ஜடாமுனியும் சிவப்புக்கத்தியும் – 2

0

– கவிஜி.

அத்தியாயம் 2:

“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை உண்டு. நான் தாண்டா ஓட்டுக்கு ராஜா, வாங்கலடாநோட்டுக்கு கூஜா”, பாடிக் கொண்டே பயணிக்கும் ஜடாமுனியைப் பார்த்து;

“என்ன ஆலம்பனார், நகர்வலமா”? என்றது குதிரையின் காதின் மேல் அமர்ந்து கொண்டிருந்த சிவப்பு.

“பின்ன ராஜாவாக முடிவு பண்ணிட்டா. கன்னத்துல மருவை ஒட்டித்தான ஆகணும் சிவப்பு” என்றபடியே தன் கூந்தலின் கட்டை அவிழ்த்து விட்டான் ஜடாமுனி. அது காற்றுக்கு அப்படியே கால்களைத் தூக்கிக் கொண்டு காற்றோடு மேல் எழும்பியது.

“எப்டி நம்ம கெட் அப்?” என்பது போல பார்த்தான் ஜடா.

“ஆலம்பனார், எல்லாம் சூப்பர் ஆனா குதிரைக் கலர்தான்…..” என்று இழுத்தது சிவப்பு.

“என்ன சிவப்பு, என்ன கலர், மஞ்சள் கலர்ல குதிரை இருக்க கூடாதா? இங்கு எல்லாமே சாத்தியம். சிவப்பு, நம்மல்ல நிறைய பேர் கருப்பு மையால அழுத்தமா, ஆழமா ஒரு கோட்டைப் போட்டுக்கிட்டு உள்ள பத்திரமா உக்காந்து இருக்கறதா நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, அது நிஜம் இல்ல. பூமி ஒரே ஒரு குலுங்கு அப்புறம் பொட்டணம் சாப்பாட்டுக்கு வரிசையில நாய் மாதிரி நிக்கணும்” மருவை சரியாக பொருத்திக் கொண்டே பேசினான். குதிரை மிதமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.

“என்னடா சம்பந்தம் சம்பதம் இல்லாம பெசறேன்னு பாக்கறியா? கருத்து சொல்லனும்னு முடிவு பண்ணிட்டா, எந்த சீனையும் ஃபிரீஸ் பண்ணிட்டு சொல்லிடனும் (அட ப்ளேக் ஹுமர் ப்பா).

அவினாசி சாலையில் மஞ்சள் குதிரையில் ஜடாமுடியோடு ஒருவன் போய்க் கொண்டு இருப்பது போய் வரும் வாகனங்களை சற்றுத் திரும்பி, எட்டிப் பார்க்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். எதிரே வந்த ஒருவனைப் பார்த்து “அண்ணே ரோட்ட பாத்து ஒட்டுங்க. கோமாளிய பார்த்து கோமாவுக்கு போய்டாதீங்க” என்றபடியே ஒரு ராஜாவைப் போல கம்பீரமாக அமர்ந்து கொண்டு இருபக்கமும் பார்த்துக் கொண்டே சென்றான் ஜடாமுனி.

“ஆமா ஆலம்பனார், இந்த சிக்னல் மேட்டர இன்னுமா புடிச்சிட்டு இருக்கீங்க. இன்னும் எவ்ளோ இருக்கு, பாருங்க ரோட்ல பாதியக் காணோம்,” என்று சிவப்பு சொல்லும் போதே, பைக்கில் ஒருவன் கண் இமைக்கும் நேரத்தில் இவர்களைக் கடந்தான்.

சட்டென திரும்பிய சிவப்பு, “ஆலம்பனார் இந்த ரோட்ல 40 கி மீ வேகத்துலதான் போகணும் அவன் 100ல போறான்.”

சிவப்பு சொல்ல சொல்லவே குதிரையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.

“சிவப்பு, கொஞ்சம் பேக் ரவுண்டு மியூசிக் போடேன், செமையா இருக்கும்,” என்ற ஜடாமுனி தேவையே இல்லாமல் குதிரையில் நின்று கொண்டு பயணிக்கத் தொடங்கினான்.

“என்ன சிவப்பு பாக்கற ? ஒரு விளம்பரம் வேணும்ல. விளம்பரம் இல்லாம எவன் இருக்கறான், யோசிச்சு பாரு. எத்தன மொக்கைகள ஒரு நாள்ல பாக்கறோம். புரட்சி பண்றேன்னு சொல்லி என்னல்லாம் பண்ணுதுங்க, நான் நிஜமாவே புரட்சி பண்றேம்பா. அப்போ கொஞ்சம் பண்லாம்தான?”

அடுத்து ஜடாமுனியை பேசவே விடவில்லை. இளையராஜா ஆர்கெஸ்ட்ராவை அரங்கேற்றி, ஆபாவாணனின் கிளைமேக்ஸ் போல பட்டையை கிளப்பியது சிவப்பு.

அவனுக்கு மட்டுமே கேட்கும், உணரும் இசையோடு அந்த சேசிங் காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது.

“ம்ம்ம்ஹும்… டே தம்பி நீ படிச்ச பள்ளிக் கூடத்தைக் கட்டுனதே நான்தாண்டா. என்ன பாக்கற. நான் அந்தக் காலத்து குழந்த தொழிலாளிடா முண்டம்,” என்றபடியே சீறிப் பாய்ந்த பைக்கின் முன்னால் கச்சக் என்று குதிரையை நிறுத்தினான் ஜடாமுனி.

அவன் பைக் பாவம், சற்று தூரம் இழுத்து சென்று, டிவைடரில் சற்று உரசி, தடுமாறி, அங்கும் இங்கும் இழுத்து, பின் நின்றது. மஞ்சள் குதிரையில் ஜடாமுடியோடு ஒருவன் வந்து குறுக்கே நிற்பதைக் கண்ட அவன் பைக்கை விட்டு மெல்ல கீழே இறங்கினான். அவன் உடல் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தது. அவனின் உடல் எல்லாம் கேள்விகள். தலையோடு மாட்டி இருந்த ஹெட் போன் கழன்று கழுத்தில் தொங்கியது.

“இஃப் யூ ஆர் பேட், ஐ அம் யுவர் டாட்” என்று பைக்கின் தலையில் எழுதி இருந்தது. “உங்கப்பா வாங்கி குடுத்த பைக்கா?” என்றான் ஜடாமுனி பைக்கையும் அவனையும் மாறி மாறி பார்த்தபடியே.

அவன் அமைதியாக நின்றான். வாத்து திருடியவன் போல.

“அதான் இந்த வாசகம். நீ சம்பாரிச்சு வாங்கி இருந்தா உண்மை, உழைப்பு, உயர்வுனு எழுதிருப்ப. யார்க்குடா ப்ரூவ் பண்ண போறீங்க?” என்றபடியே தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக் கொண்டு “ஏன்டாஇவ்ளோ வேகமா போன?” என்று அவனின் கண்களைப் பார்த்து கேட்டான் ஜடாமுனி.

“அத கேக்க நீ யாருடா?” என்றான் பேட் பாய்.

“உங்க டாட் டா, பேடு,” என்று செவுனியொடு ஒரு அறை விட்டான் ஜடாமுனி.

“வேடிக்கை பாக்கறது எல்லாம் ஒரு பொழப்பு, இல்ல. போடா… போய் ரெண்டு நிமிஷம் லேட் ஆனதுக்கு ஆயா செத்துட்டான்னு சொல்லு. கார்பெரெட் கூலி,” என்று அத்தனை நேரம் வண்டியை ஓரமாக நிறுத்தி இவர்களையே குறு குறுவெனப் பார்த்துக் கொண்டிருந்த நெஞ்சுக்கு பேண்ட்டைப் போட்டிருந்த ஒரு ஆள் மாதிரி இருந்த ஒருவனிடம் கத்திக் கூறினான் ஜடாமுனி.

தலை கிறுகிறுத்து, “ஏன் சார் அடிக்கறீங்க?” என்றான் பேட் பாய்.

அவன் கண்கள் அங்கும் இன்னும் சுழன்று பார்த்தன, யாராவது உதவிக்கு வருவார்களா என்று பார்ப்பது போல இருந்தது. “நீ என்னைக்காவது யாருக்காவது உதவி பண்ணிருக்கியா? ” என்று அவன் மனசாட்சி கேட்க, சட்டென பார்வையை ஜடாமுனியைப் பார்த்தே திருப்பினான். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடலாம் என்பது போல.

“ம்ம்ம்ம்… அடிச்சா தாண்டா மரியாதை வருது. இந்த ரோட்ல 40 கி மீ வேகத்துலதான் போகணும். மீறி போனா அடிப்பேன். பைக் ஓட்றது அவ்ளோ புடிக்கும்னா போ. எங்க ஓட்டணுமோ அங்க ஓட்டு, நாட்டுக்கு ரெண்டு தங்கம் ஜெய்ச்சு குடுடா. அது நீ வேகமா ஓட்றதுக்கு அர்த்தம். அத விட்டுட்டு இந்த ரோட்ல ஓட்டுனா? தலை சிதறி. ரோட்டோட சகதி மாதிரி அப்பிக்குவ. நீ சாகறது மட்டுமில்லாம முன்னால போறவன், பின்னால போறவன், பொழுது போகாம ஊரை சுத்தறவன், எந்த புள்ள பின்னாலயாது பல்ல இளிச்சிட்டு வெட்டியா, தண்டமா, ரோடு பொறுக்கறவன், எல்லாரும் சேர்ந்து இல்லடா சாவாங்க. இந்த ரோட்டுல இவ்ளோ வேகமா லூசு மாதிரி ஓட்டினா ஒருத்தியும் பாக்க மாட்டா (அதான ஆழ்மன தேடல்). அவ, அவ இன்சூரன்ஸ் இருக்கா? 25,000 மேல சம்பாதிக்கரானா? அக்கா தங்கச்சி இல்லாதவனா? துணி துவைச்சு குடுக்கறவனா? கழுத மாதிரிக் கத்துனாக் கூட உனக்கு ஜானகி குரல்லுனு சொல்றவனானு பார்த்து பார்த்து பொருத்தம் பாக்காறாளுங்க(சேஃப்ட்டி முக்கியம்டா). அதும் தப்பில்ல இல்லையா! உன் ஹீரோயிசமெல்லாம் இங்க வேகாதுடி. சரி, போ இனி வேகமா போறத பார்த்தேன் சுட்டே போடுவேன்” என்று துப்பாக்கியை காட்டியபடியே குதிரையில் ஏறி பறக்கத் தொடங்கினான் ஜடாமுனி .

“ஆலம்பனார். அடி கொன்னுட்டீங்க,” சிவப்பு விசில் அடித்தது.

“இல்ல சிவப்பு, இதெல்லாம் சாம்பிள் தான். மெயின் பிச்சரே இனிதாம்மா” என்றபடியே அடுத்து அவன் போய் நின்ற இடம், பசப்பூர்.

கண்கள் தெரியாதவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நியாயமான 9 கோரிக்கைகள் கொண்டு செய்யும் அறவழிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த இடத்தில் ஜடாமுனி போய் சேரும் முன்னமே, மக்களுக்காகவே அல்லும் பகலும், அயராது சேவை செய்யும் காவலர்கள், தங்கள் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.

“இந்த சட்டம் அனைவருக்கும் பொது, தப்பு யார் செய்தாலும் அடிப்போம். சாமியை சட்டை கூட அணிய விடாமல் அதிகாலையில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் இழுத்து போவோம். கண்ணு தெரியாதவர்களை சாலையில் போட்டு அடிப்போம், மிதிப்போம், தள்ளி விடுவோம். முடியாத பட்சத்துக்கு அனைவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் ஏதாவது ஒரு காட்டுக்குள் இரவு நேரத்தில் இறக்கி விட்டு விட்டு வந்து விடுவோம்.”

போன முறை சென்னையில் செய்தது போல, அதற்கான ஆயத்தம் தான் நடந்து கொண்டிருந்தது.

“சீ…மனுஷங்களா, முதல்ல மனுசங்களா இருங்கடா. அப்புறம் போலிஸ்காரனா இருக்கலாம்” என்று முணங்கிய ஜடாமுனி, இனி மரு வேலைக்காகாது சிவப்பு, எடு என் முகமூடியை ” என்று சிவப்பு வண்ண முகமூடியை எடுத்து மாட்டிக் கொண்டான்.

“என்ன சிவப்பு பாக்கற? சில போது நாம் என்ன அடையாளத்தில் வர வேண்டும் என்று அந்த சூழலே தீர்மானிக்கிறது. காற்று விடுவதில்லை போல”

ஜடா… ஜடா… ஜடாமுனி! ஜடா… ஜடா முனி! ஜட… ஜட… ஜட முனி! பின்னணி இசை. பிரளயம் செய்யத் தொடங்கியது.

“சிவப்பு மியூசிக்கல எங்கயோ பிசிறு தட்டுது பாரு, வயலின் சரி பண்ணு” என்றபடியே பறந்து சென்று, கண்ணு தெரியாத ஒரு பெண்ணை அடித்த ஒரு பெண் போலீஸ்க்கு சில்லு மூக்கு உடையும் அளவுக்கு ஒரு குத்து விட்டான். ஒரே குத்து. குபுக்கென்று குருதி பீறிட்டது. “*** காசு குடுத்து சேர்ந்திருப்பா போல.” என்று முணங்கியபடியே மொத்த கூட்டத்தையும் பார்த்தான். கூட்டம் அப்டியே ஃபிரீஸ். மியூசிக் உள்பட. கண்களற்றவர்கள் ஏதோ நடக்கிறது யாரோ ஒரு தேவதூதன் நமக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் என்று மட்டும் யூகித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இயல்பாகவே அவர்களின் பகுத்தறிவு கூர்மையாக வேலை செய்யும். செய்கிறது…

பறந்து பறந்து அடி விழுந்தது. பல பேரின் விரல்களை உடைத்து எறிந்தான். துப்பாக்கியை எடுத்து சராமரியாகச் சுட்டான்.

“என்னடா நடக்குது இங்க? ஏன் கண்ணு தெரியாதவன் இந்த நாட்டுக்காரன் இல்லையா? அவனுக்கும் சேர்த்து தாண்டா அரிசி விதைக்கறோம், சொம்பைகளா. வா, வா என்கிட்டே மோது. நீங்க டிரைனிங்ல அப்டி என்னத்த கிழிச்சீங்கன்னு பாக்கறேன்” என்றபடியே, இரண்டு போலிஸ்காரர்களின் வயிறையும் ஒன்றோடு ஒன்று மோத விட்டான் ஜடாமுனி. மலையை வெடி வைத்து தகர்த்தாற் போல, டாம் என்று சத்தம் எழும்பியது.

“ஏண்டா ஒரு போலீஸ்காரன் இவ்ளோ தொப்பையோட இருக்கலாமாடா? ” ஜடாமுனி கேட்க கேட்கவே.

“ஆலம்பனார், லாஸ்ட் சீன்லயே தொப்பை மேட்டர் வந்துடுச்சு,” என்று காதுப் பக்கம் கிசுகிசுத்தது சிவப்பு.

“சிவப்பு, சில சீன் ரிபீட் ஆனாலும் அபீட்டு ஆகாது,” என்றபடியே ஒரு காவலன் ஒருவனின் காதைப் பியித்து எறிந்தான்.

“டேய், ருத்ராபுரத்துல போன வாரம் முட்டை பரோட்டா கடைக்காரன்கிட்ட முட்டை பரோட்டாக்கு காசு தரமாட்டேனு நாய் மாதிரி கெஞ்சிட்டு இருந்தவன் தான நீ, வா, வா” என்று அழகு குத்துவது போல துப்பக்கியை ஒரு கன்னத்தில் வைத்து மறு கன்னத்தில புல்லட்டை வெளியே எடுத்தான்.

அந்த இடமே கலவர பூமி ஆனது.

“வேற வழியே இல்லை, நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என நீங்களே தீர்மானிக்கிறீர்கள். டேய், தப்பு யார் பண்ணினாலும் தண்டனை உண்டுடா.”

“அடுத்து,”என்றது சிவப்பு

“வெயிட் அண்ட் சி”

மஞ்சள் குதிரை காற்றில் மறையத் தொடங்கியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.