சிகப்பு உறை!
-ராகவபிரியன்
நெருப்பைக் கவ்வியிருந்த
சாம்பல் போர்வையைக்
கேட்டு வாங்கித்
தன்னை மூடிக்கொண்டது
காவிரிக் கரையோரப் புதர்…
தூக்கியெறியப்பட்ட
தெருநாய் சவம் மொய்த்த ஈக்களும்
பெயர் அறியாச் செடிகளும்
சில பூச்சிகளும்
மொய்த்துக்கொண்டிருந்தன புதரில்…
இடிந்த வகுப்பறையின்
கரும்பலகையாய்
ஊசலாடிக்கொண்டிருந்தது நிசப்தம்…
குழந்தை இடுப்பில்
சுற்றியிருக்கும்
அரைஞ்ஞாண் கயிறாய்
ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்தது காவிரி
புதரில் அமர்ந்து
சுமந்து வந்திருந்த
பெண் குழந்தையையும்
ஊறுகாய்ப் பொட்டலத்தையும்
நகத்தால் கிழித்தான்
மது முகமூடி அணிந்திருந்த அவன்!
நிசப்தக் கரும்பலகையின் மேல்
ஊறுகாயும் உயிரும்
திமிரிக்குதித்து அப்பிக்கொண்டன சிவப்பாய்…
சுவைத்து வீசிய
சிசுவின் சவம் மூடிய
சருகு உறைமீது
ஊறுகாய் ஒட்டியிருந்தது
தபால் தலையாய்…
ஈக்கள் மொய்க்கும்
உறையின் மேல்
அவமானம் அப்பியிருக்க
முகவரி தேடிக்கொண்டிருக்கிறது
முகம் சிதைந்த காவல் துறை!