”பஜ கோவிந்தம்’’ படிக்க….கேட்க ரங்கனாதன்(கிரிடிரேடிங்) குரலில் இணைப்பு….

 

11

பஜ கோவிந்தம்….
—————————–

சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்
காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த
நாமத்தில் மூட நினைவே நிலைத்திரு
ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்….(1)

வெல்வாய்ஓ மூடா செல்வம்சேர் வேட்கையை
கொள்வாய் அதன்மாற்றாம் கொள்கையாய் -வல்லான்
விதித்த தொழில்செய்து வந்த பொருளை
மதித்து மனதுள் மகிழ்….(2)

வேறு
——-

சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
சொல்கோவிந்தம் புல்மனமே
வல்லான் காலன் வருகின்ற நேரம்
தொல்காப்பியமா துணையாகும்….?….(3)

வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும்
வேட்கை அதற்கு மாறாக
ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர்
காசுபணம் கொள் சீராக….(4)

காமினி கொண்ட கவர்ச்சிகள் மாயை
மாமிசம் ரத்தம் இளக்காரம்
நாமினி வாழ்வோம் நல்லோர் சேர்க்கையில்
தூமணி மாட விளக்காக….(5)

தாமரை இலைமேல் தத்தளிக்கும் நீராய்
நாமுறை வாழ்க்கை நித்யமல்ல பாராய்
பாமரப் பற்றும் பிறவிப் பிணியும்
சாமரம் வீசும் சண்ட மாருதம்….(6)

கூட்டினுள் மூச்சு குடியுள்ள வரையில்
வீட்டினர் கேட்டு விசாரிப்பர்
மாட்டிய மேனி மண்விழத் தாலி
பூட்டிய மனையாள் பயமுறுவள்….(7)

பிள்ளையில் ஆட்டம் பருவத்தில் நாட்டம்
கொள்ளை அழகு கன்னியர் கூட்டம்
வெள்ளையில் சொள்ளையில் வாட்டமாய் மூட்டம்
உள்ளிறை தொட்டதில்
எவர்கிங்கு தேட்டம்….(8)

சோதரா சிந்திப்பாய் சீதனமாய் வந்த
மாதரசி மகன் யாரென்று
பூதலம் விசித்ரம் யாதுந்தன் சரித்ரம்
ஆதலால் ஆய்ந்து அதைத்தீர் நீயின்று….(9)

கற்றோர் சேர்க்கை பற்றினைப் போக்கும்
பற்றது போக பரம வைராக்யம்
உற்றிடும் அறிவால் மற்றவை பூஜ்யம்
பெற்றிடுவாய் நீ மோட்ச சாம்ராஜ்யம்….(10)

தேய்ந்தபின் தேகம் காமுறலாமோ
காய்ந்திடும் குட்டைக்கு காகம் வருமோ
பாய்ந்திடும் சுற்றம் பணமுள்ள வரையில்
ஆய்ந்திடத் தத்துவம் சேர்க்கும்அக் கரையில்….(11)

ஆள்படை செல்வம் இளமையின் கர்வம்
தூள்படும் இமைக்கும் காலத்தில் சர்வம்
நாள்பட அனைத்தும் மாயைஎன்(று) உணர்ந்து
தாள்கிட தெய்வத தத்துவம் நினைந்து….(12)

திடமாய் பொருள்சேர் உடலுள்ள வரையில்
கடல்போல் கூட்டம் அலைமோதும்
முடமாய் மூப்பில் ஜடமானவர்க்கோ
அடடா கூறிட ஆளேது….(13)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *