(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 24

சமைக்கவும் தெரியணும்

அவனுக்கு அம்மா அவனுக்குச் சமையலும் செய்யக் கற்றுக் கொடுத்தாள். அவனுக்கு முதலில் அதில் துளியும் ஈடுபாடு கிடையாது. வேண்டா வெறுப்பாகத்தான் அதைச் செய்வான். அவனுக்கு அம்மாவும், சகோதரியும் வீட்டு விலக்கான நாட்களில் “டேய்..கண்ணா ரெண்டு வெறகும் நாலு சுள்ளியும் போட்டு அடுப்பப் பத்தவை. அந்த சாதப்பானைல ஆறு டம்ளர் ஜலத்த விட்டு கொதிக்கவை.. இப்ப அந்தச் சாக்குப் பையில இருக்கற வாழக்காய சின்னச் சின்னதா நறுக்கிவைச்சுக்கோ ” என்று கொட்டிலில் அமர்ந்து கொண்டே அவனுக்குச் சொல்லித்தருவாள். அவன் விளையாடப் போகும் ஆசையில் வாழக்காயை பெரிது பெரிதாக நறுக்கி வைப்பான். “அம்மா நறுக்கியாச்சு..அப்பறம்” என்பான். “எங்கே எங்கிட்டக் காட்டு” என்பாள். அதைப் பார்த்து,” என்னடாது…மனுஷா சாப்பிட நறுக்கினியா…இல்ல மாட்டுக்கா” என்று அவனிடம் கத்துவாள். “அவன் மெதுவான குரலில் “மாட்டுக்கு” என்று முனகிக்கொண்டே சிறிது சிறிதாக நறுக்குவான். “அத அப்படியே அந்த இலுப்புச் சட்டில கொஞ்சம் ஜலத்த விட்டு பக்கத்துல எரியற கொடி அடுப்புல வைச்சு கொதிக்க வை..கொஞ்சம் சூடு வந்தப்பரமா நறுக்கி வச்ச வாழக்காய அதுல போடு. ஒரு அரை ஸ்பூன் மஞ்சப் பொடிய அதுல போடு…கொஞ்சம் வேகட்டும்..இப்ப அந்த சாதப்பானைல ஜலம் கொதிச்சாச்சான்னு பாரு…”ம்…கொதிச்சாச்சு…” சரி..இப்ப ஒண்ணரை டம்ளர் அரிசிய எடுத்து ஜலத்தவிட்டு நன்னாக் களஞ்சு அந்தச் சாதப்பானைல கீழ சிந்தாமப் போடு. சரி..அது கொதிக்கட்டும். இப்ப அந்த வாழக்காய் வெந்தாச்சானு அந்தக் கரண்டியால நச்சுக்கிப்பாரு…”நன்னா வெந்திருக்கு அம்மா…” இப்ப இடுக்கியால மொள்ள அந்த வாழக்காய் கொதிக்கற இலுப்புச்சட்டிய பிடிச்சு இறக்கி, இந்த முற்றத்துல வந்து ஜலத்த வடிகட்டு. “பண்ணியாச்சா”…இப்ப அந்த வெந்த வாழக்காய தனியா எடுத்து வைச்சுக்கோ..அந்த இலுப்புச் சட்டிய கொடியடுப்புல வச்சு அதுல ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணைய விடு..ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் ஒடச்ச உளுத்தம் பருப்பப் போடு. கடுகு நன்னா வெடிச்சப்பரமா, வெந்த வாழக்காய அதுல போட்டு, ஒண்ணரை ஸ்பூன் உப்பைப் போட்டு நன்னாக் கிண்டிக் கொடு….அடுக்குளைல ஒரு கிண்ணத்துல தேங்காயத் துருவி மூடி வைச்சுருக்கேன்…அத எடுத்துண்டு வந்து ஒரு ரெண்டு பிடிச்சு போடு..கொஞ்சம் நல்லெண்ணைய பரவலா விட்டுக் கிண்டிக் கொடு…கீழ இறக்கி வச்சு ஒரு பாத்தரத்துல எடுத்துப் போட்டு மூடிவை….வாயில போட்டுக்காதே..சுவாமிக்கு நேவித்யம் பண்ணிட்டுதான் வாயில போட்டுப் பாக்கணும்..”சரிம்ம்மா…அவ்வளவுதானா ..நான் வெளையாடப் போட்டுமா…” இரு..இன்னும் ஆகலை..அந்தப் பானைல சாத ஆப்பையால கொஞ்சம் சாதம் எடுத்து வெந்திருக்கானு பாரு…”வெந்திருக்கம்மா”.. சரி ..இப்ப சாதப் பானைய கீழ இறக்கிவைச்சு ஒரு தட்டப் போட்டு மூடிவை..ஆறினப்பரமா சரியாருக்கும். இப்ப கொழம்புக்கு அந்தச் சட்டில கொஞ்சம் ஜலத்த விட்டுக் கொதிக்கவை…”

இப்படியாக அவனுக்கு அம்மா கொஞ்சம் கொஞ்சமாகச் சமைக்கவும் கற்றுக் கொடுத்தாள். காலப்போக்கில் அவனுக்கே அதில் மிகுந்த ஈடுபாடு வந்து விட்டது. அவனே ரசித்து சமையல் செய்யத் துவங்கி விட்டான்.

அந்த கிராமத்தில் கோவில்களில் நடைபெறும் சாஸ்தாப்ரீதி, மகாதேவாஷ்டமி, ஆதிவராகப் பெருமாள் கோவிலின் ஆறாட்டன்று நடைபெறும் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளில் சமையல் செய்யும் சமையற் கலைஞர்களை பக்கத்தில் இருந்து கூர்ந்து கவனிப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

கல்லிடைகுறிச்சியின் சமையற் கலைஞர்கள்

கல்லிடைகுறிச்சியில் மிகச் சிறந்த சமையற் கலைஞர்கள் இருந்தனர். இப்பொழுதும் இருக்கின்றனர். அவர்களில் அவனுக்குத் தெரிந்த, அவன் பழகிய சிலரில் முக்கியமானவர்கள் ஆமண்ணா மாமா, கைலாசம் ஐயர், கிச்சா (கைலாசம் ஐயரின் தம்பி), ராமகிருஷ்ணன் (அப்புக்குண்ட மாமா), “பபெட்” நாராயணன், நாணா மாமா, ஸ்டேட் பேங்க் ஹரிஹரன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அவன் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சிதம்பரேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகாதேவாஷ்டமிக்கு இராமச்சந்திரபுரம் தெருவில் வசித்துவந்த “ஆமண்ணா மாமா” சமையல் செய்வதைப் பார்த்திருக்கிறான். அவர் நல்ல வயதானவர். அவரது வலது கன்னம் வீங்கியும் சிவந்தும் இருக்கும். அவர் ஒரு கண்ணை இடுக்கித்தான் பார்ப்பார்.

