சு. கோதண்டராமன்

தலைநகர் மாற்றம்

vallavan-kanavu11

புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
மூல மாய முதல்வன்தானே

-சம்பந்தர்

ஆழிப் பேரலை காழி நகருக்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, கடல் தன் பழைய எல்லையிலிருந்து அரைக் காத தூரம் பின் வாங்கியும் போய் விட்டது. சற்றுத் தூரத்தில் இருந்த புகாரில் அந்த அளவு தூரம் கடல் உள்ளே நுழைந்து நகர் முற்றிலுமாக நீரினுள் மூழ்கி விட்டது. கடையூர் மயானக் கோயிலில் கடல் நீர் உட்புகுந்து கோயில் முழுகி விட்டது. ஆனால் ஒரு நாள் கழிந்து வடிந்து விட்டது. கோயில் வளாகம் முழுவதும் மண்ணும் சேறும் இறந்த பிராணிகளின் உடல்களுமாகக் கிடந்தன. காழி மட்டும் சிறிதளவு கூடப் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது இறைவனின் திருவுள்ளம் என்று கருதினார் ஆதிரை வளவன். அது ஒரு புண்ணிய பூமி, அங்கு ஒரு மகான் தோன்றுவார் என்று தன் தாத்தா கனவு கண்டு சொன்னதை நினைவு கூர்ந்தார். அது வெறும் கனவு அல்ல, தீர்க்க தரிசனம் என்பதை உணர்ந்தார்.

அரசர் தம் மீது கொண்டிருந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாது சிவலிங்கத்தைக் காப்பாற்றிய வேதியர்களின் தியாகத்தை நன்றியுடன் பாராட்டினார் அவர். அந்தக் கோயில் ஒரு மாளிகையாக உயரும் என்று செந்தீ வளவன் சொல்லியிருந்ததை அவர் மறக்கவில்லை. அதைச் செயல்படுத்துவதைத் தன் முதல் கடமையாகக் கொண்டார். லிங்கத்தை அதன் பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இறைவனின் திருவுரு சிறிது நேரம் தென்னை மர உச்சியில் வைக்கப்பட்டிருந்ததை நினைவு கூரும் வகையில் பின்னால் ஒரு உயரமான கட்டிடம் எழுப்பி அதில் தோணியப்பராக வந்து காழியைக் காப்பாற்றிய பெருமானின் உருவச்சிலையைச் சுதையில் அமைத்தார்.

கடையூர் மயானத்தில் தன் தந்தை கட்டிய கோயில் நீரில் மூழ்கிச் சிதிலமடைந்ததைக் கண்டு வருந்தினார் அரசர்.  வருங்காலத்தில் இனி அத்தகைய நிகழ்வுகளால் பாதிக்கப்படாவண்ணம் உள்நாட்டில் ஒரு கோயில் கட்ட விரும்பினார். நல்ல வேளையாக, மயானக் கோயிலைக் கட்டிய ஸ்தபதிகளில் பலர் உயிருடன் இருந்தார்கள். அவர்களைக் கொண்டு அதே போன்ற ஒரு கோயிலை மயானக் கோயிலிலுக்கு மேற்கில் ஒரு  நாழிகை தூரத்தில் அமைக்கச் செய்தார்.

காழியில் நடந்த நிகழ்ச்சிகள் நாடெங்கும் பரவின. அக்கம்பக்கத்திலிருந்த மக்கள் எல்லோரும் அங்கு வந்து பார்த்து வியந்து சென்றனர். வடம வேதியரின் புனித பூமி அது என்று போற்றினர். கொள்ளிடத்திற்கு மறு கரையிலிருந்த சமணர்களையும் இது உலுக்கிச் சைவத்தின் பால் நாட்டம் கொள்ளச் செய்தது. மூன்று தலைமுறைகளுக்கு முன் மேற்கே மலைநாட்டில் குடியேறிய சோழியப் பிராமணர்கள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். தங்கள் முன்னோர்களின் இடத்துக்கு மீண்டும் வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. இப்பொழுது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய அவர்களில் 3000 பேர் தில்லையில் வந்து மீண்டும் குடியமர்ந்தார்கள். கோவிந்தராசர் விண்ணகரம் இருந்த சித்திரகூடம் மீண்டும் தன் பழைய பொலிவை அடைந்தது. தங்கள் பழைய இடத்தில் தாங்கள் குடியேற மூலகாரணமான சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கோயில் வளாகத்தில் ஒரு லிங்கத் திருமேனி அமைத்து அதற்கு மூலநாதர் எனப் பெயரிட்டனர். இதை அவர்களில் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் பெரும்பாலானோரின் கருத்துக்கு மாறாக அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.

ஆழிப் பேரலைக்குப் பூம்புகார் பலியானபின் அரசர் சுபதேவர், தலைநகர் ஆரூரில் இருப்பது உசிதம் இல்லை என்று கருதினார்.  ஆரூரிலிருந்து ஒரு காத தூரத்தில் கடல் உள்ளது. அடுத்த பேரலை இதை விடப் பெரியதாக வந்தால் ஆரூர் பிழைக்காது. படைவீரர்களின் எண்ணிக்கையும் வர வர அதிகரித்து வருகிறது. எனவே மேற்கில் ஒரு புதிய தலைநகரை உருவாக்க நினைத்தார். குடந்தைக் காரோணத்திற்குத் தென்மேற்கில் அமைக்கலாம் என அமைச்சர்கள் ஆலோசனை கூறினர். அதன்படி திருமலைராயன் ஆற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும் இடையில் பழையாறை என்னுமிடத்தை மையமாகக் கொண்டு புதிய தலைநகர் உருவாகியது. சோழன் மாளிகை என்ற பெயரில் ஒரு பெரிய மாளிகை கட்டப்பட்டது.  அதன் நான்கு திசைகளிலும் தாராசுரம், பட்டிசரம்,* சத்திமுற்றம், நல்லூர் ஆகிய இடங்களில் சிவாலயங்கள் கட்டப்பட்டன. நந்திபுரம் என்னுமிடத்தில் ஒரு விண்ணகரமும் கட்டப்பட்டது.

படைவீரர்கள் தங்குவதற்கென ஆரியப்படையூர், பம்பைப்படையூர், மணற்படையூர், புதுப்படையூர் என நான்கு பாடிகள் அமைக்கப்பட்டன. இரு காததூரம் சுற்றளவுள்ள இந்நகரம் ஆங்காங்கு பல காவல் கொத்தளங்களை உடையதாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டது. ஆனால் சுபதேவருக்கு அதில் குடியேறும் பாக்கியம் கிட்டவில்லை. அவரது மறைவுக்குப்பின் அவரது மகன் செங்கணான் என்ற கோச்செங்கட்சோழன் முதன்முதலாகப் பழையாறையிலிருந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்.

செங்கணான் ஆட்சியில் படை வலிமை மேலும் பெருகியது. உறையூரிலிருந்த குறுநில மன்னர் நீக்கப்பட்டார். உறையூர் சோழர்களின் நேர் ஆட்சியின் கீழ் வந்தது. ஆட்சிப்பரப்பு பெருகியதால் சோழர்களின் செல்வ வளம் பெருகியது.

செங்கணான் இறைபக்தி மிக உள்ளவர். மக்களிடத்திலும் இறை உணர்வு பெருகவேண்டும் என்பதற்காகத் தன் நாட்டில் பல ஆலயங்களைக் கட்டினார். சமணம் செல்வாக்கு இழந்தது. சமணர்கள் கூட்டம் கூட்டமாகச் சைவத்தை ஏற்றுக்கொண்டனர். சமணப் பள்ளிகள் பாழடைந்து கிடந்தன. சில பிற்காலச் சமணத் துறவிகள் ஒழுக்கம் குன்றினார்கள் என்றாலும் சமணப் பள்ளிகள் தவம் புரிந்தோர் பலர் வாழ்ந்த புனித பூமி என்பதால் செங்கணான் அவற்றை இடிக்கவில்லை. அவற்றைச் சுற்றிச் சுவர் எடுத்து சமாதி போல் கட்டி அதன் மேல் சிவாலயங்களையும் விண்ணகரங்களையும் கட்டினார். துறவிகளின் சமாதி மேல் வழிபாட்டிடங்கள் அமைப்பது வழக்கமாக இருந்ததால் இது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உயரமாக அமைந்த மேடைகளின் மேல் இருந்ததால் அவை மாடக் கோயில்கள்** எனப்பட்டன.

* இன்று பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது

** யானை ஏறாமல் இருப்பதற்காக மாடக்கோயில்கள் கட்டப்பட்டன என்று சொல்லப்படுகிறது. ஆனால் சோழநாட்டில் அந்த அளவு காட்டு யானைகள் சுதந்திரமாகத் திரிந்தன என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தொடரும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க