தேசிய இளைஞர் தினம்!
பவள சங்கரி
சுவாமி விவேகானந்தர் பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள்
தமிழ்நாடு தேசிய சிந்தனைக் கழகமும் ரோட்டரேக்ட் சங்கமும் இணைந்து ஈரோடு வேளாளர் கல்லூரியில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 13.01.2016 அன்று “சுவாமி விவேகானந்தர் பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தேசிய சிந்தனைக் கழகத்தின் சென்னை மாநிலக் குழு உறுப்பினரான திருமிகு இசைக்கவி இரமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆகச் சிறந்த ஆக்கப்பூர்வமான சிந்தைகளை விதைத்துவிட்டுச் சென்றுள்ளார். மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பும், கேள்வி நேரப்பகுதியுமே இதற்கு சான்றாக அமைந்திருந்தது. வேளாளர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். ஜெயராமன் அவர்களின் சுருக்கமான இனிய உரை மற்றும் சிறப்பு விருந்தினர் குறித்த அழகான அறிமுக உரையுடன் இனிதே ஆரம்பித்த நிகழ்ச்சி, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர், திரு. மா.கோ.சி. ராஜேந்திரன் அவர்களின் எழுச்சிமிகு உரையைத் தொடர்ந்த அம்மேடை முழுமையாக திரு இரமணன் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. வழமையான அவர்தம் தேனிசைக் கானத்திற்கும் குறைவில்லாமல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. அரங்கம் ஆழ்ந்த அமைதியில் நற்சிந்தைகள் நிரம்பிய நல்லலைகளுடன் பரவியிருந்தது.
சுவைபடத் தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களை வெகு எளிதாக தம் பக்கம் இழுத்துக்கொண்டார், சிறப்பு விருந்தினரான திரு. இசைக்கவி இரமணன் அவர்கள். பல்வேறு அறிஞர்களின் மேற்கோள்களை வெகு சரளமாக எடுத்துக்காட்டி அவைகளை விவேகானந்தச் சிந்தைகளுடன் ஒப்பிட்டு மிக அழகான சொற்பொழிவாக அமைத்திருந்தார்.
தலைப்பிற்கேற்றவாறு மாணவர்களின் இன்றைய நவீன வாழ்க்கை முறைமைகளையும், பின்னோக்கிய காலங்களினூடே இன்றைய மாணவர்கள் இழந்த பல்வேறு சுவையான விசயங்களையும் வெகு நேர்த்தியாகச் சுட்டிக்காட்டி மாற்றங்கள் தேவை என்பதை மாணவர்கள் ஏற்கும் வகையில் வெகு இயல்பாக விளக்கிய விதம் அருமை! அன்றைய வாழ்க்கை முறையில் அன்றாட வாழ்வியல் நடைமுறைக்கான பணிகள் வெறும் வேலையாக மட்டும் இல்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து இனிமையாக பொழுது போக்குவதோடு, உடற்பயிற்சிக்கான வழிகளாகவும் இருந்ததையும், தாம் ஒரு கவிஞனாக இருப்பதில் தம் மனைவி முதல் ஏனையோருக்கும் எத்துனை துன்பம் என்பதை நகைச்சுவையுடன் இதமாகக் கூறி மாணவர்களை சிரிப்புக் கடலில் மிதந்தவாறு சிந்திக்கவும் வைத்தார். இன்றைய குழந்தைகளுக்கு நவீனத்துவம் என்ற பெயரில் இயற்கையான உடற்பயிற்சி முதல் இன்னும் எத்தனை எத்தனை இழப்புகள் என்பதை சற்று வருத்தமாகவே பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியை அழகாக தமிழிலும், ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கியும் உற்சாகப்படுத்தினார்.
முதுகலை பட்டதாரி மாணவர்களின் கருத்தாழம் மிக்க வினாக்களுக்கும், பொறுமையாக அவர்கள் எளிதாக உணரும் வகையில் சிறப்பாக பதலளித்தது பாராட்டுதலுக்குரியது. பேராசிரியர்கள் சிலரும் கேள்வி நேரத்தில் பங்குபெற்று மாணவர்களையும் உற்சாகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாணவர்களின் ஆழ்ந்த ஈடுபாடும், பொறுப்பான போக்கும் கல்லூரியின் உயர் தரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது, ‘சரியான இலக்கு நிர்ணயம் செய்வது மட்டுமே வெற்றிப் பாதைக்கு வழியமைக்கும்’ என்ற சிந்தையை வெகு இலகுவாக, தெளிவாக, அருமையான எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களின் மனதில் பதியச்செய்ததுதான்.
இசைக்கவி இரமணன் அவர்கள் ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆற்றிய உரை மாணவர்களின் மனதில் சுவாமி விவேகானந்தரின் பாதையில் பூக்கும் மலர்களின் வித்தாக ஊன்றியதோடு, நாளை ஆல விருட்சமாக வளர்ந்து விழுது பரப்பி மேலும் அவர்தம் சந்ததியினரையும் வழிநடத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மிகச்சிறப்பான இந்த விழாவில் … அதென்னமோ … அந்த ரெட்டைக்காலுடுப்பும் (pants), காலுறையும் (socks) காலணிகளும் (shoes) … குத்துவிளக்குச் சூழலுக்குப் பாந்தமா(க) இல்லே.
வியப்புடன்,
ராஜம்
http://www.letsgrammar.org
http://mytamil-rasikai.blogspot.com
http://viruntu.blogspot.com