மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 3

— முனைவர்   துரை. குணசேகரன்.

 

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
முடியாத முதலோனை மூவர் பெருமானை
வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

மகாவித்துவானின் 200ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் மயிலாடுதுறை மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத்துறை இக்கட்டுரையாளரின் பதிப்பில் ‘மாண்புகள் மிகுந்த மயிலாடுதுறை’, என்னும் நூல், கல்லூரி முதல்வர் ‘முத்தமிழ்வித்தகர்’ முனைவர் முத்து.வரதராசன் அவர்களின் ‘பெண்ணியம் போற்றுவோம்’, என்னும் கவிதை நூல், எங்கள் துறைப்பேராசிரியர்கள் முனைவர் இரா.மஞ்சளா, முனைவர் ந.சரவணன் ஆகியோரின் ‘அ.வ.அ.கல்லூரித்தமிழாய்வுத்துறையை வளர்த்தெடுத்த சான்றோர்கள்’ என்னும் நுல் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. இம்மூன்றுநூல்களும் மகாவித்துவானை ஆதரித்த திருவாவடுதுறை ஆதீனத்திற்குப்பெருமைசேர்க்கும் வகையில், தற்போதைய திருக்கையிலாய பரம்பரை 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் திருக்கரங்களால் வெளியிடப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாவித்துவானின் மகிமை:-
கண்டதேவிப்புராண அரங்கேற்றத்திற்காக பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தேவிக்கோட்டை (தற்போது தேவக்கோட்டை) நகரவைசியர் பெருமக்கள் மகாவித்துவான் அவர்களை மாணவர்கள், வேலைக்காரர்களோடு திருவாவடுதுறையிலிருந்து அழைத்துச்சென்றனர். பட்டுக்கோட்டைக்கு அருகில் சென்றபோது இருள்சூழ்ந்ததால் அங்கிருந்த ஒரு குடிசைவீட்டில் சென்று விசாரிக்கின்றனர். அவ்வில்லத்தில் திண்ணையில் படுத்திருந்த ஒரு பார்ப்பனப்பெண் ஆடவர்கள் பலரையும் பார்த்தவுடன் உள்ளே சென்று இல்லத்தைத்தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரம் கழித்து அவளின் கணவன் உணவுப்பொருள்முடிந்த ஒரு மூட்டையுடன் வந்து கதவைத்தட்டினான். வெளியில் படுத்திருந்த மகாவித்துவானின் மாணவர்கள் அவரை அழைக்கவே, மறுத்து கதவைத்திறந்து தாழிட்டுப்படுத்துக்கொண்டார். படுத்தவர் தமக்கு இரண்டு நாட்களுக்கு உணவுக்குப்பஞ்சமில்லை என்னும் மகிழ்வில் ஒரு பாடலை உரக்கப் பாடிக்கொண்டே படுத்துக்கொண்டார்.

தமிழ்ப்பாடலைக் கேட்ட மகாவித்துவான் அவரை அழைத்து தம் எதிரே பாடச்செய்தார். அப்போது அவர் தந்தை ஒரு வித்துவான் என்றும் அவர் வைத்திருந்த நூல்களை எல்லாம் வாங்கிச்சென்றவர்கள் மீண்டும் தரவில்லை என்றும் வருத்தப்படார். தமக்கு உண்மையாகப்பாடஞ்சொல்ல எவருமிலர். வறுமையும் அதற்கு இடந்தரவில்லை. மனைவியுடன், மக்களும் பிறந்துவிட்டனர் என்று ஆதங்கப்பட்டவர்,

“மாயூரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ்வித்துவான் இருக்கிறாராம். ஏழைகளாயுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்து அவர்களை நன்றாகப்படிப்பித்து அனுப்புவது அந்தமகானுக்கு வழக்கமாம். அவரிடத்தில் சிலமாதம் படித்தாலும் படிப்பவர்கள் கல்விப்பெருக்கத்தை அடைவார்கள் என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட மகோபகாரியைப்போல் இக்கலிகாலத்தில் யார் இருக்கிறார்? அந்தப்புண்ணியவானிடத்தில் போய்ப்பழக அவா இருக்கிறது, அதற்கும் முடியவில்லை”
என்று பலவாறாகப்புலம்புகிறார். மகாவித்துவானின் மாணவர்களில் ஒருவர் அருகில்வந்து முதுகைத்தட்டி, ‘இங்கே படுத்திருக்கும் இவர்கள்தாம் நீங்கள் குறிப்பிடும் அந்த மாமனிதர்’ என்று சொன்னதுதான் தாமதம், அவர் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியால் ஆடிப்பாடியதற்கு அளவே இல்லை. விருந்துக்கு ஏற்பாடு செய்ய ஓடினார். தடுத்து அனைத்தையும் கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார்கள்.

காலை எழுந்தும் உணவுஉண்டுவிட்டு இல்லத்திற்குத் தேவையான பொருட்களைத்தந்துவிட்டு, பிராமணரின் விருப்பப்படி அவரையும் கண்டதேவிப்புராண அரங்கேற்றத்திற்கு அழைத்துச்சென்ற நிகழ்வினை உ.வே.சா. அழகுறப்பதிவு செய்கிறார். இதன்வழி மகாவித்துவான், ‘கொள்வோன் கொள்வகை அறிந்து கொடுக்கும்’ ஆசானாக மட்டுமன்றி, அவர்களின் உடல்நிலை, உளநிலை, இல்லநிலைகளையும் அறிந்து அவற்றிற்கேற்ப அளிக்கும் மாமனிதராகவும் விளங்கினார் என்பதும் தெளிவு.

மாணவர் படை:-
மகாவித்துவானிடம் பாடங்கேட்ட மாணவர்களில் குறிப்பிடத்தகுந்தோர் பலர் உள்ளனர். சாதி, சமயம் பாராது அனைவரையும் தம்முடைய பிள்ளைகளாக எண்ணிப்பாடம் நடத்தியவர். பூவாளூர் தியாகராச செட்டியார், அரண்வாயில் வேங்கடசுப்புப்பிள்ளை, திருவீழிமிழலை சாமிநாதக்கவிராயர், சுந்தரம்பிள்ளை, களத்தூர் வேதகிரியார், பங்களூர்த்தேவராசபிள்ளை, குலாம்காதர் நாவலர், சவராயலு நாயகர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஆரியங்காவற்பிள்ளை, அழகிரிராஜு, வல்லம் கந்தசாமிப்பிள்ளை, மாயூரம் தெற்குவீதி முத்துப்பிள்ளை, சித்தர்காடு நமசிவாயபிள்ளை, சிவலிங்கவாத்தியார் சிங்கவனம் சுப்புபாரதி, திருப்பாம்புரம் சாமிநாதபிள்ளை, கர்ணம் வைத்தியலிங்கம்பிள்ளை, கூறைநாடு முத்துகுமாரபிள்ளை முத்தாள்புரம் கோபாலபிள்ளை, சுந்தரபெருமாள் கோவில் அண்ணாசாமி ஐயர், திருமங்கலக்குடி சேஷயங்கார், திருவாவடுதுறை வெங்குவையர், தர்மதானபுரம் கண்ணுவையர், மாயூரம்பட்டமங்கலம் சபாபதிஐயா, கூறைநாட்டுச் சாமிநாதவாத்தியார், கோபாலகிருஷ்ணபாரதி, சாத்தனூர் பஞ்சுவையர், திருத்தருப்பூண்டிபாகவதர், பெரியராமசாமி ஐயர், சின்ன ராமசாமி ஐயர், காரைக்கால் சவேரிநாதபிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட பலருக்கும் ஆசிரியராக விளங்கியவர். இந்த மாணவர் படையினர் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கும் ஆற்றாலர்களாக விளங்கியவர்கள்.

“ஊர்வந்து சேர்ந்தேன், என்றன் உளம்வந்து சேரக்காணேன்
ஆர்வந்து சொலினும் கேளேன்: அதனை இங்கு அனுப்புவாயே”

என்று திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகருக்கு மடல் எழுதியவர் கிறித்தவ அறிஞர் மாயூரம் வேதநாயகம்பிள்ளை. இவர் மகாவித்துவானின் மாணவர் மட்டுமன்றி அவருக்கு பலநேரங்களில் உதவியும்புரிந்த நண்பருமாவார். இவர்மீது குளத்தூர்க்கோவை பாடுமளவிற்கு மகாவித்துவானின் நட்பு இருந்தது. சீர்காழிக் கோவை பாடுதற்கும் அரங்கேற்றத்திற்கும் வழிவகுத்தவர்.

எண்ணற்ற மாணவர்கள் பயின்றாலும் சிலர் அவருடைய நூல்களைப்பதிப்பு செய்துள்ளனர். அவருடைய முழுவரலாற்றையும் உலகமறிமச்செய்த மாணவர் தமிழ்தாத்தா உ.வே.சா.ஆவார். ஐந்தாண்டுகள் மகாவித்துவானிடம் பாடம் பயின்றவர். தொடக்கத்தில் சிற்றிலக்கியத்துறையில் இருந்தாலும், சேலம் இராமசாமி முதலியாரின் தொடர்பால் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் பலவற்றைப்பதிப்பு செய்யும் அளவிற்கு சிறந்தபதிப்பாசியராக விளங்கினார்.

அதுவரை, ‘இறைச்சி’பற்றியும் ‘கள்’ குறித்தும் பாடப்பெற்ற இலக்கியங்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சங்கஇலக்கியம், காப்பியஇலக்கியங்களைத்தேடிக்கண்டு, பதிப்பித்ததுடன், தமிழைச்செவ்வியல்மொழி என்று அறிவிக்கவும் காரணமாக விளங்கியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் உ.வே.சாமிநாத ஐயராவார். இவர் மகாவித்துவான் பட்டறையில் பட்டைதீட்டப் பெற்ற தமிழ்வைரம்.

புராணம் பாடும் புலவர்:-
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் படைப்புகளை, பலவகைகளில் பாகுபடுத்தலாம். அவர் படைப்புகளில் மிகுதியானவை தலபுராணங்களே.

1. அம்பர்ப்புராணம்
2. ஆற்றூர்ப்புராணம்
3. உறையூர்ப்புராணம்
4. கண்டதேவிப்புராணம்
5. ஸ்ரீகாசிரகசியம்
6. குறுக்கைப்புராணம்
7. கோயிலூர்ப்புராணம்
8. சூரை மாநகர்ப்புராணம்
9. தணியூர்ப்புராணம்
10. தியாகராசலீலை
11. திருக்குடந்தைப்புராணம்
12. திருத்துருத்திப்புராணம்
13. திருநாகைக்காரோணப்புராணம்
14. திருப்பெருந்துறைப்புராணம்
15. திருமயிலைப்புராணம்
16. திருவரன்குளப்புராணம்
17. பட்டீச்சுரப்புராணம்
18. மண்ணிப்படிக்கரைப்புராணம்
19 .மாயூரப்புராணம்
20. வானொளிபுற்றூப்புராணம்
21. விளத்தொட்டிப்புராணம்
22. வீரவனப்புராணம்
என்று 22 புராணங்களைப்படைத்து ‘புராணம்பாடும்புலவர்’ என்னும் பெயர்பெற்றவர். இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனகர்த்தாவாக விளங்கிய அருள்மிகு சுப்பிரமணிய தேசிகருக்கு, திருச்சிராப்பள்ளி ராவ்பகதூர் தி.பட்டாபிராமபிள்ளை,
“சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் தம்பியும் நண்பர்கள் சிலருடன் திருஎவ்வூரிலிருந்து திருவெண்பாக்கம் என்னும் சிவதலத்திற்கு வழிபாட்டிற்காகச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது எதிரேவந்த எழுபது வயது மதிக்கத்தக்க வேளாளர் ஒருவரிடம் திருவெண்பாக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். பின்பு, ‘இத்தலத்திற்கு புராணம் உண்டா’? என்று வினவினேன். ‘புராணம் பாடுதற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களா இருக்கிறார்கள்? அந்தமகான் இருந்தால் இதற்கும் ஒருபுராணம் பாடியிருப்பார்” என்றார். அந்தச்சொற்கள் என் அகக்கண்ணின்முன் பிள்ளையர்களுடைய திருவுருவத்தையும் செயல்களையும் தோற்றச்செய்தன; நெஞ்சம் உருகியது. வந்த அன்பர்களிடம், “ஜன சஞ்சாரமற்ற இந்தக்காட்டிலேகூடபிள்ளையவர்களுடையபுகழ் பரவியிருக்கிறது பார்த்தீர்களா! என்று சொன்னேன்” என்று குறிப்பிடுகின்றார்.

இது மகாவித்துவானின் ‘புராணம்பாடும்’ புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. மகாவித்துவான் தாம் கண்டு, கேட்டு அறிந்த செய்திகளை தம்முடைய படைப்பில் உரியவிடங்களில் சேர்ப்பார். திருவாவடுதுறை மடத்தையும் அதன் குருமூர்த்தியையும் உரியவிடங்களில் பாராட்டத்தயங்கமாட்டார்.

ஒன்றைப்படிக்குங்காலத்தில் ஊன்றிப்படித்தலும் உருகவைத்தலும் மகாவித்துவானுக்கு கைவந்தகலை. ஒருமுறை காஞ்சிபுராணத்தின் இரண்டாம் கண்டத்திலுள்ள ஒரு பகுதியைப்படித்து, அதன்பாலுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றார். படைத்த கச்சியப்ப முனிவரின் அருமை பெருமைகளை நினைந்து கண்ணீர்விட்டும் அதனை ஆடையால் துடைத்தும் படித்துக்கொண்டேயிருந்தாராம். இந்நிகழ்வு நடந்தது மாணவர் சிதம்பரம்பிள்ளையின் இல்லத்தில் மாணவர்களுக்கு பாடம்சொல்லி முடித்தபின் நள்ளிரவில் நடந்தது. இதனை, அயலித்தே உறங்கிக்கொண்டிருந்த பிரபு ஒருவர் சாளரம் வழியாகப்பார்த்துவிட்டு, எழுந்து வந்து அவர் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென்று பிடிங்கி எறிந்துவிட்டு, ‘ஐயா நீங்கள் வாசித்ததுபோதும் நிறுத்துங்கள். கவலைகள் ஏதுமிருந்தால் சொல்லிவிடுங்கள். சிதம்பரம்பிள்ளை போன்றவர்கள் இருக்கும்பொழுது எதற்காகக்கவலைப்படுகிறீர்கள்?’ என்று வருந்திக்கேட்டாராம் இந்த அழுகை ஊன்றிப்படிப்பதனால் வந்தது என்றோ, படிப்பதால் அவ்வாறு அழுகைவரும் என்றோ அறியாதவர் அவர்.

தங்கள் ஊர் குறித்து, தலபுராணங்கள் பாடப்படுவதை மக்கள் பெருமையாக நினைப்பர். தலபுராணம் பாடுவதற்கு அவ்வூர்,
1. பாடல்பெற்ற இடமாக இருத்தல்
2. அற்புதங்கள் நிகழ்த்தப்பெற்றவையாக இருத்தல்
3. முக்தி பெறும் தலங்களில் ஒன்றாக இருத்தல்
4. தேவர்கள் வழிபட்ட இடம் என்னும் நம்பிக்கை
5. சித்தர்கள் வாழ்ந்த தலம்
6. புராணக்கதைகளில் இடம் பெற்றிருத்தல்
என்பனவற்றில் பெரும்பான்மையைக்கொண்ட இடமாக இருத்தல் வேண்டும்.

படித்தல், பாடம் சொல்லல், நூல்கள் யாத்தல், சிறப்புப்பாயிரம் அளித்தல், நூல்களைப்பதிப்பித்தல், நூல்களுக்கு உரைவழங்கல் என்பனவற்றை தம்வாழ்வியல் பணிகளாகக்கொண்டவர் மகாவித்துவான் அவர்கள். தாம் வாழும் காலம்வரை தலபுராணங்கள் பாடப்பெறாத, அல்லது வடமொழியில் பாடப்பட்டும் தமிழில் இல்லாத தலத்தில் வாழுவோர், மகாவித்துவானை அழைத்துச்சென்று பாடச்சொல்லி மகிழ்ந்தோர் பல்லோர். அவ்வகையில் தமிழில் மிகுதியான தலபுராணம் பாடிய பெருமைக்குறியவராக அவர் கருதப்பட்டார்.

மகாவித்துவான்பாடிய தலபுராணங்களில் மாயூரப்புராணமும், திருநாகைக் காரோணப்புராணமும் பெருங்காப்பியங்களாக எண்ணத்தக்கவை. மயிலாடுதுறை அமைந்திருக்கும் சோழநாட்டின் பெருமைகுறித்துக்கூறவந்த மகாவித்துவான்,

“பூவினூர் பதுமம் போலும் புருடருள் திருமால் போலும்
காவினுள் கற்பம் போலும் கலைகளுள் ஞானம் போலும்
ஆவினுள் காரான் போலும் அறத்தினுள் அறமே போலும்
நாவிலுண் மெய்நாப் போலும் நாட்டினுள் சோழநாடு”

என்று மயூரப்புராணத்தின்வழி உணர்த்துகின்றார். அவ்வாறு விளங்கும் சோழநாட்டில்,

“பாங்கு சேர்தவ முடையரே வசித்திடு பண்பால்
தாங்கு வார்சடைப் பிரானுமை யொடுமமர் தகவால்
வீங்கு பேரொளி யாவழியா தமர் விறலால்
ஓங்கு வான்சிவ லோகமே கௌரி மாயூரம்”

என்று சிவலோகத்திற்குச் சமமாக மயிலாடுதுறை விளங்குகின்றது என்கிறார்.

மகாவித்துவான் படித்தவாரே, படைப்புகளைப்படைக்கவும் தெரிந்தவர். உறையூர்ப்புராண அரங்கேற்றம் தொடங்கியது. நாட்டுச்சிறப்பு, நகரச்சிறப்பு என்று அவரவர்களுக்குப்பிடித்த இடங்களைமனம் உருகிக்கேட்கின்றனர். நகரப்படத்தின் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ள வருணணையை நெஞ்சுருகி கேட்டுவந்த அந்தக்கோவிலின் தருமகர்த்தா கண்ணீர்விட்டுக்கொண்டே கேட்டாராம். இதுபோன்று மகாவித்துவானின் புராணங்களில் பல உள்ளன.

அந்தாதி:-
மகாவித்துவான் பாடிய படைப்புகளில் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தில் இருக்கும் இலக்கியம் அந்தாதியாகும். இதில் நான்கு வகை அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

1) பதிற்றுப்பத்தந்தாதி (6)
அ. தண்டபாணி பதிற்றுப்பத்தந்தாதி
ஆ. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பதிற்றுப்பத்தந்தாதி
இ. திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி
ஈ. பழசைப்பதிற்றுப்பத்தந்தாதி (பட்டீசுவரம்)
உ. பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதி
ஊ. பூவானூற்றுப் பதிற்றுப்பதந்தாதி
என்னும் ஆறு பதிற்றுப்பத்து அந்தாதிகளைப்பாடியவர்.

2) திரிபந்தாதி (4)
அ. குடந்தைத்திரிபந்தாதி
ஆ. திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி
இ. திருவானைக்காத்திரிபந்தாதி
ஈ. திருவிடைமருதூர் திரிபந்தாதி
என்று நான்கு திரிபு அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

3) யமகவந்தாதி (4)
அ. திருச்சிராப்பள்ளி யமவஅந்தாதி
ஆ. திருவாவடுதுறை யமவஅந்தாதி
இ. தில்லையமகவந்தாதி
ஈ. துறைசை யமக அந்தாதி
என்று நான்கு யமக அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

4)வெண்பாவந்தாதி (1)
(அ) எறும்பீச்சரம் வெண்பாவந்தாதி
என்று ஓர் அந்தாதியை வெண்பா வடிவில் பாடியுள்ளார். இவ்வகையில் 15 அந்தாதிகளைப் பாடியிருப்பன தெளிவாகிறது.

இவற்றுள் திருவானைக்காத்திரிபந்தாதி 26ஆம் வயதில் எழுதியது. திரிபந்தாதிக்குப்பின் யமகவந்தாதிகளைப் படைக்கத்தொடங்கினார். முதலில் தாம் வாழ்ந்துவந்த திரிசிராமலை குறித்த அந்தாதியினை விநாயகக்கடவுள் தொடங்கி, சேக்கிழார் வரை பதினொருவரை வாழ்த்தி, அவையடக்கமாக ஒரு செய்யுளையும் என பன்னிரு செய்யுட்களையும் புதுமையான முறையில் படைத்திருப்பார். இது வேறு அந்தாதிகளில் இல்லாதமுறை. ‘திருவ10றைப்பதிற்றுப்பந்தாதியில்’ படைப்புப் பயணத்தைத்தொடங்கிய பிள்ளையவர்கள், ஹதிருவிடைமருதூர் திரிபந்தாதியில் நிறைவு செய்கிறார்.

பிள்ளைத்தமிழ்:-
புராணங்கள் அந்தாதிகளுக்கு, அடுத்தநிலையில் பிள்ளைத்தமிழில் பாடியவர் மகாவித்துவான்.
1. அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்
2. காந்திமதியம்மைப்பிள்ளைத்தமிழ்
3. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
4. திருவிடைக்கழி முருகர்பிள்ளைத்தமிழ்
5. திருவெண்ணீற்றுமைபிள்ளைத்தமிழ்
6. பாகம்பிரியாள்பிள்ளைத்தமிழ்
7. பிரமவித்தியாநாயகிபிள்ளைத்தமிழ்
8. பெருந்திருப்பிராட்டிபிள்ளைத்தமிழ்
9. மங்களாம்பிகைபிள்ளைத்தமிழ்
10. அம்பலவாணதேசிகர்பிள்ளைத்தமிழ்
என்பன அவை.
பிள்ளைத்தமிழ் பத்தில் ஏழு அம்பிகை மீது பாடப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்குமணப்பிள்ளை என்பாரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றிய முதல் பிள்ளைத்தமிழ் அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழாகும். ‘தாங்கற்ற நூலளவேயாகுமாம் நுண்ணறிவு’ என்பதற்கேற்ப மகாவித்துவான் கற்ற பலநூல்களின் கருத்துகள், கற்பனைகள் மலிந்துள்ள நூல். இந்நூலினால் இவருக்கு உண்டான புகழுக்கு எல்லையே இல்லை என்பார்கள். இதுகுறித்து உ.வே.சாமிநாதய்யர், “திரிபந்தாதிகளில் தளிர்த்து, திரிசிரபுர யமகவந்தாதியில் அரும்பி, அகிலாண்ட நாயகி மாலையிற் போதாகி, இப்புலவர்சிகாமணியின் கவித்திறனும் புகழும் அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழில் மலர்ந்து நின்றன” என்று குறிப்பிடுவதன்வழி இப்பிள்ளைத்தமிழின் பெருமையை உணர்ந்துகொள்ளலாம்.

தொடக்கத்தில் இந்நூலைப்பதிப்பிக்க இயலாமல் அம்முயற்சியைக்கைவிட்டார் மகாவித்துவான். பிறகு 1842இல் திரிசிரபுரம் இலக்குணப்பிள்ளையின் பொருளுதவியுடன் பொன்னம்பல முதலியார், மகாலிங்கையர் உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் சிறப்புப்பாயிரங்களுடன் வெளிவந்தது.

மகாவித்துவானின் அறுபதாண்டு நிறைவில் பாடியது சேக்கிழார் பிள்ளைத்தமிழாகும். முதல் பிள்ளைத்தமிழுக்குக்கிடைத்த மதிப்பும் மரியாதையும் கடந்து இப்பிள்ளைத் தமிழுக்குக் கிடைத்தது. அனைவரின் பாராட்டையும் பெற்ற நூல்.

‘பரவுசீர் உலகலொம் விரவு சேவையர் பிரான்’ என்றும்
‘சகலகலா பண்டித தெய்வச் சைவா’, என்றும்
‘சைவப் பயிர் தழையத்தழையும் புயல்’, என்றும்
“பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிவலவ”என்றும்
பெரியபுராணம் பாடிய சேக்கிழாரைப் பலவாறாகப் பாராட்டும் மகாவித்துவானின் பாராட்டு, அவருக்கும் பொருந்தும்.

கோவை:-
‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’
என்னும் தொடர் மாணிக்கவாசகர் வாழ்வில் நடந்தது. மகாவித்துவான் படைப்புகளில் சிறப்பிடம் பெறுவன கோவைகளாகும். இவ்வகையில் மூன்று கோவைகளைப்படைத்துள்ளார் அவர்.
1. சீர்காழிக்கோவை
2. குளர்த்தூர்க்கோவை
3. வியாசைக்கோவை
என்பன அவை.

திருவாளர் சபாபதி முதலியாரின் வேண்டுகோளுக்கேற்ப இயற்றப்பட்டதுதான் வியாசைக்கோவை. மாயூரம் வேதநாயகம் பிள்ளைமீது இயற்றப்பட்ட குளத்தூர்க்கோவையின் சில செய்யுட்களைக் கேட்ட அவர், விநாயக முதலியார் மீதும் ஐந்திணைக் கோவையொன்று செய்யவேண்டும் என்று வற்புறுத்தினாராம். அதற்கேற்ப நூறு செய்யுட்களைப்பாடினார். எஞ்சியவற்றை திரிசிரபுரம்போய் முடித்தனுப்புவதாக உறுதி கூறினார். ஆனால் அவற்றை அவரின் கட்டளைப்படி சி.தியாகராச செட்டியாரால் செய்யப்பெற்றதாம். இது தொடர்பான ஒரு நிகழ்வை உ.வே.சா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்;

தியாகராச செட்டியாரின் உபகாரச்சம்பளம் பெற்றுக்கொண்டு உறையூலிருந்தபோது அவரைப்பார்க்கச்சென்றேன். அப்போது, ‘ஐயா அவர்களும் நீங்களும் இயற்றிய வியாசைக்கோவையைப் பார்த்ததில்லை; தங்களிடம் உண்டோ, எனக் கேட்க, ‘என்னிடம் ஓர் அச்சுப்படியே உள்ளது. அதனைத்தர மனம் இடந்தரவில்லை’ என்றாராம். ‘அதனைக்கொடுத்தால் படித்துவிட்டுத்தந்துவிடுவேன்’ என்று கூற, அதனைக் கொண்டு வந்து கொடுத்தாராம். ஒருநாள் காலை தொடங்கி அதனைப்படித்துப்பொருள் கேட்டு வருகையில், 100 பாடல்கள் வந்தவுடன், ‘இனி வாசிக்கவேண்டாம்; நிறுத்திவிட வேண்டும்’ என்றாராம். ஏன் என்று கேட்டபோது, “உங்களுக்கு என்னிடத்தும் என்பாட்டினிடத்தும் மிக்க மதிப்புண்டு. இதுகாறும் உள்ளவை ஐயா பாடியவை. அதற்கு மேல் உள்ளவை ஐயாவின் கட்டளையால் நான் பாடியவை. அவரின் இனிய பாடல்களைப்படித்தபின் என்னுடைய பாடல்களைப் படித்தால் என் யோக்கியதை வெட்டவெளியாய்விடும். அமிர்தத்தை உண்டவன் பிண்ணாக்கை உண்டதுபோல் இருக்கும்’’ என்று வருந்தினாராம். அப்போது அவர் கண்களில் நீர் பெருகிற்று என்று குறிப்பிடுகின்றார் தமிழ்தாத்தா உ.வே.சா மகாவித்துவானின் கவிச்சுவை அறிந்தோரில் முதன்மையானவர் தியாராசச் செட்டியார் என்பதும், அவரின் பெருந்தன்மையும் இதன் வழிப்புலனாகும்.

மாயூரம் வேதநாயகம்பிள்ளையும் சிலசைவ அன்பர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க சீர்காழியில் எழுந்தருளியுள்ள பிரமபுரீசுவரர் மீது பாடப்பட்டதுதான் சீர்காழிக்கோவையாகும். கோவிலின் வலம்புரி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெற்றது. நாளும் வேதநாயகம்பிள்ளையும் உடன் இருந்து கேட்டுள்ளார்.

சீர்காழிக்கோவை அரங்கேற்றத்தில் கிடைத்த தொகையில் தன்னுடைய மாணவர் ஒருவருக்குத்திருமணம் செய்துவைத்ததுடன், வீடு கட்டிக்கொடுத்தும் செலவுக்குப்பணம் கொடுத்துமுள்ளார். எஞ்சிய தொகையை, திரிசிரபுரத்தில் செலுத்தவேண்டிய கடனுக்காக அனுப்பியுமுள்ளார் என்பது வியக்கத்தக்க செய்தியாகும்.

பிற சிற்றிலக்கியங்கள்:-
மகாவித்துவான் கலம்பகம், உலா, குறவஞ்சி, சிலேடை வெண்பா உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார்.

கலம்பகம் (2)
1. வாட்போக்கிக்கலம்பகம்
2. அம்பலவாண தேசிகர் கலம்பகம்

உலா (1)
1. திருவிடைமருதூர் உலா

தூது (2)
1. சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது
2. தானப்பா ஆசாரியார் தசவிடு தூது

குறவஞ்சி (1)
1. திருவிடைக்கழி குறவஞ்சி

சிலேடைவெண்பா (1)
1. திருவாவடுதுறை சிலேடை வெண்பா
என்பன அவை.

தவிர, பதிகம், அகவல், சரித்திரம், தனிப்பாடல்கள், விருத்தம், கதை, ஆனந்தக் களிப்பு போன்ற பலவற்றையும் படைத்துள்ளார்.

பதிகம் (3)
1. திருத்துருத்திக் கச்சி விநாயகப்பதிகம்
2. திருத்துருத்திச்சுப்பிரமணிய சுவாமி பதிகம்
3. திருவிடைமருதூர் தோத்திரப்பதிகம்

அகவல் (1),
1. திருவாவடுதுறை ஆதீனத்துக்குருபரம்பரை அகவல்

சரித்திரம் (2)
1. திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்.
2. திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்

தனிப்பாடல் (1)
1. திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் மீது பாடப்பெற்ற தனிப்பாடல்.

விருத்தம் (1)
1. திருமயிலைச் சித்திரச் சரித்திரப் புகழ்ச்சி மாலையைச் சார்ந்த தனிவிருத்தங்கள்

கதை (1)
1. மயிலிராவணன் கதை

ஆனந்தக் களிப்பு (1)
1. மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு

இதுவரை, என்னுடைய உரையின்வழி குறிப்பிடப் பெற்ற படைப்புகள் 73. இவற்றுள் இன்று கிடைப்பவை, பதிப்பித்தும் கிடைக்காதவை, பதிப்பு செய்யாதவை என்னும் பல தரப்பட்ட வகையில் மகாவித்துவானின் படைப்புகள் உள்ளன. உரையில் இடம்பெறாத படைப்புகளும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அனைத்தையும் ஒருமித்துப்பதிப்பித்து வெளியிட்டால் மகாவித்துவானினி பெருமை புலனாகும்.

மேற்கூறிய படைப்புகள் அன்றி,
1. கப்பற்பாட்டு
2. குருபரம்பரை அகவல்
3. பொன்னூசல்
4. மங்களம்
5. லாலி
6. வாழ்த்து
போன்றவற்றையும் குறிப்பிடும் உ.வே.சா. அவர்கள், தம்முடைய குருநாதராம் மகாவித்துவான் வேறு சில படைப்புகளையும் எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தார் என்று சுட்டுகின்றார். அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை வளங்கொழிக்கும் குற்றாலத்திற்கு ஒரு கோவை எழுதவேண்டும் என்பதாகும். அது என்ன காரணத்தினாலோ நிறைவேறவில்லை வருந்தி எழுதுகின்றார்.

விரைந்து செய்யுளியற்றும் வல்லாளர்:-
மகாவித்துவானின் மாணவர் கோபாலப்பிள்ளை என்பவர் விரைந்து எழுதுவதில் வல்லவர். இதனால் செருக்குற்றிருந்தார். மயிலாடுதுறையில் மயூரநாதர் தெற்குவீதியில் ஆசிரியர் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ஐயா, ‘என்கை வலிக்குமாறு செய்யுள் செய்வதில்லையே’ என்று உடன்படிக்கும் மாணவர்களிடத்துச்சொல்ல, மகாவித்துவான் காதில் விழுந்து விட்டது.

சில நாள் கழித்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து தாம்பாடி வந்த காரோணப் புராணத்தில் சுந்தரவிடங்கப்படலத்தில் கற்பனை நிறைந்த பாடல்களைச்சொல்லத் தொடங்கினார். அப்பாடல்களை, கோபாலப்பிள்ளை காலை ஏழு மணி தொடங்கி இடைவேளையின்றி நண்பகல் 12 மணி வரை எழுதிக் கொண்டே இருந்தார். திடீரென எழுந்து ஏடுகளைச்சேர்த்துக் கட்டி எழுத்தாணியை உறையிலிட்டு, மகாவித்துவான் காலடியில் வைத்துவிட்டு அவர் காலடியில் வீழ்ந்து எழாமல் கிடந்தார்.

‘என்ன நடந்தது? ஏன் இப்படி? எழுந்திரு’ என்றார் ஆசிரியர். ‘ஐயா, என் வலக்கைச்சுண்டுவிரலின் பின்புறமும் இடக்கை கட்டைவிரல் முனையிலும் குருதி கசிகிறது. இனி என்னால் எழுதமுடியாது. என்அகம்பாவம் அழிந்தது தாங்கள் கவிசொல்லும் வேகத்திற்கு என்னால் மட்டுமன்று எவராலும் எழுதமுடியாது’ என்று தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இது போன்ற நிகழ்வுகள் எத்தனையோ …

பரந்துபட்ட அறிவு:-
பொருள் சொல்வதில் மகாவித்துவானுக்கு நிகர் அவரே. தன்னைவிடப் பெரியவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று தற்பெருமை கொண்ட ஒருவர், மகாவித்துவான் அறிந்திராத பாடல் ஒன்றைச்சொல்லி, பொருள் கூறுக என்றார். இதோ அந்தப் பாடல்;

காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங்கழுகுன்றே

உடனே, அதிலே உள்ள காணிகளைக்கூட்டி காலைக்காட்டு என்பது இதன் பொருள். கழுகுன்றத்தை அடைந்தால் அத்தலம் சிவன் திருவடியைக்காணச் செய்யுமென்பது இதன் கருத்து. இது பிணக்கில்லாத பெருந்துறைப்பித்தனே… என்வினை ஒத்தபின் கணக்கில்லாத்திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே என்பதை நினைத்து பாடப்பெற்றது என்று விடையளித்தாராம்.

வினா தொடுத்தவர் உடனே, இதுவரையிலும் யாரும் இதற்குச்சரியாகப் பொருள் சொல்லவில்லை. கடினமான செய்யுளையே பொறுக்கி எல்லோரையும் கேட்டுக் கலங்கச்செய்து கொண்டுவந்த நானே, இதன் உண்மைப்பொருளைத் தெரிந்துகொள்ளவில்லை. யாதொரு கவலையின்றி இதற்குப்பொருள் கூறிய தாங்கள், தெய்வப்பிறவி என்று பாராட்டினாராம். இப்படிப்பலப்பல நிகழ்வுகள் மகாவித்துவான் வாழ்வில் பலமுறை நடந்துள்ளன.

மகாவித்துவானின் இலக்கியப்பணிகளில் பாடம் நடத்துதல், படைப்புகளைப் படைத்தல் இரண்டு மட்டுமே சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர்த்து பதிப்புப் பணியில் ஈடுபட்டு ஒருசில படைப்புகளைப்பதிப்பித்துள்ளார். சாற்றுக்கவி அளித்தல், சிறப்புப்பாயிரம் நல்கல், சில படைப்புகளுக்கு உரை வழங்கல், வடமொழி படைப்புகளைத் தமிழில் வசனநடையாக மொழிபெயர்த்து, அதன்பின் செய்யுளாக்கல், உள்ளிட்ட இலக்கியப்பணிகளிலும் ஈடுபட்டவர்.

நகையுணர்வு:-
மகாவித்துவான் அவர்கள் இயல்பாக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். மற்றவர்களின் செயலில் தவறு இருக்குமாயின் நயமாகச்சுட்டிக்காட்டி வெளிப்படுத்தக்கூடிய பண்பாளர்.

இவர் மயிலாடுதுறையில் 1860 ஆம் ஆண்டில் இருந்து வசிக்கத்தொடங்கினார். பல்லவராயன் பேட்டையிலிருந்து சடையப்பப்பிள்ளை என்பவர் இவருக்கு நெல் அனுப்பினார். அந்நெல் மகாவித்துவானுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த நெல்லின் பெயர் ‘தில்லைநாயகம்’. உடனே ஒரு மடல் எழுதுகிறார், ‘தில்லை நாயகன் பித்தனென்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன் அந்தச் செய்தி உண்மை என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன். என்று. இதை உணர்ந்துகொண்ட சடையப்பப் பிள்ளை, மாற்றாக ஈர்க்கு சம்பா நெல்லை அனுப்பினார்.

பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க ஒருவர் வந்தாராம். ‘என்ன படிக்க வேண்டும்’ என்று கேட்டதற்கு, ‘இலக்கியம் படிக்கவேண்டும்’ என்று பதிலளிக்க, இலக்கணம் படிக்க வேண்டாமா ? என்று கேட்டாராம் பிள்ளை. ‘நன்றாகப் படித்திருக்கிறேன்’ என்று சொன்னதும், ஒரு பாடலைச்சொல்லி இதில் ‘எழுவாய்’, ‘பயனிலை’ என்ன என்று கேட்கிறார். வந்தவர் நீண்ட நேரம் யோசித்துக்கொண்டேயிருக்க, பிள்ளை வந்தவரைப்பார்த்து, ‘எழுவாய்… பயனிலை’ என்று சொல்ல, புரியாமல் விழிக்கிறார். இதற்கு ‘எழுந்திருப்பாய்’ இனி அமர்ந்திருப்பதில் ‘பயனில்லை’ என்னும் பொருள் என்று அருகில் இருப்போர் குறிப்பால் சொன்னதாகக்குறிப்பிடுவர்.

இவ்வுரையின்வழி மகாவித்துவானின் புலமை வெளிப்படும். 200ஆம் பிறந்த நாள் காணும் மகாவித்துவானின் படைப்புகள் அனைத்தையும் அச்சிட்டு நூலாக்கி மக்களுக்கு எளிதில் கிடைக்கச்செய்தல் நாம் அவருக்குச்செய்யும் தொண்டுகளுள் ஒன்று. தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றிய மகாவித்துவானுக்கு அவர் வாழ்ந்த மயிலாடுதுறையிலோ, ஆதீனைப் புலவராயிருந்த திருவாவடுதுறையிலோ மணிமண்டபம் எழுப்பி அவர் சிலையைத்தமிழர்கண்டு வழிபட வழிசெய்தல் அவருக்குச்செய்யும் மற்றொரு தொண்டாகும்.

நவீன அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்தில் ஒருவரின் நிழற்படங்களைக் கோடிக்கணக்கில் உருவாக்கமுடியும். ஆனால் அறிஞர்களின் படங்கள் வெளிவந்த காலத்தில் வாழ்ந்தாலும் மகாவித்துவானின் உண்மையான படத்தினை இணையத்திலும் காண்பது அரிது. எனவே, அவரின் திருவுருத்தினை இந்தியமக்கள் அறியும் வகையில் அவருக்கு அஞ்சல்தலை வெளியிடல் அவருக்குச் செய்யும் பிறிதொரு தொண்டாகும். ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, இந்தியா’ என்று எழுதினாலே மடல் அவரை வந்து சேர்ந்துவிடும் பெருமைமிக்க அவருக்கு, மேற்காணும் செயல்களைச் செய்ய ஒருமித்து அரசுகளுக்குக்குரல்கொடுப்போம்.

(நிறைவுற்றது)

குறிப்பு:-
இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

முனைவர் துரை. குணசேகரன்
தலைவர் தமிழாய்வுத்துறை
அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
மன்னன்பந்தல், மயிலாடுதுறை

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 3

 1. சிவாயநம ..!! வணக்கம் .!
  1 – ஒன்று
  3/4 – முக்கால்
  1/2 – அரை
  1/4 – கால்
  1/5 – நாலுமா
  3/16 – மூன்று வீசம்
  3/20 – மூன்றுமா
  1/8 – அரைக்கால்
  1/10 – இருமா
  1/16 – மாகாணி(வீசம்)
  1/20 – ஒருமா
  3/64 – முக்கால்வீசம்
  3/80 – முக்காணி
  1/32 – அரைவீசம்
  1/40 – அரைமா
  1/64 – கால் வீசம்
  1/80 – காணி
  3/320 – அரைக்காணி முந்திரி
  1/160 – அரைக்காணி
  1/320 – முந்திரி
  1/102400 – கீழ்முந்திரி
  1/2150400 – இம்மி
  1/23654400 – மும்மி
  1/165580800 – அணு –> 6,0393476E-9 –> nano = 0.000000001
  1/1490227200 – குணம்
  1/7451136000 – பந்தம்
  1/44706816000 – பாகம்
  1/312947712000 – விந்தம்
  1/5320111104000 – நாகவிந்தம்
  1/74481555456000 – சிந்தை
  1/489631109120000 – கதிர்முனை
  1/9585244364800000 – குரல்வளைப்படி
  1/575114661888000000 – வெள்ளம்
  1/57511466188800000000 – நுண்மணல்
  1/2323824530227200000000 – தேர்த்துகள்.
  இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!
  இந்த அருமையான பதிவை எளியேன் அப்பர் தொண்டர் அணியில் அடியார் தொண்டு செய்யும் “திருமுறைநெறிசெல்வர் ” திரு.நடேச. நித்தியானந்தம் ஐயா அவர்களிடம் பகிர்ந்த போழ்து, அவர் திருக்கழுக்குன்றம் தனிப்பாடல் தொகுப்பில் வரும் ஒரு அருமையான பாடலை எளிமையாக அடியேனுக்கு விளக்கினார். இந்த பாடலில் காணி – 1/80 என்ற அளவையைக் கொண்டு ஒரு சிறு கணிதம் அமைக்கப்பட்டுள்ளது. பாடலைக் காண்போமா?!!.
  காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
  காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியமுக்காற்
  காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
  காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே…!!
  இப்பாடலில் காணி, காணி என 18 முறை வருகிறது. இதனுடன் பாடல் வரிகளில் கடைசியாக கால் (1/4) என்றும், முக்கால்(3/4) மற்றும் நால் (இதை நான்கு கால் என்று கொள்ள வேண்டும்= 1/4+1/4+1/4+1/4=1) என்று கூட்டினால் (1/4)+(3/4)+(1/4+1/4+1/4+1/4)=2(இரண்டு) வருகிறது. ஆக மொத்தம் 18+2=20 இருபது காணி என்று வருகிறது . தமிழ்க் கணக்கில் காணி என்றால் 1/80 (எண்பதில் ஒரு பாகம்) எனப்படும். அதனால் இருபது காணி என்றால் 20*(1/80)=20/80=1/4 கால் என்று வருகிறது. எனவே “சிவபெருமானின் காலை காட்டும் கழுக்குன்றே” என்று மிக அற்புதமாக நமக்கு உணர்த்தியுள்ளார் புலவர்.
  சிவபெருமானின் திருவடியைக் காண (காலைக் காண) வேண்டுமானால் கழுக்குன்றம் வாருங்கள் என்றழைக்கிறார் புலவர். சிவபெருமானின் திருப்பாதத்தை திருப்பெருந்துறையில் பெற்ற மாணிக்கவாசகர் அத்திருவடிகளை இங்கு (திருக்கழுக்குன்றத்தில்) வைத்து காணொணாத் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தார் என்பதை இந்த அழகிய பாடலில் இருந்து உணரலாம்.!! இதனால் தமிழ் புலவர்களுக்கு தமிழ் மொழியில் உள்ள புலமையோடு, கணித புலமையும் பெற்று இருந்தனர் என்பது போற்றூதற்குரியதாக விளங்குகிறது!!!.

  https://www.facebook.com/ApparThondarAni/posts/622699701195758

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *