ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 42
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஆடிய பல்லுக்கு அருகே தோண்டிய குழியில் மருத்துவர் தூய தங்கத்தால் நிரப்பிப் பெருமிதமோடு கூறினார் : “ஆடிய பல் இப்போது உமது மற்ற பற்களை விட உறுதியாக இருக்கும்.” அதை நான் நம்பிக் கொண்டு பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அந்த வார முடிவதற்குள் சபிக்கப்பட்ட அந்தப் பல் எனக்கு மறுபடியும் வலி கொடுக்கத் தொடங்கி என் ஆத்மாவின் இனிய கீதங்களை வேதனை அலறலாக மாற்றியது !
– கிப்ரான் (Decayed Teeth)
___________________
முதல் முத்தம்
___________________
உதடுகள் நான்கு ஒன்று கூடி
உறுதி செய்யும் போது
வைத்திடும்
முத்தத்தின் மொழி
இதயத் துக்கு ஓர்
ஆசனம் அளிப்பது !
நேச மன்னனை அமர்த்துவது !
கிரீடம் சூட்டுவது !
தென்றல் இதழ்களைத்
ரோஜா மலர் தடவுதல் போல்
மென்மை விரல்கள்
மிருதுவாய்த் தொடுதல் அது !
அப்போது
நீண்ட பெரு மூச்சு
விடுவிப்பும்
இனிய முணங்கலும்
எழுந்திடும் !
___________________
அதுவே ஆரம்பத் தருணம்
உள்ளத்தின் மாயத் துடிப்புகள்
கள்ளக் காதலரை
கழித்தல் கூட்டல், கணக்கிலிருந்து
கனவு உலகுக்குத்
தூக்கிச் செல்லும் ! முத்தம்
இரு நறுமண மலர்களின்
ஐக்கியப் பாடு !
மூன்றாம் ஆத்மா ஒன்றைத்
தோன்ற வைப்பதே
நறுமணக்
கூட்டுறவின் நியதி !
___________________
இளங் காதலரின்
முதல் கண்ணோக்கு
தேவதை விதைக்கும் வித்து
மானிட
இதய பூமியில் !
வாழ்க்கை மரக் கிளையின்
முனையில் பூக்கும்
முதல் மலரே
காதலர்
முதல் முத்தம் !
___________________