’’கபிலாவதாரம்’’….

 

கிரேசி மோகன்

மிகவும் தெரியாத (எனக்கு) மகாவிஷ்ணுவின் அவதாரம் ‘’கபிலாவதாரம்’’…. பார்த்தனுக்கு முன்பே பகவான்(கபிலர்) தன் தாய்(தேவஹூதி)க்கு கீதைக்கு இணையாக உபதேசம் செய்து, அவளுக்கு சித்தாஸ்ரம மோக்‌ஷம் வாங்கித் தந்தார்….ஸ்ரீ நாராயண பட்டத்திரியின் ‘’ஸ்ரீமத் நாராயணீயம்’’ படிக்கையில் அறிந்து கொண்டேன்….’’தனயன் தாய்க்கு ஆற்றும் கடமையை’’ வெண்பாவாக….

கபிலாவதாரம்
——————–
தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
ஊன்றினார் பக்தி உலகு….

கபில உவாச….
———————–
இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
நாரா யணனில் நிலைப்பு….

மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
நெஞ்சார உன்னுள் நிறுத்து….

காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….

பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
இத்தனை கஷ்டமேன் இங்கு….

நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….

பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
முத்தியூர் சேர்க்கும் முடிவு….

தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
தீர்த்தம்சித் தாசிரமத் தில்….கிரேசி மோகன்….
——————————————————————————————————————-

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *