நாகேஸ்வரி அண்ணாமலை


வருடத்தில்  பல மாதங்களை நாங்கள் இப்போது  அமெரிக்காவில்தான் கழிக்கிறோம்.  சில மாதங்கள் தாய்த் திருநாட்டிற்கு வருகிறோம்.

இந்த முறை நாங்கள்  அமெரிக்காவை விட்டுக் கிளம்புவதற்கு  சில வாரங்கள் முன்பு இல்லினாய்  ஆளுநர் மீதான ஊழல் வழக்குகள்  இரண்டாவது முறையாக் விசாரிக்கப்பட்டு அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களில் சில நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டது.  முதல் முறை அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் படாமல் போனாலும் இரண்டாவது முறை வழக்குத் தொடர்ந்து அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அவர் சிறை வாசம் அனுபவிக்கப் போகிறார்.  அவர் வழக்கைத் தொடர்ந்து கவனித்து வந்த எனக்கு இந்தியாவில் பெரிய புள்ளிகள் யார் மீதாவது இப்படி வழக்குத் தொடரப்பட்டு அவர்களில் யாராவது சிறைக்குச் சென்றிருக்கிறார்களா என்ற எண்ணத்தை எனக்குள் தோற்று வித்தது.

சில வாரங்களில் தாய்த் திருநாட்டிற்கு வந்து  சேர்ந்தோம்.  நாங்கள் வந்து சேர்ந்த நேரமோ என்னவோ பத்திரிக்கை  முழுவதும் ஊழல் புரியும் அரசியல்வாதிகள் பற்றிய செய்திகள் தான்.  தமிழ் நாட்டின் தி.மு.க. கட்சியின் ஆண்டிமுத்து ராஜா என்பவர் மத்திய அமைச்சரவையில் இருந்த போது 2G ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஊழல் புரிந்ததாக சந்தேகத்திற்கு உள்ளாகி விசாரணைக் கைதியாக இருக்கிறார்.  அவரை அடுத்து மத்திய மேலவையில் உறுப்பினராக இருந்த கனிமொழி என்பவர் மீது ஊழல் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவரும் விசாரணைக் கைதியாக இருக்கிறார்.  மத்திய அமைச்சரவையில் இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி என்பவர் மீதும் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீதும் சீக்கிரமே விசாரணை நடக்கப் போகிறது. விசாரணை தண்டனையில் முடியுமா என்பது பெரிய கேள்வி.

தமிழ்நாட்டில் புதிதாக முதல் அமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் அம்மையார்  இந்த ஊழல் விசாரணைகள் எல்லாம்  துரிதமாக விசாரிக்கப்ப்ட வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார், இவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் பல வருடங்களாக விசாரணையில் இருந்து வருவதை சௌகரியமாக மறந்துவிட்டு. இவர் விசாரணையை எப்ப்டியெல்லாம் தள்ளிப் போடலாம் என்று ஒவ்வொரு தடையாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்.

பல வருடங்களாக தமிழ் நாட்டில் தான் ஊழல் மன்னர்கள் கோலோச்சுகிறார்கள்  என்று நாங்கள் அசந்து போயிருக்க, தமிழ் நாட்டிற்கு கர்நாடகம் ஒன்றும் சளைத்ததல்ல என்பது போல் சில வருடங்களாக கர்நாடக அரசியல் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த வண்னம் இருக்கின்றன.  கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அமைச்சரைவையில் இருக்கும் இரண்டு ரெட்டி சகோதரர்களும் பல வருடங்களாகச் சட்ட்த்திற்குப் புறம்பாக இரும்புத் தாதுவை வெளி நாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டு.  கர்நாடக் லோக் அயுக்தாவின் தலைவர் சந்தோஷ் ஹெக்டே இந்த வழக்கை விசாரித்து சீக்கிரமே அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறார்.  அவர் அறிக்கையின் சாரம் ஏற்கனவே ஓரளவு வெளியாகி விட்டது.  ரெட்டி சகோதரர்கள் மட்டுமல்ல, முதலமைச்சர் எடியூரப்பாவும் அவர்களிடம் சில சலுகைகள் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார் என்று அவர் மீதும் குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது.  இரும்புத் தாது வழக்கில் எந்தக் காரணம் கொண்டும் எடியூரப்பாவைச் சேர்க்க வேண்டாம் என்று எடியூரப்பாவிற்கு வேண்டப் பட்டவர்கள் சந்தோஷ் ஹெக்டேயிடம் தூது போயிருக்கிறார்கள்!

இப்போது தொழிற் சாலைகள்  நிர்மாணிப்பதற்காக விவசாயிகளிடமிருந்து  நிலங்களைப் பறிப்பதில் நிறைய  ஊழல் நடந்து வருகிறது.  விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுப்பதில்லை.  பல விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களையே இழந்திருக்கிறார்கள்.

கேரளாவில் இரண்டு பெரிய நடிகர்களின் இருப்பிடங்களை  வருமான வரி இலாகாவைச் சேர்ந்தவர்கள்  பல மாநிலங்களில் சோதனை போட்டிருக்கிறார்கள்.  சினிமாவில் இலட்சியவாதிகளாக  வேஷம் போடும் இவர்கள் தாங்கள்  படங்களில் நடிப்பதற்கு  வாங்கும் உண்மையான சம்பளத்தை மறைக்கிறார்கள்; தங்கள் உறவினர்கள் பெயர்களில் சொத்துக்களாக வாங்கிக் குவிக்கிறார்கள்; ஒழுங்காக வருமான வரியைக் கட்டுவதில்லை.

எந்த அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் ஊழல் இல்லாமல் இருப்பதில்லை.   எந்தக் காரியம் ஆக வேண்டியிருந்தாலும் லஞ்சம் கொடுக்காமல் காரியம்  நடப்பதில்லை.

இப்போது எல்லா அரசுத் துறைகளிலும் கணினியைப் பயன் படுத்துகிறார்கள்.  கணினி மூலம் அரசின் நடவடிக்கைகளை வெளிப்படையாக (transparent) ஆக்கலாம் என்ற நம்பிக்கை உருவாகிக் கொண்டிருக்கும் போதே, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனி அடையாள எண் தரும் ஆதார அட்டைகள் விஷயத்திலும் ஊழல்கள் நடந்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது.  ரேஷன் அட்டைகளில் போலிகள் இருக்கின்றன; சமையல் எரிவாயு அட்டைகளில் போலிகள் இருக்கின்றன.  இந்தக் கார்டுகளை வினியோகிப்பதில் உள்ள ஊழலைக் களைய ஆதார அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு அரசு முயன்று வருகிறது.  ஆனால் அவற்றிலும் போலிகள் வந்து விட்டனவே!.

ஊழலே! என் தாய்த் திருநாட்டைத் தவிர உனக்குப் போக்கிடம் இல்லையா?  உன் பிடியிலிருந்து என் தாய்த் திருநாட்டை யாராலும் காப்பாற்றவே முடியாதா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *