கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே,
தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,
சீராக ஆடிடும் சேய் ….
வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
போடுநீ ஆமாம்சா மி …
குருவாயூர் பிள்ளை திருநாமம் சொல்லி
வெறும்வாயை மெல்லு விடாது -வரும்நாளில்
பக்திஅவல் உண்டு பதிலுக்(கு) அளித்திடுவான்
முக்தியாம் செல்வம் மகிழ்ந்து ….
காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு ….கிரேசி மோகன்….

