பூதநாராயணா..
விசாலம்.
கொழு கொழுவென்ற குண்டுக் கண்ணனைப் பார்க்க வேண்டுமா? அதற்கு நாம் திருவண்ணாமலை போகவேண்டும். அண்ணாமலையில் கிரிவலம் வரும் பாதையில், வடக்குப்பக்கம் இந்தக்கோயில் உள்ளது.
இந்தக்கோயிலில் உள்ள கண்ணனுக்கு ‘பூத நாராயணா’ என்று பெயர். இந்தப்பெயர் எப்படி வந்தது தெரியுமா? கண்ணனின் சிறு பிராயத்தில், அந்தப் பாலகனைக்கொல்ல கம்சன் பல அரக்கர்களை அனுப்பிவைத்தான். அதில் ஒருவள்தான் பூதனை எனும் அரக்கி.
பேரழகியாக பூதனை, கண்ணன் இருக்குமிடத்திற்கு வருகிறாள். குட்டிக்கிருஷ்ணனைத் தொட்டிலில் கண்டு ஆனந்தமடைந்து அப்படியே அணைத்துக்கொள்கிறாள். பின் தன் ஸ்தனத்திலிருந்து பால் கொடுப்பது போல் விஷம் கொடுக்கிறாள். எல்லாம் தெரிந்த பாலன் குண்டுக்கண்ணனாக மாறி, அப்படியே பாலை உறிஞ்சுவது போல் அவள் உயிரையே குடித்துவிடுகிறான். அந்தப் பூதனையையே சாகடித்த கண்ணன் ‘பூதநாராயணா’ ஆகிறார்.
இக்கோயிலில் தீர்த்தம் பெற்றவர்கள் கிரிவலத்தை நிறைவு செய்ய அதனை இந்தக் கோயிலின் வாசலில் கொட்டுகின்றனர். அதாவது தான் பெற்ற பலனை கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்கின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை மிகவும் சுபீக்ஷமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோயிலை முதலில் ஒரு மன்னர் எழுப்பி சிறப்பாக பூஜைகளை செய்து வந்தார். ஆனால் காலப்போக்கில் இந்தக் குண்டுக்கண்ணன் கோயில் புதைந்துவிட்டது. வருடங்கள் ஓடின, திடீரென்று ஒரு நாள், ஒரு பக்தருக்கு ஒரு கனவு வந்தது. கண்ணன் அழைத்தான். தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லி அந்த இடத்தில் கோயிலை கட்டச்சொன்னான். அப்படி வந்ததுதான் இந்தக் கண்ணன் கோயில். இந்த இடத்தின் விசேஷம் என்னவென்றால்,இங்கு பூதனை அரக்கி அழிக்கப்பட்டதால் இங்கு போகும் மக்கள் மனதில் இருக்கும் தீய குணங்களும் அழிந்து. கண்ணனின் அருள் கிடைக்கின்றதாம்.
குண்டுக் கண்ணனைக் காண்கிறோம். வலது காலைக் குத்திட்டு வைத்திருக்கிறான், இடது காலை மடித்திருக்கிறான். வலது கையில் சங்கு இருக்கிறது இடது கை அபயக்கரமாக அமைந்துள்ளது. பக்தர்கள் துளசிமாலைகளை அணிவித்து வெண்ணெய், பிரசாதம் படைக்கின்றனர். மழலைச்செல்வம் பெற இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர்.
கிருஷ்ண ஜயந்தியன்று இங்கு நடைபெறும் சிறப்பு பூஜையைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். கோயிலில் ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், தும்பிக்கையாழ்வார், எல்லோரும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.
நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோநம:
அன்பர்கள் யாவருக்கும் ‘ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி’ வாழ்த்துகள்..