முற்றுப் பெறாத புள்ளியில் முடிவுறாது தொடரும் …

1

— எஸ் வி வேணுகோபாலன்.

 

ஓவியர் கோபுலு (1924 – 2015)

முற்றுப் பெறாத புள்ளியில்  முடிவுறாது தொடரும் …

கோடுகளே குழந்தைகளின் முதல் செய்தி பரிமாற்றம் என்று தோன்றுகிறது. திருத்தமாக எதையும் பேசத் தொடங்குமுன் அவர்களது கை விரல்கள்தான் முதலில் பேசத் தொடங்குகின்றன…. குழந்தைகளின் கவனத்தைப் பெறக் காத்திருக்கும் சுவர்களைக் கொண்ட வீடுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை. குழந்தைகளின் உரிமை மறுக்கப்பட்ட சுவர்கள் சபிக்கப்பட்டவை என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

எங்கள் வீட்டில் நாங்கள் வேடிக்கையாகப் பேசிக் கொள்வதுண்டு. இளவயதில் எங்கள் செல்ல மகள் வரைந்த ஓர் ஓவியம் ஐயாயிரம் ரூபாய்க்குப் போனது! ஏதேதோ கற்பனைக்குச் சென்று விடாதீர்கள்….சுத்தமாக இருந்த ஒரு சுவரின் மூலையில் பளிச்சென்று தனது தாத்தாவை ஓவியமாக வரைந்து வைத்திருந்தாள் அவள். வீட்டைக் காலி செய்யும்போது, கலாரசனையே அற்ற வீட்டு உரிமையாளர் அதைப் பார்த்தார். ‘ஒன்று சுத்தமாக சுவர் முழுக்க சுண்ணாம்பு அடித்துக் கொடுத்துவிட்டுப் போ அல்லது அட்வான்ஸ் தொகையில் ஐயாயிரம் ரூபாய் பிடித்துக் கொள்வேன்’ என்று தீர்த்துச் சொல்லிவிட்டார். ஒருவழியாக நாங்களாக ஓர் ஏற்பாடு செய்து வண்ணமடித்துக் கொடுத்துவிட்டு வெளியேறினோம். ஓர் எளிய ஓவியத்தின் விலை ஐயாயிரம் வரைக்கும் பேசப்பட்ட கதை அது!

‘மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்’ என்று தொடங்கும் பல்லவியை ஒரு திரைப்படப் பாடலில் கொண்டு வந்திருந்தார் கண்ணதாசன். நாற்பதாண்டுகளுக்குமுன் வேலூரில் நடைபெற்ற இலக்கியக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், வாகீச கலாநிதி என்று அழைக்கப்பட்ட கி வா ஜகந்நாதன் அவர்கள், தாம் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த கலைமகள் இதழில் ஒரு சிறுகதைக்கு ஓவியர் பொருத்தமற்ற முறையில் வரைந்த நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டார். கதையில் வரும் ஐம்பதைக் கடந்த ஆணுக்குப் பதில், வாலிப வயதில் நாயகன் காட்சியளித்த அந்த ஓவியத்தை அவர் நிராகரிக்கப் போனாராம். கொஞ்சம் பொறுங்கள் என்று சொன்ன அந்த ஓவியர், அதே ஓவியத்தில் முகத்தில் மிகச் சில கோடுகளை இழைத்துக் காட்டியதும், பல ஆண்டுகள் கழித்து வரவேண்டிய முதுமைத் தோற்றம் உடனே வந்துவிட்டிருந்ததாம். அதுதான் கலையின் கை வண்ணம் என்றார் கி.வா.ஜ.

Gopulu Artistகோடுகளின் சுவாரசியமிகுந்த பேரரசைக் கட்டியாண்ட மகத்தான ஓவியர்களில் அண்மையில் மறைந்த கோபுலுவின் பெயர் தனியிடம் பெற்றிருப்பது! ஓவியங்களுக்கு முற்றுப் புள்ளி ஒன்று கிடையாது, கற்பனையின் விரிவில் ஏதோ ஒரு புள்ளியில் அது நிற்கிறது, அவ்வளவுதான் என்று சொல்லப்படுவதுண்டு. கோபுலுவின் படைப்புகளில் இந்த விவரிப்பின் உண்மை சுடர்விடுவதைக் காணலாம்.

