பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11216346_840352649352269_429205382_n

திரு எம். வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

23 thoughts on “படக்கவிதைப் போட்டி (15)

  1. முடிவெடுத்த
    முற்றுப் புள்ளி
    தருணங்களில் 
    வர்ணங்கள் சொட்டும் 
    கண்ணீர்… 

    குதிக்க தயாராகும் 
    உடலுக்குள் 
    கடவுள் அலறுகிறார்…

    எட்டிக் குதித்த
    கால்களில் 
    வெளிகள் முளைக்கின்றன…

    சிறகுடையும் 
    தரையில் பாதங்கள் 
    சுவடுகளாகும்…

    கண்கள் விலகும் 
    பின்னோக்கில் 
    ஒரு மரணம் வாழ்கிறது…

    தூரத்தில் ஒளிந்து 
    பார்க்கும் தூரத்தின்
    கன்னத்தில் 
    படும் ஒரு துளி ரத்தம் 
    தற்கொலையை முற்றும்…

    கவிஜி 

  2. துயர் விழுங்கிப் பறத்தல்

    பறந்திடப் பல
    திசைகளிருந்தனவெனினும்
    அப் பேரண்டத்திடம்
    துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ
    சௌபாக்கியங்கள் நிறைந்த
    வழியொன்றைக் காட்டிடவெனவோ
    கரங்களெதுவுமிருக்கவில்லை

    ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி
    ஒவ்வொரு பொழுதும்
    காற்று ரணமாய்க் கிழிக்கையில்
    மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல
    தன் சிறகுகளால்
    காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்

    முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்
    தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து
    தன் எல்லை மீறிய பொழுதொன்றில்
    மிதந்தலையும் தன் கீழுடலால்
    மிதித்திற்று உலகையோர் நாள்

    பறவையின் மென்னுடலின் கீழ்
    நசுங்கிய பூவுலகும் தேசங்களும்
    பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து
    தெறித்த குருதியைப் பருகிப் பருகி
    வனாந்தரங்களும் தாவரங்களும்
    பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட
    வலி தாள இயலா நிலம் அழுதழுது
    ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து
    ஓடைகள் நதிகள்
    சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட

    விருட்சக் கிளைகள்
    நிலம் நீர்நிலைகளெனத் தான்
    தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்
    தடயங்களெதனையும் தன்
    மெலிந்த விரல்களிலோ
    விரிந்த சிறகுகளிலோ
    எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு
    வெளிறிய ஆகாயம் அதிர அதிர
    தொலைதுருவமேகிற்று
    தனித்த பறவை

    – எம்.ரிஷான் ஷெரீப்

  3. யாரோ?

    துணை தேடிச் செல்லும் 
    தும்பை நிற புள் 

    அதன் இறகு உதிரும் 
    வாசம் மண்ணோடு பேசும்  
    மீதமிருக்கும் சுவடுகளை..  

    ஒற்றைக் கால் 
    தவமிருந்து கிடைத்த காதல் 
    தட்டிப் பறித்தது 
    ஒரு தோட்டா….

    விதை முற்றாத 
    இளம் கனியின் சூளுடைத்த 
    பாவம் யாருடையதோ?

    தனிமை கொன்று 
    தனித் தேசம் தேடும்
    துயரத்தை மாற்றி எழுதிட .. 

    விஞ்ஞான உலகில் 
    சுட்டுத் தெறித்த 
    காதல் பறவையின் 
    குருதி குடித்தவனும் 

    மனிதன் என்றே  
    அறியப் படுகிறான்!!

     

  4. திரைகடலோடும் கொக்கு!

    ஆற்றில் வரும்தண்ணீ ரைஅணைகள் கட்டியே 
    வேற்றுமை காட்டித் தடுக்கின்றார் – சோற்றுக்குப்
    பஞ்சமில்லா சோழநாட்டில் நெல்விளைய நீருமில்லை
    அஞ்சித் தவிக்கும் விவசாயி – வஞ்சகம்
    பண்ணாத வான்மழை வேண்டித் தொழுகின்றான்
    வெண்கொக்கு ஒன்று இரைவேண்டி – தண்ணீரைத்
    தேடியே வானத்தில் ஆங்கே அலைகிறது
    நாடியநீர் எங்குமே காணவில்லை – வாடித்
    தவித்து வறண்டபூமி யில்வீழ்ந்த போது
    புவிதனில் வெப்பக்காற் றோடு – செவியினில்
    கேட்டது நொந்த விவசாயி சொன்னவுரை
    மாட்டுக்கும் புல்லுஇல்லை புள்ளினங்கள் – வேட்டைக்கு
    மீன்களும் இங்கில்லை; முன்னொரு காலத்தில்  
    வான்மழை பொய்த்தாலும் வற்றாத – பொன்னிநதி
    ஆற்றினில் வெள்ளம் வரும்அதில் துள்ளியே
    வேற்றிடத்து மீன்கள் வரும் – காற்றென
    ஓடிடும்மீன் ஓட உறுமீன் வரும்வரை
    வாடியே காத்திருந்து தன்னிடத்து – நாடியே
    வந்தமீனைக் கொத்தியே தின்றிருக் கும்கொக்கு 
    அந்தக்கா லம்திரும்பா தோஇன்று – நொந்தநம்
    வாழ்வில் இனிவசந்தம் தான்வீசா தோ;ஒருநாள் 
    தாழ்ந்தநம் வாழ்வும் தலைநிமிரும் – வீழ்ந்ததை 
    எண்ணியே வருந்தாதே வெண்கொக்கே நீமுயன்றால்
    மண்ணிலே வேறிடத்தில் வாழ்விருக்கும் – விண்ணில்
    பறந்தேதான் சென்றுவிடு; இச்சொல்லால் அவ்விடமே
    துறந்து செழிப்பான வாழ்வுதேடும் – திறத்தால்
    திரைகடல் மேலே விரைவாய் பறந்து
    இரைதனைத் தேடுகின்ற கொக்கு

  5. உயரம் உயரும்
                                 பயனி

    நீரலை
    காற்றலை
    இரண்டடிலும் அலையும் கொக்கு
    காற்றின் சாட்சி
    நீரின் காட்சி

    வெள்ளை
    நீலம்
    இரண்டும்  நெகிழும்  நீர்வழி

    கடலும் வானும்
    கலக்கும்  பெருவெளி

    காத்திருப்பும் முயற்சியும்
    ஒன்றில் ஒன்று தொடரும்
    வெற்றிடக் கொக்கு
    ஒரே தாவலில்
    வெற்றிக் கொக்காய் மாறும் தருணம்

    எதுவும்
    எழுந்தால்
    இருக்கும் இடம் விட்டுப்
     பறந்தால்
    சுகம்
    உயரும் 
    உயரம்

    காற்றின் விசிறி
    கொக்கின் சிறகு
    காலத்தின் பறத்தல்

    நீரின் வேர்வை
    குமிழும் குமிழி

    முன்னும் பின்னும்
    தொடரும் தொடர்க்காட்சிகள்

    துண்டாய் நிற்கும் 
    புகைப்படம். 

  6. பயணத்தில் பறவை…

    காட்டை வெட்டி அழித்துவிட்டார்
         காண வில்லை மழையினையும்,
    நாட்டி லுள்ள நீரையெல்லாம்
         நச்சு நீராய் மாற்றிவிட்டார்,
    கூட்டைக் கட்ட இடமுமில்லை
         குடும்பம் நடத்த வழியுமில்லை,
    நாட்டை விட்டே செல்லுகின்றேன்
         நல்ல வாழ்வைத் தேடிடவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  7. தண்ணீர்க் கரையில் தவமிருந்த கொக்குக்கு
    உண்பதற் கேற்றதோர் மீனின்றி -விண்மீன் 
    பிடித்துண்ண வேகம் பறக்கின்றத் தன்மை 
    இடியை இடிக்கும் இடி.

  8. எனக்கு எல்லையில்லை

    சோம்பிய மீனுக்காய்
    ஒற்றைக் காலில்
    குறுந்தவம் செய்திடுவேன்
    என்று நினைத்தாயோ நீ?
    ஆழ்நிலை சென்றாலும்
    முழ்கி நான்
    கொத்தியெடுக்க
    வருவேன்

    எனது இரை
    நீ என்றானபின்
    விண்மீனின் பிம்பம்
    என்றாலும்
    விரும்பி உண்பேன்.

