உலக பணக்காரர்கள் வரிசையில் 7 வது இடம் – மிக ஏழ்மையான தனிமனிதன்!
பவள சங்கரி
தலையங்கம்
இது மலைப்பான செய்தியா அல்லது வருத்தப்படவேண்டிய செய்தியா என்று தெரியவில்லை. மத்திய மாநில அரசுகளின் பார்வைக்கு இதுபோன்ற செய்திகள் சென்று சேருகின்றதா என்றும் தெரியவில்லை. ஆனால் உலகளாவிய பொருளாதார ஆய்வறிக்கைகளின் முடிவு இதுபோன்ற எண்ணம் ஏற்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. உலகிலுள்ள 10 பணக்கார நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், நம் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளது என்கிறது ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ என்கிற ஆய்வு நிறுவனம். கடந்த 15 (2000-2015)ஆண்டுகளில் சீனா அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அமெரிக்க செல்வந்தரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு, 48,700 பில்லியன் டாலர்கள். இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 5,200 பில்லியன் டாலர்கள் என்ற ஆச்சரியமான தகவல்களையும் அளிக்கிறது.
ஆனால் இந்தியா தனி மனித வருமானத்தில் மிக மிக பின் தங்கிய நிலையில், அதாவது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 130 நாடுகளில் 129 ஆவது இடத்தில் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை குண்டைத்தூக்கிப் போடுகிறது. அதாவது ஒரு சராசரி இந்தியன் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்.
இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடியது நம் இந்தியாவில் பெரும் செல்வந்தர்களே மீண்டும் மீண்டும் வளர்ச்சியடைவதற்குரிய நிலையிலேயே நம் நாட்டின் திட்டங்கள் உள்ளன என்பதுதான். அம்பானி மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ளார். இலட்சுமி மிட்டல் போன்றவர்கள் இங்கிலாந்தில் தங்கிக்கொண்டு அங்கு தங்கள் வணிக சாம்ராச்சியத்தை பெருக்கிக்கொண்டுள்ளனர். இந்தியா முதலீடுகளை வரவேற்றதுபோக இன்று இந்தியர்களின் முதலீடுகளை இங்கிலாந்தும், அமெரிக்காவும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. இங்கிலாந்தில் அன்னிய முதலீடுகளில் இந்தியர்களின் முதலீடு முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கிலாந்திலுள்ள அரசு தனி மனித வருமானத்திற்கு மிக முக்கியத்துவம் அளித்து ஆண்டுக்கு மூன்றரை இலட்சம் பவுண்ட் வருமானம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு தங்குவதற்கு அனுமதித்துள்ளனர், மற்றவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர் அல்லது விசா மறுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகில் பணக்கார நாடுகள் வரிசையில் ஆறாவதாக இருந்த பிரிட்டன் தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. தனிநபர் வருமானத்தின்கீழ் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross domestic product per capita) 2012 ல் 21, 692 பவுண்டுகளாக இருந்தது. அதாவது அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இருந்தது. இதன் பொருள் பிரிட்டன் உலக நாடுகளான சப்பான், பிரான்சு, இத்தாலியைவிட முன்னேறி இருக்கிறது என்பதும், `பிரிக் (‘BRIC’ ) எனப்படும் பிரேசில், உருசியா, இந்தியா மற்றும் சீனாவைவிட பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறியுள்ளது என்பதுதான். 1997இல் பிரிட்டன் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கு அடுத்து ஆறாவது இடத்தில்தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது 5வது இடத்தில் ($9,200 பில்லியன் )உள்ளது. 16 முதல் 24 வயது வரையிலான 74 விழுக்காடு மக்கள் வேலையில் இருக்கிறார்கள். 5.4 சதவிகிதத்திற்கு குறைவாகவே வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. அதாவது பணிபுரியும் வல்லமையும், ஆர்வமும் உள்ள அனைவரும் வேலை செய்து நன்கு சம்பாதிக்கக்கூடிய நிலை அங்குள்ளது. மேலும் தனி மனித வருமானம் உயரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர்.
உலகப் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய அமெரிக்காவில் தனி மனித வருமானத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் ஒபாமா அரசாங்கம் ஒரு மணிக்கு 7 1/2 டாலர் இருந்ததை மாற்றி 9 1/2 டாலராக உயர்த்தி குறைந்தபட்ச தனிமனித வருமானமாக அரசு நிர்ணயித்துள்ளது. இப்படி ஒவ்வொரு அரசும் தனி மனித வருமானத்திற்கு உத்திரவாதம் அளித்தும் வளமான வாழ்விற்கு வழிவகுத்தும் வருகின்றனர்.
உலகில் 7 வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒருபுறம் பணக்காரர்கள் அதிகமாக உள்ளனர். மறுபுறம் மிக வறுமையான மக்கள் அதிகமாக உள்ள நாடும் இந்தியாவாகத்தான் உள்ளது. தனி மனித வருமான உயர்விற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்துள்ளதாகத் தெரியவில்லை.
இலவசங்களால் தனி மனித வருமானம் உயர்ந்து வளமான வாழ்வு கிடைக்காது. மத்திய அரசினால் பெருமளவில் விளம்பரம் செய்யப்பட்டு, இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தால் தனி மனித வருமானம் உயர்ந்துவிடுமா?
மாநில அரசுகளும் மக்களை மயக்கும் வகையில் அறிவித்துள்ள இலவசங்களால் தனி மனித வருமானம் உயர்ந்துவிடும் வாய்ப்பு துளியும் இல்லை என்பதே நிதர்சனம்.
தனிமனித வருமானம் உயரும் வகையில் செயல்படுத்தவேண்டியது வங்கிகளே. மத்திய அரசு அறிவித்த சில பல திட்டங்கள் மூலமாக தனிமனிதர்களின் உறுதுணையாக இருக்கவேண்டிய திட்டங்கள் வெறும் காகித அளவிலேயே உள்ளன. எந்த ஒரு வங்கியிலும் சென்று தனி மனிதர்கள் தங்களுடைய திட்டங்களுக்கு வங்கிகளின் ஆலோசனைகளையோ அல்லது அவர்களிடமிருந்து முதலீடுகளையோ எளிதில் பெற முடியாது என்பதே இன்றைய நிலை. ஆனால் வங்கிகளில் உள்ள வராக்கடன் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளது. இன்று நான்கு இலட்சத்து முப்பதாயிரம் கோடி வாராக்கடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மத்திய அரசு வாராக்கடனை நிர்வாகம் செய்வதற்காக ஒரு தனி நிறுவனத்தையே உருவாக்கக்கூடிய நிலையில் உள்ளது என்பது மிகவும் வெட்கக்கேடான ஒரு செயல். விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என்று பொதுமக்களின் வரிப்பணத்தையோ அல்லது வங்கியில் கட்டிய பணத்தையோ எடுத்து விநியோகம் செய்தபிறகும் ஆண்டிற்கு 10,000 விவசாயிகளுக்குக் குறைவில்லாமல் தற்கொலை செய்வது ஏன்? அப்பொழுது தவறு எங்கோ நடப்பதாகத்தானே தெரிகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி கீழ்மட்ட விவசாயிகளுக்கு சென்று சேர்வதில்லை என்பதையே இது காட்டுகிறது.
வங்கிகள் பொதுமக்கள், விவசாயிகள், வணிக விவசாயச் சங்கங்கள் அனைத்தையும் இணைத்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்கினால் ஒழிய நமது இந்தியாவின் தனிமனித வருமானம் உயர்வதற்கு வழியே இல்லை. இல்லாவிட்டால் தற்பொழுது இருப்பதுபோன்று வங்கிகள் சகாராக்களையும், மல்லையாக்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.
மின்சாரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றமே தனிமனித வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டைகளாக உள்ளன. இன்றைய புள்ளிவிவரப்படி நமது அண்டை நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலை இலங்கையைத் தவிர்த்து கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் குறைவாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எப்படி தனி மனித வருமானம் உயரப்போகிறது?
தமிழ்நாடு அரசு இன்று விவசாய நிலத்திற்கு ஏக்கருக்கு 4000 ரூபாய் அளிப்பதாகவும் அந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிமனித வருமானம் உயரும் வாய்ப்பு இல்லை. விலைப்பொருட்களை பதப்படுத்தும் தொழிலை ஆரம்பிப்பதும், பதனக் கிடங்குகளை அந்தந்த மாவட்டங்களில் ஏற்படுத்துவதுமே இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்குமே ஒழிய இதுபோன்று மானியம் மட்டுமே வழங்குவது சரியானத் தீர்வாக இருக்க முடியாது.
மத்திய மாநில அரசுகளின் நிதித்துறை அமைச்சர்களும், செயலாளர்களும் தனிமனித வருமானம் உயர்வதற்கான சூழலை உருவாக்குவார்களா?