நிர்மலா ராகவன்

தீபாவளி சமயம். வீட்டில் இருந்தால், பண்டிகை விசாரிக்க வருபவர்களுடன் அர்த்தமில்லாது பேசிச் சிரித்து, பிடிக்கிறதோ இல்லையோ, அவர்களுடைய குழந்தைகளைக் கொஞ்சிவைத்து,எல்லாவற்றிற்கும் மேலாக, இடுப்பு உடைய சமையற்கட்டில் வேலை பார்த்து, இரவு, `இதில் என்ன ஹாப்பி தீபாவளி?’ என்று ஒவ்வொரு முறையும் சலித்துக் கொண்டுவிட்டு, இப்போது –வயதான காலத்தில் — நானும், என் கணவரும் ஆரவாரமற்ற பினாங்கு கடற்கரைப் பகுதிக்குப் போய் ஓய்வாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்தோம்.

கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தபோது, என் கண்கள் அலைந்தன. அதைக் கணவர் பார்த்துவிடக் கூடாதே என்ற தவிப்பும் எழுந்தது.

“ஒன் ஷேக்கியைக் காணும், இல்லே?” அவர் வம்புக்கிழுத்தபோது, அதைக் காதில் வாங்காதவளாக, அங்கே காணப்பட்ட கடைகளில் பார்வையைச் செலுத்தினேன்.

முதன் முதலாக இங்குதான் அவனைச் சந்தித்தேன்.

`இவ்வளவு இளமையான, கட்டுக்கோப்பான உடலை மூடி மறைப்பதாவது! பெருமையுடன் வெளிக்காட்டிக் கொள்வதில் என்ன தவறு?’ என்று நினைத்தவன்போல், மிக மிகக் குறைந்தஆடையே அவன் அணிந்திருந்தான். சுவாரசியத்துடன் பார்த்தேன்.

எங்கே நான் கெட்டுப் போய்விடுவேனோ என்று பயந்தவர்போல, என் கணவர் தர்மசங்கடத்துடன் என்னைப் பார்த்ததை லட்சியம் செய்யவில்லை.

சாப்பிட்டானதும், கணவர் ஹோட்டல் அறையிலிருந்த டி.வியில் மூழ்கிக் கிடந்தபோது, `வந்த இடத்திலும் என்ன டி.வி!’ என்று, நான் கீழேயிருந்த கடைகளைப் பார்க்க நடந்தேன். அங்குதான்அவனைச் சந்தித்தேன்.

என்னைப் பார்த்துச் சிநேகிதமாகச் சிரித்தான். அதில் தெரிந்த வெகுளித்தனம் என்னை ஈர்க்க, `ஒன் பேர் என்னப்பா?’ என்று விசாரித்தேன்.

எல்லாரும் அவரவர் வாழ்க்கையிலேயே மூழ்கிவிட்ட நிலையில், தன்னைப்பற்றிக்கூட ஒருவர் விசாரிக்கிறார்களே என்று அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கவேண்டும். வேறு பலவிவரங்களையும், நான் கேளாமலேயே சொன்னான் அவன் — செந்தில்.

செந்திலுக்குப் பிடிக்காதது: பள்ளிப் படிப்பு. அதனால், பதினைந்து வயதிலேயே அவனது படிப்பு முடிவுற்றது.

பிடித்தது: காதல். எதிர்பாலரை என்றில்லை, அந்த வார்த்தையின்மேல். ஓயாமல் தமிழ்ப் படங்களை தியேட்டரிலும், டி,வி.யிலும் பார்த்ததன் நேர்விளைவு. பட இயக்குனர்கள் கதாநாயகன்,நாயகிவழி எவ்வளவுதான் விளக்கினாலும், திருப்தி அடையாது, தானே அனுபவிக்க வேண்டும் என்ற வெறி உண்டு. `காதல்’ என்பது நிச்சயம் பிரமிக்கத்தக்க உணர்வாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இப்படி எல்லா தமிழ்ப்படங்களிலும் அதைப்பற்றியே விளக்கிக் கொண்டிருப்பார்களா என்ற யோசனை வந்தது.

இவ்வழியின் முன்னோடிகள் சிலரை நினைத்துப் பார்த்தான். அந்தக் காலத்து காதல் மன்னன் ஜெமினி, இன்றளவும் நிலைத்திருக்கும் காதல் இளவரசன் கமல், `காதல் பையன்’ மாதவன்,மற்றும் தன் உடலாலும், இரும்பு போன்ற உடலாலும், கூரிய பார்வையாலுமே இளம் பெண்களைக் காந்தமாகக் கவர்ந்திழுக்கும் சூர்யா ஆகியோரை அடிக்கடி மனக்கண்முன் நிறுத்திப்பார்த்தான்.

தானும் அப்படி — ஒரு மன்னனோ, இளவரசனோ — வேண்டாம். எவளோ ஒருத்தியாவது காதலிக்கத் தன் தகுதியை கூட்டிக் கொண்டாக வேண்டும்.

கைகள் தம் பாட்டில் கார்களைப் பழுது பார்க்க, யோசிக்க நிறைய நேரம் இருந்தது. யாரை முன்மாதிரியாகக்கொள்வது?

முதலிருவருக்கு வயதானதால், ஒதுக்கினான். மாதவனைப்போல் முன்பற்கள் மட்டும் தெரிய சிரிக்கப் பழகுவதைக் காட்டிலும், புஜ பராக்கிரமத்தைப் பெருக்கிக் கொள்வது எளிதெனப்பட,காரியத்தில் இறங்கினான்.

ஆனால், அந்த நற்காரியத்துக்கு அப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லையே!

“என்னாது! இனிமே அரிசிச் சோறு வேணாமா? மதியம் ரெண்டு சப்பாத்தியும், ராத்திரி ரெண்டு தோசையும்தானா!” ஒரேயடியாக அதிர்ந்தாள் தாய். “ஏற்கெனவே ஓமப்பொடி மாதிரி இருக்கே!”

“அதான் காலையில ஒரு அவிக்காத முட்டை சாப்பிடப் போறேனேம்மா!” என்று அவளைச் சமாதானப்படுத்தினான் மகன். அப்படியும் அவள் முக இறுக்கம் தணியாததால், “ஒங்க திருப்திக்குகொஞ்சம் முளைப் பயறு சாப்பிடறேன்,” என்று இறங்கி வருவதைப்போல் பாவனை காட்டினான்.

நடிகர்களின் பழக்க வழக்கங்களைப் பிரசுரிப்பதைவிட முக்கியமான செய்திகளே கிடையாது என்ற கொள்கையுடன் அநேகமாக எல்லா பத்திரிகைகளும் செயல்பட்டதும் நன்மைக்குத்தான்.இல்லாவிட்டால், கமல்ஹாசன் அவன் வயதாக இருந்தபோது, எப்படியெல்லாம் பிரயாசைப்பட்டு தனது தசைநார்களை வளர்த்துக்கொண்டிருந்தார் என்பது அவனுக்குத் தெரியாமலேபோயிருக்கும்.

ஒரு நாளைக்கு இருமுறை கோழி இறைச்சி சாப்பிட்டு, `ஆளவந்தான்’ ஆகலாம். ஆனால், பெண்கள் மயங்குவதற்கு மாறாக மிரளலாம் என்று யோசித்து, காய்கறிகளின்மேல் அதிக கவனம்செலுத்தினான்.

அது புரியாது, “எங்கேயாவது சாமியாரா ஆகிடப் போறேடா!” என்று கலங்கினாள் தாய்.

அவனுடைய அறையின் தடுப்புகளில் இருந்த ஓட்டைகளை வெற்றுடம்புடன் தமது தேகப் பயிற்சியின் விளைவைக் காட்டிக் கொண்டிருந்த நடிகர்களின் போஸ்டர்கள் மறைத்துக்கொண்டன.அனுதினமும் தூங்கி எழுந்த பின்னரும், தூங்குமுன்னரும் அவற்றைத் தரிசித்ததன் பலன், விரைவிலேயே செந்திலும் ஓர் ஆரம்ப கால ஹீரோபோல ஆனான். புதிய வேலையும் அவனைத்தேடி வந்தது.

“பீச் பாயா!”

“வேலைன்னு பெரிசா ஒண்ணும் கிடையாது. நம்ப பாட்டி வயசுப் பொம்பளைங்க வெயிலைத் தேடி இங்க, பினாங்குக்கு வர்றாங்க இல்ல? அவங்களுக்கு இதமா நாலு வார்த்தை பேசணும்”.அவனுடன் சேர்ந்து, அவனைப் போலவே அரைகுறையாகப் படித்த செல்வம் ஊக்கினான்.

“இங்கிலீஷா?”

“அட! பரீட்சையா எழுதப்போறே? சும்மா அடிச்சு விடு. அப்பப்போ மஸாஜ்! கை மேலே காசு! அதுவும், அமெரிக்க டாலர், இல்லாட்டி யூரோவில. நாம்ப கேக்கற நூறு ரிங்கிட்டெல்லாம் ஒருபொருட்டே இல்ல அவங்களுக்கு”.

“பிரச்சனை ஒண்ணும் வராதே?”

“சேச்சே! எதுவானாலும், கடற்கரையிலதானே! ஒண்ணு மட்டும் கவனம். ஹோட்டல் ரூமூக்குள்ள போகக் கூடாது. அதோட, இந்த ஜீன்ஸ், டி ஷர்ட்டெல்லாம் வேணாம்!”

திக்கென்று இருந்தது செந்திலுக்கு. “அடப்பாவி! ஏண்டா?”

“பின்னே? ஒன் ஒடம்பை வச்சுத்தானே வியாபாரம்? எண்ணை போத்தலோட குறுக்கே நெடுக்கே நீ நடந்தாலே போதும், அவங்களே மயங்கிப்போய் ஒன்னைக் கூப்பிட மாட்டாங்களா!”

அவன் உடலைப் பற்றி பேச்சு திரும்பியதுமே செந்திலுக்குப் பெருமையாக இருந்தது. சும்மாவா! எவ்வளவு பிரயாசை!

“நீச்சல் அடிக்கறப்போ போட்டுக்கற ஜட்டி மட்டும் போட்டுக்க. போதும். அதுவும் குட்டையா இருந்தா விசேஷம்!” என்ற நண்பனைப் பார்த்து வெட்கம் வந்தது செந்திலுக்கு. “போடா!” என்றான்,பிறகு, “நீ அந்த வேலையா செய்யறே?” என்று சந்தேகத்துடன், மெல்லிய குரலில் கேட்டான்.

“நான் ஒன்னை மாதிரியா!” செல்வம் பெருமூச்சு விட்டான். “என் ஒடம்பு இருக்கற லட்சணத்துக்கு படகை வாடகைக்கு விடற  வேலைதான் செய்ய முடியும்!”

செந்திலின் பெருமை கட்டுக்கடங்காது போயிற்று.

`நான் கறுப்பு!’ என்று செந்திலுக்கு இருந்த குறை, “நானும்தான் இந்த `காப்பர் டோனைப்’ போட்டுக்கிட்டு மணிக்கணக்கா வெயில்ல படுத்துப் பாக்கறேன். உன் அழகான கலர் வரமாட்டேங்குதே!தே தாரேக் (மலாய் மொழியில், ஆற்றிய, கடும் பழுப்பான டீ)  கலரில்ல இது!” என்று ஒரு கிழவி அவன் கையை மேலிருந்து கீழ் தடவியபடி அங்கலாய்த்ததில் மறைந்தே போயிற்று.

“ஒன் அழகுக்கு என்ன குறைச்சல், ஆலிஸ்!“ என்று பாராட்டி, சுருக்கம் நிறைந்த அவள் முகம் மலர்வதைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ந்தான்.

அறுபது வயதுக்கு மேலான பெண்மணிகளைப் பெயர் சொல்லி அழைத்த புதிய பழக்கம் அவனுடைய தரத்தை உயர்த்தியதைப்போல் இருந்தது. அவனுடைய பாராட்டுக்கு அவர்கள் ஏங்கியதுவேறு! அதனால் ஊக்கமடைந்து, அவர்களைத் தன் தோழிகளாகவே பாவித்து நடந்து கொண்டான்.

“டியானா! உன் தலை அலங்காரம் இன்னிக்கு எவ்வளவு அழகாக இருக்கிறது, தெரியுமா?” என்றுவிட்டு, “எனக்குப் பிடித்திருக்கிறது!” என்று சேர்த்துக் கொள்வான், ஏதோ, அவனுக்காகவேஅவர்கள் அலங்கரித்துக்கொண்டதைப்போல.

உடலைக் காட்டிப் பிழைக்கிறான் என்றால் அதை சீரணித்துக்கொள்வது எனக்குச் சற்று சிரமமாகத்தான் இருந்தது. பெண்கள் இந்தமாதிரி செய்தால், அதை இவ்வளவு எளிதாக ஏற்போமா என்றுஒரு யோசனை போயிற்று. “எத்தனை வருஷமா இப்படி..?” என்று இழுத்தேன்.

“நாலு, ஆன்ட்டி,” என்றான் மரியாதை குன்றாது.

ஆரம்பத்தில் அதிர்ந்த அம்மாகூட, அவன் சம்பாத்தியத்தில் மயங்கிப்போய், `வயசானவங்க ஒடம்பைப் பிடிச்சு விடறதில என்ன தப்பு? அப்படியே புண்ணியம்!’என்று திசை மாறியதைச்சொல்லிச் சிரித்தான்.

அன்றும் வழக்கம்போல் ஒரு கையில் எண்ணை போத்தலுடன், முக்காலே மூன்று வீசம் உடல் தெரிய கடற்கரையில் மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருந்தான் ஷேக்கி — செந்தில்தனக்குத்தானே வைத்துக்கொண்ட காரணப்பெயர் அது.

பலரும் சுவாரசியத்துடன் அவனை, இல்லை, இல்லை, அவனது விரிந்த மார்பையே பார்த்ததால் எழுந்த பெருமை அதை இன்னும் அகலச் செய்தது. தோள்கள் முன்னும் பின்னும் மிகையாகஅசைய, நடையில் ஒரு வித ஏற்ற இறக்கம் வந்தது.

`திருவிளையாடல் படத்திலே, சிவாஜி செம்படவரா வந்து, இப்படி ஆடி ஆடி நடந்துதானே சாவித்திரி மனசில இடம் பிடிப்பாரு!’ என்ற ஏக்கம் பிறந்தது. தனக்கும் அப்படி  ஒருத்தி வந்தால்,எவ்வளவு நன்றாக இருக்கும்! இவ்வளவு அழகும் வீணாகிப் போகிறதே! இவன் சந்தித்தது என்னவோ, பாட்டியாக நினைக்கத் தோன்றிய வெள்ளைக்காரப் பெண்மணிகள்தாம்.

“ஏண்டா? இந்தக் கெழவிங்களுக்கு வீடு வாசலே எல்லாம் கிடையாதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டவனைப் பார்த்து, நண்பன் சிரித்தான்.

“இவங்க கிட்டேதான் நிறைய காசு இருக்கே! வீட்டு ஆம்பளைங்க சின்னப் பொண்ணுங்களைத் தேடிப் போவாங்க. இவங்க நாலைஞ்சு பேரா சேர்ந்துக்கிட்டு இங்க வந்துடறாங்க, அங்கே குளிர்தாங்காம. `ஆகா! என்ன வெயில்!’ அப்படின்னு, வடாம் காயற மாதிரி காய்ஞ்சுட்டு, காதல் நாவலைப் படிக்கறாங்க! இந்த வயசில அதைப்பத்தி படிக்கத்தானே முடியும்!” அவனுடைய சிரிப்பில்கலந்துகொள்ள முடியவில்லை செந்திலால். அவனுடைய உற்ற தோழிகளைத் தரக்குறைவாகப் பேசியதை எப்படி ரசிக்க முடியும்!

செந்திலின் ஏக்கத்தைப் போக்கவேபோல் வந்தாள் ஏஞ்சல்.

ஏதோ ஒரு தற்காப்புக் கலையைத் தன் நாட்டில் பயில்விப்பதாக அவள் சொன்னதுமே செந்தில், இல்லை, ஷேக்கிக்கு அவளைப் பிடித்துப்போயிற்று. அவளுடைய ஆங்கிலப் புலமையும்அவனுடையதைப்போல் இருந்தது. தினமும், இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள்.

“என் கணவர் நான் தூங்கியபின்தான் வீட்டுக்கே வருவார். நான் என்ன அலங்கரித்துக்கொண்டாலும், அது அவர் கண்ணிலே படாது. ஒரே வீட்டுக்குள் அந்நியர்கள்போல்தான் இருந்தோம்!” என்றுதன் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொண்டாள். “நானும் எத்தனை வருடங்கள்தான் பொறுமையாக இருக்க முடியும்! அவரிடமிருந்து நிறையப் பணம் கறந்து, விடுதலையும் வாங்கினேன்,”என்றவளின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. “என்னையும் உணர்வுள்ள ஒரு பெண்ணாக மதிக்கும் ஆண்மகன் கிடைக்காமலா போய்விடுவான்!” அதைச் சொல்கையில், அவள் அவனைப் பார்த்தஆழ்ந்த பார்வைக்கு என்ன அர்த்தம்?

ஆலிஸோ, டியானாவோ இப்படிச் சொல்லியிருந்தால், வெறுமனே சிரித்துவிட்டுப் போயிருப்பான். ஆனால், ஏஞ்சல் அவனைவிட நாலைந்து வருடங்கள்தான் மூத்தவளாக இருப்பாள்.

எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படிச் சொன்னாள்? இரண்டு, மூன்று இரவுகள் தூக்கம் போயிற்று.

கலக்கத்தை உண்டாக்கியவளே அதை நிவர்த்தியும் செய்தாள். “நீயும் எங்கூட வந்துடேன், ஷேக்கி!”

அயல்நாட்டு வாசம்! எதிர்பார்த்ததுதான் என்றாலும், அதிர்ச்சி ஏற்படாமல் இல்லை. “எங்கே டியர்?”

“கானடாவுக்குத்தான். சரின்னு சொல்லு!” விட்டால், கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே போய்விடுவாள் போலிருந்தது.

இப்போது, ஷேக்கி என்னைக் கேட்டான். “அம்மா கத்தறாங்க, ஆன்ட்டி. `கண்டவளை நம்பி, கண்காணாம போயிடப் போறியாடா?’ன்னு. இந்த மாதிரி சான்ஸ் திரும்ப எப்போ கிடைக்கும்!” ஏக்கப்பெருமூச்சு விட்டான். “இப்ப விட்டுட்டா, ஆயுசு பூராவும் எண்ணை போத்தலும் கையுமா இங்கே, பீச்சிலேயே அலைஞ்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்! என்ன சொல்றீங்க?”

என்னிடம் மனம் விட்டுப் பேசிய இருபது வயது இளைஞனைப் பார்த்துப் பரிவுடன் சிரித்தேன்.

“பகல் பூராவும் அவனோட என்ன பேச்சு?” நிலா வெளிச்சத்தில் நாங்கள் உலவியபோது எரிந்து விழுந்த கணவரை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கல்யாணமான நாளிலிருந்து இந்தமுப்பத்தைந்து வருடங்களாக எனக்கு வயதே கூடவில்லை என்பதுபோல் ஆணாதிக்கம் காட்டுபவருடன் எதற்கு வீண் தர்க்கம் என்ற விவேகம் எனக்கு எப்போதோ வந்திருந்தது.

மூன்று வருடங்களாகியும், அவரும் அவனை மறக்கவில்லை என்பது, `ஒன் ஷேக்கியை எங்கே காணோம்?’ என்ற கேலிப் பேச்சிலிருந்தே தெரிந்தது. அவனுடன் போட்டியா! சிரிப்புதான் வந்ததுஎனக்கு.

இருந்தாலும், அவன் என்ன ஆனான் என்று தெரியாமல் போனது ஒரு சுவாரசியமான கதையின் முடிவைப் படிக்காது விட்டதுபோல் உறுத்திக் கொண்டிருந்தது என்னை.

வழக்கம்போல், கடற்கரையிலிருந்த கடைகளைப் பார்க்கப் புறப்பட்டேன். தெரிந்தவர்கள் யாரையாவது பார்க்காதவரை அவமானம் எதுவுமில்லை. அவர்கள் தர்மசங்கடத்துடன் தீபாவளிவாழ்த்துகளைத் தெரிவிக்கையில், பதிலுக்கு அசட்டுச் சிரிப்பைக் கொடுக்கவேண்டி வரும்.

`இந்த முறை யார் கண்ணிலும் படாமல் தப்பினோம்!’ என்ற நிம்மதி ஏற்பட்டபோதே, “ஆன்ட்டி! நல்லா இருக்கீங்களா?” என்ற குரல் கேட்க, நிம்மதி குலைந்தது.

யாரிவர்?

எனக்கு அந்த துணிக் கடைக்காரரை அடையாளம் தெரியத்தான் இல்லை. சற்றே பூசினாற்போன்ற உடல். ஆனால், அப்பாவித்தனம் கொட்டும் அந்தக் கண்கள்!

“ஷேக்கி?” கத்தியே விட்டேன்.

சட்டென அவமானம் உண்டாயிற்று. யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? வயது முதிர்ந்த வெள்ளைக்காரியாக இருந்தால் என்ன, இந்தியப் மாதுவானால் என்ன, `கிடந்து அலைகிறாள்!’என்று பிறர் தப்பாக எடை போட மாட்டார்கள்?

கடைக்காரர் பூரிப்புடன் சிரித்தார். “நெனப்பு வெச்சிருக்கீங்களே! ஆனா, நான் இப்ப செந்தில்தான்! ஷேக்கி இல்ல!”

அரைமணிக்குக் குறையாமல் உரையாடிவிட்டு கணவர், மகன், பேத்தி எல்லாருக்கும், செந்தில் விலை குறைத்துக் கொடுத்த, சட்டை துணிமணிகளை வாங்கிக்கொண்டு, விடைபெற்றேன்.

“எங்கே தொலைஞ்சு போயிட்டே?” என்று ஆக்ரோஷமாக வரவேற்றார் கணவர்.

இந்த ஆண்கள் என்றுமே உடல் மட்டும் பெரிதான குழந்தைகள்! ஒரு வித்தியாசம் — அம்மாவைக் காணாமல் குழந்தைகள் அழும். இவர்கள் கத்துவார்கள்.

நான் சிரிப்புடன், நேரே விஷயத்துக்கு வந்தேன். “ஷேக்கியைப் பாத்தேன். துணிக் கடை வெச்சிருக்கான்!”

அவரது கோபம் எங்கோ பறந்து போனது. “அமெரிக்கா போறதா சொன்னானே!”

“அமெரிக்கா இல்ல, கானடா! போனானாம். அந்தப் பொண்ணு இவனைத் தலைமேல வெச்சுத் தாங்கினாளாம். கேக்கறதுக்கு முன்னாலேயே எல்லாம் கிடைச்சுதாம்…!”

“ஏன் திரும்பி வந்தான்னு நீ கேட்டிருப்பியே?”

நான் அவர் கேலியைப் பொருட்படுத்தவில்லை. “கேக்காம? அவன் என்னைத் திருப்பிக் கேக்கறான், `வாழ்க்கைன்னா ஒரு சவால் இருக்க வேண்டாமா, ஆன்ட்டி?’ன்னு!”

அவர் உதட்டைச் சுழித்தார், அவநம்பிக்கையை வெளிக்காட்ட.

நான் என் வழக்கப்படி பேசிக்கொண்டே போனேன். “பழகின மனுஷாளைவிட பணங்காசு பெரிசு இல்லேன்னு தோணிப் போச்சாம். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்!”

“இந்தத் தடவை யாரு, ஜப்பான்காரியா?”

“சும்மா இருங்க!” அதட்டினேன்.

கதை கேட்கும் சுவாரசியத்தில் அவர் இறங்கி வந்தார். “சரி. சரி. சொல்லு!”

“அம்மா பாத்த பொண்ணுதானாம். சலிச்சுப்போய், `காதல் எல்லாம் சினிமாவிலதாங்க, ஆன்ட்டி!’ன்னு வசனம் பேசறான்!” மனிதர்கள்தாம் எப்படி மாறிவிடுகிறார்கள் என்ற ஆச்சரியம் ஏற்பட்டதுஎனக்கு.

அந்த கானடா நாட்டு மங்கை தன் அன்பால் இவனைத் திக்குமுக்காடச் செய்திருக்க வேண்டும். சுய அடையாளம் அற்றுப்போகும் நிலை வரவே, சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே திரும்பஓடி வந்திருக்கிறான். அதனால்தான் `காதல்’ என்றாலே அலறிப் புடைத்துக்கொண்டு ஓடும் நிலை! பெண்களை ஆகர்ஷித்த தன் உடலைச் சரிவர கவனிப்பதிலும் வேண்டுமென்றே அலட்சியம்செய்கிறான்!

என் அனுமானத்தைக் கணவரிடம் சொன்னேன்.

“நீ ஒரு பைத்தியம்!” என்றார். பல முறை கேட்டிருந்ததால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக்கு.

“வெள்ளைக்காரன் ஊருக்குப் போனா, நாம்ப செகண்ட் கிளாஸ்தான். எல்லாத்திலேயும் அவங்களைவிட ஒரு படி மட்டம். அது பொறுக்காமதான் வந்துட்டான். இப்ப சும்மா, பெருமையாபேசிக்கறான்!”

`ஷேக்கியைப்பற்றி இவரிடம் எதுவுமே சொல்லி இருக்கக்கூடாது!’ என்று நொந்து கொண்டேன்.

இவர் என்ன கண்டார், மனதைப்பற்றி!

(மக்கள் ஓசை, 1998,சிறுகதைகள். காம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.