‘முப்பது கோடி முகம் உடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற கவிதை வரியை மகாகவி பாரதி எப்படி கண்டடைந்தானோ தெரியாது, ஆனால், கோபுலு வித விதமான முகங்களை உயிரோட்டமாகக் கொண்டு வந்து சேர்த்தார். கோணிக் கொண்டு போகும் முகம், அசடு வழியச் சிரிக்கும் முகம், அசாத்திய கோப முகம், அன்பு வதியும் முகம், ஆசை திரண்டிருக்கும் முகம், ஆத்திரம் பற்றி எரியும் முகம்….என அவரவர் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும் என்று பொதுவான பத்திரிகையில் அவர் தீட்டியபடி இருந்தார் போலும்!

கோபுலுவின் எந்த ஓவியத்தைக் கண்ணுறுவோர்க்கும் எங்கோ ஓரிடத்தில் மாய விசை ஒன்று தட்டுப்பட்டுவிடும். மானசீகமாக அதை அழுத்தின மாத்திரத்தில், ஓவிய பாத்திரங்கள் கடகட என்று தங்கள் செய்கையில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பதை சன்னல் திறந்து வைத்துப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நாமாக அடுத்த பக்கத்திற்குக் கடந்து செல்கிறவரை அந்தப் பாத்திரங்கள் ஓடியாடி வேலை செய்துகொண்டிருக்கும்.

எத்தனை எத்தனை பாத்திரங்கள், துணுக்குகளில்…..! யாராவது நம்மைப் பார்த்துவிடுவார்களோ என்று விஷமக் கொடுக்குப் பயல் ஓசைப்படாமல் நழுவிச் செல்வது, என்ன வம்பு கிடைக்கும் என்று ஆசாமி ஒருவன் அலைவது, பந்தா பேர்வழி ஆரவாரத்தோடு நகர்வது, திருட்டுமுழி முழித்தபடி யாரோ நடப்பது…. எதைத்தான் மனிதர் விட்டுவைத்தார்!

நகைச்சுவை துணுக்குகளில் வசனக் குறிப்புகளை விடவும் வேகமாக விஷயத்தைப் பேச வேண்டியது அதற்கான படம்தான். கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கும் குட்டிப்பெண்ணுக்கு, கண்ணாடியே போட்டுக்கொள்ளாத பாட்டி அனாயாசமாக ஊசியில் நூல் கோத்துக் கொடுத்து உதவும் துணுக்கைப் பாருங்களேன், அதில் வேறு எத்தனை பாத்திரங்கள் எவ்வளவு முகபாவமும், உடல்மொழியும் காட்டுகின்றனர்! சுவரில் ஆணியில் எத்தனை விதமான பொருள்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அருகே ஒரு மரப்பெட்டி…..எத்தனை எத்தனை உள்விவரங்கள்! அ ஃறிணை பொருள்களும் பேசும் சித்திரங்கள் அவருடையவை!

Gopulu joke Old woman with needle on hand

கேலிச் சித்திரம், கதைக்கான ஓவியம், கருத்துப் படம், அரசியல் நையாண்டி, வண்ணப் படங்கள்….என விகடன் இதழில் அவரது பன்முக ஆளுமை பொங்கித் ததும்பி வழிந்த காலங்கள் மகத்தானவை. விகடன் அட்டைப்படங்களில் நகைச்சுவை துணுக்குகளே வெளிவந்துகொண்டிருந்த பல பத்தாண்டுகளில் கோபுலுவின் கைவண்ணம் சிறப்பு கவனம் பெற்றுவந்தது. பிறகு தீபாவளி மலர்களைக் கேட்பானேன்! பட்டாசு வகைகளில் எத்தனை வகைகள் உண்டோ, இனிப்பு காரங்களில் எத்தனை வகைகள் உண்டோ, உடுத்தும் உடைகளில் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையையும் அதேபோல் ஒளியும், ஒலியும், சுவையுமாகப் படைக்கும் ஓவியர்களின் கொண்டாட்ட பக்கங்களில் கோபுலுவின் தூரிகைக்கு ரசிகர் பட்டாளம் வாண வேடிக்கை செய்து வரவேற்பு கொடுத்த காலங்கள் அவை….

ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகளில் வந்த வார இதழ் கதைகளை, தொடர்களை அந்தந்தப் பக்கங்களோடே பைண்டு செய்துவைத்து இன்றும் பாதுகாத்து வரும் வீடுகளில் நிலைபெற்று விட்டவை கோபுலுவின் ஓவியங்கள்……அது சரித்திரத் தொடராக இருக்கலாம், சமூக நாவலாக இருக்கலாம், நையாண்டி சித்திரமாக இருக்கலாம்… கோபுலு கைலாகு கொடுத்து உள்ளே அழைத்துச் செல்லாமல் எந்தக் கதையின் வாசிப்பு முழுமை பெற்றுவிடக் கூடும்!

தேவன் படைத்த துப்பறியும் சாம்புவிற்கு இரட்டை மண்டையும், வளைந்த மூக்கும் கொடுத்து அசத்தியது கோபுலு அல்லவா…ஜெயகாந்தனின் நாயகியர் செம்மாந்து பார்த்த பார்வையின் விழியாக இன்றும் மின்னிக் கொண்டிருப்பது அவரது தூரிகையின் மொழி அல்லவா…..வாஷிங்டனில் நடந்த திருமணத்தில் எழுத்தாளர் சாவி முதலில் கொண்டுபோய் இறக்கியது கோபுலுவைத்தானே! அடடா…அடடா…எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் ஓவியத் தலைவா….

thuppariyum sambuGopulu Art 1

gopulu art 5

Washingtanil Thirumanamgopulu Art 4

மகத்தான புதினங்களைப் படைத்த கல்கி தொடங்கி உமாசந்திரன், ராஜம் கிருஷ்ணன்….என்ற வரிசையில் மாலன், பாவை சந்திரன் வரை அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் படைப்புக்கு வரைந்து வந்ததில் மூப்பின் களைப்பு தெரியாது வயதுக்கே சவால் விடுத்த கரம் அல்லவா அவரது !

1924ல் பிறந்த கோபுலு, கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்றவர். 1945ம் ஆண்டுமுதல் விகடன் இதழில் பணியாற்றத் தொடங்கி நீண்ட கால சாதனை படைத்தவர். விகடனை நாடி வந்த அவரை, புகழ் பெற்ற ஓவியர் மாலி அவர்கள் சளைக்காது வேலை வாங்கிப் பல மாதங்களுக்குப்பின் தான் உள்ளே நுழைய விட்டிருக்கிறார். அவர் கொடுத்த முதல் வேலையே தீபாவளி மலருக்கானது! கோபுலு என்ற புனைபெயரையும் அவரே சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

Gopulu Art 3Rajaraja Chozhan

பல்லாண்டுக்காலம் தூரிகையைப் பிடித்திருந்த கைக்குச் சற்று ஓய்வு தேவைப்பட்டிருக்கிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குமுன் பக்கவாதம் தாக்கி அவரால் வலது கையைப் பயன்படுத்த இயலாமல் போயிருக்கிறது. மருத்துவர் செரியன் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கையில், நான் தான் இத்தனை நாளாய் ஸ்ட்ரோக் (கோடுகள்) போட்டுக் கொண்டிருந்தேன்…எனக்கே இப்போது ஸ்ட்ரோக் (வாதநோய்) வந்துவிட்டது என்று அப்போதும் நகைச்சுவை உணர்வு வற்றிவிடாது சொல்லி இருக்கிறார் கோபுலு. அதைவிட வியப்புக்குரிய விஷயம், இடது கையால் ஓவியம் வரையத் தொடங்கி இருக்கிறார். எந்தக் கை என்பதில் என்ன இருக்கிறது, கையா வரைகிறது, மூளைதானே வரையவைக்கிறது என்று அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தாராம் அவர்.

அண்மையில் தனது 91ம் வயதில் இயற்கை எய்திய அவரது வாழ்க்கை கூட, ஒரு புள்ளியில் தவிர்க்க மாட்டாமல் நின்றுவிட்ட, ஆனால் நீட்சி பெறத் தக்க ஓவியமாகவே நிலை பெற்றுவிட்ட ஒன்று என்றே தோன்றுகிறது. நேரடியாக எத்தனையோ பேருக்கும், தாங்களாக ஏற்றுக் கொண்ட எண்ணற்ற ஏகலைவன்களுக்கும் ஆசானாக இருந்த மகத்தான எளிய மனித ஆசிரியர் கோபுலு. எதிர்கால ஓவியத் தலைமுறையினருக்கும் கூட!

_____________________________________

நன்றி: செம்மலர் ஜூன் 2015

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முற்றுப் பெறாத புள்ளியில் முடிவுறாது தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *