கோவையில் யுரேகா சூப்பர் கிட்ஸ் நடத்திய ’குழந்தைகள் விழா’ – செய்திகள்

கோவை : வடவள்ளி, சின்மய வித்தியாலயா பள்ளியில், 24 ஜுலை 11 (ஞாயிறு) அன்று AID INDIA அமைப்பின் ஒரு பிரிவான யுரேகா சூப்பர் கிட்ஸ் (Eureka SuperKidz), கிராமப்புற மற்றும் நகர்புறக் குழந்தைகளை ஒருங்கிணைத்து போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கியது.

பாட்டுப் போட்டி, சிறுகதை எழுதுதல், கதை சொல்லுதல் மற்றும் ’கொலாஜ்’ எனப்படும் ஒட்டோவியம் செய்தல் போன்ற நான்கு வித போட்டிகளை நடத்தியது. இப்போட்டிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களும் மற்றும் கோவையைச் சுற்றியுள்ள பேரூர், மதுக்கரை, கிணத்துக் கடவு, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளின் அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் உற்ச்சாகமாகக் கலந்து கொண்டனர்.

இப்போட்டியை திருவாளர்கள் மு. முருகேஷ், வெங்கடேஷ், மலையாண்டி, மதுரை சேவகன், செல்வி. சித்ரா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இப்போட்டியில் கலந்து கொள்ள இருநுற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் வந்திருந்தனர்.  அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களின் ’யுரேகா சூப்பர் கிட்ஸ்’ பயிற்சியாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய போட்டிகள் மதிய உணவு இடைவேளை வரை தொடர்ந்தன.  பாட்டுப் போட்டியில் குழந்தைகள் தமிழ் தேசிய கவிஞர்களின் பாடல்களையும், நாட்டுப் புற மற்றும் விழிப்புணர்வுப் பாடல்களையும் பாடினர்.  குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சில பெற்றோரும், பல ’யுரேகா சூப்பர் கிட்ஸ்’ பயிற்சியாளர்களும் உதடசைத்தும், கைகளை அசைத்தும் உற்சாகமூட்டினர்.  உற்சாகம் கரைபுரண்டு ஓடிய இப்போட்டியில், நேரம் செல்லச் செல்ல, பங்கு பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனது.  ஒரு வழியாக மதியம் ஒரு மணி முப்பது நிமிடத்தில் போட்டி முடிவுக்கு வந்தது.

அதே சமயத்தில் சிறுகதை எழுதுதல் மற்றும் கதை சொல்லுதல் போட்டிகளும் பள்ளியின் வேறு வகுப்பு அறைகளில் நடந்து கொண்டு இருந்தன.  இப்போட்டிகளின் நடுவர்களாக கோவையைச் சார்ந்த ‘வசந்த வாசல்’ கவிமன்றத்தின் கவிஞர்கள் திருவாளர்கள் கா.சு. குணசேகரன், கோவை புதியவன், முகில் தினகரன், ரத்னப் பிரியன், நா.கி. பிரசாத், இராஜேந்திரன் ஆகியோர் செயல்பட்டனர்.

இளம் கொலாஜ் கலைஞர்களோ, தங்களது கைவண்ணத்தை காகித ஒட்டோவியங்களாகப் படைத்துக் கொண்டிருந்தனர்.  கொலாஜ் போட்டியின் நடுவர்களாக ’தூரிகா’ திரு. சின்னராஜ் அவர்களும் கேப்டன் கணேஷ் அவர்களும் செயல்பட்டனர்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக ’யுரேகா சூப்பர் கிட்ஸ்’கள் வழங்கிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.  நாட்டுப்புற கும்மிப் பாடலுக்கு, சிறுவர் சிறுமியர் அழகாய் நடனம் ஆடினர்.

விழாவின் முத்தாய்ப்பாக, வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்த நடுவர்களையே பரிசளிக்க வைத்து அதிலும் புதுமை செய்தனர் ’யுரேகா சூப்பர் கிட்ஸ்’ன் ஒருங்கிணைப்பாளர்கள்.  பரிசளிப்பு நிகழ்ச்சியை திரு. மு. முருகேஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.  பரிசு வாங்கிய வெற்றியாளர்களில் ஒருவர் உற்சாக மிகுதியால் அழுததும், அவரைக் கண்ட அவரது தாயாரும் ஆனந்தக் கண்ணீர் வடித்ததும் அங்கே நிகழ்ந்தது.  பாட்டுப் போட்டியில் பரிசு பெற்ற ஒரு சிறுமியை அறிவிப்பாளர் “ ‘சிறிய தேவதை’ வருகிறார்!” என அறிவிக்க, மேடையேறிய அவரிடம் நடுவர் ‘எந்த பள்ளியில் படிக்கிறீர்கள்?’ என கேட்க, சிறுமியோ ‘Little Angle’ என பதிலளிக்க, ”பள்ளியும் ‘சிறிய தேவதை’ தானா?” என நடுவர் மீண்டும் கேட்க, அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது!

இறுதியாக ’யுரேகா சூப்பர் கிட்ஸ்’ன் நூலகர் திரு. மதுரை சேவகன் அவர்கள் நன்றி நவில, விழா இனிதே நிறைவுற்றது.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.