இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (179)

— சக்திதாசன்.

christmas

அன்பினிய தமிழ் நெஞ்சங்களே!

உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.

“அன்பு” எனும் மூன்றெழுத்துக்கு இருக்கும் சக்தி உலகில் வேறு எதற்கும் இருக்க முடியாது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அந்த அன்பின் ஆழத்தை எமக்கு உணர வைத்தவர்கள் ஆயிரமாயிரம். அன்பின் அடித்தளத்தில் நடத்தும் வாழ்க்கையில் தோல்வி இல்லை என்பதைப் பலவகைகளில் பலவழிகளில் பலர் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

மனிதரை, மனிதர் மனிதராக மதித்து மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயற்படுவதே அன்பின் சாரமாகும். இனம், மதம், மொழி எனும் பாகுபாட்டை மறந்து இப்பூமிப் பந்தின் மீது உருண்டு கொண்டிருக்கும் ஜீவராசிகளில் ஒரு அங்கமாக இருக்கும் நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் எனும் உணர்வே அன்பினை எமக்கு வலியுறுத்தி நிற்கும் உணர்வாகும்.

இவ்வுலகில் நாம் விரும்பியோ விரும்பாமலோ மதம், மொழி என்பன எம்முள் புகுந்து எம்மில் பலரை வழிநடத்துவதே உண்மை.

மனிதருக்கு வாழ்வின் நன்னெறிகளைப் புகட்டி அவர்களை நல்வழி நடக்கப் பண்ணுவதே இம்மதங்களின் நோக்கமாகவிருந்தது. இம்மதங்களின் மீது மக்களுக்குண்டான மதிப்பினை உபயோகித்து தமது நலன்களைப் பெருக்கிக் கொள்ளும் முறையற்றோரின் செய்கைகளுக்கு இம்மதங்களோ அவற்றின் வழி நடக்கும் நன்மக்களோ பொறுப்பாக மாட்டார்.

இம்மதங்களின் ஆதிக்கத்தைத் தவிர்த்து வாழ்வது இக்கட்டான ஒரு செயல் எனும்போது அனைத்து மதமும் இயைந்து செல்வது எப்படி சாத்தியம் ? எனும் கேள்வி எழுவது இயற்கையே !

அதற்காகத்தான் அனைவரும் தம்மதத்தினைப் போலவே அடுத்தவரும் தமது மதங்களை மதிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவற்றிற்குரிய கெளரவங்களைக் கொடுத்து வாழ்வதே அமைதியான வாழ்விற்கு வழிவகுக்கும்.

எதற்காக இந்த விளக்கங்கள்? வியாக்கியானங்கள்? என்கிறீர்களா!

வேறொன்றுமில்லை. இது கிறிஸ்துமஸ் வாரமில்லையா? கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இங்கிலாந்து நாட்டில் நாற்பது வருடங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எனது வாழ்விலும் கிறிஸ்துமஸ் கொடுக்கும் தாக்கங்கள் உண்டு.

நான் இந்த நாட்டிற்கு வந்த ஆரம்பக் காலங்களில் மாணவனாக பகுதிநேரப் பணிகள் ஆற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு இந்துவான எனக்கு இக்கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை ஆவலோடு எதிர்பார்ப்பதற்கு வேறொரு காரணம் உண்டு. அதாவது இக்கிறிஸ்துமஸ் தினமும் அதற்கு அடுத்த நாளான பாக்ஸிங் டே என அழைக்கப்படும் நாளும் விடுமுறை தினங்களாகும். பகுதிநேரப் பணிபுரியும் எமக்கு இத்தினங்களில் பணிபுரிந்தால் இரட்டிப்பு ஊதியம் கிடைக்கும்.

எதிர்பார்ப்பு? என்ன !

ஆனால் இக்கிறிஸ்துமஸ் தேவகுமாரன் இயேசுநாதரின் பிறப்பினைக் கொண்டாடும் நாள் என்பதே இப்பண்டிகையின் முக்கியத்துவமாகிறது. அன்பின் மறு உருவம் இயேசுநாதர். உலக மக்களின் இரட்சிப்புக்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து உலக நன்மைக்கு முன்னால் தம்முடைய வாழ்வு பெரிதல்ல எனும் செயலினைப் புரிந்து தியாகத் தீபமானார்.

இக்கிறிஸ்துமஸ் பண்டிகையை இங்கிலாந்தில் வாழும் பல புலம்பெயர்ந்த இந்துக்களும், குறிப்பாகத் தமிழர்களும் கோலாகலமாகக் கொண்டாடுவது மதங்களுக்கிடையில் உள்ள புரிந்துணர்வை வலியுறுத்தி நிற்கிறது.

இவ்வன்பின் அடையாளமாகவே ஒருவருக்கொருவர் பரிசுகளைக் கொடுத்து மகிழும் ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரமொன்றை வைத்து அதனை அழகு படுத்தி அலங்கரிக்கிறார்கள். அவரவருக்குத் தரப்படும் பரிசுகளை இம்மரத்தின் கீழ் அடுக்கி வைத்து கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் திகதியே இப்பரிசினைத் திறந்து பார்க்கிறார்கள். இப்பரிசுகள் அன்பின் அடையாளமாகத்தான் கொடுக்கப்படுவது. ஆனால், இப்போது மிக விலையுயர்ந்த பரிசுப்பொருட்களில் அனைவரின் நாட்டமும் செல்வது போல் தென்படுகிறது. இது ஒரு காலக்கட்டாய நிகழ்வாகக் கூட இருக்கலாம்.

தெருவெல்லாம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்னால் நானும் எனது மனைவியும் டவுன் செண்ட்டருக்குச் சென்றிருந்தோம். அப்பப்பா ! திருவிழா போன்றிருந்தது. தெருவில் செல்லும் அனைவரின் கைகளிலும் பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைகளில் கல்லாப்பெட்டிகள் கொழுத்துச் சிரித்துக் கொண்டிருந்தன.

அது மட்டுமின்றி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆஃபிஸ்களில் பணிபுரிவோர் தத்தமது சகஊழியர்களுடன் விருந்துபசார விடுதிகளில் விருந்து, நடனங்கள் என்று பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், புலம்பெயர் சமூகத்தினரால் நடாத்தப்படும் அவர்கள் கல்லூரி பழைய மாணவர் சங்கங்களினால் நடத்தப்படும் டின்னர் & டான்ஸ் எனும் நிகழ்வுகள் ஒருபுறம்.

அதுதவிர இப்பண்டிகையின் போது உறவினர்கள் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் விருந்துக்குச் செல்வதும் வழக்கமாகி விட்டது. கடந்த சனிக்கிழமையே கிறிஸ்துமஸ் நாளுக்கு முன்னதாக வரும் கடைசிச் சனிக்கிழமை அன்றுதான் இவ்வருடத்திலேயே கடைகளில் நடந்த வியாபார வசூலில் அதிகூடிய வசூலை ஈட்டிய நாள் என்று கணிக்கப்படுகிறது,

வழமையாகக் காலையிலும், மாலையிலும் பள்ளிச் சிறார்களினால் நிறைந்து காணப்படும் தெருக்கள் பாடசாலை விடுமுறையினால் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இயேசு கிறிஸ்துவினால் அன்பிற்குக் கொடுக்கப்பட்ட மகத்துவம் இப்பண்டிகையின் போது முக்கியத்துவம் பெறுகிறதா? இல்லை வெறும் கேளிக்கைகளுக்காகவே இந்நாள் முக்கியத்துவம் பெறுகிறதா? எனும் கேள்வி எழாமல் இல்லை.

அன்பு வாசக நெஞ்சங்கள் அனைத்திற்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

அன்பெனும் மூன்றெழுத்துடன்
இயேசு எனும் மூன்றெழுத்து
இணைந்து ஒளிர்ந்திடும்
இன்பத் திருநாள் கிறிஸ்துமஸ்

இல்லாதோர் இல்லங்களிலும்
இல்லையெனால் நிறைந்திருப்பது
இகத்தினில் அன்பு ஒன்றேதான்

அடுத்தவர் நலத்திற்காய் தலையில்
முட்கிரீடம் சுமந்தவர் இயேசுபிரான்
இறவாக் காவியம் எனக் கவியரசர்
இயேசு காவியம் வடித்துத் தந்தார்

மானிடர் பாவத்தைச் சுமக்கவே மேரியின்
மைந்தர் சுமந்தார் சிலுவையைத் தோளில்
மனித உலகின் சுயநலம் தன்னை
மரித்திடவே மடிந்தான் தேவகுமாரன்

கிறிஸ்து காட்டிய கருணை வழியில்
சுரந்திடும் அன்பெனும் இன்ப நதியில்
இனிய அன்பர்கள் அனைவரும் மகிழ்வாக
வாழ்ந்திட இனிய நத்தார் வாழ்த்துக்கள்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *