இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(157)

0

–சக்தி சக்திதாசன்.

M. S. Viswanathan

அன்பினியவர்களே !

ஒருவாரம் ஓடி விட்டது. அந்த ஒருவாரக் காலத்துக்குள் எத்தனை நிகழ்வுகள்!!!! காலத்தால் அழியாத சாதனைகள் படைக்கப்பட்டதும், அச்சாதனைகளின் படைப்பாளிகள் பறிக்கப்பட்டதும் என பலவகையான நிகழ்வுகள்.

பிறந்த நாம் எல்லோரும் ஒருநாள் மடிய வேண்டுமென்பது காலத்தின் நியதி. பிறந்தோர் அனைவருமே ஏதாவது ஒருவகையில் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் எனும் இலட்சிய நோக்கிலேயே வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

யதார்த்த வாழ்க்கையில் நாம் அழைத்துச் செல்லப்படும் பல்வேறு நெளிவுகளும் சுளிவுகளும் நாம் போக எண்ணிய இடத்தை விட்டு வேறு இடத்திற்கு எம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

அப்படியானால் எமது வாழ்க்கை தோற்று விட்டது என்று அர்த்தமா ? இல்லவே இல்லை… நாம் எதிர்பார்த்ததை அடையவில்லையானால் வாழ்க்கை தோற்றது என்று கொள்வதுதான் தோல்வி.

அடைந்த வாழ்க்கையின் அதி உச்ச நிலையை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்வதுதான் உண்மையான மனித வாழ்வின் வெற்றி.

எதற்காக இந்தத் தத்துவ வரிகள் என்று நீங்கள் எண்ணலாம்.

எம்மிடையே மெல்லிசைத் தென்றலாக எமையெல்லாம் தாலாட்டிக் கொண்டிருந்த “மெல்லிசை மன்னர்” என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட இசைச்சக்கரவர்த்தியாகக் கொடி கட்டிப் பறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா அவர்களைக் கடந்த வாரம் தன்னுள் ஐக்கியப்படுத்தி விட்ட நிகழ்வு அனைத்து நெஞ்சங்களையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

மிகச்சிறிய வயதினிலேயே தந்தையைப் பறிகொடுத்து தாயின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காமல் இன்று தமிழ்த்திரைவானில் ஒரு இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சிய எம்.எஸ்.வி ஐயா அவர்களின் வாழ்க்கை இளைய தலைமுறை அனைத்தினாலும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படவேண்டும்..

ஒரு அற்புதமான இசையமைப்பாளர் என்பதை விட ஒரு அதிஉன்னதமான மனிதர் என்பதுவே அவரை அறிந்த ஒவ்வொருவரும் கூறும் ஒரே கருத்து.

வாழ்க்கை தம்மீது போட்ட சவால்களையெல்லாம் எதிர்த்து நின்று தான் எடுத்துக் கொண்ட துறையின் அதிஉயர் நிலையை அடைந்த அவரின் ஆற்றல் அளப்பரியது.

அவரை நான் என் வாழ்க்கையில் சந்தித்தது இருமுறைகள்.

2011ம் ஆண்டு என எண்ணுகிறேன்… எனது சென்னை விஜயத்தின் போது எனது அருமை நண்பர் காந்தி கண்ணதாசனுடன் பேசிக்கொண்டிருந்தேன். எனது மானசீகக் குருவான கவியரசரைப் பற்றிய வியப்பானச் செய்திகளை அறியும் ஆர்வம் எனக்குண்டு.

அப்போது அவருக்கும் எம்.எஸ்.வி ஐயாவிற்கும் இடையே இருந்த அதிஉன்னத நட்பைப் பற்றிய பேச்சு எழுந்தது.

எம்.எஸ்.வியுடன் பேசினால் எனக்கு இன்னும் அதிகமான ஆர்வமிக்க செய்திகள் கிடைக்கும் என்று கூறி உடனே நண்பர் காந்தி கண்ணதாசன் அவருக்கு ஃபோன் செய்தார்.

அன்று மாலையே என்னைச் சந்திப்பதாக கூறிய எம்.எஸ்.வி தான் அதன் பின்பு வெளியே செல்ல இருப்பதால் தவறாமல் 5மணிக்கு முன்னர் வருமாறு கூறினார்.

துரதிர்ஷ்ட வசமாக நான் சென்ற சமயம் சென்னையின் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டதால் 4.55க்குத்தான் நான் அவர் இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் கால்களில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்ற போது ஒரு தந்தைக்குரிய அதிகாரத்துடன் “இதெல்லாம் எதுக்கு” என அதட்டினார். நான் கொண்டு சென்ற எனது படைப்பான “கண்ணதாசன் ஒரு காவியம் ” எனும் நூலைப் பெற்றுக் கொண்டு சிறிது நேரமே என்னுடன் அவரால் பேச முடிந்தது.

கவியரசரைப் பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உண்டு அடுத்தமுறை சந்திக்கும் போது நிச்சயம் பேசுவோம் என்றார்.

காலத்தின் கோலம் அவர் சொன்ன அடுத்த முறை அவரை ஒரு திருமணத்தில் தான் சந்தித்தேன். மிகவும் சுருக்கமாகவே பேச முடிந்தது.

எனது இந்த இரு சந்திப்புகளிலும் நான் எம்.எஸ்.வி எனும் ஒரு மாபெரும் இசையமைப்பாளரைச் சந்திக்கவில்லை ஒரு இனிமையான மனிதத்துவம் நிறைந்த எளிமையான, ஆரவாரமில்லாத அற்புத மனிதரையே சந்தித்தேன்.

பாடலாசிரியர்கள் திரைக்கதையின் காட்சிக்கு ஏற்றவாறு பாடல் வரிகளைத் தருகிறார்கள். அவ்வரிகளுக்கு உயிரூட்டுவதில் முன்னணியில் இருப்பது இசையே ! அதைத் தொடர்ந்து அப்பாடலைப் பாடுபவரின் திறமையோடு இணைந்தே அப்பாடல் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது.

கவியரசர் கண்ணதாசன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இணைந்து வழங்கிய பாடல்களில் பெரும்பான்மையானவை அப்பாடல்களைக் கேட்டவர்கள் மனதில் இன்று நிலைத்திருக்கிறது என்பதுவே உண்மை.

பாலச்சந்தரின் கைவண்ணத்தில் உருவான படம் “வறுமையின் நிறம் சிவப்பு” அதில் ஒரு பாடல் காட்சி.

கதாநாயகி சிறீதேவி சந்தங்களை எடுத்துக் கொடுப்பதாகவும் கதாநாயகன் கமல்ஹாசன் அதற்கு வரிகளைக் கொடுப்பதாகவும் அக்காட்சி அமைந்திருக்கும்.

இக்காட்சியின் அமைப்பின் பின்னணிக்கு ஒரு காரணம் உண்டு. அதாவது டைரக்டர் பாலச்சந்தர் கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்குமிடையே இருந்த புரிந்துணர்வை எடுத்துக் காட்ட எண்ணியே அக்காட்சியை அமைத்ததாகச் செய்தி உண்டு.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்று வாழ்பவர் எம்.எஸ்.வி.

பல பின்னணிப் பாடகர்கள், பாடகிகளை மிகவும் ஊக்குவித்து அவர்களின் குரல்வகைக்கு ஏற்றவாறு பாடல்களின் இசையமைத்து அவர்களை முன்னணியில் நிறுத்தியவர் எம்.எஸ்.வி என்றால் மிகையாகாது.

தமிழ்த்திரைப்பட உலகிலே பொற்காலமாகத் திகழ்ந்த ஒரு காலத்தில் தனது திறமையை நிலைநாட்டியவர் எம்.எஸ்.வி.

இசையமைத்தது மட்டுமின்றி பாடல்கள் பலவற்றைப் பாடியும், சில படங்களில் நடித்தும் தனது சகலதுறைத் திறமைகளையும் வெளிக்காட்டியவர் எம்.எஸ்.வி.

தனது இசையின் மூலம் தமிழர்களின் மனங்களில் எப்போதும் நிறைந்த எமது மெல்லிசை மன்னர் சுகந்தமான, சுகமான ராகமாக தென்றலோடு கரைந்து விண்ணேகி விட்டார்.

அவரது ஆன்மா அவரது உடலை விட்டுப் பிரிந்தாலும் அவரது நினைவுகள் எம் அனைவரோடும் காலத்தால் கரையாத இசையாகக் கலந்து நிறைந்து இருக்கிறது.

எம்.எஸ்.வி ஐயா அவர்களின் ஆத்ம சாந்திக்காய் உங்கள் அனைவரோடு இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *