“மது விலக்கு”
மீ.விசுவநாதன்
“குடி குடியைக் கெடுக்கும்”என்ற முதுமொழியை மறக்கச் செய்த அரசியல் போலிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அரசியல் தலைவர்களே குடித்து விட்டும், ஒழுக்கம் கெட்டும் இருப்பதால் அவர்களால் மக்களுக்கு வழிகாட்டவோ முன்னுதாரணமாக இருக்கவோ முடியாது.
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இருந்தார்கள். பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, மது ஒழிப்பிற்காகத் தன் வீட்டுக் கொல்லையில் வளர்ந்திருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டி எறிந்த பெரியார் ஈ.வே.ராமசாமி, எளிய மனிதர் கக்கன், ப.ஜீவானந்தம், பாலதண்டாயுதம், பி.ராமமூர்த்தி போன்ற தன்னலம் இல்லாத , மக்கள் நலம் ஒன்றே குறியாக வாழ்ந்த பெரியோர்கள் அவர்கள். இப்பொழுது அவர்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரே தலைவரைப் பார்க்க வேண்டுமானால் வலது சாரிக் கட்சியைச் சேர்ந்த திரு.நல்லகண்ணு வைத்தான் சொல்ல வேண்டும்.(தமிழகத்தைப் பொறுத்தவரை). இவர்கள் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்கள், சிந்தித் தவர்கள்.. மற்றவர்களோ மக்களை வைத்துத் தங்களையும், தங்கள் குடும்ப வளர்ச்சியையும் உயர் பதவிகளைப் பெற்று எப்படி தேசத்தைச் சுரண்டலாம் என்றே சிந்தித்தவர்கள், சிந்திப்பவர்கள். இதற்கு அவர்களது வாழ்க்கையும், தமிழகத்தின் இன்றைய நிலையுமே சாட்சி.
1971ல் தமிழ் நாட்டில் மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசுதான் மதுவிலக்கை ரத்து செய்தது. அந்த முடிவைக் கைவிடும் படி கோபாலபுரத்தில் உள்ள அந்நாள் முதலமைச்சரின் இல்லத்திற்கே கொட்டும் மழையில் சென்று வேண்டிக்கொண்ட “ராஜாஜி” அவர்களின் வேண்டுகோளை உதாசீனப் படுத்தியவர்தான் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த பொழுதும் மதுக் கடைகளை மூடாதவர். அவர்தான் , இன்று அரசு மதுவிலக்கை உடனேயே அமல் படுத்த வேண்டும் என்று தேர்தல் வேடதாரியாகக் குரல் கொடுக்கிறார். இதைத் தமிழக மக்கள், குறிப்பாக வாக்குச் சீட்டுள்ள இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். காமராஜர் சொன்னது போல ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டு மானால், அதற்குரிய வல்லமை தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லக் கூடியவர்களும், தேசிய வளர்ச்சியிலும், நேர்மை, எளிமை, ஆழ்ந்த கல்வி, பணிவு, துணிவு போன்ற நற்குணங்கள் பெற்றவர்களுமான தமிழக இளைஞர்களிடம்தான் இருக்கிறது. அவர்களிடம் மதவெறியோ,சாதி வெறியோ இருப்பதில்லை. அவர்களிடம்தான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இளைய பாரதம் நிச்சயம் போலிகளை அடையாளம் தெரிந்து கொண்டு பெரும் வெற்றி பெரும். தமிழகம் நல்ல குணங்களுக்கும், உழைப்பிற்கும் தலைமை இடமாக இருக்கும். வாழ்க தமிழகம் தேசிய சிந்தனையோடு.
அன்பன்,
மீ.விசுவநாதன்
04.08.2015.