எழுவகைப் பெண்கள்: “பெண்ணின் உடல்” எனும் சித்தாந்தம்
அவ்வைமகள்
பெண் எனும் மனித உயிரி அலாதியானவள். மனிதப் பெண், பிற பெண் உயிரிகளிலிருந்து பெரிதும் வேறுபடுபவள் – அதிசயமானவள் – அற்புதமானவள். அவளைப்புதிரென்பர் – வியப்பென்பர் – தீர்வுகாணாக் கணக்கெனக் கொண்டு தீரா முயற்சியுடன் அவளை அறிந்தறிய விழைவர். பாடிப்புகழ்வர் – பரவசப்படுவர் – சாடி இகழ்ந்தும் சளையாமல் நினைந்தலைவர். பாட்டியாய், தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் என நிதம் அவளுடன் கூட வாழ்ந்தாலும்கூட அவளை அறியாதும் புரியாதுமே நாள் கழியும் உண்மையே நம் நிலையெனில் இந்தப் பெண் எனும் ஜீவி எத்தனை நுணுக்கமானவள் என்பதை நாம் சற்றேனும் உணர முடிகிறது அல்லவா?
இவ்வாறாக, எவர் நினைவுக்கும் சிந்தனைக்கும் என்றுமே புதுப் புது பொருள் தரும் – சவால் விடும் ஜீவியாக விளங்கும் பெண்ணே, “நீ யார்?” என நம் உள்ளம் கேளாமல் கேட்கும். இக்கேள்வி ஆணுக்குள் மட்டுமல்ல பெண்ணுக்குள்ளும் எழுகிறது என்பது தான் புதிரினும் புதிர்.
பெண் பற்றிய எந்த ஒன்று நம்மை அவள் பால் ஈடுபட வைக்கின்றது? பெண் பற்றிய எந்த ஒன்று அவள்பால் அவளையே லயிக்க வைக்கிறது? பெண் பற்றிய எந்த ஒன்று கவிகளையும் ஓவியர்களையும், இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்திப் பிரவாகங்களாய் உருமாற்றம் செய்கிறது? என வியந்தவாறு வியந்தவாறு மனிதகுலம் பயணித்துக்கொண்டிருக்கிறது.
உடல், உள்ளம், ஆன்மா என முத்தளப் பேழையில் உயிரிகள் வாழும் என்பர். இம்மூன்றில் எது உயர்ந்தது என்பது ஒரு பிரம்மாண்ட வினா. இந்த வினாவையும் அதற்கான விடையையம் தமிழிலக்கியம் விரிந்தும் சுருக்கியும் காட்டும் பாங்கு பிரமிக்கத்தக்கது. ஆன்மாவும், உள்ளமும் உடல் எனும் உறையுளின் வாசிகள் எனக்கொண்டு உடலே மூன்றில் முதன்மை என்பதனைப் பகராத சமயங்கள் இல்லை. தமிழ்த் திருப்புலவர் திருமூலர், “உடம்பாரழியின், உயிராலழிவர், திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்!’ என வெகு திறத்துடன் எளிமையாய் மொழிந்திருக்கிறார். திருமூலர் வாக்கில், உடலின் மேன்மையை உணர்ந்தவாறு நாம் நிமிர்கையில், ஒன்று நமக்குத்தெரிகிறது: அது என்னவென்றால் உடலின் மகத்துவம் எத்தகையது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம் என்பதே. . சொல்லப்போனால், உடல் பற்றிய சிந்தனை நம்மை எப்போதுமே வியாபித்திருக்கிறது; அதுமட்டுமல்ல, முன்னேப்போதுமில்லாத வீரியத்தோடு இன்று உடல் பற்றிய வியாக்கியானங்களில், நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவதும் நமக்குப் புரிகிறது.
உடல் வனப்பு, உடல், வசீகரம், உடல் நலம், என்கிற விடயங்களினோடு உடல் மொழி (body language) என்கிற ஒரு ஆளுமைக் கூற்றையும் கையாளுங்கின்ற கால கட்டத்தில் வாழும் நாம் நம்மை நல்ல உடல் ஞானிகளே என சொல்லிக்கொள்ளவும் முனையலாம். ஏனெனில், மெய் ஞானம் என்பது, மெய் எனப்படும் உடலினை முற்றும் முழுவதும் அறிந்து கொள்ளும் உண்மை ஞானமாக இருக்கும்படியாக அறிவார்ந்த விவா எழும்பியுள்ள கால நிலையில் நாம் இருக்கிறோம். இந்த விவா இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. இன்று, உடலின் அவஸ்தையும், உடலின் எழிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு புதுக் கவனத்தை, எழுச்சியை அடைந்திருக்கிற வேடிக்கை நிலவுகின்றது. காட்சி, கவர்ச்சி, பாலியல் சுதந்திரம், உடலுறவு மற்றும் வயோதிகம் பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதுவித நோய்கள் எனப் புதியதொரு கால மாறுபாட்டில் நாம் நுழைந்திருக்கிற நெருக்கடியும் கூட நமக்குப் புலப்படுகிறது.
அதே நேரத்த்தில், யோகமும்,கலைகளும், இறையியலும் ஒன்றை ஒன்று சார்பவையாய், நுண்ணிய உடற்கூற்றுத் தத்துவங்களையும் மருத்துவ சித்தாத்தங்களையும் உள்ளடக்கியவையாக மிளிரும் பாங்கையும் நாம் காண்கிறோம். இக்காட்சி, எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும், நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. மெய் எனும் இவ்வுடல் உண்மையிலேயே எத்தகையது, இது எக்குணம் கொண்டது, இதனைச் செவ்வனே காப்பது எங்ஙனம் என சீரிய சிந்தனயில் நாம் நம்மைத் தொலைத்தவாறு இருக்கிறோம்! இச்சிந்தனையில் இன்று பெண்ணின் உடலின்பால் நமக்கிருக்கும் கவர்ச்சியும் கிளர்ச்சியும் சொற்பதம் கடந்தவை.
மறைக்கப்படுவதாலும், குறைக்கப்படுவதாலும், இட்டுரைக்கப்படுவதாலும், உண்மைகளின் சாரம் நீர்த்துப்போவது இயல்பே. பெண்களின் உடல் பற்றிய ஞானம் இவ்வாறே அரைகுறையாய் நின்றுவிட்டது. இந்த அரைகுறைத்தன்மை பெண்கள் தம்மைத்தாமே அறிந்துகொண்டுள்ள நிலையிலும் கூடத்தான் என்பதனை மீண்டும் சுட்டிக்காட்டவேண்டும்.
இந்நிலையில், பெண் என்பவள் புனிதமானவள் – தனித்துவத் தன்மை உடையவள் என்கிற போதனையின் முழுச்சாரம் நம்மைச் சாராத நிலை நம்முள் இருப்பது வியப்பல்ல.
மனித குலத்தின் வித்தாய், வேராய், விழுதாய் விளங்குபவர் பெண்களே. ஆனால் அவர்களது உடல் இன்று ஒரு காட்சிப்பொருளாய் – கவர்ச்சிப் பொருளாய் – கேலிப் பொருளாய் – வர்த்தகப்பொருளாய் மாறிவிட்ட ஒரு நிலையில், மனித குலத்தில் முக்கியமானவர்களான பெண்களது உடல் போகப்பொருளல்ல, அது ஒரு பொக்கிஷக் கருவூலம், புரிந்து அணுகவேண்டிய நுண்ணியக் களஞ்சியம், தொழுதேத்த வேண்டிய அற்புதப் பெட்டகம் எனும் அறிவார்ந்த நிலை நம்மைச் சேருமெனில் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை நம்மால் தொடர்ந்து நிலை நிறுத்த முடியும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், பண்டைய தமிழ்ச்சமுதாயம், பெண்களின் நலனை மையமாகவே வைத்து மட்டுமே எழுப்பப்பட்டது – இயங்கியது.
ஆனால், இடைக்காலத்தில் ஏற்பட்ட சிலபல தடைகளால் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பெண்களின் உடல் பற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூடப் பற்றாக்குறையான புரிதல் நிலையே ஏற்பட்டுப் போனது. உடலதனை மதிக்காது – பிறழ்வு பேணும் பேதமையும், உடற்கூறு அறியாது, நவீனம் என்ற பெயரில், பெண்கள் தங்கள் உடலைத் தாமே உதாசீனப்படுத்தும் போக்கும், ஆண்கள் பெண்களை உடல்சார் வகையில் செய்கைகளாலும் மொழிவழக்கிலும் மிக இழிவுடன் நடத்தும் போக்கும் மிகலானது.
பெண் என்றால் புற அழகு என்பது ஒரு கட்டாய எதிர்ப்பார்ப்பாக மாறிபோனது மட்டுமல்ல, அழகு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையிலான அளவீடு என்பதை அறியாதவர்களாக, மக்கள் தோற்றத்தின் அடிப்படையில் மாதர்களை உயர்த்தியும் தாழ்த்தியும் தாழ்ச்சி செய்யும் இழிநிலையும் தொடர்ந்தவாறுள்ளது. இது சரியான போக்கு அல்ல.
ஆரோக்கியமான சமூகங்கள் பெண்களின் உடல் மற்றும் மன பலத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்படுபவை. அழகு அங்கே இன்றியமையாத்தேவையாக எதிர்பார்க்கப்படுவதில்லை. எனவே, பெண்களைப் பற்றிய நம் புரிந்து கொள்ளல் சீர்பட்டாலொழிய, பெண்கள் மதிப்புடன் நடத்தப்பட்டாலொழிய, பலமான சமுதாயம் நிலைபெறவியலாது.
பெண்ணியமும் பெண் முன்னேற்றமும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நாம் பிரபலப் படுத்திகொண்டிருக்கிற இன்றைய நாளில் “பெண் உடல்” எனும் விடயம் ஒளிவாகவும் மறைவாகவும், சொல்லாலும், சித்தரிப்பாலும், நடவடிக்கையாலும் ஒழுங்கீனப்படுகிறது; இந்த செய்கைகள், பெண்ணை எவ்வாறு பதம் பார்க்கின்றன என்பதை நாமறிவோம். “பெண் உடல்” எனும் விடயம் அத்தனைக் கூர்மையுடையது என்பதால் பெண் பற்றிய உடல் நலவியல் மற்றும் மருத்துவ இயல் கூறுகளை விரிவாகவும் ஆழமாகவும் பேசும் கடப்பாடு நம்மிடம் உள்ளது. இக்கடப்பாட்டை நிறைவேற்றுமுகமாக, இத்தொடரின் நோக்கமும் நடையும், பெண்ணின் உடலைத் தழுவிச் செல்வதாய் அமையப் பெற்றுள்ளன.
இவ்வகையில் நம்முள் முதலில் எழும் தலையாய கேள்வி, பெண்ணின் உடல் ஏன் இத்தனைத் தனிக்கவனம் பெறுகிறது என்பதே. சுருங்கச்சொன்னால், பெண் எவளாயினும்அவள் ஒரு தனிப்பிறவியே! உயிரிகள் ஆண் எனவும் பெண் எனவும் பாகுபாடடைந்து இயக்கம் கொள்வது இயற்கையின் ஒப்பற்ற ஏற்பாடு. பரிணாம வளர்ச்சியின் முத்தாய்ப்பான இந்த ஏற்பாட்டினை உற்று நோக்கி, அதனைச் சரியாகப் புரிந்துகொண்டோமென்றால் ஆண் -பெண் பாகுபாட்டின் நோக்கமும் பயனும் ஒழுங்காய்ப் புரியும். உடல் அமைப்பிலும் உடலியக்கத்திலும் பெண் ஆணிலிருந்து மிகவும் வேறுபட்டவள் என்கிற சத்தியத்தைப் புரிந்துகொண்டியங்கும் வாழ் நிலை ஒரு ஒப்பற்ற தெளிவை ஆணிடமும் பெண்ணிடமும் உருவாக்கும், பெண்களின் பால் மதிப்பு மிகும், என்பதில் ஐயமில்லை.
தொடரும்
கூகில் படத்திற்கு நன்றி