ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

0

-கவிஞர் காவிரிமைந்தன்

அன்பின் முகவரிகாட்டும்
ஆனந்தப் பூக்கள் பூக்கும்
இன்பமே ஈகையென்றாகும்
இறைவனின் அருள் வந்தாகும்!!                       eid

சத்தியம் தர்மங்கள் வழியே
சமத்துவம் சாத்தியமாகும்!
இத்தரை மாந்தர் எல்லாம்
இனிதே வாழ்ந்திடச் செய்யும்!

நன்மைகள் பரவிடத்தானே
நாயகன் வரலாறு கண்டோம்!
உண்மையில் கடமையைச் செய்தால்
உயர்வுகள் தானாய் அமையும்!

தன்னால் இயன்ற உதவி
தருவதன் மூலம் மட்டும்
அல்லாவின் ஆசியெல்லாம்
அனைவரும் பெறுவோமன்றோ?

ஏழ்மையைப் போக்க எண்ணும்
ஏந்தல்கள் வாழ வேண்டும்!
எண்ணங்கள் தூய்மையாக
ஏற்றங்கள் நாளும் வேண்டும்!

மண்ணிலே வந்த நோக்கம்
மானிடராய் வாழத்தானே?
தன்னுயிர் போலவே எண்ணி
இன்னுயிர் எல்லாம் காப்போம்!

வரும்மழை தென்றல்யாவும்
வல்லவன் தந்த கொடைகள்!
தர்மங்கள் பலவும் செய்தால்
தரணியே சுபிட்சமாகும்!!

இல்லையே ஏழையென்னும்
இனியநிலை தோன்றவேண்டும்
இல்லாமை இல்லாததோர்
இனியசமுதாயம் வரட்டும்!

வல்லமை உள்ளோர் எல்லாம்
வலிந்துநல் உதவிகள் செய்வீர்!
வறுமைக்கு வறுமை வழங்கி
வையத்தை வாழவைப்போம்!

இறைவனின் பேரருளாலே
இவ்வுலகில் வாழும் உயிர்க்கெல்லாம்
இசைந்தநல் இதயங்கள் அனைத்திற்கும்
எந்தன் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *