நினைவு நல்லது வேண்டும் – நம்பிக்கைத் தொடர்

0

முனைவர் நா. சங்கரராமன்

1. கொண்டாடி மகிழ்வோம் குழந்தைகளை ….

Man on top of mountain. Conceptual design.

“நீங்க தமிழ் வாத்தியார்தானே ?. பரமார்த்த குருனா யாரு ?அவரப் பத்தி கதை சொல்லுங்க … நாளைக்கு எங்க மிஸ் கதை சொல்லணும்னு சொல்லிருக்காங்க ” என்றபடியே வீட்டிற்கு வந்த மழலையை அமரவைத்துவிட்டு அவருக்கு இப்படி ஒரு கதையை படிக்கச் சொல்லி அனுப்பிய ஆசிரியையை மனதார வாழ்த்திவிட்டு ஒரு கதையைச் சொல்லிவிட்டு பெருமிதமாக அனுப்பினேன் குழந்தையை…

நினைவுகள் சற்று பின்னோக்கி ஓடியது. “முட்டாள் , மூடன் , பிலேச்சன் …” என்று ஆரம்பித்து பரமார்த்த குரு கதையை எங்கள் தாத்தாவிடம் படுத்துக்கொண்டே கேட்போம். ஒரே கதைதான் ஒவ்வொரு நாளும் விதவிதமாகச் சொல்வார். நாங்களே “நேத்து சொன்ன கதையையே சொல்லுங்க” என்றே விரும்பிக்கேட்ட கதைகள் அவை . தெனாலிராமன் , அம்புலிமாமா , மரியாதை ராமன் , விக்கிரமாதித்தன் என்று நீண்டு கொண்டே போகும். ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி அவர் சொல்லும் கதைகள் எங்களை வேறொரு உலகத்திற்கே அழைத்துச் செல்லும். மறுநாள் வகுப்பறை நண்பர்களிடம் அந்த கதையை சொல்லி கதாநாயகனாகத் திரிவோம். நன்னெறிக் கதைகள் அனைத்தும் நம்மை நல்வழிப் படுத்திய காலம் உண்டு .

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் “என்று சத்துணவை வாங்கிவிட்டு பக்தியும் பசியும் கலந்த குரலில் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் குருவிக்கும் மைனாவிற்கும் கொடுத்து சாப்பிட்ட காலம் எல்லாமே ஞாபகம் வந்தது.

தாத்தாக்களையும் பாட்டிகளையும் முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு சிடி வாங்கி ரைம்ஸ் கேட்கும் குழந்தைகள் நன்னெறிகளை எப்படிக் கற்றுக் கொள்ளும்?. பள்ளிக்கு சென்றால் கதைகள் பேச நேரமில்லை.பேசினால் அபராதம் .கடிவாளம் கட்டப்பட்ட குதிரை போன்ற மதிப்பெண் பயணம் …

காலையிலேயே குழந்தைகளை விட பரபரப்பாக இயங்கும் அப்பா அம்மாக்களை பார்க்கையிலே சற்றே பரிதாபமே மேலிடுகிறது. எந்தஅபாகஸூம் நன்னெறிகளைச் சொல்லித் தருவதில்லை.உங்கள் குழந்தைகளோL நேரத்தைசெலவிடுங்கள்.நேற்றைய குழந்தைகளான இன்றைய பெரியவர்களிடம் சற்று பேச விடுங்கள் “ஹோம் வொர்க் செய்யணும் .டியூசன் போகணும் ” என்று உங்களின் இயந்திர தனத்தை அவர்களின் மீது திணிக்காதீர்கள்

எனக்கு ஒவ்வொரு விடுமுறையும் இப்படித்தான் ஆரம்பிக்கும் … இந்த கடிதம் முதலே தொடங்கும் கொண்டாட்ட தருணங்கள் ..

” அன்புள்ள பாவாவுக்கு ஆத்ம நமஸ்காரம் …

எனது ஆசீர்வாதங்களை தங்கைக்கு கூறவும் . நிற்க .

இப்பவும் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நான் வரும் சனிக்கிழமை வந்து குழந்தைகளையும் வெங்கியையும் ஊருக்கு கூட்டிச் செல்கிறேன். மாப்பிள்ளையிடமும் தகவலை தெரிவிக்கவும்.அவருக்கும் எனது ஆசீர்வாதங்கள் . இயன்றால் தாங்களும் தங்கையும் ஊருக்கு வருமாறு வேண்டுகிறேன் ……”

என்றபடியே அந்த கடிதம் தொடரும் . விடுமுறை விட்ட நாளிலிருந்து இந்த கடிதத்தை நாங்கள் எதிர்பார்த்து காத்து கிடப்போம் . அம்மாவின் அப்பாவான தாத்தா அப்பாவின் அப்பாவான தாத்தாவுக்கு எழுதும் கடிதம் . ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் இறுதி வாரத்தில் வரும் இந்த கடிதமே எங்களுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாமும் . அன்றிலிருந்து அம்மாவின் முகத்தில் கூடுதல் பிரகாசம் காணலாம். சிறிய வயதிலேயே அம்மாவை இழந்த 3 பெரியப்பாக்கள் , பெரியம்மா , அண்ணன் , தங்கைகளுடன் குறைந்த பட்சம் 30 நபர்களாவது இருக்கும் அந்த வீட்டிலிருந்து வந்தவள் . இங்கேயும் கூட்டத்திற்கும் பாசத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது . இரண்டு அத்தைகள் ,3 சித்தப்பாக்கள் குழந்தைகள் என வீடே அமர்க்களமாக இருக்கும் கோடை விடுமுறையில் …

அருப்புக்கோட்டை அருகில் இருக்கும் குருந்தமடம் தான் எங்கள் அம்மாவின் ஊர். தினமும் 6 முறை மட்டுமே பஸ் வரும் என்ற வகையில் அமைந்த ஒரு கிராமம். அங்கு தாத்தாவின் வீடு . முன் வாசலில் இருந்து பின் வாசலுக்கு நடை பயிற்சியே மேற்கொள்ளலாம் . அத்தனை பெரிய வீடு . எனக்கு விபரம் தெரிந்த நாட்களிலே அந்த வீட்டினில் மின்விசிறி , டிவி ஏதும் கிடையாது . ஆனால் பொழுது எப்படி போகுமென்றே தெரியாது .

கடிதம் எழுதியபடியே தாத்தா வருவார் நெல்லைக்கு . மஞ்சள் பையிலே சாத்தூர் சேவு வாங்கிக்கொண்டு மல்லிகைப்பூ , கனகாம்பரம் என்று பார்சலோடு . அவர் வருவதற்குள்ளாகவே அம்மா ஒரு டிரங்கு பெட்டியில் என் அண்ணன் , தம்பி , தங்கை என்ற 5 பேருடைய துணிகளை எடுத்து வைத்திருப்பாள் .

” தாத்தா நாம எப்போ ஊருக்கு கிளம்புவோம் ” என்ற கேள்வியை அவர் வந்தவுடன் ஆர்வ மிகுதியால் கேட்டு பல நேரங்களில் அம்மாவிடம் திட்டு வாங்கிய அனுபவமும் எனக்கு உண்டு … தாத்தா வந்து இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் இருப்பார் . அப்பா தாத்தா மிகச்சிறந்தவர் என்றாலும் எப்போதாவது வரும் அம்மா தாத்தா மீது தனிப்பிரியம் தானே . அவரை மாலை நேரங்களில் கோயிலுக்கு அழைத்துச் செல்வது . எங்கள் நோட்டு புத்தகங்கள் காண்பிப்பது .அவர் எங்களுக்காக வாங்கி வந்த பொம்மைகளை பக்கத்து வீடுகளில் காட்டி பெருமிதம் கொள்வது என்ற அலப்பரை கொஞ்சம் நஞ்சமல்ல…

மறுநாள் காலையில் தாத்தாவோடு பேருந்திலே கிளம்பியதுமே சன்னலோர சீட்டு ஒரு உலகப்போர் நடக்கும் எங்களுக்குள்ளே . அதன் பின்னர் சாமாதனம் செய்து மூன்று பேருக்குமே அந்த சன்னலோரத்தில் அமரும் படி ஏற்பாடு செய்து வண்டி நகரும் . அருப்புக்கோட்டையில் வந்து இறங்கும்போது மதியமாகும்

பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் ஆஞ்சநேய விலாசில் பார்சல் வாங்கி விட்டு வீட்டில் பெரிய தாத்தா , மாமா , குழந்தைகள் பார்க்கும் ஆர்வத்தில் பேருந்து அந்த ஊரின் கம்மாய் தாண்டி பத்ரகாளியம்மன் கோவிலைத் தொட்டு குருநாதர் கோவிலில் திரும்பும்போதே அங்கிருந்து பார்த்தால் எங்களை ஆர்வத்தோடு வரவேற்கும் அத்தை பையன்கள் பார்க்கையில் மனதும் ரெக்கை கட்டிப் பறக்கும் . அம்மாவை தாத்தாவை விட்டு ஓடிப்போய் அவர்களோடு கைகோர்த்து விளையாட ஆரம்பித்து …

கல்லா மண்ணா , கண்ணாமூச்சி , தாயம் , ஓடிப்பிடிச்சி ,செவன்ஸ்டோன் ,பம்பரம் ,கோலிக்காய் என்ற வகையில் எல்லையில்லா விளையாட்டுகளோடு இருட்டிய பிறகு வேண்டிய திரைபோல கட்டி சினிமா போல நாங்களே பொம்மலாட்டம் நடத்துகையில் சாதம் பிசைந்து குழந்தைகள் அனைவரையும் பெரியவர்களோடு அமர வைத்து கையிலே உருளை உருளையாக தந்து அது ஒரு சொர்க்கம் என்பதெல்லாம் அப்படித்தானே இருந்திருக்க முடியும் …

அதற்குள் அந்த ஊர்த்திருவிழா மேமாத இறுதியில் நடக்கும் . நாங்கள் ஊருக்கு கிளம்பும் ஒருவாரம் முன்னர் …அரிச்சந்திர மயான காண்டம் , முத்தாரம்மன் , வள்ளி திருமணம் இவற்றில் ஏதாவது ஒன்றும் அடுத்தடுத்த நாட்களில் ஆடலும் பாடலும் , வில்லுப்பாட்டு , திரைகட்டி திரைப்படங்கள் போடுவது என்ற படி ஒவ்வொரு நாளும் களைகட்டும் . பொங்கல் அன்று அப்பாவும் வந்து சேருவார் . அதுபோக இன்னமும் உறவுகள் எல்லாம் அங்கே சேரும்போது குறைந்த பட்சம் அந்த வீட்டில் 60 நபர்களாவது இருப்பார்கள் . அங்கு கேஸ் கிடையாது . விறகு கரி அடுப்புதான் . மிக்ஸி , கிரைண்டர் எதுவும் கிடையாது ஆனாலும் வேளாவேளக்கு சுவையான உணவு கிடைக்கும் . காரணம் அத்தைகள் , சித்திகள் , சித்தப்பாக்கள் , மாமாக்கள் அனைவரும் கூடி உழைத்தனர். ஒவ்வொரு முகத்திலும் கபடமற்ற புன்னகை தவழும் . ஒருவருக்கொருவர் பரிந்து பேசி ஆனந்த கண்ணீர் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் …

பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரி வேலை என்று வந்தபின் தாத்தா பாட்டிகள் அனைவரும் காலம் சென்ற பின் கூடுதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நவீனத்திற்கு ஆட்பட்டு வெறும் புகைப்படங்கள் எடுப்பதே கொண்டாட்டமாக மாறிவிட்ட இன்றைய சூழலில் ஏதோ இழந்துவிட்டதான ஏக்கம் மட்டும் மனதிலே ….

விழாவெல்லாம் முடிந்த பின் ஊருக்கு கிளம்பும் நாளிலே கண்ணீர் மெதுவாக எட்டிப்பார்க்கும். கருவேல மரங்களைத்தாண்டி பேருந்துகள் கடக்கும் போது கனவுகளை அங்கேயே விட்டுவிட்டு வருவோம் அடுத்த விடுமுறைக்காக …

அப்போது அப்படி இருந்ததாலே இப்போதும் மகிழ்வோடும் நம்பிக்கையோடும் இயங்க முடிகிறது . பள்ளிப்பருவம் விடுமுறைகளிலேதான் நம் குழந்தைகள் கொண்டாடி மகிழ இயலும் .உறவுகளின் உன்னதங்களை உணர முடியும் . இப்போதும் அவர்களை இயங்கவிடாமலும் சிறப்பு வகுப்புகள் எனும் பெயரில் அவர்களுடைய சுதந்திரத்திற்கும் மகிழ்வான தருணங்களுக்கும் நாம் இடையூறாகி விடக்கூடாது.

தாத்தாவின் மடியில் படுத்துக்கொண்டு கேட்ட பரமார்த்த குரு கதைகளின் சுகத்தினை எத்தனை பணத்தாலும் பெற்றிட முடியாது என்பதை உணர வேண்டும் ….

கொண்டாடுவோம் கோடையை
குழந்தைகளோடு

உங்கள் குழந்தைகளோடு செலவிட நேரம் ஒதுக்குங்கள் அதைவிட முக்கியம் ஒதுக்கிய நேரத்தில் அன்போடு நடந்து கொள்ளுங்கள் அம்புலி மாமாவை அழ வைத்துவிடாதீர்கள்..

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *