— இன்னம்பூரான்.

kamarajar coin

பாரத ரத்னா கே.காமராஜ்

காமராசர் பாமரனின் பிம்பம். பிரதிபிம்பம் அன்று. மக்கள் என்ற கடலோடு கலந்து உறவாடிய தலைமாந்தன். மண் வாசனை பூமியில் ஊன்றிய கால்களை அவர் அகற்றியதும் இல்லை; ஆகாயகோட்டை கட்டியதும் இல்லை. அதனால், பாமரமக்களின் வாழ்வாதாரம் அவரது இதயகமலத்தில். அவர் முதல்வராக இருந்த போது, கலோனிய அரசின் இரும்புக்கோட்டை எனப்படும் ஐ.சி.எஸ் அதிகாரிகள் உயர்பதவிகளில் இருந்தார்கள். படிக்காத மேதை என்று தவறாக சுட்டிக்காட்டப்பட்ட முதல்வரிடம் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் பழகினார்கள். அதன் பின்னணியை ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி கூறியதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கிராமங்களுக்கு மின் வசதி கொடுக்கும் திட்டத்தின் படி அந்தந்த ஜில்லா (மாவட்டம்) கலைக்டர்களிடமிருந்து நான்கு கிராமங்களை பற்றி பரிந்துரை வரவேண்டும். இது சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை கூடியபோது ஒரே ஒரு கலைக்டரிடமிருந்து பரிந்துரை வரவில்லை. முதல்வருக்கு திடீரென்று அசாத்தியமான சினம் வருவது உண்டு, நற்காரியங்களுக்கு யாராவது முட்டுக்கட்டை போட்டால். அதனால் அமைச்சரவையில் ஒரு பதட்டம். நிதானமாக ‘அய்யா’ அவர்கள் (அவரது இந்த அடையாளம் தான் புழக்கத்தில் இருந்தது) அந்த ஜில்லாவின் நான்கு கிராமங்களின் பெயரை பட்டியலில் சேர்க்க சொல்லிவிட்டு, அடுத்த திட்டத்துக்கு போய்விட்டார். நிர்வாகப்புலி என்ற புகழ் வாய்ந்த அந்த அதிகாரி, “மக்கள் தொகை/வறுமை/வேளாண்மை தேவை/கல்வி/மின் இணைப்பு சாத்தியம்/ காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று எப்படி பார்த்தாலும் இத்தகைய தேர்வை எந்த கலைக்டரும் செய்திருக்கமுடியாது” என்றபோது, குழுமியிருந்த அதிகாரவர்க்கம் மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்ந்தது. அய்யா அவர்களின் காலடி படாத கிராமமே கிடையாது எனலாம். தமிழ் நாட்டின் புவியியல் பாடம் எடுக்க அவருக்கு இணை யாரும் இல்லை; இது அய்யாவே சொன்னது. பாரத மிகுமின் நிறுவனத்துக்குத் திருவெறும்பூரை பரிந்துரைத்தவர், அய்யாவே. மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்த்து கற்றாரை காமுற்றவர் அல்லவா! ஒளவை பாட்டி அகமகிழ்வாள்.

அதே நிர்வாகத்திறனின் மறுபக்கம்: 1954ல் முதல்வரான அய்யா அப்போது சட்டமன்றத்தில் அங்கத்தினர் அல்ல. பிற்காலத்து மாஜி பிரதமரை போல, மேல் மன்றத்தில் இடம் பெற்று இயங்க மறுத்ததே, மக்களாட்சிக்கு அவர் கொடுத்த மரியாதை. குடியாத்தத்தில் இடை தேர்தல்; கம்யூனிஸ்ட் போட்டி. இருபக்கமும் தீவிர பிரச்சாரம். ஆனால், வாக்காளர் நியாயமாக கேட்ட மேம்பாலம் பற்றி வாக்குறுதி அளிக்க அய்யா மறுத்து விட்டார். அவருடைய விதுரநீதி: “நியாயமே ஆயினும், என் வாக்குறுதிக்கு இணையாக எதிர்கட்சி தோழர் கோதண்டம் வாக்குறுதி கொடுக்க முடியாது. நான் அந்த அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கில்லை.” எட்டே அமைச்சர்கள் இருந்த அவரது அமைச்சரவையில் நால்வர், இவருடைய அலைவரிசையில் இல்லை என்றாலும், தகுதிக்கு மதிப்பு கொடுத்தார். இதை எல்லாம் எந்த பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறார்கள்?

ராஜாஜிக்கும் காமராசருக்கும் கருத்து வேற்றுமை நிலவியது என்றாலும், நகராட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் கண்ணியம் தான் அடித்தளம். இருவரும் சிபாரிசு செய்யமாட்டார்கள். ஒரு நல்வழிப்பாதையிலிருந்து மற்றொரு நல்வழிப்பாதைக்கு குறுக்கு வழியில் செல்லமாட்டார்கள். இருவரும் சுற்றத்தை அண்ட விடமாட்டார்கள். சராசரி மனிதர்களோடு அவர்கள் இருவரும் பழகும் விதம் அலாதி. ராஜாஜி சென்னை வரும்போது, விமான நிலையத்தில் வரிசையாக பலர் நிற்பார்கள். ஒருவரிடன் மகளின் திருமணத்தை பற்றியும், மற்றொருவரிடம் மகனுக்குக் கிடைத்த வேலை பற்றியும், மற்றொருவரிடம் நாற்று நட்டச்சா என்றும் கேட்பார். எல்லாருக்கும் தன்னை பற்றி மட்டுமே மூதறிஞர் நினைக்கிறார் என்று தோன்றும். அதே மாதிரி பெருந்தலைவர் காமராசர் எல்லாரையும் நினைவில் வைத்துக்கொண்டு, அவரவருக்கு இதமாக பேசுவார். ஆயுள் முழுதும் முருக தனுஷ்கோடி போன்ற அன்யோன்ய நட்புகள் சில.

அவருடைய தமிழ், கறார் கலந்த கொஞ்சும் தமிழ்; ஒரு ‘ரசாயனக்கலவை’ எனலாம். அதனால், அதிகார மையங்களில், அய்யா சொல்வதை எல்லாரும் கவனமாகக் கேட்பார்கள். ‘பார்க்கலாம்’ என்ற சொல் காமராசருடன் ஐக்யமாகி விட்டது. அது அவருடைய நிதானத்தையும், சிந்தித்து செயல் படுவதை சுட்டுகிறதே தவிர, அங்கு எள்ளலுக்கு இடம் கிடையாது. அய்யா அவர்களின் மேலாண்மையையும், அரசியல் அணுகுமுறையையும், நிர்வாகத் திறனையும், நாட்டுப்பற்றையும், கொள்கை என்ற அசையா நிலையையும், மக்கள் தொண்டையும், தொலை நோக்கையும், விருதுப்பட்டியும் (பின்னர் தான் விருதுநகர் என்ற விலாசம்!) அறியும்; தமிழகமும் அறியும்; இந்தியா முழுதும் அறியும். ‘மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன்’ ஒரு ரசவாத வித்தகர் தான். கர்மவீரர் காமராசரை போல் ஒருவரை ’…நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா…’ என்று கவிஞர் வாலி விசனத்துடன் வினவிய போது, ‘இல்லை! இல்லை!’ என்று எட்டுத் திக்குக்களிலிருந்தும் எதிரொலி கேட்டதாம்!

அத்தகைய சான்றோனின் வரலாறு, வருங்கால சந்ததிக்கு வாழ்வியல் பாடமாக அமையும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. ‘காமாட்சி’ குலதெய்வம். அந்த பெயரை அவருக்கு சூட்டினார்கள். அன்னை சிவகாமிக்கு, அவர் ‘ராசா’. திரிபு: காமராசு. ஆறு வயதில் தந்தை மரணம்; பள்ளிப்படிப்புக்கு முழுக்கு. மாமனின் துணிக்கடையில் எடுபிடி வேலை. சிறுவயதிலேயே நாட்டுப்பற்று பற்றிக்கொண்டது. 16 வயதிலேயே அரசியல் பணி; ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்ரகம்; முதல் முறை கைது. நாடு விடுதலை பெறுவதை கண்டு களிக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட தீரர் சத்தியமூர்த்தி தான் இவரது அரசியல் ஆசான். அவரது ஆசை நிறைவேறவில்லை எனினும், ஆகஸ்ட் 15, 1947 அன்று அவரது இல்லத்தில் அய்யா அவர்கள் தேசீயக்கொடியை ஏற்றியபோது, அவரது ஆத்மா பங்கேற்றுக்கொண்டிருக்கும்.

மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக பணி புரிந்த காமராசர், 1954ல் முதல் முறை பதவி ஏற்றுக்கொள்ளும் முன்னால், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து ஆசி பெற்ற பின் தான் அரசியல் பணியை துவக்கினார். அது அமோகமாக அமைந்தது என்பது குறிப்படத்தக்கது. மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதல்வராக மக்களால் அரியணையில் அமர்த்தப்பட்ட காமராசர், கட்சிப்பணியும், நாட்டுக்குத் தொண்டும் முக்கியம் என்று ஒரு நிலைப்பாடு எடுத்தது, பிரதமர் நேருவைத்தவிர மற்றவர்களுக்கு வியப்பு அளித்தது. முதல்வர் பதவியை உதறினார். அக்டோபர் 9, 1963 அன்று அகில இந்திய காங்கிரசின் தலைவர் ஆனார். அய்யா அவர்களின் தியாகமும், அரசியல் உத்தியும் பெரிதும் போற்றப்பட்டன.

நேரு மறைந்தவுடன், பிரச்னைகள் அணுகாத வகையில், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராவதற்கும், அவருடைய அகால மரணத்திற்கு பிறகு இந்திரா காந்தி பிரதமராவதற்கும் வழி வகுத்தது, காமராசர் தான். என்றும் தன் கடமையிலிருந்து வழுவாத காமராசரின் கரும வீரத்துக்கு, இந்திரா காந்தியின் தன்னிச்சைப்போக்கு ஒரு அறை கூவலாக எழுந்தது. கட்சி உடைந்தது. இந்திரா காந்தியின் “அவசர நிலை” என்ற மின்வேலி அவருக்கு தாங்கொண்ணா கவலை கொடுத்தது. தேசபக்தர்களான ஜெயப்பிரகாஷ் நாரயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தினர். காந்தியடிகள் பிறந்த நாளன்று (அக்டோபர் 2, 1975) அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி அவரை மிகவும் வாட்டியது. அன்றே உயிர் துறந்தார். அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

தியாகராய நகரின் திருமலைப்பிள்ளை வீதியில் அவர் வாடகைக்கு இருந்த தெருவிலே நானும் குடி இருந்ததால், அடிக்கடி காலையில் அவருடைய வீட்டை தாண்டித்தான் போகவேண்டும். மூன்று வயது சிறுவனான என் மகன், அவர் வீட்டு வாசலில் நின்று விடுவான்; வாசலில் நிற்கும் காவலரின் துப்பாக்கியை தொடவேண்டும்! அந்த நாளில் தடாலடி காவல் பட்டாளம் எல்லாம் கிடையாது. ஒருவர் மட்டும் தான். சில நாட்கள் அரிதாக, அய்யா அவர்கள் அந்தப்பக்கம் நின்று கொண்டிருப்பார். சிறுவனுடன் இரண்டு வார்த்தை பேசுவார். எனக்கு புளகாங்கிதம். பொது கட்டுரையில் சுய அனுபவங்களை மட்டுறுத்த நினைத்தேன். இல்லை. சொல்லத்தான் வேண்டும். அய்யா அவர்களை பற்றி எது சொல்ல நேரிட்டாலும், இன்றைய இளைய சமுதாயம் அவரது வாழ்க்கைக்குறிப்புகளின் ஒவ்வொரு வரியிலும் நல்வழி கற்கக்கூடும்.

சான்றாக, மேலும் இரு செய்திகளை கூறலாம். விருதுநகரில் வசித்த அன்னைக்கு மாதம்தோறும் பணம் அனுப்புவார். அன்னை சிக்கனமாக வாழ்ந்தால் தான், அது போதுமானது. காமராசருக்கு உள்ளூரில் பக்தி கலந்த மரியாதை இருந்தது. அக்காலம் வீடுகளுக்கு குழாய்நீர் கொடுப்பது சொற்பம். தெருக்குழாய் தான் நீருக்கு ஆதாரம்; அஞ்சல் அதிகாரி வீட்டு வாசலில் தபால் பெட்டி வைப்பது போல, தெருக்குழாயை காமராசர் அன்னைக்கு வசதியாக, அருகில் வைத்துக்கொள்ள அவருடைய சகோதரிக்கு ஆசை; அதை அய்யா நிராகரித்து விட்டார். அதை விட முக்கிய அறிவுரை, ஒரு நிகழ்வு ரத்து செய்ததில். அரசியல் வாதிகளின் திருவிளையாடல்களுக்கு எல்லை கிடையாது. யாரோ ஒருவரின் தூண்டுதலால், பிரதமர் நேரு தமிழகத்தில் பயணம் செய்த போது, விருதுநகரில் காமராசரின் அன்னை அவருக்கு விருந்தோம்ப ஏற்பாடு நடந்தது, அவருக்கு தெரியாமல். நேருவும் சம்மதித்து விட்டார். இந்த சேதி அய்யாவுக்கு தாமதமாகத்தான் கிட்டியது. அன்னையிடம் கோபித்துக்கொண்டார். நிகழ்வை ரத்து செய்து, நேருவிடம் தெரிவித்து விட்டார். அதனால் ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை அவர் பொருட்படுத்தவேயில்லை. நேர்மை நீர்த்து விடக்கூடாது என்பதில் அவர் வாழ்நாள் முழுதும் திண்ணமாகவே இருந்தார்.

பாருங்களேன். நான் அவரை கடைசியாக பார்த்தது, ராஜாஜியின் மரணத்தின் போது. ராஜாஜி ஹாலில் அவருடைய பூதவுடல் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்டகூட்டத்தில் நடுவில் அய்யா அவர்கள் ‘தனிமையில்’ நின்று கொண்டிருந்தார். லேசான தூறல். அக்காலத்தில் காவல் துறையின் மாணிக்கமாக கருதப்பட்ட கமிஷனர், கே.ஆர்.ஷெனாய் (ஆம். அவரை கேலி செய்துதான் கண்ணதாசன் அய்யாவிடம் செமையாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.) அவரை அணுகி, ‘அய்யா களைத்து போய்விடுவீர்கள். ஒரு நாற்காலியும் குடையும் கொண்டு வருகிறேன்’ என்றார். ‘பெரியவரே போய்விட்டார்.’என்றவர், மவுனத்தில் ஆழ்ந்தார். வேறிடம் செல்லவேண்டிய அவசரம், கமிஷனருக்கு. ‘ அய்யா மனதளவில் வேறு எங்கோ இருக்கிறார். அவரை விட்டு நகராதே. நான் விரைவில் வருகிறேன்.’ என்று சற்றே பரிச்சியமாகியிருந்த என்னிடம் கட்டளையிட்டு விட்டு, விரைந்தார்.

நான் நகரவில்லையே -இன்றும் தான். வாழ்நாள் முழுதும் நகரமாட்டேன்.

சித்திரத்துக்கு நன்றி: http://static-numista.com/catalogue/photos/inde/g1117.jpg

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on ““பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!

  1. பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிப் படித்து அறிந்ததைக் காட்டிலும், அவரை நேரில் பார்த்து, அவர் செயல்பாடுகளைக் கண்டு அதிசயித்த மனிதர்கள் நிகழ்ச்சிகளைச் சொல்லும்போது புல்லரிப்புதான் ஏற்படுகிறது. இத்தனை பெரிய மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்தார்கள் எனும் எண்ணம் நம்மை புளகாங்கிதம் அடையச் செய்கிறது. இனி அப்படியொரு காலம் வராதா? அப்படியொரு தலைவர் நம்மிடையே தோன்ற மாட்டாரா? எனும் ஏக்கமும் ஏற்படுகிறது. மிக அருமையான அற்புதமான செய்திகளைத் தந்திருக்கிறீர்கள்; அதற்கான சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது; நீங்கள் பாக்கியம் செய்தவர்.

  2. நன்றி, தஞ்சை வெ.கோபாலன். உங்கள் மதிப்புரை எனக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது. உங்களில் மகாகவி பற்றிய பணியை போற்றும் எனக்கு, உங்கள் கருத்து முத்து முத்தாக மைந்துள்ளது.

  3. கர்மவீரர் கமராஜ் என்று நினைக்கும்போதே உள்ளம் நெகிழ்கிறது. என்ன ஒரு கம்பீரம். 
    தென் மாவட்டங்களில் கல்வி கற்றதால் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 
    அவர் கையால் திருக்குறள் பரிசும் பெற்றிருக்கிறேன்.
    நீங்கள் தந்திருக்கும் பதிவு பெரிய பொக்கிஷம்.
    மிகமிக நன்றி இன்னம்பூரான் ஜி.

  4. எத்தனை பேருக்கு உங்களுக்குக் கிடைத்த பாக்கியம் கிடைத்திருக்கும்!  அந்த பிரதி ப்த்திரமாக இருக்கிறதா? உங்கள் கருத்துக்கு நன்றி, ரேவதி.
    இன்னம்பூரான்

  5. நாங்களும் உங்களுடன் நகராமல் நின்றுகொண்டிருக்கிறோம்.

    மகராசர் காமராசர் – http://annakannan-kavithaigal.blogspot.in/2007/07/blog-post.html

  6. நான் ரேவதிக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறேன். நான் ‘கம்பீரானர் காமராசர்’ என்று தான் முதலில் தலைப்பு கொடுத்தேன். பிறகு மாற்றினேன். அவர் எப்போதும் கம்பீரமாகத்தான் நிற்பார்; அமருவார். ஒரு முறை நான் போனபோது படுத்திருந்தார். அதிலும் ஒரு கம்பீரத்தைக்கண்டேன். வாழ்த்துக்கள்.

    தம்பியிருந்தால் படைக்கு அஞ்சான். தமிபி அண்ணணாக வந்த பின் தகரியம் கூடியது. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.