சிகரம் நோக்கி (14)
சுரேஜமீ
பெண்மை
பெண்ணினம் இல்லாதிருந்திருந்தால் மண்ணில் ஏது வாழ்க்கை? ஒரு நிமிடம் எண்ண ஓட்டத்தை சற்றே நிறுத்தி, உங்களைச் சுற்றி இருக்கும் பெண்களைப் பாருங்கள்.
தாயாக…..தமக்கையாக….தாரமாக…..தோழியாக……மாற்றுத்தாயாக….துணையாக….செவிலியராக….ஆசிரியராக….சக ஊழியராக….இன்னும் எத்தனை எத்தனை உறவுகளாக …..என
எங்கெங்கு காணினும் நம்மைச் சுற்றி நிற்கும் பெண்களை!
இந்த உலகிற்கு நாம் வருவதற்குக் காரணம் ஒரு ஆணாக இருந்தாலும், நாம் வந்ததற்குக் காரணம் ஒரு பெண்ணே! அத்தகைய பெண்கள் சற்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் என்பது வரலாறு நமக்குச் சொல்கிறது. ஏன் பெண்கள் என்றாலே சற்று இளைத்தவர்கள் எனவும்; ஒரு ஆணால் சாதிக்க முடிவதை ஒரு பெண் சாதிக்க இயலாது என்றும்; பெண் என்றாலே ஒரு ஆணைச் சார்ந்துதான் வாழ வேண்டும் எனவும்; ஆண்களின் ஒரு போகப்ப்பொருள்தான் பெண் எனவும் சில ஆண்கள் நினைக்கின்றனர்?
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு; அதிகாரம் மறுக்கப்பட்டு; உரிமைகள் மறுக்கப்பட்டு; நிலைமைகள் பறிக்கப்பட்டு இருந்த ஒரு இருண்ட காலத்திலிருந்து; அவர்களுக்காக இந்த நூற்றாண்டில் குரல் கொடுத்த மிக முக்கியக் கவிஞன் மகாகவி பாரதிதான்!
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றும் எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.” – பாரதியார்.
இவ்வளவு ஆழமாக; அழுத்தமாக பாரதியை விட யார் சொல்ல முடியும்? தன் பெயரின் சுருக்கத்திலேயே பெண்ணீயம் வாழ வழிவகுத்தவனாயிற்றே!
இதற்குப் பின்னர்தான் ஆண்களின் சிந்தனையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டதும்; பெண்கள் தானே தலையெடுத்ததும் என்றால் மிகையாகாது.
ஒரு ஆணை விடப் பெண் தீர்க்கமாகச் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெற்றவள் என்பதற்கு தமிழ் இலக்கியங்களின் ஒப்பற்ற படைப்பாளியான ஔவையார் மிகப் பெரிய சான்று!
கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ – என்று திருவள்ளுவரின் திருக்குறளை முதலில் புகழ்ந்தவர் இடைக்காடர் எனும் ஆண் புலவர்.
ஆனால் அடுத்து வந்த பெண் புலவரான ஔவையார் அதை மாற்றி
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்! என்று பாடுகிறாரென்றால்
சற்று யோசியுங்கள் பெண்களின் அறிவு எத்தகைய வலிமை வாய்ந்தது என்று!
கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்கிறார் பெண்ணின் மேன்மை எத்தகையது என்பதை….
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை…… என்று!
அத்தகைய உயர்ந்த சக்தியாக விளங்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எப்போது தடுக்கப்போகிறோம்?
அவர்களையும் சமமாக, சரிநிகராக மதிப்ப்பதற்குத் தடையாக இருப்பது எது? சிந்தனையா? செயலா?
அப்பப்பா…எத்தனை கொடுமைகள் பெண்ணாகப் பிறந்ததற்காக இச்சமூகத்தில் ஏவி விடப்படுகின்றன?
தலைநகர் டில்லியில் பேருந்தில் சென்ற ஜோதிசிங்கின் மீது நடத்தப்ப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கொலையைத் தடுக்க முடிந்ததா? (2012)
சட்டம் போட்டுத் திருத்த முயன்றாலும், நம்மால் ஒரு வினோதினியைக் காப்பாற்ற முடிந்ததா? (2013)
இன்னமும் ஏதோ ஒரு இடத்தில்…ஏதோ ஒரு பெண் சமூகக்கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறாள்!
இதையெல்லாம் செய்பவர்கள் யார்? ஒரு ஆண்மகன் தானே! ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவன் தானே? ஒரு சகோதரியோடு உதித்தவன் தானே? ஏன் ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாக இருக்கக்கூடியவன் தானே?
பெண்களைத்தான் தெய்வமாக வணங்குகிறோம். அத்தகைய பெண்களின் வளர்ச்சியில்தான் ஒரு நல்ல சமூகம் மலரும். ஆகவே, இன்னமும் பெண்கள் தனக்கான உரிமையை நிலைநாட்டச் சட்டத்தை நாடும் இழிசெயலைத் தடுத்து, தானாகவே பெற நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும்.
இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே போகும்? என்றாவது யோசிக்கிறோமா? ஒவ்வொரு ஆண்மகனும், ஒரு பெண்ணை பாலியல் பார்வை தாண்டிப் பார்க்கும் சிந்தனை வளர்ந்தால்,
நிச்சயம் வரும் ஒரு நாள்; அந்நாள் இம்மண்ணில் நிலைக்கும் மகிழ்ச்சி!
ஒரு நாட்டுக்கு எது பெருமை என்று தெரியுமா? கீழ்வரும் புறநானூற்றுச் செய்யுளை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்!
நாடா கொன்றே; காடா கொன்றே
அவலா கொன்றே; மிசையா கொன்றே
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
இப்பாடல் சொல்லுவது என்னவென்றால், ஒரு நாட்டிற்குப் பெருமை நிலமல்ல….அடர்ந்த காடுகள் அல்ல….பள்ளம் ; மேடு அல்ல…..நற்பண்பும்; நல்லொழுக்கமும் கொண்ட ஆண்களே பெருமை சேர்க்கின்றனர் என்றால்;
சற்றே ஆண்கள் சமூகம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அது மட்டுமல்ல….எந்த ஒரு நிலையிலும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு காரியத்தைச் செய்யாமல், பெண்ணீயம் போற்றுகின்ற ஒரு சமூகமாக, ஆண்கள் மாறும் நாள்
நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிகரம் நோக்கிப் பயணிக்கும் ஒரு இனிய நடையாக அமையும்!
தொடர்வோம்……..
அன்புடன்
சுரேஜமீ