் இப்படி. அதற்குள் ரப்பர் ஹோஸ் மூலம், கருவறைக்குள் தண்ணீர் கொண்டு வந்து பெரிய இரண்டு டிரம்களில் நிரப்பியபடியே, குவளைகளில் நிரப்பி, சுவற்றில் வீசியடித்தோம். மீண்டும் தேய்த்துக் கழுவுதல். கொஞ்சம் கொஞ்சமாக கற்சுவர் தன் சுய உருவத்தை அடைந்தது!

விரு விருப்பாக T20 போல் அடித்து ஆடியதால், மாலை அர்ச்சகர் வருவதற்குள் கருவறை சுத்தமாகியிருந்தது!

பார்த்தவர் மனம் கரைந்து போனார் என்பது அவர் கண்களில் தெரிந்தது!

Sand blasting தவிர்த்து சுத்தம் செய்த படங்கள் இங்கே.

மாலையில் ஆதீனத்திற்கு கோவில் நிர்வாகிகள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். அவரும் கருவறையைப் பார்த்து எப்படி சுத்தமானது என்று வினவினார். சுருக்கமாக சொன்னோம். “நல்லது” என்றார்.

”அப்படியே ஒரு விண்ணப்பம்!” என்றேன். என்ன? என்றார்.

ஸ்வாமி, பக்கத்தில் திருச்செங்காட்டாங்குடி கோயிலுக்கு காலையில் சென்றோம். நாங்கள் கல்வெட்டுகளில் ஆசை மிக்கவர்கள். அதிசயமாக வட்டெழுத்து கல் வெட்டு சில கண்டோம். ஆனால், கோயில் நிர்வாகிகள் எதையும் படம் பிடிக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். படத்தை வைத்து தானே எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்? தாங்கள் அனுமதி தரவேண்டும்,” என்றேன்.

கட்டாயம் நான் அவர்களிடம் சொல்கிறேன், என்று கை தூக்கி ஆசிர்வதித்து விட்டுப் போனார்.

இங்கே திருச்செங்காட்டான்குடி கோவில் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சிறுத்தொண்டர் ஊர். 2008ல் புனரமைப்பு இன்றி, மிகவும் மோசமாய் இருந்தது. இன்று புனரமைப்பு எனும் பெயரில்,நவீன மயமாக்கப்பட்டு விட்டது! டைல்ஸ், அக்ரிலிக் பெயிண்ட் இத்யாதிகள்… கோவில் சுவர்களில் கூட ஆல், வேம்பு, அரச மரங்கள் வளர்கின்றன. சிமெண்டும் பழைய சுதையும் ஒன்று சேராது என்பதற்கு இந்த கோவில் புனரமைப்பே சாட்சி. இங்குள்ள கொடிமரம் அழகோ அழகு! அரிய கல்வெட்டுகள் இருந்தாலும், படம் எடுக்க முடியவில்லை. கோவில் ஆதீன கணக்கர் யாரையோ போய் பார்த்து அனுமதி வாங்கச் சொன்னார்கள்.அலைந்தது தான் மிச்சம். யாரையும் பார்க்க முடியவில்லை. கற்கள் சுத்தம் செய்யும் வேலை கெடும் என்று வந்து விட்டோம். திருச்செங்காட்டாங்குடி படங்கள் இங்கே.
மறு நாள் அர்த்த மண்டபத்தை விடியற் காலையிலேயே எழுந்து சுத்தம் செய்து விட்டோம். காலை பூஜைக்கென அர்ச்சகர் உள்ளே நுழைகையில் அவருக்கு பூரணமாக கருவறை மற்றும் அர்த்த மண்டபம் முழுவதும் சுத்தம் செய்து கொடுத்து விட்டோம்!

”நேத்து நீங்க மனக் கஷ்டப்படீங்க! வேலை செஞ்ச எல்லாரும் அவர் சித்தத்தில் செஞ்சாங்க! எல்லாம் அவன் செயல். ஆனாலும் உங்களுக்கு மேலும் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னுட்டு தான் கார்த்தால சீக்கிரம் எழுந்து முடிசோம். நாங்க சீக்கிரமா முடிச்சதுக்கு நீங்க தான் கிரியா ஊக்கி. பகவான் உங்கள் மூலம் எங்களுக்கு சுறு சுறுப்பைத் தந்தார், ரொம்ப நன்றி!” என்றேன்.

அர்ச்சகர் இருங்கோ என்று சொல்லி சிவனாருக்கு அலங்காரம் செய்து, விபூதி அளித்தார். அம்பாள் பெயர் நேத்ராம்பிகை! சத்தியமாய் இங்கு வந்து பார்த்த பின் தான் இந்த பெயரில் அம்பாள் இருப்பது எனக்குத் தெரியும்! மதுரையில் படித்து வளர்ந்ததால், மீனாக்ஷியம்மன் எங்களுக்கு கண்கண்ட தெய்வம். என் தாய் வழிப்பாட்டி [பெயரும் அதே; அவரிடம் நான் மிகுந்த பாசம் வைத்திருந்தேன். மிகவும் அமைதியானவர். எதற்கும் ஆசைப் படாதவர். யோகியைப் போல் இருப்பார். எனவே என் மகளுக்கு மீனாக்ஷி என்ற பெயர் வைக்கால்ம என்கிற போது, வருங்காலத்தில் ‘என்னப்பாயிது? சுத்த பஞ்சாங்கப் பெயரா இருக்கே,’ன்னு சொல்லிவிட்டால்? எனவே அதே அர்த்தம் கொள்ளும்படியாக நேத்ரா என்று வைத்தோம்! இன்று நெடுஞ்சிலை அழகின் உருவாய், கண்களாலேயே, நான் இருக்க பயமேன் என்று உற்றுப் பார்க்கும் அந்த நேத்ராம்பிகையைக் கண்டதும் சிலிர்த்தேன். இதுவும் அவள் செயலே என்று மனம் மகிழ்ந்தேன். என் செயல்கள் அனைத்தும் அம்மையப்பன் இயக்குகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று!

என்ன கவலை யென்றால், அம்மன் கருவறை முழுதும், நவீன டைல்ஸ் ஒட்டி விட்டார்கள்! மெகா சைஸ் பாத் ரூமில் அம்பாள் இருப்பதுபோல்! சரி, முடிந்த வரை Sand blasting செய்யாமல் தடுக்க முடிந்ததே என்று மகிழ்ச்சி. அதோடு வேலை முடிந்து, கோவில் நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, திருவையாறு தாண்டி அரியலூர் அருகில் நாங்கள் புனரமைக்கத் தொடங்கியுள்ள காமரசவல்லி காணப் போனோம்!
திருவையாற்றுப் புனரமைப்பும், காமரசவல்லிக் கதையும் வேறு வகை. என்ன என்று அடுத்த கட்டுரையில் பார்போமா?

மீண்டும் கோவில் கதைகளுடன் சந்திப்பேன்,

 

அன்புடன்
ரீச் சந்திரசேகரன்.
’என் கடன் பணி செய்து கிடப்பதே’

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கோவில் கதைகள் – 1

 1. மெகா சைஸ் பாத் ரூமில் அம்பாள் இருப்பதுபோல்!
  ~ சிரிச்சு மாளலெ, அ.பி.ச.
  நான் அந்த பெரியவரை மெதுவாக அர்த்த மண்டபத்துக்கு அழைத்துச் சென்றேன்.
  ~ இது சந்திரா getting into form!
  ”அப்படியே ஒரு விண்ணப்பம்!” என்றேன்.
  ~ இது சந்திரா in bonus form!

 2. என் அனுபவக் கதைகளை விட, உங்கள் சிங்கிள் லைனர் அமர்க்களம் ’இ’ சார்!
  நன்றி.
  சந்திரா

 3. ஓம் சக்தி, அன்புள்ள தம்பி சேகர் அவர்களுக்கு வணக்கம்.உங்கள் கோவில் புதுப்பித்தல்  நனறாக உள்ளது .இப்பொழுதும் இதை செய்து கொண்டிருகி ரிகளா ? நான் ஸ்ரீரங்கம் வாசி ,இங்கு நிறய கோவில்கள்,கோபுரங்கள் ,மண்டபங்கல் ,உங்கள் வருகைக்கா  காத்திருகின்றன .என்னது e -மெயில்  ஈத்;vijayjamuna64 @gmail .கம–விபரம் கூறுகிறன் .படங்கள் அனுப்புகிறான் .நன்றி .ரா.விஜயராகவன்..  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *