தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி
இசைக்கவி ரமணன்
நண்பர்களே
வணக்கம்.
நேற்று மாலை பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் மாதாந்திரத் தொடர் சொற்பொழிவில், தசமஹா வித்யையில் ஏழாவதாய் வரும் தூமாவதி தேவியைப் பற்றி சொற்பொழிவு சிறப்பாய் நடந்தது. மிகவும் கடினமான, பிரச்சினைக்குரிய, ஜனரஞ்சகமாகப் பேச வாய்ப்பே இல்லாத ஒரு துறை!
என்னுடைய குறிப்புகளை உங்களுடன் இதோ பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்,
ரமணன்
தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி
காளி, தாரா, த்ரிபுர சுந்தரி, ஸ்ரீ புவனேஸ்வரி, த்ரிபுர பைரவி, சின்ன மஸ்தா இவர்களைத் தொடர்ந்து இன்று நாம் தரிசிக்கவிருக்கின்ற தேவி தூமாவதி.
அணுகுவதற்கோ, புரிந்துகொள்வதற்கோ, ஆராதிப்பதற்கோ மிகவும் சிக்கலான, ஆனால் தேவியின் அரிய வடிவங்களில் ஒன்று தூமாவதி.
எல்லாம் பராசக்திதான் என்றாலும், எல்லா வடிவங்களும் எல்லோரும் தொழுவதற்கு ஏற்றதாக இருக்க முடியும் என்று எதிர்பார்க்கலாகாது.
நமக்குப் புரியவில்லை என்பதால், ஒன்று தனது மகிமையை இழந்துவிடாது. நம்மால் தொழமுடியவில்லை என்பதால் அது தெய்வமில்லை என்றாகி விடாது.
வேதப் பிரகடனம்
”ஆதியில் இருட்டை இருட்டு மறைத்தது. ஞானத்தின் எதிர்மறையான அஞ்ஞானமெனும் பெருங்கடல் இருந்தது. மனித ஞானம் என்னும் வெளிச்சம் புக முடியாத அக இருட்டு எங்கும் பரவி இருந்தது.” (ரிக்:10, 129, 3)
”ஆதியில் ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து இருப்பது எல்லாமே எழ்ந்தது.” (யஜுர் வேதத்தின் தைத்திரீய உபநிஷத்)
“தேவர்களுக்கு முன்னால், இல்லாததிலிருந்து இருப்பது தோன்றியது.” (ரிக்:10, 72, 2)
இருளும் ஒளியும்
இல்லாததில் இருந்துதான் இருப்பது வந்தது என்றே எல்லா நூல்களும் கூறுகின்றன.
ஒளியை, இருள் தோற்றுவிக்கிறதோ இல்லையோ, இருளிலிருந்துதான் ஒளி தோன்றுகிறது
ஒளியின்றி ஒளியின்றி இருள்பிரியாது
இருளின்றி இருளின்றி ஒளிபுரியாது, அந்த
உண்மைக்கும் வண்ணங்கள் வேண்டும், அந்த
வண்ணங்கள் உண்மையைத் தூண்டும்
உள்ளம் பண்படுமானால், அது
உண்மையில் வண்ணத்தைத் தாண்டும் (ஒளியின்றி)
வானத்தை மறைத்தது மேகம், மழை
வந்தபின் மறுபடி வானம்
ஞானத்தை மறைத்தது மோகம், அவை
நடுவினில் எழுந்தது மோனம், இங்கு
ஒருவழி தானெனும் போது, அதில்
மறுவழி சிறுவழி ஏது?
நகரும் நகர்த்தும் ஓடம்! அந்த
நடுநிலை அதுதான் பாடம்! (ஒளியின்றி)
இசை, மெளனத்தைத் தோற்றுவிக்கவில்லை என்றாலும், இசையில் மனம் ஒரு லயம் பெறுகிறது.
ஆன்மா எப்போதும் திருப்தியாகத்தான் இருக்கிறது. தன்னைத்தான் அறிந்தபடிதான் இருக்கிறது. இரண்டு நான்கள் இல்லை. இரண்டு ஆன்மாக்கள் இல்லை. இதைச் சொன்னது ரமணர் போன்ற ஞானியர் என்பதால் நம்புகிறோம்; ஆனால் உடனடியாக உணர்கிறோம் இல்லை. தடுமாறுகிறோம்.
அறிவின் குரல், அறியாமையின் நடுவிலிருந்துதான் எழுகிறது.
அறிவை நாடுகின்ற குரல், வேட்கையாக எழுகிறது.
அறிவை நம்புகின்ற குரல், ஏக்கமாக எழுகிறது.
அறிவின் குரல் பசுவின் குரலாக நின்று ஒலிக்கிறது. அறியாமையின் குரல் கன்றின் குரலாக விட்டு விட்டு ஒலிக்கிறது.
நின்ற இடத்தில் நிற்கிறது பசு. நில்லாமல் அலை பாய்கிறது கன்று.
பாரதி கேட்கிறான்:
“ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா?”
”இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா? இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா? நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?”
”நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா? முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா? உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா? உங்களைப் புகழ்கின்றேன்”
ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்?”
இது, படைப்புக்கு முந்தைய நிலைமையை, அதாவது எதுவும் இல்லாத நிலையை அறிந்துவைத்திருப்பவனின் கேள்வி. அதனால்தான் அவனுக்கு ஒளியைக் கண்டபின்னும் இருட்டின் ஞாபகம் இருக்கிறது.
ஆனால், முழுமையான ஒளியுமில்லை, முழுக்க முழுக்க இருளுமில்லை.
இருட்டு எவ்வளவு பெரியது? மின்மினிப் பூச்சி எத்தனை சிறியது? மின்மினிப் பூச்சியால் இருட்டை விழுங்க முடியாது என்பதென்னமோ உண்மைதான் என்றாலும், அத்தனை பெரிய இருட்டால் இந்தச் சின்னஞ்சிறு மின்னம் மினியின் கண்சிமிட்டும் ஒளியை ஒருபோதும் விழுங்க முடிவதுமில்லை.
ஒளி, ஒளிரத்தான் செய்கிறது.
பாரதி கேட்ட அந்தக் கேள்வி, காலை நேரத்துக் கேள்வி. அதையே அவன் ராத்திரியில் எப்படிக் கேட்டிருக்கக் கூடும், யோசித்துப் பாருங்கள்:
“இருளே! நீ என்ன செய்துவிட்டாய், சூரியனை விழுங்கிவிட்டாயா? நாளைக்கு அவன் உண்டா இல்லையா? நாங்கள் அவனை ஓயாமல் புகழ்வதைக் கேட்டு வெகுண்டு அவனை உண்டுவிட்டாயா? மோகவெறி தலைக்கேறி நீ கொடுத்த முத்தத்தில் அவன் மூர்ச்சை போட்டுவிட்டானா? உன் கலவி வெறி தாங்கொணாது, அவன் தலைகுப்புறக் கிடக்கிறானா என்ன?
”இதோ பாரடி இருட்டு ராணி! நீ நீங்குவதுமில்லை. ஒளியரசன் தூங்குவதும் இல்லை. நீங்கள் ஒருவர் மீதொருவர் தீராத காதல் கொண்டிருக்கிறீர்கள். நீங்களிருவருமே இன்றித் தீர்ந்து போகின்ற நிலை ஒன்று உண்டோ? அதைக் கற்பனை செய்து பார்க்கவும், கவிதையால் வருடவும் ஆர்வமாய்த்தான் இருக்கிறது. ஆனால், நீங்கள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் தீர்க்கவே முடியாது. உங்களை அப்படிப் பண்ணியிருக்கிறாள் பராசக்தி.”
அறிவும் அறியாமையும்
ஒளியும் இருளும் என்பது அறிவும் அறியாமையும் போலே.
நம்முடைய அறிவு, நம்முடைய அறியாமையைத்தான் நீக்கும். படர்ந்து கிடக்கும் மாயையை அதனால் ஒன்றும் செய்ய முடியாது.
நம்முடைய அறியாமை நம்முடைய அறிவைத்தான் மறைக்கும். பரந்து கிடக்கும் அறிவை அது பருகிவிட முடியாது.
படைப்பு என்பதே இருளின் ஒளி விளையாட்டு,
பிரளயம் என்பது ஒளியின் இருள் விளையாட்டு.
வாழ்க்கை என்பது இருளும் ஒளியும் இடைவிடாது ஊடியும் கூடியும் ஆடும் சிங்கார விளையாட்டு.
அதனால்தான் ஜகத் சித்திரத்தைக் காணுங்கால், ’சித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்’ என்று இருளுக்கும் ஒளிக்கும் தாயான பராசக்தியைப் பாடுகிறான் பாரதி.
சொல்லுக்குச் சிக்காத சூதாட்டி ஒருத்தி
சோழி குலுக்கையிலே, வானத்துல
சொளகு பொடக்கையிலே, அண்டமெல்லாம்
சொடக்கு எடுக்கையிலே
மல்லுக்கு நிக்காம மனசும் குளுந்து
மல்லாந்திருக்கையிலே, முத்து முத்து
மழையும் விழுகையிலே, பட்டுப்பட்டு
மலரும் விரிகையிலே
கொட்டிக் கெடக்குற வெட்ட வெளியெங்கும்
கோலகலமாச்சு, வெள்ளியிலே
கோலாட்டம் போட்டாச்சு, எட்டுத் திக்கும்
கொலுவையும் கேட்டாச்சு!
பட்டப் பகலுல படுத்துக் கெடக்குது
பழைய பரமசிவம்! கிட்டவந்து
பாரடி என்ன சொகம்!
நட்ட நடுநெஞ்சில் நல்ல நள்ளிரவில்
கொட்டக்கொட்ட முழிச்சு, வண்ண வண்ணக்
கோலங்களை விரிச்சு, இந்த
அட்டக் கருப்பி ஆடுற கூத்துல
அண்டம் பொளக்குதடி, அதிலொரு
துண்டு தெறிக்குதடி, அது பாட்டில்
விண்டு விழுந்ததடி!
துள்ளிக் குதிக்குற வெள்ளிக் கெண்ட , ஆத்தைத்
தொறக்க முடியுமா? ஒருதுளி
மறக்க முடியுமா?
பூவுல புகுந்து காயான புழுவுக்குப்
போக்கிடம் ஒண்ணும் உண்டோ? பழத்தைப்
பாக்க வழியுமுண்டோ?
உள்ளே வளத்தவ ஊரில் கொடுத்தவ
அள்ளி எடுப்பாளோ? இன்னும் கொஞ்சம்
தள்ளிக் கெடுப்பாளோ? என்னிக்கிந்த
முள்ளை முறிப்பாளோ?
எப்படி மனதுக்கும், பிராணனுக்கும் மூலம் ஒன்றோ, அப்படியே, இருளுக்கும் ஒளிக்கும் தாய் ஒருத்தியே!
ஒளிர்வதால் ஒளியைப் போற்றுகிறோம்
கருப்பியான பராசக்தியைப் பாடப்போன பட்டர், ”உதிக்கின்ற செங்கதிர்” என்று ஏன் துவங்குகின்றார்?
ஒளிக்குப் புறப்பாடு உண்டு. இருட்டு எப்போதும் படுத்தே கிடக்கும்.
ஒளிக்குத் தோற்றமுண்டு. இருட்டுக்கு சொரூபம் கிடையாது. உண்மையில், இருட்டைக் காணவே முடியாது.
ஒளிக்கு விளக்கமுண்டு. இருட்டுக்கு விளக்கமேது, துலக்கமேது, திகழ்ச்சியேது?
இன்மையிலிருந்தே இருப்பு
ஆனால், ஒளிக்கு இத்தனை சிறப்பிருப்பதற்குக் காரணம், இருள் என்று ஒன்று இருப்பதால். அதாவது இல்லாத ஒன்று இருப்பதால். அந்த இல்லாத ஒன்றாகிய இருட்டிலிருந்துதான், இருப்பு என்னும் ஒளி தோன்றுகின்றது.
அந்த இல்லாதது என்பது மூன்று வகைப்படும்:
1. ப்ராக் அபாவம் – இருப்பது எழுவதற்கு முந்தைய நிலை – விதையிலிருந்து மரம் எழும். அது எழுவதற்கு முன் அங்கே மரம் இல்லை
2. ப்ரம்வம்ச அபாவம் – இருப்பது அழிந்த நிலை – பானை உடைந்ததால் இல்லாமல் போன நிலை
3. அத்யந்த அபாவம் – எப்போதுமே இல்லாதது – முயல்கொம்பு, கானல் நீர்
ஆனால், இல்லாதது என்பது அறவே இல்லாத சூனிய நிலை இல்லை:
· விதையில் மரத்தின் கருத்து இருப்பதால்தான், அது உந்துவதால்தான் விதை விழிக்கிறது
· மண்ணிலிருந்து விளைந்த பானை மண்ணிலேயே சேர்வது, தோற்றத்தின் மாற்றமே
· நீரைக் கண்ட நினைப்புதான் கானலில் நீரைக் காண வைக்கிறது. கொம்பின் ஞாபகம்தான் அதை, அது இல்லாத முயலில் பொருத்திப் பார்க்கிறது
அறியாமைக்கும் அறிவுக்கும்
இருளுக்கும் ஒளிக்கும்
அழிவுக்கும் தோற்றத்திற்கும்
ப்ரளயத்திற்கும் படைப்புக்கும்
இடையில் இருக்கின்ற இருட்டும் வெளிச்சமுமான நிலை,
அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி!
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம், அவளை
அன்னையெனப்பணிதல் ஆக்கம் என்பான் பாரதி.
சந்திகளின் உருவகம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே ஒரு சந்தி, அது வைகறை
பகலுக்கும் இரவுக்கும் நடுவெ ஒரு சந்தி, அது அந்திப் பொழுது
முதல் சந்திக்கும், இரண்டாவது சந்திக்கும் மத்தியில் ஒரு சந்தி, அது உச்சிப் பொழுது
அது போல, படைப்புக்கும், பிரளயத்துக்கும் இடையே ஒரு சந்தி
பிரளயத்துக்கும், படைப்புக்கும் நடுவே ஒரு சந்தி
தூமாவதி, இந்த இரண்டு சந்திகளைக் குறிக்கிறாள்.
ஒன்று, படைப்புக்கு முந்தைய நிலை.
இரண்டு, அழிவுக்கு முந்தைய நிலை.
அழிவுக்குப் பின் நேரும் ஆயாசம் இளைப்பாறத் தோதான மடியாகவும் இருக்கிறாள்.
ஆக்கத்திற்கு முன்னிருக்கும் எண்ணமற்ற தன்னந்தனிமையாகவும் இருக்கிறாள்.
வீட்டைக் கூட்டும் விளக்குமாறாகவும் இருக்கிறாள். விளக்கு ஏற்றப்படும் முன் எண்ணெயும் திரியும் நிமிண்டும் நேரமாகவும் இருக்கிறாள்.
அவள், அன்னையாகவோ, தந்தையாகவோ தோற்றம் அளிக்கவில்லை. நம்கண்ணில் தென்படாமல் நமக்குப் பலசேவைகள் செய்யும் ஒரு மூளி அத்தையாக இருக்கிறாள். (அம்மைக்கு நல்லவன் கண்டீர்! மூளி அத்தைக்கும் அங்ஙனே! என்று தீராத விளையாட்டுப் பிள்ளையைச் சினப்பான் பாரதி)
வைணவத்தில் அவளே விஷ்ணு
விதானமற்ற வானிலே வினோதமான கடலிலே
சதா சுழன்றெழுந்தொளிர்ந்து சர்ப்பமான அணையிலே
நிதானமான நீள்துயில் நிறம்தவிர்ந்த நீலமே!
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
மனம்தவிர்ந்த போதிலே மலர்ந்தெழுந்த ஜோதியே
கனம்தவிர்ந்த சிந்தையில் கலந்திருக்கும் ஆதியே
தினம்விளங்கும் புதுமையே திசைவியந்த பதுமையே
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
மிகத்தெரிந்த இன்பமே மிகைதொலைந்த உண்மையே
நகத்தெரிந்த போதெலாம் நலம்பொழிந்த வண்மையே
புகத்தெரிந்த வானிலே புகைமிளிர்ந்த தீபமே
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
மனோமயக்க மேமிகுந்த மாயவாழ்வி லேதினம்
வினாவிலே வெதும்பினேன் வினைசுமந்து விம்மினேன்
அனாதையாய் அலைந்தபோ தணைக்கவந்த அன்னையே
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
எனைத்தொலைத்த போதெலாம் மனத்திருந்து பொங்குமே
வினைத்தடத்தையே புரட்டும் விந்தையுந்தன் சங்கமே
நினைத்திருந்த தேநிலைத்த தால்நெகிழ்ந்த தென்னுயிர்
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
நிறைந்திருக்கும் வெள்ளமே நினைந்துறங்கும் கள்ளமே
மறைந்திருக்கும் யாவையும் மலர்த்துமுந்தன் கண்களே
விரைந்திருக்கும் வாழ்விலே விரிந்துகொண்ட வானமே
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
மஹாவினோதமே உனை மனம்களிப்பதெங்ஙனம்
மனம் களித்த கொஞ்சமும் பதம்பிரிப்பதெங்ஙனம்
பதங்களில் ததும்பும் தேனைப் பருகி வாழ்வதெங்ஙனம்
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
ஏற்றிவைத்த துன்கரம் ஏறவைத்த துன்பதம்
போற்றவைத்த துன்முகம் போதவிழ்ந்த தென்மனம்
மாற்றிவைத்த கருணையில் மாலையான கண்களே
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
அலுப்பிலாத அமிழ்தம் நீ அயர்விலாத தமிழும் நீ
சலிப்பிலாத சாந்தி நீ சதாயிழுக்கும் காந்தி நீ
கெலிப்பிலாத கீர்த்தி நீ கேள்வியற்ற வார்த்தை நீ
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
உயிர்கலந்த இன்பமே உனக்குவேள்வி ஆனது
இயல்பு தர்மமானது இசைவு புத்தியானது
பயம்விழுந்த கண்ணிலே பரம்நுழைந்து மின்னுதே
இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
தன்னுடைய காக்கும் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று, ஆதி சேடனாகிய பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலின் அரிதுயிலான யோகநித்திரை அவளே!
நாம் மேலே கண்ட சந்திகளெல்லாம், பிரளயத்திற்கும் படைப்புக்கும், முதலுக்கும் முடிவுக்கும் இடையே உள்ள ஒடுக்கத்தைக் குறிக்கின்றன. இன்னும் சரியாய்ச் சொல்லப் போனால் முதலும் முதலல்ல, முடிவும் முடிவல்ல. இரண்டுமே ஒரு தோற்றமே, ஓர் அனுமானமே!
ஒன்று, இரண்டாகத் தெரிந்துவிட்டால், அந்த இரண்டுக்கும் நடுவே ஓர் இடைவெளி ஏற்படத்தான் செய்கிறது. அதுதான் ஒடுக்கம் என்பது. அதுவும் தோற்ற மயக்கமே!
இந்த ஒடுக்கத்தை வைணவம் விஷ்ணு என்கிறது; தாந்த்ரம் தூமாவதி என்கிறது.
இவளே காலராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி.
ஒவ்வொரு தேவிக்கும் தேவன் உண்டு. ஆனால் தூமாவதிக்குக் கணவன் கிடையாது. ஏன்?
பிரளயத்துக்கும், படைப்புக்கும் உள்ள இடைவெளியில், சக்தியைப் பிரிந்த சிவன் சவமாக இருக்கிறான்.
அந்த இடைவெளியின் உருவகம்தான் தூமாவதி.
அது, இருட்டு முழுவதும் அகலாத, ஒளி சரியாய்ப் புலர்ந்துவிடாத புகை நிலை. புகை, நெருப்புக்கு அறிகுறி. தூமாவதி, இனி தோன்றப் போகும் படைப்புக்கு அறிகுறி.
படைப்புக்கெல்லாம் மூத்தவளாயிற்றே, அதனால் மூத்த தேவி, மூதேவி, ஜ்யேஷ்டா, தவ்வை.
எல்லோருக்கும் முந்தியவள் என்பதால் கிழவி. உடைந்த பற்கள், குறைந்த பற்கள் கொண்டவள்.
உயிர்களைப் புடைத்து அகற்றுபவள் என்பதால் கையில் முறம் வைத்திருப்பவள்.
அவ்விதம், காலனின் தன்மை இருப்பதால் அவளுடைய வாகனமும், கொடியும் காக்கைதான்.
வெளுத்த முகம், நீண்ட கைகள், கால்கள், தொங்கும் முலைகள், பெரிய காதுகள், கொடூரமான பார்வை.
அழுக்கடைந்த உடைகள் கொண்டவள். மங்களங்களுக்கு விரோதமான குணங்களையும் தோற்றத்தையும் கொண்டிருப்பதால் இவள் துஷ்டா எனப்படுகிறாள்.
இன்னொரு தோற்ற வருணனை:
கையில் செம்பும், விளக்குமாறும் வைத்திருப்பவள். பெருக்கிக் கழுவுகிறாளே!
உயரத் தூக்கி அபயம் அளிக்கும் ஒரு கை. வரமளிப்பது போல் ஒரு கை.
பெரியம்மை போன்ற கொள்ளை நோய்கள், அதிஸாரம் என்னும் வயிற்றுப் போக்கு இவற்றை அளிப்பவள்.
இவைகளை அகற்ற, இவளுடைய ஓரெழுத்து மந்திரம் ‘தூம்.’ (DHOOM)
பாழடைந்த வீட்டில் அமர்ந்து ஜபம் செய்தால் நோய்கள் அண்டாது.
மனம், ஒளியில் சாந்தமடையும்.
யோக, மந்திர ரகசியங்கள் தெளிவாகும்.
தீயவர் தீமை செய்யவும் பயன்படும்.
Pallavi – பல்லவி
ஆதியில் இருளை இருளே மறைத்தது
இல்லாததிலிருந்தே இருப்பு வந்தது
இருளுக்கும் ஒளிக்கு இடையினிலே
தோற்றம், அழிவின் நடுவினிலே
தோன்றி எழுந்தவள் தூமாவதி!
Anupallavi – அனுபல்லவி
காலராத்திரி மஹாராத்திரி மோஹராத்திரி இவளே
மாலவன் யோக நித்ரை இவளே
மணாளன் இல்லா முதியவள் இவளே
CharaNam – சரணம்
நீண்ட கரத்தில் மாண்ட உயிர்களை நித்தம் புடைக்கும் முறம்
காண்பவர் அஞ்சும் கடும்பார்வை காக்கை கொடி வாகனம்
தனிமையில் தொழுதால் நோய்தீரும் சாந்திவரும்
தாயே இவளைத் தழுவிட, தக்க மந்திரம் ‘தூம்’
படங்களுக்கு நன்றி
தூமாவதி விளக்கத்துடன் உங்கள் இசைக்கவிதைகள்,…..ஆஹா…..வாய்விட்டுப்பாட என்ன சுகம்…என்ன சுகம்…..விதானமற்ற வானிலே…..வினோதமான கடலிலே….இதே தவம்…இதே வரம்….இதம் நிறைந்த மாதவம்…..இப்படிப் படித்து ரசித்துப் பார்ப்பதும் சுகம் சுகம்…பரம சுகம் தான்.
,,,கவிஞர் இளவல்ஹரிஹரன்.,,,,