நாஞ்சில் நாடன் பயணம் – 5
தி. சுபாஷிணி
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
இந்நூல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பு 2007 லும் 2 ஆம் பதிப்பு டிசம்பர் 2009லும் வெளியிடப்பட்டது. 270 பக்கங்கள் கொண்ட புத்தகம். புத்தக வடிவமும், முகப்பு அட்டைப் படங்களும் தமிழினி வசந்தகுமார் அவர்களின் அழகியல் உணர்வைப் பகரா நிற்கின்றது.
இந்நூலை இலக்கியவாதி, சிறந்த இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களுக்குப் படைத்தளித்திருக்கிறார் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள். அவரது முதல் வாசகரும், அவரது நூலுக்கு ஓவியருமான வே.ஜீவானந்தனின் மதிப்புரையைத் தாங்கி வந்துள்ளது கூடுதல் விசேஷமாக உள்ளது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என நாஞ்சிலைப் போலவே தனித் தலைப்புக் கொண்டு தன் மதிப்புரையை வழங்கி இருக்கிறார் ஜீவா அவர்கள்.
நாஞ்சில் நாடனுக்கு கட்டுரை எழுதுவதற்கு விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்கிறார், இக்கட்டுரையாளர். நாஞ்சிலைப் போன்ற நேர நெருக்கடியுள்ள ஒரு அலுவலருக்கு எழுத்துப் பணிக்கு நேரம் கிடைப்பதே அரிது. இந்த அவதியில் நிறைய நண்பர்களின் புத்தகம் படிப்பதும், அதற்கு முன்னுரை எழுதுவதும் பெரிய காரியம் தான். மேலும் அவர் சமகால இலக்கிய நூல்களைப் படித்து தன்னை நவீனத்துவமாகப் புதுப்பித்துக் கொண்டே இருப்பவர் என்று அவரைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார் ஜீவா. அவர்த்ம் நூலுக்கு மதிப்புரை வழங்குவதில் மாளாத பெருமை அவருக்கு. அதே சமயத்தில் நாஞ்சிலாரின் நாவலையும் எதிர்பார்ப்பதாக விண்ணப்பமும் வைக்கிறார் ஜீவா.
“நான் கட்டுரையாக எழுதுவதை இன்னொருவர் எழுதி விடவும் முடியும் தான். ஆனால் அவை எழுதப்படாமலே போய்விடுமோ எனும் அச்சம் ஏற்படும்போது தான் படைப்பிலக்கியவாதி அந்தப் பணியையும் மேற்கொள்ள வேண்டியதாகிறது. மேலும் ஒரு விசயத்தை அவன் அறிவுப் பூர்வமாக மட்டுமின்றி, உணர்வுப் பூர்வமாகவும் அணுக இயலும்.
கட்டுரை என்பது தீவிரமானதோர் மொழியில், அதற்கானதோர் வறட்டுத் தனத்துடன், வாசகனுக்கு அந்நியமான பாணியில் பெரும்பாலும் எழுதப்படுகிறது. படைப்பிலக்கியவாதி கட்டுரை எழுத வரும் போது, மொழி இயல்பானதாகவும் சற்று உணர்வுப் பூர்வமான அணுகுமுறையுடனும் ஆக்கம் கொள்கிறது. எந்த கட்டுரையும் ஒரு சிறுகதை வாசிப்பின் ஈர்ப்பைத் தர வேண்டும் என்று கருதுபவன் நான். என்னுடைய கட்டுரைகள் அந்தவிதமான ஈர்ப்பைத் தருவதுண்டா என்பதை நீங்கள் தான் கூற முடியும்.
எனது முதல் கட்டுரைத் தொகுப்பான ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ வெளியான பின்பு எழுதப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது கடந்த முப்பது ஆண்டுகளில் நான் எழுதிய முன்னுரை, மதிப்புரைகளும்.
எப்போதும் என் பார்வையே சரியான பார்வை எனக் கருதுபவன் அல்ல நான். என்றாலும் என் பார்வையும் பொருட்படுத்தப்படக்கூடும் எனும் நம்பிக்கை உடையவன் எனது எதிர்பார்ப்பும் அவ்வளவுதான்” என்கிறார்.
இந்நூல், 16 கட்டுரைகள், பிறர்க்கு எழுதிய முன்னுரைகள் 13, தனக்கு எழுதிய முன்னுரைகள் 11, மதிப்புரைகள் 7, பிற குறிப்புகள் 6, அஞ்சலி 3, கவிதை வினா 1 என 6 பகுதிகளைத் தாங்கி நிற்கின்றது.
காலாண்டு இதழாக ஜனவரி 1988ல் வெளிவரத் துவங்கிய காலச் சுவடு 8வது இதழான அக்டோபர் 1989வது இதழுடன் தற்காலிகமாக நின்றது. காலச் சுவடு சிறப்பு மலர் 1991ல் 295 பக்க அளவில் சிறப்புத் தயாரிப்பாக வெளிவந்தது. சுந்தர ராமசாமியை ஆசிரியராக கொண்டு வெளிவந்த இதழ்கள் அவை. அக்டோபர் 1994 முதல் ஜனவரி 1997 வரை மேலும் எட்டு இதழ்கள் வந்துள்ளன. கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக் கொண்டு மறுபடியும் வரத் தொடங்கிய இந்த இதழ்களில், பின்னர் லஷ்மி மணிவண்ணன் பங்கு பெறவில்லை.
இந்த அறிமுகக் கட்டுரைக்காக நான் 15ஆவது இதழ் வரைக்குமே எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் நாஞ்சிலார்.”
சரிந்து கொண்டிருக்கும் தமிழ்க் கலாசாரத்தையும், தரத்தையும், வாழ்வின் மதிப்பீடுகளையும், உலகத்தோடு, காலத்தோடு தமிழ் கொள்ள வேண்டிய உயிர்யிணைப்புகளையும், பின்தங்கிய சிந்தனைகளும் அடைய படைப்புகளையும், கலைகளையும், காப்பாற்றி, உலகத்தோடு தமிழ் கொள்ள வேண்டிய உயிர்ணைப்புகளையும், கலைகளையும், காப்பாற்றி, உலகத்தோடு இணைக்கப்பிறந்தது காலச்சுவடு என்று அதன் முதல் அறிக்கை கூறுகிறது என்கிறார் ஆசிரியர். பதினைந்து இதழ்களிலும், சிறப்பு மலரினும் ஒரு சிறுகதைகளை வெளியிட்டுள்ளது. அவைகள் யாவும் நல்லகட்டு மானத்தைம், உத்தியையும், விவாதிக்கக் கூடியவையாகவும், சமகால கதை ஓட்டத்தைக் கொண்டதாகவும் இருந்தன. மேலும் வெகுஜன பத்திரிக்கைகள் தொட அஞ்சும் சமூகசிக்கல்களையும் மனச்சிக்கல்களையும் பேசுபவையாய் இருந்தன என்று விளக்குகிறார். சிறுகதை விற்பன்னர் நாஞ்சில். கதைகளுக்கு கருத்துச் சுதந்திரம் அளித்தாற்போல், கவிதைகளுக்கும் காலச்சுவடு அளித்து, தரத்தை உயர்த்தி இருப்பதாக ஆசிரியரிர் மாதிரிக்கு சில கவிதைகளை நமக்கு கட்டுரையில் அளித்திருக்கிறார் நவீன எழுத்துச் சித்தர் நாடன் அவர்கள்.
ஆசிரியருக்கு காலச்சுவடில், நேர்க்காணலும் காலச்சுவடும் மிகவும் முக்கியமாகப்படுகிறது. மேலும் சிற்றிதழ் இயக்கம் தன் படைப்புலகம் உயர்ந்தது மட்டுமல்லாது, தமிழிலுள்ள அறிவு தளத்தை, புரிதல் தளத்தை, கலை கலாச்சார நிகழ்வு தளத்தை உயர்த்தப் பாடுபடுவது. அந்த வகையில் காலச்சுவடின் கட்டுரைகள் சிறப்பான வாசிப்புக்கும் விவாதிப்பிற்கும் உட்படுத்தப்பட்டது. என்று ஆசிரியர் பதிவு செய்கிறார்.
கடிதங்கள், குறிப்புகள், தகவல்கள் என ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரை வெளியான சிறு பத்திரிகைகளில் இருந்து தோற்ற அமைப்பில் காலச் சுவடு பெரிதும் வேறுபட்டு நிற்கிறது. அழகான புகைப்படங்கள், ஓவியங்கள் முகப்பாகியுள்ளன. இதழ் தயாரிப்புகள் செய் நேர்த்தியுடன் இருக்கின்றன. பெரும்பாலும் எல்லா இதழ்களிலும் வெளியாகி இருக்கும் ஆதிமூலத்தின் ஓவியங்கள் சிறப்பானவை.
இதுவரையிலான சிறு பத்திரிக்கைகள் வரலாற்றில் காலச் சுவடு உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனியானதோர் இடம் பெறத் தகுதியானது என்பது நாடனின் பாராட்டுக்கள்”.
அனுபவமொழி கொட்டிக் கிழங்கோ கிழங்கு:
“சமீப காலமாய் அரசு விரைவுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து சொகுசுப் பேருந்துகளின் ஓட்டம் எண்ணிக்கை கணக்கில்லாமல் அதிகரித்து வருகிறது. மக்களுக்குத் தேவையும் இருக்கிறது. பேருந்தின் வெளிப்புறம் பார்த்தால் நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்ததைப் போன்றதோர் பளபளப்பு, வண்ணங்கள், அலங்கார விளக்குகள், நேர்த்தியான வடிவங்கள். பேருந்தினுள் உட்கார்ந்திருக்கிறோமா பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தினுள் உட்கார்ந்திருக்கிறோமா எனும் விதத்தில் அமைப்புகள். உடல் சாய்த்துக் கொள்ள, தலை சாய்த்துக் கொள்ள, கால் நீட்டிக் கொள்ள என அவரவர் தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கைகள். இருக்கைகளின் மீது உறைகள், திரைச் சீலைகள், தலைக்கு மேல் தனித்தனி இரவு விளக்குகள், கையகல மின் காற்றாடிகள், பயணப் பெட்டிகள் வைக்க விமானம் போல வசதிகள், தண்ணீர் பாட்டில் மற்றும் கைப்பைகள் வைக்க வலைப் பின்னல்கள், குளிர்பதன வண்டிகளானால் காற்றோட்டம் சீரமைத்துக் கொள்ள வசதி, குறுக்குவாட்டு வரிசையில் மூன்றே இருக்கைகள், மெத்தென்று, தண்ணென்று…
ஆனால் இந்தப் பேருந்துகள் புறப்படும் இடத்திலும் போய்ச் சேரும் இடத்திலும் இடையில் நிறுத்தும் இடங்களிலும் எங்கும் சிறுநீர் கழிக்கும் வசதி கிடையாது.”
ஆம். நாடன் அவர்களே! பல நேரங்களில் நாங்கள் இதனால் அவஸ்தைப் பட்டிருக்கின்றோம். ஆண்கள் என்றால் எளிதாக இந்த உபாதையிலிருந்து மீளும் வழி கிடைக்கும்.பெண்கள் பாடுதான் திண்டாட்டம்!
கிராமங்களிலானால், நாற்று நடும், களை பறிக்கும் பெண்கள் காலைச் சற்று அகற்றி வைத்துக் கொண்டு, சேலையை முழங்கால் உயரத்துக்கு ஏற்றிக் கொண்டு, சும்மா நிற்பது போன்ற பாவனையில் மூத்திரம் பெய்து முடித்து விடுவதை யாரும் இளக்காரமாக எண்ணுவதில்லை. ஆனால் நகரத்தின் கண்கள் வேறல்லவா? என்ற கவலை நாஞ்சிலாருக்கு. ஆனால் பயணங்களில், பல பெண்கள் இவ்வுடல் இயற்கை அழைப்பின் குரலை செவி மடுப்பதில்லை. இதில் பயிற்சியும் ஒரு காரணமாகலாம். ஆனால் அது பின் விளைவாக சிறுநீரகக்கல், சிறுநீரகக் கோளாறில் கொண்டு செல்லும். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்பொழுது (சுமார் 40 வருடங்களுக்கு முன்) என் கணித ஆசிரியை ‘மாரல் இன்ஸ்ட்ரக்சன்’ வகுப்பில் இது பற்றிப் பேசி, மாணவிகள் சிறுநீர் கழிக்கச் செல்வதைத் தவிர்க்கக் கூடாது என்று கூறுவார்.
இது போன்ற பிரச்சினைகளை யாரும் பொது மேடையில் பேசுவதில்லை. நண்பர்களே! நாடனுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா! அவரும் தாய், தங்கை, மனைவி, மகள் எல்லோருடனும் பயணப் பட்டிருப்பார் அல்லவா!
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
ஆழ்ந்த பொருள கொண்ட கம்பனது வரி …..நாடன் அதைத் தலைப்பாக சுவீகரித்துக் கொண்டார் இக் கட்டுரைக்கு.
