தொட்டிச் செடிகள்

2

ஸ்ரீஜா வெங்கடேஷ்

வளர்மதி சேற்றுழவுக்காக டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்தாள். ” எவ்ளோ மழை பெஞ்சா என்ன? இந்த மண்ணை  விட்டு வாசம் மட்டும் போகவே போகாது போல. இந்த மண்ணுக்குத் தான் என்ன இப்பிடியொரு வாசம்?” மூக்கை ஆழ உறிஞ்சி மண் வாசனையை தன் நுரையீரல்களில் நிறைத்துக் கொண்டாள் வளர்மதி.தூரத்தில் அப்பா வருவது தெரிந்தது. வரப்பை ஒட்டி டிராக்டரை நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு முறை மண் வாசனையை நுகர்ந்தாள். இவளைப் பார்த்து விட்டு வேக வேகமாக வந்தவர் “என்னம்மா நீ?காலேஜ்ல போயி படிச்ச புள்ள!ஒனக்கு எதுக்கு இதெல்லாம்?

 

பலவேசத்தைத் தானே நான் உழுகச் சொன்னேன். அவன் எங்க போயித் தொலஞ்சான்?”என்று சத்தம் போட்டார். அவர் எப்பவுமே இப்படித்தான். “என்னப்பா நீங்க? நான் தான் ஓட்டுவேன்னு பலவேசத்துக் கிட்ட பிடிவாதம் புடிச்சி நான் தான் டிராக்டர ஓட்டினேன்.அதுனால என்ன ஆச்சு இப்ப?” என்றால் வளர்மதி. “இப்ப என்ன ஆச்சா? நீ வெயில்ல நின்னு கறுத்துப் போயி வீட்டுக்குப் போனா ஒங்க ஆத்தா என்னிய உண்டு இல்லேன்னு ஆக்கிப்புடுவா. மேற்கொண்டு வெயில்ல வேகாம போம்மா வீட்டுக்கு”என்றார் கனிவோடு. “நான் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டுப் போறேனே?” என்றாள் மதி .”நீ எதுக்கு இருக்கேன்னு சொல்றேன்னு எனக்குத் தெரியாதா? எல்லாம் இருந்த வரைக்கும் போதும். என்ன மண்ணோ என்ன வாசனையோ? என்ன போண்ணோ? போம்மா வீட்டுக்குப் பேசாமே. இல்லேன்னா ஒங்க ஆத்தா ஒன்னியத் தேடிக்கிட்டு இங்கயே வந்துருவா.”என்றார். வளர்மதியும் சிரித்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.

இங்கே வளர்மதியைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி கிராமத்துக்காரி அவள். உள்ளூர் காலேஜில் B.Com படித்திருந்தாலும் விவசாயம் தான் விருப்பத் தொழில். உடன் பிறந்தவர்கள் என்று பார்த்தால் ஒரே ஒரு தம்பி. வழக்கமான கதாநாயகிகளைப் போல ரொம்ப அழகு என்று சொல்ல முடியாது. ஆனால் சுறு சுறுப்பும் , துரு துருப்பும் அவளை அனைவரையும் விரும்ப வைக்கும். அவளுக்குப் பிடித்தது அந்த கிராமத்து மண். அதனிலிருந்து வரும் வாசனை. சிறு குழந்தையிலிருந்தே அவளுக்கு மண் வாசனை என்றால் உயிர். விழியை மலர்த்தி மூச்சை உள்ளிழுத்து சந்தோஷமாக அனுபவிப்பாள். அவள் வளர வளர அவள் ரசனையும் வளர்ந்தது. கோடைக் காலத்தில் வானத்தில் கார் மேகங்கள் திரண்டு விட்டால் போதும் இவள் மனம் ஊஞ்சலாடத் தொடங்கி விடும். மகிழ்ச்சியில் வளர்மதி சக்கரவாகப் பறவையாக மாறி விடுவாள்.முதல் மழைத் துளி மண்ணில் பட்டதிலிருந்து கும்மென்ற நுறு மணம் பரவக் காத்திருப்பாள். இதனாலெல்லாம் அவள் பள்ளியிலும் , கல்லூரியிலும் , கவனமின்மைக்காக நிறையத் திட்டுகள் வாங்கியிருக்கிறாள். அதையெல்லாம் அவள் ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.அந்த சொர்க்க அனுபவத்திற்கு எதை வேண்டுமானானுல் ஈடாகக் கொடுக்கலாமே என்று தோன்றும் அவளுக்கு.

உறவினர்களுக்கும் தோழிகளுக்கும் இவளுடைய இந்த ரசனை ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்தது. சில சமயம் கேலிப் பொருளாகக் கூடத்தான் இருந்திருக்கிறது. என்ன கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தவே மாட்டாள் மதி. மண் வாசனைக்கு அடுத்தபடியாக அவளுக்குப் பிடித்தது என்றால் அது அவள் அத்தை மகன் பூமிநாதன் தான். அவன் மேல் மதி உயிரையே வைத்திருந்தாள்.இருவருக்கும் தான் திருமணம் என்று அவர்களாலும் மற்றும் பெரியவர்களாலும் முடிவு செய்யப் பட்டிருந்தது. மதியின் அம்மா விளையாட்டாகக் கூறுவாள் “ஏண்டி மதி உங்க அத்தான் பேருல பூமிங்கற வார்த்தை இல்லேன்னா நீ அவனத் திரும்பிக் கூட பாத்துருக்க மாட்டே இல்லியா?”என்று. சில சமயம் அது உண்மையாக இருக்குமோ? என்று வளர்மதிக்கே தோன்றியிருக்கிறது.


மண்ணின் மீது பைத்தியமாக இருக்கும் அவள் எப்படி நெருக்கடி மிகுந்த சென்னையில் குடித்தனம் நடத்தப் போகிறாள் என்று வளர்மதின் அப்பாவுக்கு உள்ளூரக் கவலை. அம்மா தான் சொன்னாள் ” எல்லாம் புருசன்னு ஒருத்தன் வந்திட்டா மண்ணாவது வாசனையாவது , நான் கூட சின்னப் பிள்ளையில மதி மாதிரிதான் திரிஞ்சிக்கிட்டு இருந்தேன். கல்யாணம் கட்டுனதும் எல்லாம் தானா மாறிடும்” என்றாள். என்றாலும் அவள் வாழ்க்கைப் பட்டது ஆழ்வார்குறிச்சியில் . மதி வாழப் போவதோ சென்னையில். சற்று கலக்கமாகத்தான் இருந்தது அவருக்கு.

திருமணத்திற்கு நாள் குறித்து விட்டார்கள். தை மாசம் 15ஆம் தேதி ஆழ்வார்குறிச்சியில் வைத்து கல்யாணம்.  மாப்பிள்ளை பூமி நாதன் ஒரு தனியார் கம்பனியில் நல்ல வேலையிலிருந்தான். வளர்மதி சிரமப் படக் கூடாது , எல்லாக் கடைகளும் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று மயிலாப்பூரில் ஒரு வீட்டின் பெரிய போர்ஷனை வாடகைக்கும் பிடித்து விட்டான். மிக்ஸி , கிரைண்டர் இன்னும் என்னென்ன உபகரணங்கள் உண்டோ அத்தனையும் வாங்கிப் போட்டான். கல்யாணம் நல்லபடியாக முடிந்து மாப்பிள்ளையையும் , பெண்ணையும் குடி வைக்க வந்திருந்தனர் பெண்ணின் பெற்றோர். வளர்மதியின் அப்பாவுக்கு வீடு பிடிக்கவேயில்லை. “என்ன மாப்ளே இது? ரூமெல்லாம் சின்ன சின்னதா இருக்கு? வீட்டு வாசக் கதவைத் தொறந்தா இன்னொரு வீட்டு சமயக் கட்டு தெரியுதே மாப்ளே! பெரிய வீடாப் பாக்கக் கூடாதா?”என்றார். பூமி நாதன் சிரித்து விட்டான்.”மாமா இது என்ன? ஆழ்வார்குறிச்சின்னு நெனெச்சீங்களா? இங்கேயெல்லாம் வீட்டு வாடகை ரொம்ப ஜாஸ்தி. இந்த வீட்டுக்கே பத்தாயிர ரூவா வாடகை , ஒரு லட்சம் அட்வான்ஸ். நீங்க சொல்ற மாதிரி வீடு வேணும்னா முப்பதாயிர ரூவா மாசம் குடுக்கணும்.”என்றான். கேட்டுக் கொண்டிருந்த வளர்மதி , “நாங்க ரெண்டே பேர் தானேப்பா.   நாங்க என்ன மாடும் கோழியுமா வளக்கப் போறோம்? இது தாராளமாப் போதும்.”என்றாள். அப்பாவுக்கு இது ஆச்சரியமக இருந்தது. “நான் சொன்னேன் பாத்தீங்களா?” என்பது போல அர்த்ததுடன் பார்த்தாள் அவர் மனைவி.

குடித்தனம் வைத்து விட்டு எல்லாரும் போயாகி விட்டது. இவர்களுக்கும் நாள் போனதே தெரியவில்லை. பீச்சுக்குப் போனார்கள் , சினிமா போனார்கள் , பெரிய பெரிய ஷாப்பிங்க் மால்களுக்கு அழைத்துச் சென்று அவளை வியப்பில் ஆழ்த்தினான்.  ஆயிற்று ஒரு மாதம் ஓடி விட்டது. சில நாட்களாகவே வளர்மதிக்கு சொல்லத் தெரியாத ஏக்கம் அவளைச் சூழ்ந்து கொண்டது. எத்தனை நேரம் தான் டி.வி. பார்ப்பது? “ஏங்க இந்த ஊர்ல பொம்பளைங்க எல்லாம் ஒண்ணாச் சேந்து உக்காந்து பேச மாட்டாங்களா?” என்று வினவியவளை ஆதுரத்துடன் பார்த்தான் பூமி. “இல்லே மதி. இங்கயெல்லாம் அவுங்க அவுங்க வேலை அவுங்களுக்கு. வீண் வம்பு பேச மாட்டாங்க”என்றான்.”வீண் வம்பு இல்லீங்க. எங்க ஊர்ல இந்த மாதிரி வளவு வீடுகள்ள உள்ளவங்க பதினோரு மணி வாக்குல ஒண்ணாச் சேந்து வத்தல் , வடாம் போடுவாங்க. ஊறுகா போடுவாங்க, வெங்காயம் உரிப்பாங்க, முருங்கை கீரை ஆய்வாங்க இப்படி பல வேலைகளை பகிர்ந்து செய்வாங்க” என்றாள் ஏக்கத்துடன். சொல்லும் போதே கண்களில் நீர் துளிர்த்தது அவளுக்கு.பூமி நாதனும் சமாதானப் படுத்தினான். இங்கேயெல்லாம் இப்படித்தான் இருக்கும் என்று.

ஒரு நாள் திடீரென வளர்மதி மிகவும் மகிழ்ச்சியாயிருந்தாள். அவள் வாயிலிருந்து பாடல்கள் கேட்டபடி இருந்தது.பூமி நாதனுக்கு ஒரே ஆச்சரியம். ஆர்வம் தாங்காமல் அவளையே கேட்டு விட்டான். அவள் சொன்ன் பதில் அவனை வியப்பில் ஆழ்த்தியது. “என்னங்க இன்னிக்கிக் காலைலயிருந்தே மேக மூட்டமா இருக்கு. நிச்சயமா இன்னிக்கு மழைவரும் “என்றாள். சரியான நகரத்து வாசியாகி விட்ட பூமி நாதனுக்கு இதுவும் ஒரு காரணமா சந்தோஷப்பட, என்று தோன்றியது. எப்படியோ எல்லாம் சரியானால் சரிதான் என்று விட்டு விட்டான். அன்று மதி எதிர்பார்த்ததைப் போலவே மழையும் வந்தது. மிகுந்த ஆவலோடு சன்னலருகே நின்று கொண்டு மூச்சை எத்தனையோ தடவை இழுத்துப் பார்த்தாள். ம்ஹூம்! மண் வாசனை என்பதைக் காணவே முடியவில்லை.மண்ணே இல்லாத தார் ரோட்டில் எங்கேயிருந்து வரும் மண் வாசம்? சுமார் ஒரு மணி நேரம் அடித்துப் பெய்த மழையால் தெருக்களில் எல்லாம் தண்ணீர் ஓடி சாக்கடை வீச்சம் தான் வந்தது. வளர்மதியின் நெஞ்சில் பெரும் பாறாங்கல்லை ஏற்றி வைத்ததைப் போல இருந்தது.

அவள் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ள எவ்வளவோ முயன்றாள்.முடியவில்லை. கிடைக்காத ஒரு பொருளுக்கான  ஏக்கம் அவளை சூழ்ந்து கொண்டது. சுத்தமாக பேசுவதேயில்லை. கேட்ட கேள்விக்குப் பதில் அவ்வளவே. வெளியில் எங்கு கூப்பிட்டாலும் வருவதில்லை. எப்போதும் எதையோ பறி கொடுத்தாற் போல ஒரு பார்வை. சாப்பிடுகிறாளா? இல்லையா என்பதே பூமி நாதனுக்கு சந்தேகமாக இருந்தது.ஏனென்றால் உடல் மிகவும் இளைத்து விட்டது. சமைத்தல் , துவைத்தல் போன்ற எல்லா வேலைகளையும் கடனேயென்று செய்தாள். பேச்சோ சிரிப்போ மருந்துக்குக் கூட இல்லை.இவையெல்லாம் பார்த்து  அவன் பயந்து போய் ஊரிலிருந்து மதியின் அப்பாவை வரவழைத்து விட்டான். அவர் வந்த பின்பும் ஒன்றும் சொல்லும் படியான முன்னேற்றம் இல்லை. அவருக்கு தன் மகள் இருந்த நிலையைப் பார்க்க பார்க்க துக்கம் பீறிட்டது.எப்படி இருந்தவள்? இன்று பைத்தியக்காரி மாதிரி மாறி விட்டாளே என்று நினைத்தார் , பூமியிடம் “மாப்ளே! மதி கிராமத்துலயே வளர்ந்த பிள்ளே. இந்த ஊரு பழக கொஞ்ச நாள் புடிக்கும். ஊர் ஏக்கத்துல தான் அவ இப்படி ஆயிட்டான்னு நான் நெனெக்கிறேன். என் கூட ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்.அங்க கொஞ்ச நாள் இருந்தாள்னா எல்லாம் சரியாப் போயிடும். வேற ஒண்ணும் இல்லை.நீங்க என்னமோ ஏதோன்னு நெனச்சுப் பதறாதீங்க “என்று கூறி மகளை கையோடு ஆழ்வார் குறிச்சிக்கு அழைத்து வந்து விட்டார்.

ஊருக்கு வந்து இறங்கியவள் உடனே தாயைக் கூடப் பார்க்காமல் , அவள் தேடி ஓடியது வயற்காட்டைத் தான்.  நாற்று நடவு நடந்து கொண்டிருந்தது. அங்கே சென்று நின்றவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிவது நிற்கவேயில்லை. “நான் என்ன தப்புப் பண்ணினேன்னு என்னை தள்ளீ வெச்ச?”என்று இயற்கையை  நோக்கி கேள்வி கேட்டு விக்கி விக்கி அழுதாள். அழுது முடித்த பிறகு பெரும் பாரம் ஒன்று நெஞ்சிலிருந்து இறங்கியது போல் இருந்தது அவளுக்கு. தன்னுடைய சிறுபிள்ளைத் தனத்தை நினைத்து அவளுக்கே வெட்கமாக இருந்தது.அம்மா இவளுடைய நிலைமையைப் பார்த்துவிட்டு ஓவென்று அழுதாள். “போதும்! எம்புள்ள பட்டணத்துல வாழ்ந்தது போதும்.அவ இங்கேயே இருக்கட்டும். மாப்ளை வேணுங்கற போது வந்து பாத்துகிடட்டும், மதி நீ எங்கியும் போகாத தாயீ எம்புள்ள உருக்குலஞ்சு போயிட்டாளே”என்று அவளைக் கட்டிக் கொண்டு கதறி விட்டாள். வளர்மதிதான் அவளை சமாதானப் படுத்த வேண்டியதாயிற்று.

பூமி நாதனை விட்டு பிரிந்து இருந்ததாலோ என்னவோ அவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் கிராமத்தை விட்டுப் போகவும் மனம் வரவில்லை. இடையில் இரு முறை அவளைப் பார்க்க வந்திருந்தான் அவன். பழைய உற்சாகமான மதியைப் பார்த்ததும் அவனுக்கு ஒரே சந்தோஷம். “மதி உங்க அப்பா சொன்னபடி இப்போ சிடி அவுட்டர்ல ஒரு வீடு பாத்துருக்கேன். தனி வீடு. ஆனா தோட்டம் இருக்கு. சின்ன எடம்தான் ஆனா அதுல நீ உனக்கு வேணுங்கறத வளர வெச்சுக்கலாம். நீ ஒனக்கு பிடிச்ச மண்ணோட ஒட்டி உறவாடலாம்” என்றான். அதைக் கேட்டு முகம் சுருங்கி விட்டது மதிக்கு. மீண்டும் சென்னை என்பதை நினைத்துப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது.”என்ன மண்ணு இருந்து என்ன? நம்ம ஊரு வயக்காடு மாதிரி வருமா? இயற்கையா உள்ளது தான் அழகு.வீட்டுல செயற்கையா என்னத்தை வளக்கறது?குட்டி குட்டியா தொட்டி வெச்சு அதுல இத்துனூண்டு மண்ணப் போட்டு வேரு அது இஷ்டத்துக்கு வளர முடியாத படி குறுக்கி சின்ன சின்னதா பூ பூக்க வெச்சு” நினைக்கவே எரிச்சலாக வந்தது அவளுக்கு.அவளது முக மாற்றம் பூமி நாதனுக்கு கோபத்தை வரவழைத்த்து.”நான் சென்னையில இருக்கேன்னு தெரிஞ்சி தானே என்னைக் கட்டிக்கிட்டே?இப்போ இப்டிப் பண்ணா என்ன அர்த்தம்? உன் இஷ்டம் போல செய். நீ சென்னைக்கு வரவே வேணாம் எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல்லேன்னு நெனச்சுக்கறேன்” என்று பொரிந்து தள்ளி விட்டு சாப்பிடாமல் கூடச் சென்று விட்டான்.

இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள் வளர்மதி. அவள் அப்பாவும் “மதி நீ படிச்ச புத்திசாலிப் பொண்ணு. வாழ்க்கையில எது முக்கியம்னு நீ முடிவு பண்ணிக்கோ.முடிவு எடுக்கும் போது முப்பது வருஷம் கழிச்சும் அந்த முடிவு ஒன்ன சந்தோஷமா வெச்சிருக்குமா அப்டீன்னு யோசிச்சு முடிவு எடு. அவசரமா முடிவெடுத்துட்டு ஆற அமர  வருத்தப் படக் கூடாதும்மா”என்று அறிவுரை சொன்னது வேறு அவளை மேலும் குழப்பியது. ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தது அவள் மனது.அத்தானும் ஆழ்வார்குறிச்சி வந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனசு அர்த்தமின்றி ஆசைப்பட்டது.

இதனிடையில் காலில் ஆபரேஷனாகி வந்திருக்கும் அவளுடைய சித்தி மகளை பார்ப்பதற்கு திருநெல்வேலி போனார்கள்.வளர் மதியும் உடன் போனாள். அம்மாவின் தங்கைக்கு ஒரே மகள் தான். வயது பத்து தான் ஆகிறது. கல்யாணமாகி பல வருடங்கள் கழித்துப் பிறந்த குழந்தை. யார் செய்த பாவமோ? கண்ணுக்கு அழகான அந்தப் பெண் அமுதாவுக்கு வலது கால் முட்டுக்கீழே வளர்ச்சியேயில்லை. போலியோ வியாதி இல்லை. பிறக்கும் போதே வலதுகால் முட்டோடு வளர்த்தி நின்று விட்டது. அதற்குத்தான்  இப்போது ஜெய்ப்பூரில் போய் ஆபரேஷன் செய்து செயற்கை கால் பொருத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.அந்தப் பெண்னைப் பார்க்கத்தான் இப்போது வளர்மதியும் திருநெல்வேலி வந்திருக்கிறாள்.

அமுதா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். கட்டையின் உதவி இல்லாமல் நடந்து காட்டினாள். தான் இனி எல்லோரையும் போல நடக்கலாம் ,ஸ்கூலுக்குப் போகலாம் என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தாள்.அவளின் மகிழ்ச்சி மதியையும் தொற்றிக் கொண்டது. சித்தி சொல்லிக் கொண்டிருந்தாள் “ஆபரேஷன் செய்யறதுக்கு எனக்கு ரொம்ப யோசனையா இருந்தது. என்ன இருந்தாலும் இயற்கைக் கால் மாதிரி வருமா? செயற்கைக்கால் பொருத்திக்கிட்டா பிள்ளைக்கு வலிக்கும்னு சொல்றாங்களேன்னு  யோசிச்சேன். அப்ப டாக்டர் தான் சொன்னாரு ,குறை இருக்கேன்னு கவலைப் பட்டுக் கிட்டே இருக்கறதை விட அதை சரி பண்ண முயற்சி பண்ணனும். காலே இல்லாம இருக்கறதுக்கு செயற்கைக் கால் எவ்வளவோ மேல் இல்லையா? முதல்ல கொஞ்சம் வலிக்கும் தான் ஆனா அந்த வலி உங்க பொண்ணுக்கு தன்னம்பிக்கையக் கொடுக்கும். எந்த சவாலையும் எதிர் நோக்கற வலிமையக் கொடுக்கும்.” என்று சித்தி சொல்லிக் கொண்டே போனாள்.. சித்தியின் ஒவ்வொரு வார்த்தையும் வளர்மதியை ஊசி போலக் குத்தின. அந்த வார்த்தைகள் தனக்காகச் சொல்லப் பட்டவை போலத் தோன்றியது அவளுக்கு.தொட்டியில் இருப்பதும் மண் தான் அதில் தண்ணீர் பட்டாலும் வாசம் வரத்தான் செய்யும்  என்று புரிந்து போனது. ஊருக்குப் போனதும் அத்தானுக்கு போன் செய்து தான் வருவதாகவும் நிறையத் தொட்டிகள் வாங்கி வைக்குமாறும் சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் , முகம் தெரியாத அந்த டாக்டருக்கு நன்றி சொன்னாள்.

படத்திற்கு நன்றி.

அமுதா

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தொட்டிச் செடிகள்

  1. கதையை பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால் “அருமை”. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.