படக்கவிதைப் போட்டி 37-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்திருப்பவர் திருமிகு. அமுதா ஹரிஹரன். இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி!
’உலகமே ஒரு நாடக மேடை; அதில் அனைவரும் நடிகர்களே!’ என்பார் பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர்.( All the world’s a stage, And all the men and women merely players…)
வாழ்க்கையில் நடிப்பதன்றி வாழ்க்கையே நடிப்பாய்க் (அதாவது நடிப்புத் தொழிலாய்) கொண்ட மனிதர்களும் உண்டு. படத்தில் காணும் நீலவண்ண மனிதர்கள் இருவரையும் பார்த்தால் நடிப்புத் தொழில்தான் இவர்கள் வாழ்வின் பிடிப்பு என்று தோன்றுகின்றது.
அன்று காளை மாட்டை ஊர்தியாய்க் கொண்டு சிவன் வருவார் காட்சிகளில்; இன்று காலம் மாறிவிட்டது; வாகன வசதிகள் பெருகிவிட்டன. அதனால்தான் சிவனும் ’சுசுகி’க்கு மாறிவிட்டார் போலும்!
அது போகட்டும். இந்த வண்ணப்படம் எத்தகைய எண்ணங்களை நம் கவிஞர்களின் நெஞ்சில் எழுப்பியிருக்கின்றது என்று அறிந்துவர நாமும் புறப்படுவோம்!
***
கடவுள் வேசத்தில், கோயிலிலிருக்கும் கடவுளிடமே கைவரிசையைக் காட்டிவிட்டுப் போகும் சாதுர்யமான மனிதர்கள் இவர்கள் என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.
கோயிலைக் கொள்ளை அடித்து
காவலர் கண்களில் மண்தூவி
சாதுர்யமாய் தப்பித்துப் போக
கடவுள் வேஷம் பொருத்தமானதுதான்!
***
’வேடங்கள் தேவையில்லை; இறைவனை முற்றாய் நம்பு; அவன் உனக்கு உற்றதுணையாவான்!’ என நம்பிக்கையளிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
கடவுள் வேடம் போடுகின்றார்
கடவுளின் கருணை பெற்றிடவே,
கடவுளை மனிதனை ஏய்த்திடவே
காசினி மாந்தர் பல்லோரும்
நடக்கிறார் பற்பல வேடத்துடன்,
நல்லது நமக்குத் தெரிவதில்லை,
இடரதைக் களைவான் இறைவனென
இனிதாய் நம்பிடு போதுமதே…!
***
பகல் வேடம் அம்பலமாகிக் காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு கம்பியெண்ண வேண்டியிருக்குமோ? என்று அஞ்சும் மனிதர்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
இருட்டானால்
திருட்டு
பகலானால்
பகல் வேஷம் என்று
நல்லாத்தானே போய்கிட்டிருக்கு
பொல்லாத வேலையா இன்று
போலீஸு பார்க்குது
நண்பா பின்னாடி பார்க்காதே
வம்பா போயிடும் கெத்தா நில்லு
சந்தேகம் வராத அளவுக்கு
தீபாவளி நேரம்
தீவிர வேட்டைக்கு நிற்குது போலீஸு
நாரதனிடம் இரவல்
கேட்காதே என்றேன்
கேட்டியா இப்பப்பாரு
வண்டியிலே பெட்ரோல்
இல்லாம நிற்க வைத்து
அவன் புத்தியை காட்டிட்டான்
நேரம் தெரியாமல் ரயில் வேறு
லேட்டாயி கேட்டாலே
மாட்டப்போறோமோ?
***
வேடங்கள் பலதிறப்பட்டன; அவற்றின் துணைகொண்டு கோமாளியாய் மாறி மக்களை மகிழ்விக்கவும் முடியும்; அவர்களையே ஏமாளியாக்கி ஏய்த்துவிட்டுச் செல்லவும் முடியும். இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவரவர் சமயோசிதம் என்கிறார் திருமிகு. பா. வானதி வேதா. இலங்காதிலகம்.
நீலவண்ணன் நவீன கோபி தெருவில்
கோலமோ இது நவீன ஆயர்பாடியில்!
பசி வெயில் பாரா வேடம்
சுசிகியில் சினிமா காட்சித் தடம்
தாமாகத் திறன் காட்டவும் திடம்
கோமாளியாய் மக்களை மகிழ்விக்கவும் இடம்
மாமாவாய் மக்களை நாசமாக்கவும் நடம்
ஏமாற்றிப் பிழைப்போரும் கபட வேடம்.
பாசம் பெறவும், காதல் நடவும்
தேசம் ஆளவும் தேசிய வேடம்.
காசும் கைநிறைக்கப் பூசுகிறார் அரிதாரம்.
வேசமே வாழ்வாகப் பிடிக்கிறார் வடம்.
சிரித்து ரசித்துச் சிந்தித்துப் பொழுதினை
எரிப்பவர் அன்னமாய் பாலைப் பிரிப்பார்
நாசமும் நயமும் கொள்ளும் விகிதம்
தோஷமோ விதியோ அவரவர் சமயோசிதம்.
***
கவிதைகள் நன்று! கவிஞர் பெருமக்களுக்குப் பாராட்டுக்கள்!
இனி இவ்வாரத்தின் சிறப்புக் கவிஞரைக் கண்டுவருவோம்!
’வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்’ என்பார் தெய்வப் புலவர். ஆம்! வஞ்சம் செய்பவனின் நெஞ்சமே அவன் போலித்தனத்தைக் கண்டு கேலியாய்ச் சிரிக்கும். கடவுள் வேடமிட்டுப் பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்களையும், நடமாடும் கடவுளராய்க் கருதும் மக்களின் மடமை கண்டு பொங்குகின்ற கவிதையொன்று கருத்தைக் கவர்ந்தது.
வண்டி
பாதியில நின்னு போச்சு…
பெட்ரோலுக்கு காசு இல்ல..
வயுறும் காயுது…
வேகாத வெயிலில்ல..
யாரை கேக்க
பாக்கற முகமெல்லாம் கடவுளாவே
தெரியுது..
மனச பய
ஒருத்தனையும் காணோம்…
சோறாக்க குழம்பு வைக்க எந்த கடவுளுக்கு
தெரியும்….
கொள்ளை அடிச்சா என்ன…
கொலை செஞ்சாதான் என்ன…
கோபமா வருது….
அழுகையா வருது….
புலம்பிக் கொண்டிருக்கும்
கடவுள் வேஷமிட்ட இருவரையும்
கடவுள்களே என்றெண்ணிய
திருட்டு முட்டாள் ஆசாமிகள்
இன்னும் சற்று நேரத்தில்
கடத்திக் கொண்டு
போவார்கள்…
இதையும் கடவுள் செயல்
என்பவர்கள்
வாயை மூடிக் கொண்டு
படிக்கவும்…
மக்களின் மனநிலை மாறவேண்டும்; மூடப் பழக்கங்களிலிருந்து அவர்கள் மீளவேண்டும் எனும் உள்ளக்கிடக்கையோடு இக்கவிதையைப் படைத்திருக்கும் திரு. கவிஜியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.
***
உடலெங்கும் வண்ணம்பூசி மக்களைத் தங்கள் நடிப்பாற்றலால் மகிழ்விக்கும் மனிதர்களின் கலைக்குரிய கவுரவத்தை மக்கள் தராததுகண்டு வெகுண்ட அவர்கள் கள்வராய் மாறுவதை நகைச்சுவையுடன் சித்தரிக்கின்றது மற்றொரு கவிதை.
ஏன்யா எங்களைப் பாக்குறீங்க ?
என்ன பாக்குறே ?
எதையய்யா கேக்குறே ?
நாட்டில மனுசன்
நடக்கிற லட்சணத்துக்கு
நாம எதில
குறஞ்சு போனம் ?
கருநீலக் கண்ணன்
வெண்ணெய் திருடினான் !
இந்தப் பயலுக
கருநீலம் பூசிட்டு
என்னத்தை திருடிப்புட்டானுக
என்னுதானே யோசிக்கிறே !
கொட்டகை ஒண்ணில
கூத்துப் போட வான்னு
கூட்டிப் போனானுக
பெரிய மனுஷங்க
நல்லாத்தான் நாம
வேஷம் கட்டினோமுங்க
கூச்சல் போட்டுத்தான்
கூத்தை ரசிச்சானுக
பசியோட நாம
கையை நீட்டினோம்
வெளியே போங்கடா
என்னு அந்தப் பெரிய மனுசங்க
தம்ம கையை நீட்டினாங்க
முள்ளை எடுக்க
முள்ளு வேணும்னு
ஆச்சி ஊரிலே
அப்ப சொன்னது
இப்ப உறைச்சுது
காசு கொடுக்கல்லென்னா
என்னாங்க
காசாக்க அவங்க
பைக்கை தூக்கிட்டு
வந்திட்டொமுங்க
இப்ப சொல்லுங்க !
ஏன்யா எங்களைப்
பாக்குறீங்க ?
கள்வர்கள் தாமாக உருவாவதில்லை; சமுதாயம்தான் அவர்களை உருவாக்குகிறது என்பதைத் தன் கவிதையில் தெளிவுபடுத்தியிருக்கும் திரு. சக்தி சக்திதாசனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.
***
கவிஞர்களே! உங்களோடு ஒரு நிமிடம்…
இப்புகைப்படத்திலுள்ள அரிதாரம் பூசிய மனிதர்களை நீங்கள் கள்வர்கள் போலவே பாவித்துப் பாப்புனைந்திருப்பது என மனத்துக்குச் சற்று வருத்தந்தான்! ஏன்? இவர்கள் நேர்மையான கலைஞர்களாக, ஏதோ காரணத்திற்காகச் சாலையோரம் தங்களுக்குச் சொந்தமான வண்டியோடு நின்றிருப்பவர்களாகவும் இருக்கலாம் அல்லவா?
பின்னால் தெரியும் காவல்துறை வண்டிதான் ’இவர்கள் கள்வர்கள்’ எனும் எண்ணத்தை உங்களுக்குள் விதைத்துவிட்டது என ஊகிக்கின்றேன். காவல்துறை வண்டி அங்கே நின்றிருப்பதுகூட (இக்கலைஞர்களோடு சற்றும் தொடர்பில்லாத) இயல்பான ஓர் நிகழ்வாய் இருந்திருக்கக் கூடும்.
நீங்கள் கொஞ்சம் மாற்றியும் யோசித்திருக்கலாமோ?
மீண்டும் சந்திப்போம்!
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்