ஐம்பதுகள் ஆசிரியர் பற்றிச் சிறுவனாக இருந்த காலத்தில், 100 வீடுகள் கொண்ட எங்க நகரில் தொலைபேசி கிடையாது. பின்னர் பக்கத்து ஊரான ஆயிரம் வீடுகள் கொண்ட தாடிக்குடியில் இரும்பு கேட் போட்டதோர் வீட்டுக்கு வந்தது. மேலும் அதைத் தட்டித் திறப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. என்கிறார்.
இன்று தகவல் தொழில் நுட்பம் அஞ்சலட்டையிலிருந்து தொடங்கி, தந்தி, தொலைபேசியில் வளர்ந்து செல் போனில் நின்றிருக்கிறது. செல் போன் கையில் இல்லாதவர் அம்மணமாக உணர்வர். ஒருவருக்கு மாதம் குறைந்தது இருநூற்று ஐம்பது ரூபாய் கட்டணம். அதிகப் படியாய் இருந்ததால் கணவர் செல்போனின் கொடியடுப்பாக மனைவி கைகளிலும் ஒன்று இருக்கிறது என்று இன்றைய விஞ்ஞான வளர் நிலையை அழகாக எடுத்துரைக்கிறார்.
செல் ஒன்று தான் நம்பிக்கை. செய்வது ஒன்று. சொல்வது ஒன்று பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வெறுமனே வீசும் காற்றிலிருந்து எடுக்கும் மின்சாரம் போல் வெறும் பேச்சின் ஒலியிலிருந்து மின்சாரம் எடுத்து ரயில்களை இயக்கலாம் என்று கிண்டலடிக்கிறார் நாஞ்சிலார். முன்பு தனியாக கைகளை கட்டிப் பேசிக் கொண்டு போவோர்களைக் கண்டால் அச்சமாய் இருக்கும். இப்போது பேசாது போனால்தான் ஏதோ கோளாறு என்று எண்ணத் தோன்றி விடும் நண்பர்களே!
விஞ்ஞான, தொழில் நுட்பங்கள் வசதிகளைக் கொண்டு வருவதைப் போல கேட்டையும் சம விகிதத்தில், சில சமயங்களில் தலைகீழ் வகித்தலும் கொணர்ந்து விடுகின்றன. இது தொழில் வட்டத்தின் தவறோ, அல்லது விஞ்ஞானத்தின் தவறோ அல்ல. பயன்படுத்துவோரின் முன்யோசனையற்ற பயன்பாடுதான் என்றாலும் பசுவின் பால் கலத்திலும் விழாது கன்றுக்கும் ஆகாது மண்தரையில் கொட்டிக் கவிழ்வது போல் ஆகிவிடுகிறதே என ஆசிரியர் கவலைப்படுகிறார். ஆமாம்! நாஞ்சிலாரே! நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை.
எம்.எஸ் என்றொரு மானுடன்
கிட்டத்தட்ட இருபத்தேழு வருட நட்புறவு இவருடன் ஆசிரியருக்கு இருந்திருக்கின்றது. இவர் ஒரு இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளி, ஒப்பமான வாசித்தன்மையாளர். இவர் மெய்ப்புப் பார்க்காத இதழ்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடையாது இவற்றையெல்லாம் தாண்டி இவர் ஒரு மாண்புமிகு மானுடன் என்று கூறுகிறார் நாடன்.
அன்பெனும் பிடி மிகவும் அன்பான கட்டுரை, அது அப்படித்தான் இருக்கும். இருக்கவும் கூடும். ஏனெனில் அது மென்மையான எழுத்துக்களைப் படைக்கும் சி. கல்யாண சுந்தரம் என்னும் வங்கி அலுவலர் வண்ணதாசன் என்னும் சிறுகதை ஆசிரியரைப் பற்றிப் பேசப்படுவதால் அது அன்பாகத்தான் இருக்கும். அவருடைய இன்னொரு பரிமாணமாகிய ஓவியம் பற்றியும் ஈண்டு பேசப்படுகிறது. அவருடைய படைப்பு கடமைகளை விட அவருடைய நட்பு ஆளுமையைப் பற்றி எண்ணி எண்ணி மகிழ்ந்து போகிறார் ஆசிரியர். இவரது சிறுகதைகள் இரண்டு 1975ல் தீபத்தில் வெளியாகின. அவர் எழுதிய இரண்டு கடிதங்களின் ஊக்கங்களால்தான் தான் நாவலாசிரியர் ஆனது என்பதை சம்பிரதாயமாகக் கூறவில்லை. ஆத்மார்த்தமாகக் கூறுகிறேன்” என்று பதிவு செய்கிறார் நாடான்.
‘இரண்டு கதைகளைப் படித்த அளவிலேயே ஒரு நாவலாசிரியருக்குரிய வியக்தி உங்களிடம் இருப்பதை எனக்கு உணர முடிகிறது. உடனடியாக ஒரு நாவல் எழுதுங்கள். உங்களுக்குச் சுலபமாக அது முடியும். என்பது முதல் கடிதமானால், அதே மாதம் வந்த இரண்டாவது கடிதம், ‘நாவல் எழுதுவது மார்கழி மாதம் படித் துறையில் நிற்கிற மாதிரி. தண்ணீரில் இறங்குகிற வரைதான் குளிர். இறங்கின பிறகுதான் சுகம். எழுதுவது என்பது எப்போதும் நேரலாம். இதற்குள்ளே கூட நீங்கள் ஒரு முப்பது பக்கங்கள் எழுதி இருக்கலாம். கதவு திறப்பது மாதிரி, ஒரு ஆரம்பத்தின் புள்ளியில் வெளிச்சப்படப் போகிற பேனாவின் குணங்கள் உங்களின் சிறு கதைகளில் தெரிகிறது என்பதால் சொல்கிறேன். நாவல் எழுதுங்கள்’ வண்ணதாசனின் வார்த்தைகள்
மேலும், நேர்ப் பேச்சின்போது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் எனக்குச் சொன்னது, நாம் மட்டும் நன்றாக எழுதினால் போதாது; அதைவிட முக்கியமான பொறுப்பு, புதிதாக எழுத வரும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது. வேணு கோபாலையும் கண்மணி குண சேகரையும் அழகிய பெரியவனையும் கோபால கிருஷ்ணனையும் உமா மகேஸ்வரியையும் காணும் போது, என்னையறியாமல் எனக்குள் ஒரு பாசம் பெருக்கெடுத்து வரும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
எப்போது சோர்வு ஏற்பட்டாலும், வண்ணதாசன் எழுதிய கடிதங்களை எடுத்து வாசிப்பேன். எனக்கது காருகுறிச்சி நாதசுரம் கேட்பதைப்போல, மிகுந்த தெம்பாக இருக்கும். உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் பரபரப்பு ஏற்படும்.
இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலருக்கும் வண்ணதாசனின் இந்த உற்சாகப்படுத்துதலின் பங்கு கிடைத்திருக்கக்கூடும். நான் முன்கூட்டிப் பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.
வாசச் சமையலும் வடை கறியும் என்னும் கட்டுரையில் பசியும் ருசி அறியும், நித்திரையும் பாயறியும் என்கிறார் நாஞ்சிலார். உணவின் ருசி வகைகள், அவை தொடர்பான விஷயங்கள் இதில் அலசப்படுகின்றன. இறுதியில், “ஒன்றைச் சொல்லாமல் இந்தக் கட்டுரையை முடிக்க இயலவில்லை. இத்தனை வகை வைப்புக்களைப் பற்றி நான் யோசிக்கும் போது எனக்குள் சில காட்சிகள் அசைகின்றன. தளிர்த்த கொடுப்பைக்கீரை ஆய்ந்து வந்து கொடுத்து கூலியாக பழஞ்சி வாங்கிப் போன சாம்பாத்திகள். நார்ப்பெட்டி, சுளவு, சுடவம், அரிவட்டி என்ற புதுப்பனையோலை, புதுப்பனைநார் போட்டுப் பொத்திக்கொடுத்த கூலியாகப் பழஞ்சியும் பழங்கறியும் வாங்கிப் போன குறத்திகள், எல்லா அடியந்திரச் சாப்பாட்டுப் பந்திகளின் இறுதிக் காட்சியாக, நெடுநேரம் காத்துக் கிடந்து கலந்த சோறு வாங்கித் தின்ற பண்டாரம், பரதேசி, பிச்சைக்காரன், நோயாளிகள். பந்தி தீர்த்து எச்சில் இலைகள் விழ விழ அதிலுள்ள சோற்றையும் கறிகளையும் வழித்து மண் பானையில் போட்டுத் தாமும் தின்று குழந்தைகளுக்கும் ஊட்டிய குளுவக் குடும்பங்கள். பந்தியில் இருந்து பாதிச் சாப்பாட்டில் கைதூக்கி வெளியே துரத்தப்பட்ட சிறுவர்கள்…
சமையல் கலை எனும் கோபுரத்தின் அடிவாரத்தில் வாழ்ந்திருந்த அவர்களை நினைக்காமல் போவது எனக்கு நீதி இல்லை.
நினைக்கலாம் நீங்கள்! வண்ண வண்ணப் பதார்த்தங்களைத் தலைவாழை இலையில் பரிமாறி, ஓரத்தில் ஊசல் கறியும் வைக்கிறானே என. அன்றும் இன்றும் பலருக்கும் வாழ்க்கை ஊசிப் போய்த்தான் கிடக்கிறது.” என்கிறார் அவர் என்ன செய்ய இயலும்?
ஙப்போல் வளை ஞமலிபோல் வாழேல்’ என்னும் கட்டுரை உறவுக் கூட்டத்தின் அடர்த்தி திட்டத்தைப் பற்றிப் பேசுகிறது.
‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலை முறைகள் கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.
அழுகை வரவில்லையா உங்களுக்கு?
எனக்கு வருகிறது.
நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர் நாம், நடிகையைக் கோயில் கட்டிக் கும்பிட்டவர் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிச்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரைகிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம், பச்சை குத்திக்கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர் நாம், நடிகைக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர் நாம், மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம். நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? ஏமாளி என்றா, மூர்க்கன் என்றா, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றார்?’
என்று புலம்புகிறார் “புலம்பல் கண்ணிகள்” என்னும் கட்டுரையில் நான். இக்கட்டுரையாகிய ‘‘புண்ணுக்கு’’ என்மை அழகா” என்னும் கட்டுரையில்
“தேசிய அரசியலிலும் மாநில அரசியல்களிலும் லாபிகள் இருப்பதாகச் சொல்வார்கள். சிமெண்ட் லாபி, சர்க்கரை லாபி, துணி லாபி, சாராய லாபி, பெட்ரோலியம் லாபி என்றெல்லாம். தமிழக அரசியலில் ஒரேயொரு லாபி சினிமா லாபி என்கிறார்கள்.
ஒரு கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. உண்மையில் நம்மை ஆளுபவர்கள் யார்? மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் மக்களாட்சி என்றெல்லாம் எழுதினால் தேர்வுகளில் மதிப்பெண்கள் கிட்டும். உட்புகுந்து கேட்டுப் பாருங்கள். கண்ணுக்குத் தெரியாத, முதுகின் மேல் அமர்ந்துள்ள சவாரிக்காரன் யாரென்று? நீங்கள் சிந்துபாத் எனில் கிழவன் யார் ? வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற பாவிகளே, உங்களுக்குத் தோன்றவில்லையா, இந்த சுமையைத் தூக்கித் தூர வீச வேண்டும் என்று. கண் என நினைத்து புண்ணுக்குப் பூசுகிறோமே மை?”
என்று வருத்தப்படுகிறார் ஆசிரியர். தான் கலந்து கொண்ட ஊட்டி நாராயண குருகுலத்தில் நடந்த முகாம் பற்றித்தவறாக கட்டுரை வெளிவந்த போது, தன்படை வெட்டிச் சாய்தல் கண்டு மனஞ்சாம்பி நாஞ்சிலார் உண்மையை எடுத்துரைக்கிறது கட்டுரை ‘தன்படை வெட்டிச் சாய்தல்’. இதன் மூலம் நாஞ்சிலாரின் உண்மைக்கு குரல் கொடுப்போராகக் காட்டுகிறது. உறவுகளின் மதிப்பும், சமுதாய அக்கறையையும், யதார்த்த நடையில் சுருக்கிக் கூறும் பாங்கினையும் இக்கட்டுரைகள் நமக்கு எடுத்து இயம்புகின்றன.
ஆரல்வாய் பெரியப்பாவின் நடுகையில் தொடங்கி சாருகிவேதிதாவின் கோணப்பக்கங்கள் வரை இவர் அளித்த முன்னுரையில் நேர்மையான விமர்சனங்களைக் காணலாம். கவிதைகளைப் பற்றிப் பேசும் போது அதிலிருந்து சில வரிகளைப் பறிப்பதில் விருப்பம் இல்லை. முழுக்கவிதைகளையும் எடுத்துக்கூறி விமர்சிக்கிறார். தன் நூல்களான கதை, நாவல்கள் அனைத்து நூல்களின் முன்னுரைகளையும் இதில் சேர்த்திருக்கிறது. பிற புத்தகங்களுக்கு அவர் அளித்துள்ள மதிப்புரைக்களும் இணைக்கப்பட்டிருக்கிறது. முனைப்பாக திலீப்குமாரின் கடவு என்னும் நூலின் மதிப்புரை சிறந்ததாக இருக்கின்றது.
தமிழ் நாட்டில் தலைமுறை தலைமுறையாய் வாழ நேர்ந்த, இனி எந்தக் காலத்திலும் சொந்த மண்ணுக்குத் திரும்பிப் போக இயலாத படிக்குச் சிக்கிக் கொண்ட, நகரமும் பிற பண்பாட்டு நெருக்கடிகளும் சிதைத்துக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான குஜராத்திக் குடும்பங்களின் நிறம் வெளியே வாழ்க்கை திலீப் குமாரின் பல கதைகளில் காட்சியாகிறது. ‘அக்ரகாரத்தில் பூனை’ பப்பிப் பாட்டியின் குரூரம் எள்ளப்படுகிற அதே நேரத்தில் மலட்டு மருமகள் மாதூரியின் கனிவும் காட்சியாகிறது. காய்தலும் உவத்தலும் இன்றித் தன் சமூகத்தை வெளியாளாக நின்று அவரால் பார்க்க முடிந்திருக்கிறது என்பதே அவரது சிறுகதைகளின் வெற்றி மற்றும் பலம்.
‘கடவு’ எனும் தலைப்புக் கதை ஒரு நவீன கதை, அது ‘வஸ்து’வையும் ‘கபிலவஸ்து’வையும் பற்றிப் பேசுவதனால் மட்டுமல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்திருக்க முடியாத சுதந்திரத்தை படைப்பாளி அடைவதற்கு நவீன இலக்கியம் முக்கியமான காரணம். படைப்பாளி பெறுகிற விடுதலைக்கு இந்தக் கதை ஒரு உதாரணம்.
திலீப்குமார் சிறுகதைகள் தமிழில் தனிப் பாணியைச் சார்ந்தவை. அனுபவித்துச் சிரிக்கும் போதே ஆழ்ந்த வலியை ஏற்படுத்துபவை. ஆர்ப்பாட்டமில்லாமல் மனித வேதனைகளை உணர்த்தி நிற்பவை. இந்தத் தொகுதி அதை வலுப்படுத்திக் காட்டுகிறது.”
பிறக்குறிப்புகள் :
வினா
வீடு புறந்தள்ளுகிறது துணித்து
வெளியோ எனில் உகந்த இடமாயும் இல்லை
காடு அதுவே தவிக்கிறது பதங்குலைந்து
தத்துவப் புல்வெளியில் ஊர்வன வல்லரவுகள்
வரலாற்று யாறுகளின் உண்மை
அரசோ நம்மை கண்காணித்துக்
கொள்ளவே இல்லை.
உடல் இளைத்து கொழுப்பறுத்து
நெடுநாள் வாழ
நடந்து தீரவில்லை இன்னும்
பாரநாள் வாழ்ந்தென்ன செய்ய
எனும் வினா கூடவே வருகிறது நடந்து
இப்படி விரக்தி நிலையில் தள்ளப்பட்டு நிற்கும் நாஞ்சில் நாடனுக்கு என்ன சொல்லி ஆற்றுப் படுத்த?
நாஞ்சில் நாடன் தன் படைப்புகளுக்கு வைக்கும் தலைப்புகளே , அவர் தமிழ் இலக்கியத்தில் கொண்டுள்ள ஈடுபாட்டினை எடுத்துக் காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, எட்டுத் திக்கு மதயானை, என்பிலதனை வெயில் காயும், நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, தன்படை வெட்டிச்சாதல், பெயரணிதல்.நாஞ்சில் நாடன் ஒரு பயணி போன்றவைகள் உலகப்பிரசித்தம். பணி நிமித்தம் அவர் போகாத ஊர் இல்லை. அவரது பயணங்களும், அவரது வாழ்வும் படைப்புகளாகி, மரபுத் தமிழின் அழகினைப் பூண்டு வருகின்றன.
சுவையான, பயனளிக்கும் கட்டுரை.