    வானில் மிதந்தாலும்
    நீரில் அமிழ்ந்தாலும்
    என் சிறகு நனைந்தாலும்
    காடு வறண்டாலும்
    நீர் நிலை உயர்ந்தாலும்
    நான் பறப்பேன்
    உன்னால் நீந்த முடியுமா
    என் அலகின் இடுக்கில்?

  9. பயணித்துப் பார்க்கலாமே பறவையென…. 

    நேற்றைப் பற்றிக் கேட்டு 
    பின்னோக்கி விரட்டும் 
    எதுவும் வேண்டாம் …. 

    நாளை பற்றிச் சொல்லி 
    கனவுக் கானச் செய்யும் 
    கற்பனையும் வேண்டாம்… 

    இன்று மட்டுமே நமக்கானதாய் வாழ 
    கற்றுக் கொள்ளலாமே 
    இயற்கையிடம் …. 

    தென்றலாய்த் தழுவிக் கொள்ளலாம் 
    தீயாய் எரித்துப் போடலாம் 
    நீரோடையாய்ச் சங்கீதம் பாடலாம் 
    அலைகடலெனப் புரட்டிப் போடலாம் …. 

    பூஞ்சாரலாய்த் துளிர்க்கச் செய்யலாம் 
    புயல் மழையாய்ப் பாழ்படுத்தலாம் 
    புன்னகையால் பைத்தியமாக்கலாம் 
    புறக்கணிப்பால் சித்ரவதை செய்யலாம் …. 

    ஒரு உதயமாய்ப் பிறப்பெடுத்து 
    அஸ்தமனமாய்ச் செத்துப் போகலாம் 
    நேற்றைக் காணக் கவலைகளிலிருந்தும் 
    நாளைக்கான கனவுகளிலிருந்தும் 
    நிகழ்கால நிஜம் தொலைக்காது …. 

    கடல் தாண்டிப் பயணிக்கும் 
    ஒற்றைப் பறவையின் 
    இரட்டைச் சிறகுகளில் அடைக்கலமாகி 
    பூமியின் தாகத்திற்கு 
    சிறிது பூமழை தூவலாம் வா …. 

  10. நதி முட்டை பொரித்து

    வெளியேறி வருகிறேன் வானமே
    எனக்காக
    என் தாய்க்கு
    மழை உணவு தா!

    மாறாக நாம் காதல் செய்யலாம்
    கலவி கொள்ளலாம்
    வாழும் வரை
    பறந்து உன்னை முத்தமிட்டு கொண்டே இருப்பேன்
    சிறு சிறு மேகமாக சூல் கொள்ளேன்

    இரவெல்லாம் நான் புசிக்க
    நிலாகனி தருகிறாய்
    மழைத்துளியை ஏன் விண்மீனாக
    மறைத்து வைத்து கொள்கிறாய்?

    உன் மீது படிமங்களையும்
    உவமைகளையும் தெளித்து
    கெஞ்சுகிறேன்
    உன் சர்வாதிகாரத்தை நிறுத்தி
    சமத்துவ மழை அனுப்பு

    பசுங்காடுகள் தழைத்து
    கிடக்கும் பூமியை படை
    நான் இருக்கும் வரை
    என் இறகுகளால் உன்னை
    வருடி விடுகிறேன்

  11.      “கடக்க முடியும்”
          (மீ.விசுவநாதன்) 
    பிரபஞ்சம் அளக்க முடியாத
    பெரும் கனவு !
    விழித்துக் கொண்டேதான் 
    அதைக் கடக்கவேண்டும் !
    வெள்ளை உள்ளமும்
    நீல விஷமும் 
    உள்ள பயணத்தில்
    கவனமாக, ஒரே குறியாக
    பட்டும் பாடாமலும் பற ! 
    தைரியமாகப் பற !
              (  06.06.2015)

  12. கடல் கடந்து வானம் அளக்க…. 

    வானம் பெரிது 
    எனக்குத் தெரிந்த 
    நம் வீட்டின் அளவை விட 
    என்றாள் பாட்டி …. 

    வாழ்க்கை முழுதும் பறந்தாலும் 
    கடக்க முடியாத் தொலைவு 
    நம் கொள்ளைப்புறக் கிணற்றின் 
    ஆழம் மாதிரி என்றாள் அம்மா…. 

    அத்தை சொன்ன அடுக்களையின் அளவும் 
    அக்கா சொன்ன தாழ்வார அகலமும் தவிர்த்து 
    வீதியின் முனை அறிமுகமாகலாம் எனக்கு …. 

    நாளை யாரோ வரலாம் 
    என் முளை விட்ட 
    இறகுகளின் இழை ஒடிக்க -அதுவரை 

    நீர் துளைத்த கால்கள் சில்லிட 
    பறக்க முயற்சிக்கிறேன் 
    என்னால் முடிந்த வனம் அளக்க …. 

  13. நான் போகிறேன் நல்ல சூழல் நாடி …………………

    கடலில் மிதக்கும் கட்டான கப்பல்கள்
    குடம் குடமாய் கொட்டும் எண்ணெய்
    கடல் வாழ் எம்மவரின் சிறகில் ஒட்டி
    சடலமாய் மிதக்க வைக்கிறது சமுத்திரத்தில் !

    விடுமுறைக் கழிப்பில் கூடும் மனிதர்கள் கூடி
    இடுகின்ற குப்பைகளும் கூளங்களும் ஆங்கே
    நடுக்கடலில், கரை கழுவும் அலைகள் – சேர்த்து
    எடுத்துவிடும் எம்முயிரைக் குற்றுயிராய்! வருத்தி …

    நேர்த்தியுடன் நான் கொண்ட சிறகு இன்று
    பார்த்திருக்க பாழாகும் முன்னே – பறக்கிறேன்
    மார்க்கம் ஒன்றை வான் வழியாய்க் கொண்டு!
    தேர்ந்தெடுப்பேன் சிறந்த சூழல் கண்டு …

    சூழல் மாசு செய்யும் மாந்தர் கேளீர் – நன்கு
    பாழ் படாத சூழல் காப்பீர் யாவர்க்குமாய்
    மாள்வது என்னவோ உயிரினம் யாவுமே –அவை
    வாழ்வை எண்ணியே சூழல் பேணுவீர் !

    புனிதா கணேசன்
    05.06.2015

  14. பறத்தல் எளிது

    சிறகுகள் துணையுடன்
    பாரெங்கும் பறப்போம் வா

    உனக்கென இருந்த சிறகுகள்
    சந்தோசம்
    அவைகளை உதிர்த்து
    பாலைவன முள்மரமாய் நிற்கிறாய்
    நம்பிக்கை வேர்களை அறுத்த பின்
    ஊக்க நீருற்றி என்ன பயன்?

    பறத்தல் எளிது
    முயன்றால் நிஜத்தில்
    மூழ்கினாலும் கனவில்
    மனம் மட்டும் போதும்
    மனம் அலையலாம்
    தொலையலாமா?

    பாசப் பாசிகள் வலைப் பின்ன
    கவலைகள் குளம் தன்னில்
    ஆழ்ந்திட்ட மானிடனே
    என் கால்களையாவது பற்றிக் கொள்

    என்
    சிறகுகள் துணையுடன்
    பாரெங்கும் பறப்போம் வா

    -கனவு திறவோன்

  15. விரித்திடு உன் இறக்கையை
      விழித்திரு இலக்கு நோக்கி
    நிலமென்ன நீரென்ன நிலவென்ன
     நித்தம் நீவாழும் எல்லைதான்
    சித்தம் தயாரானால் உண்டிங்கு
     சீர்தூக்கும் வாழ்வு எங்கும்
    அச்சம் சிறிதும் தேவையில்லை
     ஆங்கே ஒர் அளவிருந்தால்!

    உள்ளென்ன புறமென்ன வெளியென்ன
     உலகம் வாழ்வதற்கு ஓரிடமே
    உன்னை அதில் வைத்து
     உலகைப் புரியவைக்கும் பேரிடமே
    உற்றார் உறவென்ப ஊர்வரைக்கும்
     பெற்றார் உறவென்ப ஊன்வரைக்கும்
    மற்றார் எவர்வருவர் எல்லைக்கு
     மானுடம் பெற்ற வரம்பொறுத்து!

    கண்ணில் தெரிகின்ற தூரம்
     காணும் வரம்தானே வாழ்வு
    தேடும் இரைதானே உணவு
     தீர்க்கம் செல்கின்ற உடம்பு
    இடையில் எதுநடக்கும் அறியா
     இன்ன பிறர்க்கு இரையானால்?
    ஏதும் எண்ணுவது இல்லை
     என்றும் இயற்கைவழி வெல்ல!

    நிலையைத் தேடி ஓடும்
     நீர்ப்பறவை யானெனினும் எந்தன்
    நிலையில் தவறுவதும் இல்லை
     நின்று வருந்துவதும் இல்லை
    நிலத்தார் வாழ்வதில் நடக்கும்
     நித்தம் மாறுவதும் இல்லை
    நீரும் வறழ்கின்ற போது
     நாளும் ஓடுவதே வாழ்வு!

    ஏதும் சேர்க்கின்ற பழக்கம்
     எனக்கிங்கு இல்லை யதனால்
    நோக்கம் சிதறுவது இல்லை
     நொந்து நாளும் வாழ்வதில்லை
    இருந்தால் இரைதேடிச் செல்வேன்
     இறந்தால் இரையாகிப் போவென்
    இப்படி ஒருவாழ்வு மண்ணில்
     இருந்தால் சொல்லுங்கள் மானிடரே!

    என்னில் பயிலுங்கள் வாழ்வை
     என்றும் துன்பமில்லை வாழ்வில்
    எதற்கும் அச்சமில்லாப் பயணம்
     எங்கே போய்முடிந்தால் என்ன?
    இருக்கும் வாழ்க்கைதான் சொர்க்கம்
     இறந்தால் போவதை யாரறிவார்
    நிலைக்கும் பொருளில்லை உலகில்
     நீர்க்கும் அதுபொருந்தும் அறிவீர்!

    கிடைக்கும் வாழ்வதுவில் லயித்து
     கிளைக்கும் சொல்லிடுவீர் நன்றாய்
    பிழைக்கும் வழிகூட நெறியாய்
     உழைக்கும் நேர்மைதனில் என்று
    உடலைப் பயிற்சியெடு நன்றாய்
     உலகை வென்றிடுவாய் நாளும்!
    நிலையாய் இருப்பதல்ல வாழ்வு
     சிலையாய் நிற்பதில்தான் பெருமை!

    அன்புடன்
    சுரேஜமீ

  16.    உயர  உயரப் போகிறேன்

    வற்றிப்போன
    நதிகள் ஏரிகள்
    வறண்டு போன
    வாய்க்கால்கள்
    ஒருவேளை உணவு கூட
    கிடைக்காமல்
    வாழ்வதாரம் தேடி
    பறக்கின்றேன்
    எனைக்கண்ட
    நரிக்குண மனிதன்
    பரிவின்றி சூட்டான்
    ஓலமிட்டபடியே
    உயர உயர பறக்கின்றேன்
    என்னை காப்பாற்றிக்கொள்ள
    இறைவா நீதான் என்னில்
    நிறைவாயா  இல்லை  
    நானே உன்னில் மறைவேனா?

    சர்ஸ்வதி ராசேந்திரன்

  17. வல்லமை படக்கவிதை 15
    கூடிணைக்குமிடம் நிரந்தரம்.

    திருவுடை பெருமை கொண்டது
    ஒரு துணையோடு வாழ்வது.
    ஆவலாய் ஆண்  குச்சிகளோடிறங்க
    காவலர் மாறும் கட்டுதிட்டமாய்
    கடமையேற்றுப் பெண் கூடிணைக்கும்.
    இலகுவாக நீரில் நடக்க
    இறகுகளற்ற நீண்ட கால்கள்.
    கழுத்தை வளைத்துப் பறக்கும் நாரை.

    அகண்ட உலகில் அரசாட்சி
    விதண்டா வாதமில்லை விசாவின்றி
    பனிக் காலத்தில் கர்மசிரத்தையாய்
    தனிச் சுதந்திரமாய் திசையறிகருவியின்றிப்
    புலம் பெயரும் மாபெரும்
    புதிர் நிறை புள்ளினம்! ஐரோப்பாவில்
    செவிவழிச் செய்தியாய் பிள்ளைச் 
    செல்வம் காவி வரும் நாரை.

    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    6-6-2015.

  18. இரை தேடி .. !

    சி. ஜெயபாரதன்.

    நெடுந்தூரம் 
    நீண்ட நேரம், நில்லாமல்
    பசியோடு
    இரை தேடிப் பறக்கும் எனக்கு
    குண்டடி கிடைக்குமா ?
    கெண்டை மீன் கிடைக்குமா ?
    முதலை வாய் விருந்தா ?
    திமிங்கலப் பற்கள் அரைக்குமா ?
    இல்லை; 
    பாய்ந்து வரும்
    பருந்து மீன் பறிக்குமா ?
    பயங்கர வாழ்வில் என்றும்
    பரிதவிப்பே !
    இரை தேடிப் போகும்
    நான் பிறர்க்கு
    இரையாகிப் போவேனா ?  

    +++++++++++++

  19. இறகை மெல்ல அசைத்து

    காற்றில் மிதந்தபடி

    நீரில் பிம்பம் கண்டு

    மெல்ல பறக்கையில்

    கவனம் கவர்ந்த

    துள்ளிக் குதிக்கும் மீனையுமே

    அலகால் விருட்டென

    பற்றிக் கொண்டு

    மேலெழும்பி – காற்றைக்

    கிழித்தபடி பறந்து

    பாறையின் மீதே

    சேகரித்திருக்கும்

    மீன் குவியலுடன்

    சேர்த்திட்டால் – கவலையின்றி

    பசியாறி களிக்கலாம் !

    மகிழ்வோடு சிறகை விரித்து

    வானையும் அளந்து

    சிறகடிக்கலாம் !

  20. ஆழிப் பெருங்கடலை அன்றாடம் தாண்டுமிந்த
    ஏழைக்குச் சொர்க்கம் எழும்மீனே! – பாழுளத்தார்
    குப்பையால் மீன்வளத்தைக் கொல்கின்றார்; சுத்தநிலை
    எப்போது வாரும் இனி

  21. உள்ளொன்று வைத்து
    புறமொன்று பேசும்
    வேசங்கள் இல்லாமல்
    விருப்பமொன்று இருந்தும்
    வாழ்க்கையென்று சமாதானப்படும்
    சமரசம் இல்லாமல்
    அன்பொன்று இருந்தும்
    இடைநிற்கும் வேறுபாட்டின்
    மாயையில் வீழாமல்
    மாற்றோரின் இன்னல்களை
    பாராமுகமாய் தனக்கென எழுப்பும்
    சுயநல இலட்சியமில்லாமல்
    எல்லையில்லாமல்
    என்னில் வசப்படாமல்
    விட்டு சிறகடித்ததும்
    முன்னே விரிந்தது ஆகாயம்

  22. நினைப்பதும் நடப்பதும்

    இரைதேடிச் சென்றால் இடிமழை பெய்து
    திரைகடல் மீன்கள் தெரியா – விரைவில் 
    திமிங்கலம் ஒன்றுன்னைத் தின்னவரும் முன்னால்
    இமியளவு தப்பின் இறப்பு.

    சி. ஜெயபாரதன்

  23. தாழ்வாகப் பறந்தாலும்
    உயரத்தில் பறந்தாலும்
    மீளாத​ சோகம் சொல்லி மாளவில்லை 
    கேழாத​ சோகக் கீதங்கள் இசைத்தது
    கீழ் வானில் ஒரு கொக்கு

    அகன்ற​ வானில் கூடித் திரிந்தோம்
    பரந்த​ கடலில் மீன் பிடித்துண்டோம்
    பாறை, மரங்கள் எனப் பலவித​ இடங்களில்
    கூடு கட்டிக் குஞ்சுகள் பொரித்தோம்
    கூடி இருந்தோம் குளிர் வந்தால் 
    வேற்று மண்ணில் கால்பதிப்போம் 
    மீண்டும் வருவோம் எம் தாயகத்திற்கு

    மாற்றம் ஒன்றே மாறாததென​
    மாறும் உலகில் சிதைந்தது எம் இனம்
    மாசு பட்டது உலகம் யாவும்
    வீசும் காற்றும் ,ஆழிப் பேரலையும்
    சேர்ந்து எம் இனம் கொன்றே ஒளித்தது
    வலித்த​ கால்கள் தங்க ​ஒரு மரம் இல்லை
    குஞ்சுகள் பொரித்தாலும் இருக்கக் கூடில்லை 
    உண்ண​ உணவில்லை 
    கண்ணுக்கு தெரிந்தவரை
    உறவுகளைத் தேடுகிறேன் 
    எங்கேனும்  எம் இனத்தைக்
    கண்டால் சொல்லீரோ

    ராதா மரியரத்தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *