வடக்கு வாசல் வழங்கும் ’சுப்புடு நினைவில் ஒரு இசைப் பயணம்’ – செய்திகள்
புது தில்லி : தில்லியில் செயல்படும் வடக்கு வாசல் பதிப்பகம் அச்சிட்டு வெளியிடும் மாத இதழ் ’வடக்கு வாசல்’. இப்பதிப்பகம் ’சுப்புடு நினைவில் ஒரு இசைப் பயணம்’ என்ற நிகழ்ச்சியினையும், தனது பதிப்பில் வெளியாகும் ஐந்து புதிய நூல்களையும் இம்மாதம் (ஜூலை 2011) 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வெளியிடுகின்றனர்.
திரு. ய.சு. ராஜன் எழுதிய ’சிந்தனைச் சிதறல்கள்’, திரு. சி.டி. சனத் குமார் எழுதிய ’விருட்சங்களாகும் சிறுவிதைகள்’, திரு. ராகவன் தம்பி எழுதிய ’சனிமூலை’, திரு. ராகவன் தம்பி தொகுத்த ‘வடக்கு வாசல் நேர்காணல்கள்’ மற்றும் எம்.ஏ. சுசீலா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ‘தேவந்தி’ ஆகியன வெளியிடப்படும் நூல்கள் ஆகும்.
தில்லி தமிழ்ச் சங்கம் சாலையில் உள்ள தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் 29, 30 மற்றும் 31 ஜூலை 2011 ஆகிய மூன்று நாட்கள் விழா நடைபெறுகின்றது.
முதல் நாள் : 29 ஜுலை 2011, மாலை 6 மணிக்கு விழா தொடங்குகிறது. இவ்விழாவில் தில்லித் தமிழ்ச் சங்க முன்நாள் தலைவர் திரு. ஜி. பாலச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையுரை வழங்குவார். முக்கிய விருந்தினராக முன்நாள் குடியரசுத்தலைவர் முனைவர் திரு. A.P.J. அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொண்டு, நூல்களை வெளியிட்டு துவக்கவுரை நிகழ்த்த இருக்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியில் பங்குபெறும் மற்ற விருந்த்தினர்கள், இஸ்ரோ வின் விரிவுரையாளர் திரு. ஒய். எஸ். ராஜன், தில்லி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி, ’கலைமகள்’ இதழ் ஆசிரியர் திரு. கிழம்பூர். எஸ். சங்கர சுப்ரமணியன், ‘யங் இந்தியா’ CCI ன் தேசியத் தலைவர் திரு. சங்கர் வானவராயர், கிருஷ்ணகிரி கேம்ப்ரிட்ஜ் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் திரு. சி. டி. சாந்த குமார் மற்றும் அக்ஷயா நிறுவனத்தின் விற்பனைப் பொது மேலாளர் திரு. சி. சுரேஷ் குமார் ஆகியோர் ஆவர். முதல் நாள் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 6:45 மணிக்கு கலைமாமணி முனைவர். திரு. சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறும். வயலின் : சித்தூர் சி.கே. விஜயராகவன், மிருதங்கம் : கும்பகோணம் பத்மநாபன், கன்ஜிரா : வழுவூர் ரவி, மோர்சிங் : மலைக்கோட்டை ஆர். எம். தீனதயாளன்.
இரண்டாம் நாள் : 30 ஜூலை 2011 (சனி) அன்று தலைமை விருந்தினராக நடிகர் கலைமாமணி டில்லி கணேஷ் அவர்கள் கலந்து கொள்வார். அன்று கலந்து கொண்டு சிறப்பிக்கும் மற்ற விருந்தினர்கள் : இராஜ்ய சபா உறுப்பினர் திரு. அம்பேத் இராஜன், உள்த்துறை அமைச்சகத்தின் செயளாலர் திரு. கே. ஸ்கந்தன் இ.ஆ.ப., சமூக நீதி மற்றும் அமலாக்கத் துறை அமைச்சரின் தனிச் செயலர் திரு. ஜகதீசன் கண்ணன், இ.கா.ப., பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் தலைவர் திரு. ஜே. முருகவேல் ஆகியோர். நன்றியுரை : வடக்கு வாசல் எஸ். துரை. இந்நாளின் சிறப்பு நிகழ்ச்சியாக கலைமாமணி முனைவர். நித்ய ஸ்ரீ மஹாதேவன் பக்தி இசை வழங்குவார். வயலின் : எம். ஏ. கிருஷ்ணசாமி, மிருதங்கம் : ஆர். அனந்த கிருஷ்ணன்.
மூன்றாம் நாள் : 31 ஜூலை 2011 (ஞாயிறு), தலைமை விருந்தினராக தில்லி தேர்தல் அணையர் திரு. வி. எஸ். சம்பத் அவர்கள் கலந்து கொள்கிறார். மற்ற விருந்தினர்கள் : சார்க் அமைப்பின் இயக்குநர் திரு. எம். ஸ்ரீதரன், வெளிநாட்டு வணிகத் துணை இயக்குநர் திரு. விஜய் மோகன், தில்லி கரோல் பாக் பகுதியின் காவல் துறைத் துணை ஆணையர் திரு. எஸ். சரவணன் ஆகியோர். நன்றியுரை : பென்னேஸ்வரன், ஆசிரியர், வடக்கு வாசல். மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு அப்பாஸ் மற்றும் ’மௌனராகம்’ முரளி குழுவினர் ‘தமிழ்த் திரையில் காந்தர்வக் குரல்கள்’ என்ற தலைப்பில் பழைய தமிழ்த் திரையிசைப் பாடல்களை வழங்குகின்றனர்.
தில்லிவாழ்த் தமிழர்களும், மற்றும் வாய்ப்புள்ள அனைவரும் திரளாய்க் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வல்லமை வேண்டுகிறது.
விழா சிறப்புற நடை பெற வாழ்த்துக்கள்.