சிவன் கோவிலின் வாசலில் நந்திக்கு இருபுறமும் உள்ள இடத்தில்தான் பெரிய அடுப்புகளைத் தயார் செய்து, பெரிய வார்ப்பில் பாயசமும், மற்றொரு வார்ப்பில் சாதமும், இன்னொன்றில் சாம்பாரும் தயார் செய்வார்கள். ஒரு சிறிய வார்ப்பில் வாழைக்காய் கறியும், மற்றொன்றில் பாலக்காடு பச்சடியும் வாசம் பொங்கத் தயாராகிக் கொண்டிருக்கும். ஆமண்ணா மாமா ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்த படியும், தத்தித்தத்தி நடந்த படியும் அவரது வேலையாட்களை வேலை வாங்கிக் கொண்டிருப்பார். வாழைக்காய் நன்றாக வெந்தவுடன் அதை ஒரு நீளமான பனையோலைப் பாயில் தட்டிப் பரப்பி வைத்து, சிறிது நேரம் சென்றதும் மீண்டும் வார்ப்பில் அதை மாற்றி உப்பைப் போடுவார். துருவிய தேங்காய்ப் பூவை அதன் மீது தூவுவார். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தயாராகத் தாளித்து வைத்திருக்கும் பொருட்களை ஒரு பெரிய அகப்பையால் எடுத்துப் போட்டு நன்றாகக் கிளறுவார். வாழைக்காய் கறி ஒன்றோடு ஒன்று சேர்ந்து நல்ல வாசனையாக இருக்கும். அதன் பின்பு அவற்றை எல்லாம் ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி வைத்து மூடிவைப்பர்கள். அவனும், அவனுக்கு நண்பர்களும் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். “ஆமண்ணா மாமா” சமையலின் நறுமணம் அவர்களைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து , அவர் சமைத்து வைத்திருக்கும் பாத்திரங்களின் பக்கத்தில் நிறுத்தி வைத்து ,”சாப்பிடு, சாப்பிடு” என்று அழைக்கும். ” எலேய்..கொழந்தைகளா..எல்லாரும் கோவிலுக்குள்ள போய் சாமியப் பாருங்கோ..இன்னும் கொஞ்ச நேரத்துல நிவேத்தியம் ஆயிடும்…அப்பறமா உங்களுக்குத்தான் மொதல்ல சாப்பாடு” என்று அன்பொழுகச் சொல்லுவார். அவரது பிராத்தனை என்று சொல்லி “ஸ்ரீ சிதம்பரேஸ்வரருக்கு” தங்க நெக்லஸ் ஒன்றை அவரது குடும்பத்தினர் காணிக்கையாகச் செலுத்தியது அவனுக்கு நினைவிருக்கிறது.

கைலாசம் ஐயர்

amv1
அவனுக்கு மிகவும் பிடித்த சமையல் கலைஞர் கைலாசம் ஐயர். நல்ல தடித்த சரீரம். கனத்த குரல் அவருடையது. அந்த கிராமத்தில் அனேகமாகப் பெரிய இடத்துக் கல்யாணத்திற்கு கைலாசமையர்தான் சமையல் என்றிருக்கும். அவரது “ஸ்பெஷல்” அவியல்தான். மொத்த சமையலுமே நன்றாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒன்று மிகச் சிறப்பாகவே அமையும். அப்படிதான் கைலாசமாமவுக்கு “அவியலும்”, இனிப்பு வகையில் “அல்வாவும்” ஸ்பெஷல். அவியலுக்கு அவர் காய்களைத் திருத்தும் முறையே அழகாக இருக்கும். எல்லாக் காய்களுமே ஒன்று போல நீளமாக நறுக்கி வைக்கச் சொல்லுவார். காய்கள் வார்ப்பில் வெந்துகொண்டிருக்கும். தேங்காயை நன்றாக அரைத்து ஒரு பெரிய வாளியிலும், பச்சமிளகாயை அரைத்துக் கூழ்போல ஒரு வாளியிலும் தயாராக வைத்திருப்பார்கள் அவரது வேலையாட்கள். அவியலுக்கான காய்கள் வெந்தவுடன் அதை இறக்கி வைத்துத் தண்ணீரை வடிகட்டி எடுத்தபின்பு மீண்டும் அந்தக் காய்களை வார்ப்பில் போட்டு அதில் அரைத்த தேங்காய், பச்சமிளகாய், சீரகம் எல்லாம் தேவைக்குத் தகுந்தாற்போல் சேர்த்துக் கலந்து, அவரது மேற்பார்வையில் வேலையாட்கள் அதை நன்றாகக் கிண்டிக் கொடுப்பார்கள். அடுப்பிற்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்டூல் மீது அமர்ந்து கொண்டிருக்கும் “கைலாசமையர்”, உப்பைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்து தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்தே அந்த “அவியல் காய்களின்” மீது போடுவார். அது கச்சிதமாக இருக்கும். பின்பு தேங்காய் எண்ணையை அதன் மீது விட்டு கலக்கிக் கொடுப்பார்கள். இறுதியாகக் கருவேப்பிலையை உருவி கொத்தாக அதன் மீது தூவுவார். அவியலின் வாசனை அமர்க்களமாக இருக்கும். இது போன்று “கைலாசமாமா”வின் சமையலை அவன் ஆசையோடு பல சமயங்களில் பார்த்து அனுபவித்திருக்கிறான். அவனுக்கு அப்பாவும், கைலாசமாமாவும் நெருங்கிய தோழர்கள். அதனால் 1984ம் வருடம் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று நடைபெற்ற அப்பாவின் “சஷ்டியப்தபூர்த்தி”க்கு, “சுந்தரம்..ஒன்னோடு சஷ்டியப்தபூர்த்தி”க்கு நான் சமையல் பண்ணித்தரேன்..நீ கவலைப் படாதே…” என்று சொல்லி அவனிடம் ,” ஏலே..கண்ணா..அப்பாவோட சஷ்டியப்தபூர்த்திக்கு நான்தான் சமையல் பண்ணப் போறேன்…நான் சொல்லறபடி நீ கேளு…” என்று அவனை அன்போடு அணைத்துக் கொண்டு சொன்னது மட்டுமின்றி மிகவும் நன்றாக மணக்க மணக்க சமையல் செய்து எல்லோர்டைய மனதையும் மணக்கச் செய்த கைலாசமாமாவின் அன்பை அவன் நன்றியோடு இன்றும் நினைக்கிறான். கைலாசமாமாவின் தம்பி “கிச்சன் மாமா” ஒரு அற்புதமான பிறவிச் சமையற் கலைஞர். பால்பாயசம் “கிச்சமாமா” பண்ணிச் சாப்பிட வேண்டும். பாலும், சக்கரையும், முந்திரிப்பருப்பும், ஏலக்காயும் இருந்து விட்டால் மாத்திரம் போதாது. அது சிலபேரின் கையில்தான் சுவையான “பால்பாயசம்” ஆகும். அப்படி ஒரு சுவையை அவர் எப்படித்தான் கொண்டு வருவாரோ என்று ஆச்சர்யமாக இருக்கும். அவர் தனது அண்ணா கைலாசம் ஐயருடன் வேலை செய்து வந்தார். பிறகு திருநெல்வேலி “ஜோக்கர்” என்பவருடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். அவனுக்கு சகோதரி பாலாவின் கல்யாணத்திற்கு “கிச்சாமாமா”தான் சமையல். மூன்று நாட்களும் பிரமாதப் படுத்திவிட்டார்.

கைலாசமாமா சில வருடங்கள் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் மாணவர் விடுதியின் சமையல் பொறுப்பை ஏற்று சிறப்பாகச் செய்து வந்தார். ஆழ்வார்குறிச்சியில் சிம்சன் சிவசைலம் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் விஷேஷங்களுக்கும், செங்கோட்டை, ஆம்பூர், தென்காசி போன்ற ஊர்களுக்கும் ஆஸ்தான சமையற் கலைஞர் கைலாசமாமாதான். அவருக்குப் பிறகு அவரது குடும்பத்தில் இன்றும் சமையல் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் அவரது இளைய மகன் கண்ணன். அவரது பிள்ளைகள் மணிகண்டன், வெங்கடேசன், கண்ணன், ஆதி, விஜய் போன்றவர்கள் சேர்ந்து “ஆஞ்சநேயா அப்பளம் டெப்போ” என்ற நிறுவனத்தை நடத்துகின்றனர். அதில் அப்பளம், வடகம், முறுக்கு, தட்டை, மாலாடு, மொனகரம் மற்றும் இனிப்பு வகைகளெல்லாம் தரமாகச் செய்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இராமகிருஷ்ணன் என்ற அப்புகுண்ட மாமா

amv2 amv

   இராமகிருஷ்ணன் என்றால் தெரியாது. அப்புக்குண்ட மாமா என்றால் தெரியாதவர் கிடையாது. அந்த அளவுக்கு “அப்புக்குண்ட மாமா” சமையல் பிரபலம். சாஸ்தா ப்ரீதி மற்றும் கிராமத்துக் கோவில் விஷேஷங்களுக்கு இவரது சமையல்தான் இருக்கும். தொந்தி விளாகம் தெருவில் நடக்கும் விஷேஷங்களுக்கு இவர்தான் ஆஸ்தான சமையற் கலைஞர். அவியல், அல்வாவுக்கு எப்படி கைலாசமாமாவோ அப்படியே மோர்க்குழம்பிற்க்கும், கத்திரிக்காய் பிட்டளைக்கும் அப்புக்குண்ட மாமாதான் என்று அவனுக்கு நண்பன் ஜெமினி சொல்லக் கேட்டிருக்கிறான். அப்புக்குண்ட மாமாவின் மாப்பிளையும், “பபெட் நாராயணன்” அவர்களின் புதல்வருமான மீனாட்சிசுந்தரம் என்ற “மீனாக்ஷி” இன்று சிறந்த சமையற் கலைஞராக இருந்து வருகிறார்.

நாணா மாமா, ஹரிஹரன் சகோதரர்கள்

நாணா மாமாஅந்த அப்புக் குண்ட மாமாவிடம் சமையல் கற்றவர்கள்தான் “நாணா, ஸ்டேட் பேங்க் ஹரிஹரன்” சகோதரர்கள். ரசத்திற்கு “நாணா மாமா” என்று கிராமத்தில் சொல்வதுண்டு. சாதாரணமாக இருந்து சமையற் கலையைக் கற்று நல்ல பெயர் வாங்கியவர்கள். 1981ம் வருடம் கல்லிடைக்குறிச்சி இராமச்சந்திரபுரம் கிராமத்தில் சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சாரியார்கள் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர், ஸ்ரீ பாரதீ தீர்த்தரின் முன்னிலையில் நடைபெற்ற அதிருத்ர மகாயக்யத்திற்கு பதினோரு நாட்களும் அன்னக்கொடி கட்டி அன்னதானம் செய்தனர் கிராம மக்கள். அதை முன்னின்று நடத்தியவர் கே.எஸ். காசிவிஸ்வநாத ஐயர் என்ற காசி ஐயர். அதுசமயம் தினந்தோறும் பக்கத்து கிராமங்களில் இருந்தெல்லாம் வருகின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தடையே இல்லாமல் அன்னதானம் நடைபெற்றது. மதியம் சாப்பாடு, இரவு ஆகாரம் என்று வந்தவர்களுக்கெல்லாம் வயிறார உணவளிக்கப்பட்டது. அந்த உணவைச் சமையல் செய்யும் பொறுப்பை ஏற்று மிகவும் சிறப்பாகச் செய்து கொடுத்தவர் “நாணா மாமாவும், ஹரிஹரனும் ” அவரது குழுவினரும் ஆவார்கள். இரவு பகல் பாராமல் காய்களைத் திருத்தியும், ஏழாபுரம் தெருவில் உள்ள கடேசி வீட்டின் நடுக் கூடத்தின் நான்கு பக்க சுவர்களிலும் வெள்ளைத் துணியைத் தொங்கவிட்டு, மலையைப் போல சாதத்தை வடித்து வடித்து குவித்து வைத்து அதற்குத் தகுந்தாற்போல காய்களும், பாயசம், கூட்டு, அவியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், அப்பளம், வடை , இனிப்புடன் ஒவ்வொரு நாளும் மதியம் பன்னிரண்டு மணிக்குத் துவங்கி மதியம் மூன்று மணி நான்கு மணிவரை வருவோர்க்கெல்லாம் அறுசுவையால் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டார்கள் என்று அவனுக்கு நண்பன் ஜெமினி சொல்லுவான். அப்படி ஒரு தினம் அன்னதானம் நடைபெறும் நேரத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தரும், ஸ்ரீ பாரதீ தீர்த்தரும் வந்திருக்கிறார்கள். அவர்களை “நாணாமாமா” நமஸ்கரித்து நின்ற பொழுது, ஸ்ரீ மகாசன்னிதானம் அங்கு மலைபோல் குவித்து வைத்திருக்கிற சாதத்தைப் பார்த்து விட்டு நாணா மாமாவிடம்,” இவ்வளவு சாதத்திற்கும் தகுந்த சாம்பார், ரசம் எல்லாம் எங்கே” என்று கேட்டாராம். அதற்கு நாணாமாமா ஒரு இருபது லிட்டர் கொள்ளும் பாத்திரத்தைக் காட்டி,”இதுதான் சாம்பார்”, இதே போல இன்னொரு பாத்திரத்தில் “ரசம்” இறக்கிறது என்றாராம். அதற்கு ஆசார்யாள்,” இவ்வளவு சாதத்திற்கு இந்த சாம்பார் கொஞ்ச மாக இருக்கே” என்றாராம். உடனே,” ஆசார்யாள்..இது “கான்சென்ரெட்” (concentrate), இதுல இரண்டு வாளி எடுத்து ஐந்தாறு வாளி வெந்நீரை சேர்த்தல் சாம்பார் தயாராகிவிடும்..அதுல உப்பு காரம் எல்லாம் சரியாக இருக்கும் ” என்று நாணாமாமா சொன்னவுடன் ஆசார்யாள் ரொம்பவும் சந்தோஷப் பட்டு,” நீங்க உங்க வேலை முடிஞ்ச உடனே என்ன வந்து பாருங்கோ” என்று ஆசீர்வாந்தம் செய்து போனாராம். அதுபோலவே நாணாமாமா குருநாதரைச் சென்று தரிசித்த பொழுது ஆசார்யாள்,”நாணாமாமாவைப் பாராட்டி, ஆசீர்வாதம் செய்து அவரு க்கு ஸ்ரீ சாரதாம்பாள் வெள்ளிக் காசும், பிரசாதமும் அளித்திருக்கிறார். மற்ற ஊழியர்களுக்கும் இது போன்று ஆசி கொடுத்ததை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதினர் என்று அவனுக்கு நண்பன் ஜெமினி கூறினான்.

நாணாமாமா, ஹரிஹரன் மாமாவின் அக்கா மகன்தான் “சங்கர்”. இன்று ஊரிலும், திருநெல்வேலிப் பகுதியிலும் சிறந்த சமையற் கலைஞராக இருக்கிறார். பொது வாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இதே போல ஆசிரியர் லக்ஷ்மீவராஹன் அவர்களின் இளைய மகன் “சந்துரு”வும் நல்ல சமையற் கலைஞராக இருக்கிறார்.

அவன் சிறுவனாக இருந்த காலத்தில் லாலாச் சுப்பையா, Y.விஸ்வமையர், வீரமணி, தண்டபாணி, அப்பாமாமா போன்ற அருமையான சமையற் கலைஞர்களை அவன் பார்த்து அவர்களது திறமையைக் கண்டு வியந்திருக்கிறான். Y.விஸ்வமையர், லாலச் சுப்பையா, தண்டபாணி போன்றவர்கள் இருகைகளாலும் “ஜாங்கிரி” சுற்றுவதை அவன் பார்த்து பிரமித்திருக்கிறான். அவர்கள் எல்லாம் மனிதர்களுக்காக வாழந்தவர்கள். பணம் இரண்டாம் நிலைதான்.

அவனுக்கு நண்பன் ஜெமினியும் ஒரு நல்ல சமையற் கலைஞன்தான். நல்ல படிப்பாளி. இன்று ஒரு நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக இருக்கிறான். அவனுக்கு ஜெமினி நிறைய சமையல் துணுக்குகளை இன்றும் கற்றுத் தருவான். அவனுக்குத் திருமணம் ஆகும் முன்பு (08.06.1985) ஒரு நாள் அவனுக்கும், அவனது நண்பர்கள் சுரேஷ், நாணா, (இன்றைய நாடக ஆசிரியர் நாணு) போன்றவர்களுக்கும் “நாணு”வின் வீட்டில் அறுசுவை விருந்தே செய்து அவர்களை மயக்கி விட்டான்.
அவனுக்குத் திருமணமான பின்பு அவனுக்கு மனைவியும் அவியல் குழம்பு, கத்தரிக்காய் பிட்ளை, ரசம் எல்லாம் சுவையாகச் செய்ய அவனுக்கு கற்றுக் கொடுத்தாள். ஒரு நாள் அவன் அவனுக்குப் பெரியம்மாவிடம்,”எருசேரி” எப்படிச் செய்யணும் என்று கேட்டான். ” சேனைய கொஞ்சம் பெரிசு பெரிசா நறுக்கி நன்னா ஜலத்துல வேக வை..அப்பறமா தேங்காய அரைச்சு அதுலவிட்டுக் கலக்கு. கொஞ்சம் கண்திட்டமா மிளகு பொடியும் , தேவைக்கு உப்பும் போடு …தேங்காய் எண்ணை மூணு நாலு ஸ்பூன் விட்டு நாலு கருகப்பலைய உருவிப் போடு….” எருசேரி” ஆச்சு” என்று சொன்னாள். அவனுக்கு அக்கா பாலாவும் நிறைய சமயல் குறிப்புகளை அவனுக்குத் தருவாள். அவனுக்கு மகள் அன்னபூர்ணா அவனுக்கு பேல்பூரி, ஆலுடிக்கியா செய்யக் கற்றுக் கொடுத்தாள். அவனுக்கு மருமகள் ஸ்ரீவித்யாவிடம் இருந்து ரவா உப்புமா, வத்தக் குழம்பு செய்வதைக் கற்றுக் கொண்டான். அவனுக்கு மாமனார் அருமையாக சமையல் செய்வார். கேரட், வெள்ளரிக்காய், கோஸ் போன்றவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி “சாலட்” செய்வார். மாங்காய்களை சின்னச் சின்னதாக நறுக்கி ஊறுகாய் போடுவதைப் பார்த்து அவனும் செய்திருக்கிரான்.

அவன் அவனுக்கு நண்பர்களுடன் விடுதியில் தங்கி இருந்த காலத்தில், திருவல்லிக்கேணியில் சைடோஜி தெருவில் உள்ள “சைடோஜி மெஸ்”க்குச் சாப்பிடச் செல்வான். அப்படி முதலில் அவன் சென்ற பொழுது அதன் உரிமையாளர் கைலாசம் என்பவர் அவனைப் பார்த்து எந்த ஊர் என்றார். அவன் கல்லிடைகுறிச்சி என்றான். அப்படியா எந்தத் தெரு என்றார். குத்துக்கல் தெரு என்றான். எங்கப்பா பேரு மீனாஷிசுந்தரம், தாத்தா பேரு விஸ்வநாத ஐயர் என்றான். “ஓ..அப்படியா..நீ விஸ்வமையர் பேரனா…எனக்கு அவர நன்னாத் தெரியும் என்றார் மிகுந்த வாஞ்சையுடன். “சைடோஜி மெஸ்” சாப்பாடு உலகப் பிரசித்தம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமை இரவும் உருளைக் கிழங்கு காரக்கறி, வெங்காய சாம்பார், கெட்டித் தயிர், பெரிய அப்பளம் என்று கலக்கிவிடுவார். பிரும்மச்சாரிகளுக்கு சைடோஜி மெஸ் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

பேராசிரியர் தி.வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்களிடம் அவனுக்கும், அவனது மனைவி சீதாலட்சுமிக்கும் மிகவும் மரியாதை கலந்த பக்தி உண்டு. ஒரு முறை அவனும், அவனுக்கு மனைவியும் அவரைப் பார்க்க அவரது நங்கநல்லூர் இல்லத்திற்குச் சென்றிருந்தனர். அப்பொழுது பேராசிரியரின் மனைவி திருமதி சரஸ்வதி வேணுகோபாலன் அவர்களுக்கு உணவளித்தார்கள். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது,” விஸ்வநாதன்…ஒங்களுக்கு சமையல் தெரியுமோ என்றார். “கொஞ்சம் கொஞ்சம் தெரியும் சார்” என்றான். அதற்கு,” நான் நல்ல சமையல் பண்ணுவேன்..புள்ளையார் சதுர்த்திக்கு கொழக்கட்டைக்கு பூரணத்துக்கு மாவுல தொப்பி பண்ணுவாளே…அதுகூட அழகாச் செய்வேன்” என்றார். அவர் ஒரு முறை திருக்குறள் வகுப்பு எடுக்கும் பொழுது,”கும்பகோணத்தில் அன்னதானசிவன் என்ற பெரிய சமையற் கலைஞர் இருந்தார். அவரிடம் கும்பகோணம் மகாமகக் குளத்தைக் காட்டி, இவ்வளவு தண்ணீரையும் சாம்பாராப் பண்ணனும்னா எவ்வளவு உப்பு வேணும்னு கேட்டா ..ஒடனே இந்தன வண்டி உப்பு தேவை என்று சொல்வாராம்” அப்படிச் சிறந்த கலைஞர் அவர் என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது என்றார்.

அவன் கொடுத்து வைத்தவன். எத்தனையோ நல்லவர்கள் அவனுக்கு உணவிட்டு, உணவு செய்யும் முறையையும் கற்றுக் கொடுத்தனர். வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒருவர் வந்து கற்றுத் தந்து கொண்டே இருப்பார். நாம்தான் சீடனாக இருக்கக் கூடிய தகுதியைப் பணிவோடு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

06.08.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “அவன்,அது,ஆத்மா (24)

  1. ஒரு சிறிய திருத்தம்: எங்கள் தந்தையாரின் சஷ்டியப்த பூர்த்தி நடந்த வருடம் 1986. தட்டச்சுப் பிழையாக 1984 என்று இருக்கிறது. தவறுக்கு மன்னிக்கவும். நன்றி.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

  2. அய்யகோ..
    நம்ம விசு எழுதிய சமையல் நளபாகத்தெப் படிச்சுக்கினே இருந்தேன். அஞ்சு நிமிஷம் கழிச்சுப்பார்த்தால் கீழே கீ போர்ட் எல்லாம் ஈரம். எதுனாலே என்னு யோசிக்கறதுக்குள்ளாற மனம் திடுக்கிட்டு அடப்பாவி அது விசு வர்ணிப்பில் இருந்து மெய்மறந்த உன் வாய் தனை மறந்து விட்ட ஜொள்ளு என்றதே.பலே விசுவின் திறன். வாழ்க…,
    யோகியார்

  3. அருமை. நீங்கள் சொல்லும் நாணா, ஹரிஹர மாமாக்கள் தம்கமாபுரம் தெருவிலிருந்தார்கள் என்று நினைக்கிறேன் . அவர்கள் சமையல் பிரமாதமாக இருக்கும். ஒரு முறை ஹரிஹர மாமா எங்கள் வீட்டிற்கு ஸ்ராத்த சமயம் பிராமணராக வரிக்க பட்டு மிகவும் விரும்பி சாப்பிட்டதை பார்க்க மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது . எப்போதும் மற்றவர்களுக்கு சமையல் பண்ணுபவர்களுக்கு நம் வீட்டு தாய்மார்கள் சமைத்து அவர்கள் சாப்பிடும்போது சந்தோஷமாக இருக்கும் தானே . 

    நீங்கள் சொன்ன வீட்டு விலக்கு நாட்களில் நாங்களும் நண்டும் சிண்டுமாக இருக்கும் போது அம்மா சொல்படி இட்லி வார்த்து , சாதம் வடித்து , உங்களை சொல்வது விட நானே பணிவிடலாம் என்று உடல் உபாதையில் அவர் தலையில் அடித்துக்கொண்டாலும் நம் முன்னோர்கள் ஆசாரங்களை கட்டிக்காத்து வந்தார்கள்.

  4. கல்லிடையின் அன்றைய சமையல் வல்லுனர்களை, அவர்தம் சமையல் சிறப்புக்களை புகைப்படத்துடன் நினைவு கூர்ந்தது மட்டுமன்றி வளரும் சமையற் கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்டதும் பாராட்டப்பட வேண்டியது

  5. கல்லிடையின் அன்றைய சமையல் வல்லுனர்களை, அவர்தம் சமையல் சிறப்புக்களை புகைப்படத்துடன் நினைவு கூர்ந்தது மட்டுமன்றி வளரும் சமையற் கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்டதும் பாராட்டப்பட வேண்டியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *