செண்பக ஜெகதீசன்

 

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்     

தின்சொல னாகப் பெறின்.  

     -திருக்குறள் -92(இனியவை கூறல்)

 

புதுக் கவிதையில்…

 

புன்னகை முகத்தில் கூட்டி

வருவோரை

இன்சொல்லால் வரவேற்பது,

அகநிறைவுடன்

அடுத்தவர்க்கு

ஈவதைவிட இனிதானதே…!

 

குறும்பாவில்…

 

இதயநிறைவுடன் ஈவதைவிட,  

இதழில் புன்னகையுடன் பிறரை  

இன்சொலால் வரவேற்பதே இனிது…!

 

மரபுக் கவிதையில்…

 

வாசல் வந்த வறியவர்க்கு

     வள்ளல் தன்மை மாறாதே

வேச மின்றியே உளமார

     வேண்டு மட்டும் ஈவதிலும்,

வாச மலர்போல் புன்னகைத்து

     வருவோர் தம்மை உபசரித்தே

ஆசையாய் இன்சொல் உரைப்பதுதான்

     அளவில் உயர்ந்த நல்லதாமே…!

 

லிமரைக்கூ…

 

நல்லதுசெய் உளம்மகிழக் கொடுத்து,

அதனினும் நன்றாகும் வருவோரை உபசரித்தல்  

வாயதனில் இனியசொல்லாய் எடுத்து…!

 

கிராமிய பாணியில்…

 

அள்ளிக்குடு அள்ளிக்குடு

இல்லாதவுனுக்கு அள்ளிக்குடு,

ஏதயங்குளுர அள்ளிக்குடு

இல்லயிண்ணாம அள்ளிக்குடு..

 

இதவிட நல்லதுதான்,

ஓபசரிக்கணும் ஒபசரிக்கணும்

வாறவங்கள ஒபசரிக்கணும்,

மொகம்மலந்து ஒபசரிக்கணும்

இனியசொல்லால ஒபசரிக்கணும்..

 

அள்ளிக்குடு அள்ளிக்குடு

இல்லாதவுனுக்கு அள்ளிக்குடு,

இதோட

ஓபசரிக்கணும் ஒபசரிக்கணும்

மொகம்மலந்து ஒபசரிக்கணும்

இனியசொல்லால ஒபசரிக்கணும்…!

 

-செண்பக ஜெகதீசன்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *