தோழமையுடன் ஒரு பயணம் (1)
நிர்மலா ராகவன்
`நீங்கள் இந்தியாதானே?’ சிங்களர்கள், தமிழர்கள் எல்லாரும் என்னைக் கேட்ட கேள்வி. நான் தலையாட்டியதும், `இந்தியா, ஸ்ரீ லங்கா ஸேம்-ஸேம் (same same)!’ என்றார்கள். பார்ப்பவர்களெல்லாம் புன்னகைத்தார்கள். நான் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, பேருந்துக்குள்ளிருந்து ஒரு மாது தோழமையுடன் புன்னகைத்தார். (அவர் தமிழரில்லை. தமிழர்கள் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரிப்பது அபூர்வம்).
கடந்த ஜூலை மாத இறுதியில் நானும், என் மகளும் ஆறு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம். கோலாலம்பூரிலிருந்து மூன்றரை மணி நேர விமானப் பயணம்.
பண்டாரநாயக விமானதளம் சௌகரியமாக, நாகரிகமாக இருந்தது. புதுப்பிக்கச் செய்தவர் மாஜி பிரதமர். தெருக்களையும் நன்கு அமைக்கச் செய்திருக்கிறார். ஆனால், ‘தமிழர்களின் ஆதரவும், முஸ்லிம்களின் ஆதரவும் எனக்குத் தேவையில்லை!’ என்று தேர்தலுக்குமுன் கூறியதாலோ என்னவோ, அண்மையில் அவருடைய பதவியே பறிபோய்விட்டது.
மலேசியாவில், பிற மதத்தைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ ஒரு இஸ்லாமியரை மணந்தால், அவரும் முஸ்லிமாக மதமாற்றம் செய்ய வேண்டும். ஸ்ரீலங்காவில் அப்படியில்லை. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மணக்க விரும்பினால், முதலிலேயே ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்ற ஒப்பினால்தான் மணக்க முடியும். வீட்டிலுள்ள மரத்தை வெட்டுவதற்கும் அரசாங்க ஒப்புதல் தேவை.
தன் சொந்த டாக்சியில் எங்களை அழைத்துச் சென்ற ரிஸ்மீர், தான் ஒரு ஒரு மலாய் முஸ்லிம் என்று தெரிவித்தார். ‘எண்ட அப்பாவும், அம்மாவும் மலாயில கதைச்சுகொள்ளுவாங்க. எனக்குப் புரியும். ஆனா பேச வராது!’ என்றார். தாத்தா காலத்திலேயே இந்நாட்டில் வந்து குடியேறியவர்கள்.
தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதாம். ஆனால் நான் ஆச்சரியப்பட்ட வகையில் தமிழில் பிளக்கிறார். நிறைய தமிழ்ப்படங்கள் பார்ப்பாராம். ‘கொலம்புவில்’ (கொழும்பு) சிங்கள நண்பர்களும் இவரும் உரையாடுவது தமிழில்! எனக்குத் தமிழில் இருக்கும் வெவ்வேறு வட்டார வழக்குகளை அறிய மிகுந்த ஆர்வமானதால் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தேன். காரில் போன அந்த நான்கு நாட்களில் நானும் என் பயண அனுபவங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.
அவர் பேசியது அமெரிக்காவில் வாழும் என் மகளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. `வேண்டிகொண்டு’ என்றால் வாங்குவது, `பேசுவது, கேட்டு வருவது என்று நாம் சொல்வதை கதைச்சுகொண்டு என்கிறார்,’ என்றெல்லாம் நான் தமிழைத் தமிழில் (?) மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்.
இலங்கையில் கால் வைத்த மறுநாள், கொழும்புவிலிருந்து 137.8 கிலோமீட்டர் தொலைவிலிருந்த கண்டிக்குச் செல்வதாக ஏற்பாடு. பஸ்ஸிலும், ரயிலிலும் கும்பலோ கும்பல்! காரில் போனால், சுமார் நான்கு மணி நேரப் பயணம்.
வழியிலிருக்கும் சுற்றுலா தளங்களையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம்.
நான் பார்த்த ஊர்களிலெல்லாம் தெருக்களிலோ, குடியிருப்புப் பகுதிகளிலோ பூனைகளே காணப்படவில்லை. பூனைக்கு யாரோ சாபம் கொடுத்ததுபற்றி தொலைகாட்சி கதாகாலட்சேபத்தில் கேட்டது நினைவு வந்தது.
ஓர் ஊரிலிருந்து இன்னொன்றுக்குப் போகும் வழியில், பார்க்குமிடங்களிலெல்லாம் பனை, தென்னை (ஒரு தேங்காய் பெரிய மண்டை அளவு!), மா, பலா (எல்லா இடத்திலும் `பிலாக் கூட்டு’ உண்டு), வாழை, டூரியன் மரங்கள் — நெருக்கமாக. (டூரி (duri) என்றால் மலாய் மொழியில் முள் என்று பொருள். பலா இனத்தைச் சேர்ந்த, ஒரேயடியாக வாசனையடிக்கும் இப்பழத்தின்மேல் முட்களாக அமைந்திருப்பதால் வந்த காரணப்பெயர்).
நல்ல விளைச்சல் இருப்பதால், உணவுக்குப் பஞ்சமே இல்லை. எல்லா சாப்பாட்டுக் கடைகளிலும் உணவைத் தாராளமாகக் கொடுக்கிறார்கள். முதலிலேயே, `இவ்வளவு சாப்பிட முடியாது!’ என்று தனியாக எடுத்து வைக்க வேண்டியிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
பழச்சாறு விற்ற கடைகளில் எப்போதுமே நல்ல கூட்டம். Rock apple juice என்று கொடுத்த ஒரு பானத்தை நான் முகர்ந்துவிட்டு, `விளாம்பழம்!’ என, சிங்கள கடைக்காரருக்குப் பரம சந்தோஷம் — தான் மறந்திருந்த வார்த்தையை நினைவுபடுத்தியதற்கு!
தொடரும்