கண்ணன் வந்தான்… அங்கே கண்ணன் வந்தான் …

0

கவிஞர் காவிரிமைந்தன்.

 

கண்ணன் வந்தான்

கண்ணனின் கானங்கள்… கண்ணதாசன் என்னும் புல்லாங்குழல் வழியாக… என்ன சுகம்? என்ன சுகம்?

யமுனா நதியிங்கே … ராதை முகம் இங்கே… கண்ணன் போவதெங்கே…
கண்ணான கண்ணனுக்கு அவசரமா…
இன்னும் பல பாடல்கள்… கண்ணதாசன் கைவண்ணத்தில்…

நீங்கள் பட்டியலிட்டிருக்கும் பாடல்கள் – இசையின் அமோக விளைச்சல் ரகம்!!

கண்ணதாசன் கண்ட தெய்வதரிசனம் என்னும் நூலில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டதைப்போல்…

இந்தப் பாடலை கண்ணதாசனா எழுதினார்… இல்லை… இல்லை…
கண்ணதாசன் என்று பெயர் போடுகிறார்கள்…
கண்ணதாசனால் இப்படிப்பட்ட பாடல் எழுத முடியுமா? முடியாது… முடியவே முடியாது…

கண்ணனே கண்ணதாசன் வடிவில் வந்து தனக்கொரு பாடல் எழுதிக் கொண்டான் என்று படித்தபோது கண்ணில் நீர் கனத்தது! கடவுளே உன் வடிவம் தாங்கி பிறந்த பாடலாய் கருதப்படுகின்ற ஒரு பாடலில் எத்தனை அடர்த்தி… உருக்கம்… நெகிழ்ச்சி…

அறிந்தவர் அறிவாராக….

கண்ணன் வந்தான்… அங்கே கண்ணன் வந்தான் …

கானங்கள் எனும்போதே கண்ணனின் புல்லாங்குழல் நினைவுக்குள் வட்டமிடும்! அதுவும் அமுதகானம் எனும்போது காதுகளில் ரீங்காரமிடும்! சுகமான வார்த்தைகள் சேரும்போது சொர்க்கமே எனத் தோன்றும்! இதயத்தைத் தாலாட்டும்! ஆயர்பாடி மாளிகையில்… அந்த ரகம்தான்! ஆனால், இதோ வருகிறது… ஒரு திரைப்பாட்டு ‘ராமு’ என்கிற திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இன்னிசையில் கண்ணதாசன் எழுதிவைத்த பாட்டு! சீர்காழி கோவிந்தராஜனுடன் ஏழிசைமன்னர் டி.எம்.செளந்திரராஜன் இணைந்து குரல் கொடுக், கண்ணனின் சன்னிதானத்தில் ஊமைப்பிள்ளையுடன் கதாநாயகன் கண்ணனிடம் முறையீடு! உணர்ச்சிகரமான கட்டம்! எல்லாமே பாடல் காட்சி மூலம், கல்மனதும் கரைய வைக்கும் கானம்… கல்லாக நின்ற கண்ணனைக் கரைய வைத்ததோ? காண்போரின்கண்கள் கலங்கியது உண்மைதானே! திரு.நாகையா என்னும் நவரச நடிகரின் உன்னத நடிப்பில்!

இப்பாடலை எப்போதும் போல் ரசித்துக் கேட்டேன். ஆனால் இதில் என்னென்ன இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ள எனக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை… வழக்கம்போல் தமிழ்ச்சங்கப் பணிகள் தொடர்பாக வெவ்வேறு சந்திப்புகள்… அன்றையதினம் நண்பர் வேலுமணி அவர்களது இல்லத்தில் மதிய உணவின்போது அவர்தம் மகள் சசிரேகா கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் பெற்ற வெற்றிக்காக இரண்டு புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன என்று நீட்டினாள். அவற்றில் ஒன்று கண்ணதாசன் பெயர் கொண்டது. சட்டென்று வாங்கி… சில வார்த்தைகள் அவர்களைப் பாராட்டி… உடனே நண்பரிடம் இதுபற்றி ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என்றே உரிமையுடன் கேட்டேன். எனக்கே இப்போதுதான் தெரியவருகிறது என்று பதிலுரைத்தார் திரு.வேலுமணி. புத்தகத்தை படித்துவிட்டு தருவதாகச் சொல்லி இல்லம் திரும்பினேன். புத்தகத்தின் பெயர் – கண்ணதாசன் கண்ட தெய்வ தரிசனம் – வானதி வெளியீடு – ஆசிரியர் – திரு.ஆர்.சீனிவாசமூர்த்தி.

அந்த நூல் என் கையில் கிடைத்த நான்காவது நாள் பல்லவபுரம் துவங்கி… மயிலை வரையிலான எனது அன்றாடப் பேருந்து பயணத்தில் புத்தகத்தைப் பிரித்தேன். முன்னுரை… அருளுரை, வாழ்த்துரை என நூலின் முன்பகுதி மட்டுமே படித்திருந்தேன்… இதயம் கனத்துப் போனது! என்ன ஆனது என்பது மட்டும் விளங்கவில்லை! அதுவும் அருளுரையில் ஜீயர் எனப்படும் மகான் 95 வயதில் கண்கள் பழுதான பின்னும் இந்நூலைப் படிக்கச் சொல்லிக் கேட்டு அருளுரை வழங்கியிருக்கிறார் என்றால்… இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் வழங்கிய உரை என… முத்தாய்ப்பாய் ஒரு வரி… ஒரு பக்கத்தின் முழுமையாய்…

மூல ஆசிரியன் சொல்ல நினகை்காததையும் உரை ஆசிரியன் காண முடியும் – என்கிற கருத்தைச் சுமந்த கண்ணதாசனே செப்பிய வரியாக…

அழுத்தம் திருத்தமாய் ஒரு நூலில் இப்படி அடங்கிப்போது இதுவே முதல் முறை! இந்நூலை மேற்கொண்டும் படிக்க மனம் இடம்கொடாமல்… இதயம் நிறைந்திருந்தது. அலுவலகம் (நகலகம்) நுழைந்து முதல் வேலையாக ‘வானதி’ பதிப்பகத்திற்கு தொலைபேசி அழைப்புவிடுத்து… ஆசிரியரின் தொடர்பு எண்ணைக் கேட்டேன். உடனே தெரியாது… என்றே பதில் வந்தது. பொங்கிய வெள்ளம் வடியவில்லை… உள்ளம் அலைமோதியது. வழிதேடி மீண்டும் அழைத்தேன்… வானதியை… ‘மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன்… இன்றிரவு புறப்படுகிறேன்… அதற்குள் அவரைச் சந்திக்க வேண்டும்,” என்றேன்… கொஞ்சம் இருங்கள் என்றார்கள். சில நிமிடங்களில் அவரின் தொலைபேசி எண்ணைத் தந்தார்கள். மலேசியா என்று சொன்னது சரியா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். சரிதான் என்றது தாயின் குரல்… ஆம்… என் தாயார் திருமதி. தங்கம் முத்தையா அவர்களின் பிறப்பும் வளர்ப்பும் மலேசியாதான். எனவே அங்கிருந்த வந்தவன் என்பதில் ஐயமில்லை… உடனே அந்த ஆசிரியரைத் தொடர்பு கொண்டு அவருக்காக எழுதிவைத்த ஆனந்த மடலைப் படித்தேன்! அப்பொழுதுதான் அடங்கியது அந்த உற்சாக வெள்ளம்! அன்றிரவு மீண்டும் அவரை நேரில் சந்தித்து மடலைச் சமர்ப்பித்து காலில்விழுந்து ஆசிபெற்று வீடு திரும்பினேன்.

அந்தப் புத்தகம் என்ன சொல்லியது என்பதற்கு ஒரே ஒரு சான்று போதும் என்று கருதுகிறேன்… ஆம்… அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் உள்ளடக்கங்களாக… அத்தியாயங்களாக…

ஒரு தாய் தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டபின்னரும் சிறிது நேரம் அழட்டும் … பிறகே நன்றாக பால் குடிக்கும் என்று நினைப்பாள்… ஆனால்… ஏழைக் கண்ணீரைக் கண்டதும் … கண்ணன் வந்தான் என்கிறபோது… ஒரு தாயின் வேகத்தைவிட…கண்ணனின் வேகம் என…

அந்த நூல் முழுவதும் விளக்கங்கள் தொடர்கின்றன! அந்த நூலுக்கும் அந்த ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக்கும்பொருட்டு… அந்த ஆண்டு நடைபெற்ற கண்ணதாசன் விழாவில்… கண்ணன் வந்தான் என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி… திரு. சாஸ்தா தாசன் அவர்கள் குழுவினருடைய சிறப்பு மெல்லிசை நிகழ்ச்சி நடந்தேறியது!

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே………..

கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் …
கண்ணன் வந்தான் ஆ…

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான் …
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்
சந்நிதானம் …
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா … கண்ணா … கண்ணா … கண்ணா …
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

படம்: ராமு
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி எம் சௌந்தரராஜன்
காணொளி: https://youtu.be/izx_k8Y_f9o

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

https://youtu.be/izx_k8Y_f9o

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.