“மதச்சிறைக்குள்”
மீ.விசுவநாதன்
பச்சைக் கிளியில் பலவகை வண்ணமும்,
கொச்சை மொழிசொலும் குஞ்சுக் குருவியில்
மஞ்சள். கருஞ்சாம்பல். மாநிறம் என்றுபல
நெஞ்சங் கவர்ந்த நிறைய வண்ணமும்.
சேவலின் கொண்டையில் செந்நிறச் சேர்க்கையும்,
தாவிடும் வானரத் தாடையில் சந்தனம்
நீவிய நேர்த்தியும், நீந்திடும் மீனுக்கு
ஓவியக் காந்த ஒளிமிகும் வைரமணிக்
கண்களும், ஊறுகிற கட்டெறும்பின் நாசியில்
மண்ணளக்கும் ஞானமும், வாலிலே நாய்க்குநல்
நன்றி சொலும் நரம்புகளும், குட்டையான
பன்றிக்கு வாயால் பகைவிரட்டு(ம்) ஆற்றலும்,
பாம்பிற்கு ரெண்டு பகுதியென நாக்குகளும்,
கூம்பி இருக்கும் குலைவாழைப் பூவுக்குள்
கொத்தாகக் கொண்டு குவித்த பழக்கூட்ட
சத்தான சந்ததியும், சங்கீதம் பாடுகிற
ஆற்றுநீர் மூச்சுக்கு ஆதார வான்மழையும்,
கூற்றுவன் வந்தாலும் கொஞ்சமும் அஞ்சா
திருப்பூர் குமரன், இளைய பகத்சிங்,
கருப்பை முதலே கடுமையாம் போராளி
வீரத்திலகர், வ.உ.சி, வீரவாஞ்சி போன்றோரின்
காரமிகு தேசபக்தி கல்யாண நற்குணமும்,
நாயன்மார் ஆழ்வார்கள் ஞானியர் சொல்லமுதம்,
தூயன்நா மாவதற்குத் தொண்டுசெய்த சான்றோர்கள்,
வால்மீகி, கம்பன், மகத்தான காளிதாசன்,
ஆல்போலே வேர்விழுதாய் ஆடாமல் நிற்கும்
பரம்பரையைப் பெற்றுள்ள பாரதியார் தேன்கவியும்,
வரம்வாங்கி வந்ததுபோல் வற்றாத் தமிழ்க்கவிதை
கண்ணதாசன் சொன்னதுவும், கல்யாண சுந்தரத்தின்
மண்வாசப் பாடலும் , வாலி, தமிழழகன்,
ஞானக் கவிரவி, நா.சீ. வரதராஜன்,
கானக் கவிதேவ நாரா யணனும் ,
இலந்தை இராமசாமி, வேதமெனக் கூடிக்
கலந்துற வாடுகின்ற சந்தவ சந்தமும்,
தமிழர் உ.வே.சா. தவப்பயனும், இன்னும்
அவிழாத பற்பல ஆன்றோர்கள் சாதனையும்,
நாத்திகமும் ஆத்திகமும் நாகிழியப் பேசுகிற
பாத்திரமாய்த் தோன்றிப் படக்கெனப் போவதுவும்,
எத்தனையோ இப்படி எளிதாக எல்லாமே
சத்தமின்றிச் செய்யும் சரித்திர நாயகனை
மொத்தமாய்க் கட்டி முகத்தில் அன்பாலே
முத்த மிடநான் முடிவெடுத்த வேளை
மதச்சிறைக்குள் மாட்டியவன் வாடும்
விதத்தினைப் பார்த்தே விரக்தியில் வாடுறேனே !
(16.06.2016)